"நான் கண்ட குருநாதர்" அனுபவ உரைகள்

த.அறவாழி D.Pharm,
துணைத் தலைவர்
புளியநகர், தூத்துக்குடி
+91 94421 45001

குரு மீது நீங்காபற்றுள்ள அன்பர்கள் சிலர் சேர்ந்து பிறந்த நாள் கொண்டாட முடிவு செய்து முதன் முதலில் 60வது பிறந்த நாளை சிவத்தையாபுரத்தில் விழாவாக கொண்டாடினார்கள். அதில் பேசிய உணர்வாளர்களுக்கு கொடுக்கப்பட்ட தலைப்பு நான் கண்ட குருநாதர் சில அன்பர்கள் குருவிற்கும் தமக்கும் உள்ள உள் ஆன்ம நிலை. தான் உணர்ந்த நிலையை பற்றி பேசினார்கள். சிலர் மைக் முன்பு பேச்சே வரவில்லை. ஆனந்த கண்ணீருடன் உணர்வு பூர்வமாக பேசி அமர்ந்தார்கள். இவ்வாறு ஒவ்வொரு ஆண்டும் நடக்கும் பிறந்த நாள் விழா சிறப்பாக நடைபெறுகிறது. 81 வது பிறந்த நாள் 3.10.2019 அன்று குரு பிறந்த ஊர் புளியநகரில் நடைபெற்ற போது கவனித்த யாம் ஒவ்வொறு அன்பர்கள் பேசுவதையும் நான் கண்ட குருநாதர் என்ற தலைப்பில் நூலாக வெளியிட வேண்டும் என கோரிக்கை வைத்தேன். உணர்வாளர்களின் ஏகோபித்த கரகோசமே இந்நூல் தோன்ற காரணம்.

