ஆன்மீகத்தின் அடிப்படை

ஆன்றோர்களே, சான்றோர்களே, ஆன்மீக அன்பர்களே! உலகில் எத்தனையோ மதங்கள் தோன்றிவிட்டன. அத்தனை மதங்களும் சரியை, கிரியை, யோகம், ஞானம் என்ற நான்கு வகைக்குள் சிக்கித் தவிக்கின்றது. ‘சரியை, என்றால் கண்மூடித்தனமான ஒரு பக்தி என்று நாம் கூறலாம். ஏறத்தாழ எல்லா மதத்திலும் சரியையாளர்களே 95% ஆக்கிரமித்து உள்ளார்கள். அதிலாவது அவர்களுக்கு ஒரு மன நிம்மதி கிடைக்குமா? ஆண்டவனின் பாதாரவிந்தத்தை அடையலாமா என்ற எண்ணத்தில் கண்மூடித்தனமான ஒரு பக்தியில் ஈடுபட்டுள்ளது எல்லோருக்கும் நன்றாகத் தெரியும். அதிலும் அவர்களுக்கு சரியான ஒரு மன நிம்மதி கிடைக்கவில்லை. அதனால் ‘கிரியை, என்ற செயலுக்கு தாவுகிறார்கள். கிரியை என்றால் ஆலயங்களை எழுப்புவது (கட்டுவது), தண்ணீர்பந்தல் அமைப்பது, அடியார்களுக்கு அன்ன, வஸ்திரங்கள் கொடுப்பது, மந்திரங்கள், ஜெபங்கள், யாகங்கள் என்று ஏதாவது செய்தாவது ஆண்டவனை அடைய முடியுமா என்ற எண்ணத்தில் அதில் செல்லக் கூடியவர்கள் ஏறத்தாழ நான்கு சதவீதம் (4%) தொண்ணூற்றி ஐந்தும் நான்கும் (95+4=99) தொண்ணூற்றி ஒன்பது சதவீதமாக உயர்ந்து விட்டது. இனி இருப்பது ஒரே ஒரு சதவீதம்தான். அதிலும் மந்திரங்கள், ஜெபங்கள், யாகங்கள் செய்வது கூட அவர்களுக்கு சரியான ஒரு நிம்மதியைப் பெற முடியவில்லை.
ஆதலால் ‘யோகம், என்ற நிலைக்கு அவர்கள் ஓடி வருகிறார்கள். ஹடயோகம், ராஜயோகம் என்ற பல்வேறு யோகங்கள் செய்து, ஆழ்நிலை தியானங்கள் செய்தாவது ஆண்டவனின் பாதாரவிந்தத்தை அடையலாமா என்ற நோக்கத்தில் அத்தனை பேரும் யோகத்திற்கு சென்று விடுகின்றார்கள். அதாவது Breathing Exercise (பிராணயாமம்) மூச்சுப்பயிற்சி என்று சொல்லுவார்கள். மூச்சுப்பயிற்சி என்றால் நாம் அதை எவ்வளவு நேரம் செய்ய முடியும்? மூச்சுப்பயிற்சி என்பது ஓடுகின்ற மாட்டை வாலைப் பிடித்து நிறுத்துவதற்கு சமம் என்று சொல்லுவார்கள். மாட்டை வாலைப்பிடித்து இழுத்துச் சென்றால் ஏறத்தாழ ஒரு நிமிடம் நம்முடைய சாமர்த்தியத்தால் நிறுத்தலாம். உடனே மாடும் அதனுடைய பலத்தினால் அந்த மனிதனை இழுத்துப்போட்டு விட்டு ஓடிவிடும். அதிலும் அவர்களுக்கு சரியான ஒரு நிம்மதி கிடைக்கவில்லை. அதனால் எண்ணத்தின் மூலமாக, கருத்தின் மூலமாக ஒரு ஆன்மீக வழிக்கு செல்லலாமா, ஆண்டவனின் பாதாரவிந்தத்தை அடையலாமா என்ற நோக்கத்தில் ‘ஞான பயிற்சியில், ஈடுபடுவோர் உண்டு. ‘ஞான பயிற்சியில், ஈடுபடுவோர் ஏறத்தாழ 0.002 என்று எமது குருநாதர் கூறுவார். இதை கணக்கு புள்ளியியல் தெரிந்த மேதைகள், எத்தனை பேர் என்று கணித்துக் கொள்ளலாம். அதிலும் அந்த ஞான பயிற்சியில் ஈடுபட்டு உள்ளே செல்லக்கூடிய உறுப்பினர்கள் அதிலும் 0.002 என்று சொல்வார்கள். அப்படி உறுப்பினராக சேரக்கூடியவர்கள் லட்சத்தில் இரண்டு பேர்தான்.
இலட்சத்தில் இரண்டு பேர்கள் மட்டும்தான் இந்த ஞானப்பயிற்சிக்கு செல்கின்றார்கள். ஏனென்றால் இந்த சரியைக்கும், கிரியைக்கும், யோகத்திற்கும், ஞானத்திற்கும் உள்ள வேறுபாடுகளை தாயுமானசுவாமிகள் விரும்பும் சரியை முதல் மெய்ஞானம் முதலாய் அரும்பு, மலர், காய், கனி போல் அன்றோ பராபரமே! என்று சொல்லுவார். சரியைக்கு அரும்புக்கு உள்ள ஒரு பலனும், கிரியைக்கு மலருக்கு உள்ள ஒரு பலனும், யோகத்திற்கு காய்க்குரிய ஒரு பலனும், ஞானத்திற்கு கனிக்கு உரிய ஒரு பலனும் உண்டு என்பார். கனிகள்தான் விதைகளை தூவும். விதைகள் மீண்டும் தன்னுடைய வம்சங்களை விருத்தி பண்ணும். அதனால்தான் எல்லோரும் ஞான பயிற்சியில் ஈடுபட்டு இந்த வேண்டாத ஒரு பிறப்பை அறுக்கக்கூடிய இந்த ஞான பயிற்சியில் ஈடுபட்டு அவர்கள் ஒரு சாயுச்சய நிலையை அடைவதற்குதான் அந்த காலத்தில் சித்தர்களும், முத்தர்களும், ஞானிகளும், அதிமேதாவிகளும் இந்த ஞானத்திற்கு வழிகாட்டி சென்றிருக்கின்றார்கள்.