"கைவல்லிய நவநீதம்"
(மூலமும் எளிய உரையும்)

நூல் விவரம்

நூல் பெயர்: கைவல்லிய நவநீதம் (மூலமும் எளிய உரையும்)
ஆசிரியர்: ஞானவள்ளல் மகாகனம் தங்கசுவாமிகள்
பதிப்பு : முதல் பதிப்பு திருவள்ளுவர் 2042ம் ஆண்டு (கி.பி – 2011)
இரண்டாம் பதிப்பு திருவள்ளுவர் 2050ம் ஆண்டு (கி.பி – 2019)

பக்கம்: 332
வெளியிடப்பட்ட இடம்: தூத்துக்குடி மாவட்டம்-கூட்டாம்புளி கிளை ஞானசபையில் நடந்த 73 வது பிறந்தநாள் விழாவில் வெளியிடப்பட்டது
வெளியீடு:
உலக அறிவார்ந்தோர் இயற்கை ஞானசபை அறக்கட்டளை

பதிவு எண் : 140/4/2000
ஞானசபை சாலை, சிவத்தையாபுரம்,
சாயர்புரம் அஞ்சல், தூத்துக்குடி – 628 251
+91 94420 56071

முகவுரை

மூவாசைகளோடு கூடிய அஞ்ஞானிகள் உள்ளத்திலும், மூவாசைகள் இல்லாத ஞானிகள் உள்ளத்திலும், உலகத்திலுள்ள சீவர்களிடத்தும் காரியமாற்றுகின்றவர்க்கு ஏக நாயகன் என்ற பெயருண்டாம். இது எல்லா சமயங்களுக்கும் பொருந்தும் எனலாம். உலகிலுள்ள அனைத்து சீவர்களிடத்தும் ஏக நாயகன் கலந்து இலங்குவதால் ஏகநாயகனை வணங்கினால் அனைத்து சமயங்களும் போற்றி வணங்கும் பெரும்பொருளை வணங்கியதாக கொள்ளலாம். அந்த ஏக நாயகன் நம் உடம்பில் உள்ள ஏழாம் பூமியில் அந்த நன்னிலத்தில் கலந்து இருந்து காத்து வருகிறார் என்று நூலை ஆரம்பித்துள்ளார் கைவல்ய நவநீதம் நூலை இயற்றிய தாண்டவராய சுவாமிகள்.
ஞான பூமி ஏழினும் மேலான துரியாதீதத்திற் பரசாட்சி மாத்திரமாய் இருக்கின்ற அந்த ஏக நாயகனான ஞான குருநாதன் திருவடிகட்கு எமது வணக்கம் என்று கூறியுள்ளார். கைவல்லிய நவநீதம் முழுமையும் ஞான ஆசானின் அருமை பெருமைகளை அற்புதமாகக் கூறிவரும். அவர்களைச் சார்ந்து வாழ்ந்தால் மட்டுமே பிறப்பிறப்பற்ற மேலான நிலைக்குச் செல்ல முடியும் என்பதே மிகவும் உறுதியாகச் சொல்லிவரும் செய்தியாகும். ஒரு கைமாறும் வேண்டாது கருணையால் நமது அஞ்ஞானத்தை போக்கி, ஞானோபதேசம் செய்து நமது பிறவிப் பிணியை ஒழிப்பவர்தான் உண்மையான காரண குரு ஆவார். நூல் முழுவதும் காரணகுருவின் அருமை பெருமைகளையும் அவர்களை வாழ்த்தி வணங்குவதால் கிட்டும் பலன்களும் விரவி வரும். மாண்புடைய மாணவ மணி மட்டுமே ஏற்றவன் என்பதையும் தெள்ளத் தெளி வாகக் கூறுவர். ஒரு குளவியானது மண்ணிலே ஒரு கூட்டைக் கட்டி அதனுள் ஒரு புழுவைக் கொண்டு வந்து வைத்து விடாது ரீங்காரம் செய்து அப்புழுவைக் குளவி ஆக்குவது போல, இந்த மாண்புடைய மாணவன் உடம்புக்குள் இருக்கும் ஜீவாத்மா பரமாத்மா ஆகும்வரை உபதேசிப்பார்.
01
அனேக கோடிப் பிறவிகளாகத் தன்னை யார் என்று அறியாததால் உண்டான பிறப்புஇறப்பு, ஆத்ம ஞானத்தால் நான் யார் என்று அறியும்பொழுது அத்துக்கம் அகன்று அகண்ட நிலையான பரப்பிரம்ம ஏகநிலை அடையும் வழிகளைத் தெளிவாகக் கூறும். தீர்க்கதரிசிகளான ஞானிகளைக் கசப்பான வார்த்தைகளைக் கூறி ஏசுவோர் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னரும் இருந்தனர். இன்றும் நடந்துகொண்டுதான் இருக்கிறது. ஏன் நாளையும் தொடரத்தான் செய்யும். அவர்களை ஏசுவோரும் தூற்றுவோரும் அதன் பலனை அவர்கள் காலத்திலேயே அடைந்திடுவர்.இதனை,