குரு தங்கசாமி அவர்கள் ஞானபயிற்சியின் உச்ச நிலை அடைந்த போது அதாவது 1973-ம் ஆண்டு பிறந்த ஆண் மகவுதான் யாம். அவர்கள் குருவாக இருந்தாலும் எனக்கு தந்தையாக இருப்பதில் எனக்குப் பெருமையே. திருவள்ளுவரின் மீதிருந்த மாறாபற்றினால் அறவாழி எனப் பெயர் சூட்டினார்கள். எமக்கு 6 வயது இருக்கும் போது அருள்மிகு பரமஞான குருபிரான் சங்கரசுவாமிகளின் மீது பற்று, ஆர்வம், நம்பிக்கை ஏற்படுத்த என்னை அழைத்து நீ திருச்செந்தூர் சங்கரசுவாமி ஐயாவை இரவு நினைத்துக்கொண்டு உறங்கினால் தலையணை அடியில் நாணயங்கள் இருக்கும் என்பார்கள். நானும் இரவு படுக்கும் போது திருநீறு பூசி சங்கரசுவாமிகளை நினைத்துப் படுத்திருந்தேன். காலை எழுந்தவுடன் தலையணை அடியில் 10 அல்லது 20 பைசா செம்பு நாணயங்கள் இருந்தன. இதனை தந்தையிடம் காட்டி தினம் மகிழ்ந்தது உண்டு. எனக்கு அந்த வயதில் கவனம்ஒறுமிக்க தந்தை செய்த தந்திரம் என பின்னாளில் நினைத்ததுண்டு.
01
சில வருடம் கழித்து என்னுடைய 12ம் வயதில் பள்ளி செல்ல சைக்கிள் கேட்டபோது தலை இருக்கும் இடத்திற்கு கழுத்து வரட்டும் என்றார்கள். யாமும் சரி என்று 13வது வயதில் கேட்டபோதும் அதே பதிலை கூற நாம் சற்று யோசித்து சரி என்றேன். பிறகு 14வது வயதில் கேட்டபோதும் அதே பதிலை கூற நானும் முதலில் கேட்டபோது நான் சிறுவனாக இருந்திருக்கலாம். ஆனால் மூன்றாவது முறை கேட்டும் தலை இருந்த இடத்தில் கழுத்து வந்து விட்டது என்று கூற அன்று மாலை சைக்கிள் வாங்கி தந்தார்கள். இதை ஏன் பதிவிடுகிறேன் என்றால் நமது உணர்வாளர்கள் அனைவரையும் சில பயிற்சிகள் கொடுக்கும் போது அவர்கள் பக்குவ பட்டிருக்கிறார்களா என்று சோதிக்கத்தான் என்பதை உணர்ந்து கொள்ளலாம். எனக்கு 18-வது வயதில் ஒருவித எதிர்மறையான எண்ணம் ஏற்பட்டது.
02
கூட்டு குடும்பத்தில் பிறந்த எமக்கு என்னை யாரும் கவனிக்காமல் இருப்பதாக மனதில் பட்டு தற்கொலை எண்ணம் வந்து சென்றது. அந்த சமயத்தில் தந்தையிடம் என்னை இந்த வீட்டில் யாரும் கவனிக்காமல் இருக்கிறார்களே என்று கேட்டபோது ஒரு குடும்பத்தில் 10 பேர் இருக்கிறார்கள் என்றால் வீட்டில் நோயாளி அல்லது இயலாமல் இருப்பவரைத்தான் கவனிக்க ஆள் தேவை. நன்றாக ஆரோக்கியமாக இருப்பவருக்கு ஆள் தேவை இல்லை என்று கூறி ஒருவன் தற்கொலை செய்தால் அந்த வீட்டில் 1 நாள் அல்லது 1 வாரம் துக்கம் அனுசரித்த பிறகு இயல்பு நிலைக்கு திரும்புவார்கள் என்று கூறி, நான் துக்க நிகழ்ச்சிக்கு போகும் போது எனது கண்ணில் இருந்து கண்ணீர் வராது என்று கூறி தற்கொலை எண்ணத்தை உடைத்து எறிந்தார்கள்.
03
அன்று முடிவெடுத்தேன் எந்த பிரச்சனை வந்தாலும் உயிருடன் இருந்து சாதிக்க வேண்டும் என்று. தற்கொலைக்கு தடுப்பூசி போட்டு தன்னம்பிக்கை தரும் வார்த்தை கூறி பக்குவப்படுத்தினார்கள். 1991ம் ஆண்டு வரை எமது தாத்தா செய்த வாணிபத்திற்கும், விவசாயத்திற்கும் பக்கபலமாக இருந்தார்கள். அதன்பிறகு நடந்த இளைய சகோதரி திருமணத்திற்கு பிறகு ஆன்மீக தேடல்கள் அன்பர்களை ஒருங்கிணைத்து ஆன்மீக வாழ்வில் சங்கரசுவாமிக்கும் பல ஆன்மீக நாட்டமுள்ள வெளியூர் அன்பர்களை தேடி ஒருங்கிணைத்து தொண்டாற்ற தொடங்கினார்கள். பல வெளியூர் அன்பர்களும் தந்தையை தேடி வர தொடங்கினார்கள். எம்முடைய 25ம் வயதில் 1998-ம் ஆண்டு கார்த்திகை மாதம் பவுர்ணமி அன்று திருவடி ஞான தீட்சை சங்கரசுவாமி ஆலயத்தில் வைத்து பெற்றேன்.
04
அதன்பிறகு எனக்குள் அகவாழ்விலும் புறவாழ்விலும் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட ஆரம்பித்தது. குரு உபதேசத்தை அதாவது அவர்கள் கூறும் ஒவ்வொன்றையும் கூர்ந்து கவனித்து செய் தொழில் யாவற்றிலும் யோசனை கேட்க ஆரம்பித்தேன். உதாரணமாக யாம் யாரிடம் பேசுகிறோமோ அவர்கள் கண்ணை பார்த்து பேசவேண்டும். பணம் ஒருவரிடம் கொடுக்கும் போது துணைக்கு ஒருவர் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் கலை பயிற்சியில் இருக்க வேண்டும். இவ்வாறு பல விஷயங்களை தெரிந்து அறிந்து கொண்டேன். சில வருடங்கள் கழித்து 2010-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 2ம் வாரத்தில் ஒரு நாள் குருநாதரிடம் தாங்கள் பெயரில் உள்ள சொத்துக்கள் அனைத்தையும் எனது பெயருக்கு மாற்ற முடியுமா என்றேன். அதற்கு சிறிதும் சிந்திக்காமல் உடனடியாக அதற்குரிய ஏற்பாட்டை செய் என்றார்கள். பேசியபடி அடுத்தவாரம் அதாவது 20 ஆகஸ்டு 2010 அன்று மிக பெரிய மதிப்புள்ள பூர்வீக சொத்துக்கள் அனைத்தையும் எனது பெயருக்கு பத்திரபதிவு அலுவலகத்தில் பதிவு செய்து கொடுத்தார்கள்.
05