பொறுமையால் பிராரத்தத்தைப் புசிக்கும் நாள் செய்யும் கன்மம் மறுமையில் தொடர்ந்திடாமல் மாண்டு போம் வழி ஏதென்னில் சிறியவர் இகழ்ந்து ஞானி செய்த பாவத்தைக் கொள்வார் அறிவுளோர் அறிந்து பூசித்து அறமெலாம் பறித்து உண்பாரே. இவ்வாறு கூறியுள்ளது சிந்திக்க வைக்கிறது. ஞானியைப் பூசிப்பவர் அளவிடற்கரிய புண்ணியத்தையும், இகழ்பவர்கள் அளவிடற்கரிய பாவத்தையும் அடைகிறார்கள் என்று கூறியதின் செயல்கள் அவ்வப்போது நடப்பதாகத் தெரிகிறது. இப்பாட்டில் அறம் எனும் சொல் தவத்தின் பயன் என்று பொருள் கொண்டால் சரியாக இருக்கும்.
02
இந்நூல் வெறும் விடய ஞானத்தை மட்டும் அறியும் நூல் அல்ல. நிட்டை அனுபவங்களையறிந்து உணர்ந்து நிஷ்டானு பூதியை அடைய விரும்பும் மாணவர்கட்கு அற்புதமான நூல் எனதுணிந்து கூறலாம்.
தஞ்சமாங் குருவும் சொன்ன தத்துவ வழி தப்பாமல் பஞ்சகோசமுங் கடந்து பாழையுந் தள்ளி யுள்ளிற் கொஞ்சம் ஆம் இருப்பும் விட்டுக் கூடத்தன் பிரம்மம் என்னும் நெஞ்சமும் நழுவி ஒன்றாய் நின்ற பூரணத்தைக் கண்டான்.
பஞ்ச கோசங்கள் ஒவ்வொன்றையும் இது நானல்ல, இது நானல்ல என்று கழித்து, அதற்கு மேல் காணப்படுகின்ற பஞ்ச கோசங்களின் சூனியத்தையும் நானல்ல வென்று தள்ளி, மிஞ்சி நின்ற ஆத்மாவையும் பிரித்தறிந்து அனுபவிக்க வேண்டும் என்பதையும், அதுவே பரிபூரணவடிவப் பிரம்மத்தைத் தரிசித்தல் என அற்புதமாகக் கூறும். அநுபவாநந்த வெள்ளத் தழுந்தியே அகண்டமாகித் தனு கரணங்கள் ஆதி சகலமும் இறந்து சித்தாய் மனது பூரணமாய்த் தேகம் ஆன சற்குருவும் காண நனவினில் சுழுத்தி ஆகி நன்மகன் சுபாவம் ஆனான்.
03
பிரம்ம வடிவாக விளங்கிய சீடன் அனுபவ வடிவான பிரம்மானந்தக் கடலில் மூழ்கி பேதமின்றி நாமரூப வடிவ சுபாவ உபாதிகளெல்லாம் நீங்கப் பெற்று, சின்மாத்திரமாகி சற்குருவும் காணுமாறு நனவிற் சுழுத்தி யடைந்து தனது வடிவமானான். இந்நனவிற் சுழுத்தியை நடுநிலையென்பர் ஆன்றோர்.
அரிய மெஞ்ஞானத்தீயால் அவித்தையாம் உடல்நீறாகும் பெரிய தூலமும் காலத்தால் பிணமாகி விழும் அந்நேரம் உரிய சூக்குமசரீரம் உலை இரும்புண்ட நீர் போல் துரியமாய் விபுவாய் நின்ற சொரூபத்தில் இறந்து போமே.
ஞானியின் தூலசரீரம் பிண வடிவாய் விழுகின்ற காலத்து அவரது சூக்குமசரீரம் அஞ்ஞானியின் சூக்கும சரீரம் போன்று வேறுலகத் திற்காவது இவ்வுலகத்தில் வேறு சரீரத்திலாவது போகாது.
04
காய்ச்சிய இரும்பிற்றெளித்த நீர் சொரூபமில்லாது கெடுவதுபோல இவனும் ஆன்மசொரூபத்தில் இலயம் ஆகிவிடுகிறான்.அதாவது இந்த சீவாத்மா அண்டம் எல்லாம் நிறைந்து இருக்கிற பரமாத்மாவில் இரண்டறக் கலந்து ஐக்கியமாகி விடுவதே மனிதப் பிறப்பு எடுத்ததன் சிறப்புத் தன்மையாம் என்ற மேலான கருத்தை போதிக்க வல்லது இந்நூல்.
இந்தச் சீவனால் வரும் அறுபகை எலாம் இவன் செயல் என்னாமல் அந்தத் தேவனால் வரும் என்ற மூடர்கள் அதோகதி அடைவார்கள் இந்தச் சீவனால் வரும் அறுபகை எலாம் இவன் செயல் அல்லாமல் அந்தத்தேவனால்அன்றென்னும் விவேகிகள்அமலவீடுஅடைவாரே.
05

சீவ சிருஷ்டியைப் பரமாத்மாவின் சிருஷ்டி என்று எண்ணுவ தாலேயே பிறவி என்னும் பெருந்துக்கம் உண்டாகிறது. அது பரமாத்மாவின் சிருஷ்டி அல்ல என் சிருஷ்டியே என்று எண்ணுவதால் பிறவிப்பிணி நீங்குகிறது என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும். காமாதிகளை ஈசுவர சிருஷ்டியென்று விபரீதமாக வுணர்ந்து அவற்றை நீங்காதுஇருப்பவர் நரகமடைவர் என்றும், அவற்றை சீவசிருஷ்டியென்று உணர்ந்து நீக்க முயல்பவர்கள் மட்டுமே மோட்சமடைவர் என்றும் உறுதியாகக் கூறிவரும் இந்நூல்
பிறந்த துண்டானால் அன்றே பிறகு சாவதுதான் உண்டாம்
பிறந்ததே இல்லை என்னும் பிரம்மம் ஆவதும் நானே
பிறந்தது நான் என்றாகில் பிரம்மம் அன்றந்த நானே
பிறந்ததும் இறந்த தற்ற பிரம்மம் ஆம் நானே நானே.

06

சனித்தது உளதாயின் அன்றே பின் மரித்தலும் உளதாம். சனித்ததே இல்லை என்றால் பிரம்மம் என்பதும் நானேயாம். சனித்தது நானல்லன் ஆயின் பிரம்மம் என்று சொல்லப்பட்ட அந்த நானே, உற்பத்தியும் லயமும் இல்லாத பிரம்மம் ஆகிய கூடஸ்த்தனே நான் இப்படி மறைகளின் சாரத்தை தெளிவாகக் கூறும் இந்நூல்.
ஒன்றுகேள்மகனேபுமான்முயற்சியால்உரைத்ததுமானுடர்க்குஈசன் நன்றுசெய்யவே காட்டிய நூல்வழிநடந்து நல்லவர்பின்னே

சென்று துட்டவாதனை விட்டு விவேகியாய்ச் செனித்தமாயையைத் தள்ளி நின்றுஞானத்தை அடைந்தவர்பவங்கள்போம் நிச்சயம் இதுதானே.