மேலும் நமது குருநாதர் நினைத்திருந்தால் தமது மாவட்டத்தில் ஒரே இடத்தில் ஆடம்பரமான தியான மண்டபம் நிறுவிட இயலும். ஆனால் அவர்கள் உலகம் முழுவதும் பல இடங்களில் பல கிளைகளை எளிமையாக நிறுவுவதற்கு காரணம் இப்படிப்பட்ட புள்ளி கல்வியை யாவரும் அறிந்து கொள்ளவும் மக்கள் நல்வழிபடுத்தவும்தான் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். தூத்துக்குடி மாவட்டம் புளியநகர் எனும் சிற்றூரில் பாரம்பரிய மிக்க குடும்பத்தில் பிறந்து ஆரம்ப மேல்நிலை பள்ளிப் பருவத்தை முடித்து திருச்செந்தூரில் I.T.I. படித்து NLCயில் I.T.I. பிட்டராக வேலை பார்த்து உடல் உபாதை காரணமாக சொந்த ஊருக்கு வந்து கைத்தொழில் செய்து, விவசாயம் செய்து, பல்வேறு மக்களுக்கு நோய் தீர்க்கும் மருத்துவராக விளங்கி இன்று நம் அனைவருக்கும் குருவாக தெரிகிறவர் உயர்ந்த சிந்தனை எளிமையான வாழ்வு. தேவையான உணவு, கொள்கை பிடிப்புள்ள பண்பு ஆகியவற்றை கொண்ட நம் குருவின் தொண்டர்கள் உணர்வாளர்களுக்கு யாம் வேண்டுவது இது தான். தாங்களும் குருவை போல் மேலான நிலையை அடைய முடியும் என்ற கொள்கை மற்றும் திட உணர்வு இருக்குமானால் யாம் கூறும் யோசனைகளை செய்து பாருங்கள்.

06

ஒரு நாளைக்கு 1 மணி நேரமாவது அவர்களைப் போல் வாழ்ந்து பாருங்கள் முடியுமனால் வாரத்தில் ஒரு நாள் வாழ்ந்து பாருங்கள் முடியுமானால் மாதத்தில் ஒரு வாரம் வாழ்ந்து பாருங்கள். முடியுமானால் வருடத்தில் 1 மாதம் வாழ்ந்து பாருங்கள் முடியுமானால் வருடம் முழுவதும் வாழ்ந்து பாருங்கள். அதன்பிறகு நீங்களும் பல்வேறு நிலைகளை அடைந்து குருவின் மேலான நிலையை அடைவீர்கள். அதுவே நீங்கள் குருவிற்கு செய்யும் தொண்டு. குரு மகிழ்ச்சியடைய இதுவே வழி. நாளைய சரித்திரத்தில் தாங்கள் ஓர் எடுத்துக்காட்டாக திகழ்வீர்கள் என்பது திண்ணம்.

07
நன்றி!