07
இந்நூலின் மொத்தக் கருத்துக்களும் இப்பாடலில் பதிவு பெற்றுள்ளது. அருமை மகனே, நாம் ஒன்று கூறுதும் கேட்பாயாக, மனிதர்களுக்குப் பிரம்மானந்தப் பேற்றையளித்தற்கென்றே இறைவன் மறைகளை யருளியிருக்கிறார். யார் மோட்சமடைய வேண்டுமென்ற வைராக்கியத்தோடு முயன்று, மேற்கண்ட மறைகளில் கூறப்பட்ட வழியில் நடந்து, பிரம்ம நிஷ்டர்களாகிய பெரியோர்களின் சகவாசத்திலிருந்து, காமக் குரோதாதி வாசனைகளை ஒழித்து, சாதனைகளை யடைந்து நித்யாநித்ய விவேகம் உடையவர்களாய் அவிவேகத்தா லுண்டான மாயையாகிற பேதபுத்தியை யொழித்து, ஓர் நிலையில் நின்று ஞானத்தை யடைகிறார்களோ, அவர்கள் பிறப்பிறப்பாகிய பவசாகரத்தைக் கடந்து முத்தி அடைந்து கரை சேர்வார்கள் இது சர்வ நிச்சயம் என்றறிவாயாக.
08
“நீ யச்சச்சிதானந்தமாய் வேறொன்றும் நினைத்திடா திருப்பாயேல் மாயச்சக்தி போம், ஈதன்றி மந்திர மறைகளில் வேறொன்றும் காணோமே” என்று உறுதிபடக் கூறியுள்ளது கவனிக்கத் தக்கதாகும். விழிப்புக் காலத்தில் கண்ணில் வெளிப்பட்டு உலகப் பொருட்களை அறிகிறது அறிவே என்றும், என் அறிவே கடவுள் என்ற நாட்டத்தில் நிலைத்து நிற்பதே ஜீவன் முக்தி என்றும் ஒவ்வொருவர் உள்ளத்திலும் இருக்கின்ற இந்த ஆத்மாவாகிய தெய்வத்தை விட்டு வேறு தேடுவது. தன் கையில் இருக்கும் தங்கத்தை எறிந்து விட்டு பித்தளையைத் தேடும் அறிவிலிக்கு ஒப்பாகும் என்பது போல உறுதியாகக் கூறும் இந்நூல்.
09
மேலும் உலகமெலாம் நிறைந்து விளங்குவதும் இந்த அறிவே ஆகும். எல்லை உள்ளதும், எல்லை அற்றதுவும், உள்ளிலும், வெளியிலும், நானும் நீயும் எல்லாம் அறிவு சொரூபமேயாகும் என்று கூறியிருப்பதால் பேரறிவே கடவுள் என்பதாயிற்று. சீடனே நீயே அந்த கடவுள் சொரூபம் மற்ற அனைத்தும் அறிவற்ற சடப்பொருள் என்பதையும் பல இடங்களில் கூறிவரும் இந்நூல். இந்த நூலைப் படிப்பவர்கள் அனைவரும் தகுதி வாய்ந்த ஞானத்தை அருளும் ஞானாசானின் அருளைப் பெற்று அநுதினமும் அநுஷ்டானங்களைச் செய்து அனுபூதி வாழ்வுதனைப்பெற்று இல்லற ஞானி என்று சொல்லப்பட்ட ஜீவன் முத்தர்களாக வாழ வேண்டும் என்பதே எமது மேலான எண்ணமாகும். இதுவே நூல் ஆசிரியரின் மேலான எண்ணம் என்று துணிந்து கூறலாம்.
10
இந்நூல் தஞ்சைமாவட்டத்தில் நன்னிலம் என்னும் நல்லூரில் வாழ்ந்த தாண்டவராய சுவாமிகளால் இன்றைக்கு சுமார் 450 ஆண்டுகளுக்கு முன் எழுதப்பெற்ற அத்வைத இலக்கிய ஞானநூல் ஆகும். இந்நூல் தமிழில் தோன்றிய சுத்த அத்வைத இலக்கியம் என்று சொன்னால் அது மிகையாகாது. இது ஆழ்ந்த நுட்பமான கருத்தோட்டமும் கூடிய நூல் எனதுணிந்து கூறலாம். கைவல்ய நவநீதம் எனும் இந்நூலுக்கு ஆழ்ந்த புலமைபெற்ற சிதம்பரம் பொன்னம்பலம் சுவாமிகள், ஈசூர் சச்சிதானந்த சுவாமிகள், தஞ்சை வடிவேலு செட்டியார் சுவாமிகள், அருணாசல சுவாமிகள் போன்ற ஆன்றோர்கள் பிளாட்டினம் போன்ற குவளைகளிலும், தங்கக் குவளைகளிலும், வெள்ளிக் குவளைகளிலும் இந்த ஞானப்பாலை ஊற்றி, பாதுகாத்து பலரும் பருகும் வண்ணம் செய்தனர். யாமோ எம்மால் இயன்ற அளவு திரட்டி எல்லோர் இல்லங்களிலும் பழக்கத்தில் இருக்கும் எவர்சில்வர் குவளைகளில் சேர்த்து வைத்துள்ளோம். அருளை அள்ளிப் பருக நினைப்போர் அனைவரும் அள்ளிப்பருகி பவசாகரம் கடக்க உதவிடும் புணையாகப் பயன்படுத்திக் கொள்வீர். இந்நூலில் நிறைகளை ஏற்று, குறைகண்டால் உலகம் பொறுக்க.
11