ஜீவன் முக்தி

ஒருவனுக்கு ஞானம் உதயமானபோது. அவனிடமுள்ள அவித்தையாகிய காரண சரீரம் ஞானாக்கினியால் ததிக்கப் படுகிறது. பிராரப்தம் ஒழிந்த அக்கணமே தூலதேகம்
சவமாய்விடும். அப்போது சூக்கும தேகமானது கொல்லன் உலையிலுள்ள இரும்புண்ட நீர்போல் துரியமாகவும் விபுவாகவும் உள்ள சொரூபத்தில் நாசமாகும்.

“காரணசரீரம் நசிப்பே சூக்கும சரீர நாசம். சூக்கும சரீர நசிப்பே தூல சரீர நாசமாம்”.

மூவித கன்மங்கள் : புண்ணிய கன்மம், பாப கன்மம் இவை இரண்டும் கலந்த மிசிர கன்மம் ஆகிய மூன்றாம்.

துரியம் : சாக்கிரம், சொப்பனம், சுழுத்தியாம் எதிலும் தாக்கற்ற நான்காவது பொருளாதலால் அது தூரியம் எனப்பட்டது.

விபு: தேச காலவஸ்து சேதமற்று வியாபகமாக உள்ள
பொருளாதலின் அத்துரிய பரம்பொருள் விபு என்று ஆயிற்று.

யாதொன்று அனுபவத்தில் நினைப்பு மறைப்பு சலனங்களை உண்டாக்குவதற்கு காரணமாய் இருக்கிறதோ அதுவே காரண சரீரமென்றும் அவித்தை அல்லது அஞ்ஞானமென்றும் ஆவரணமென்றும் கூறப்படும். மனதை ஒடுக்கி மேலுள்ள அந்தகாரமான பாழைக் கடந்து தன்னை யறிந்த ஞானி ஆவரணம் அதாவது அஞ்ஞான மறைப்பு என்னும் திரையையறுத் தெரிந்தவனாகிறான். அவனுடைய அவித்தை அதாவது அஞ்ஞானம் மறைப்பு என்னும் உறை என்ற காரண சரீரம் ஞானாக்கினியால் தகிக்கப்படுகிறது. தகிக்கப்பட்டு அழிகிறது. இங்கு ஞானாக்கினி என்பது, தான் தேகமல்ல அதற்கு அன்னியமாகிய அழியாத ஆன்ம சொரூபமே என்று அனுபவமாக அறிந்து அந்த நிலையில் நிலைத் திருக்கும் தன்மையேயாகும்.

காரண சரீரம் அழிந்து போனதால் தூலதேகம் சவமான பின் சூக்கும தேகத்திற்குப் பற்ற இடமில்லை. ஆதலின் எல்லாக் காரியங்களும் தத்தம் காரணங்களில் ஒடுங்கு முறைபோல் சூக்கும தேக தத்துவங்களும், சத்துவ இரஜோ குண தன்மாத்திரை பூதங்களாக மாறி, உதித்த இடத்தில் ஒடுங்கி இருத்தல் அது கன்மம், என்று மகான் ரமணரிஷி கூறியதற்கிணங்க உதித்த முறையே ஒன்றிலொன்றொடுங்கி ஆகாய மாத்திரமாகி அதுவும் விக்ஷேப சத்தியிலொடுங்கி, விஷேபம் மூலப் பிரகிருதிலொடுங்கி, மூலப் பிரகிருதியும் முடிவில் தன் காரணமான பிரம்ம சொரூபத்தில் இலயமாய் விடுகிறது.

ஜீவன் முத்தர் தேகம் நீங்கிய பின் அவர்களின் விதேக முத்தியடையும் நிலை கண்டோம். இனி அவர்களின் பெருமை பற்றியும் அவர்களின் ஒடுக்கத்தின் பின் நாம் அவர்களுக்குச் செய்ய வேண்டிய கடமைபற்றியும் சிறிது விளக்குவோம். ஞானியின் தேகத்தைக் குகை செய்து பூசிக்கவேண்டும் என்பதே ஆன்றவிந்தடங்கிய கொள்கைச் சான்றோர் கருத்தாகும். அதை தீயிட்டெரித்தால் ஈசுவரனது கோயிலை எரித்ததுபோல் ஆகுமென்றும், அதனால் நாடெல்லாம் தீமண்டி அழியுமென்றும் கூறிச்சென்றனர். இதுபற்றியே

அந்தமின் ஞானிதன் னாகந் தீயினில்
வெந்திடி னாடெல்லாம் வெப்புத் தீயினி
னொந்தது நாய்நரி நுகரி னுண்செரு
வந்து நாய் நரிக்குண வாகும்வை யகமே.
                                                                                     – திருமந்திரம்

எண்ணிலா ஞானியுடலெரி தாவிடில் 
அண்ணல்தங் கோயில் அழலிட்ட தாங்கொக்கும் 
மண்ணின் மழைவிழா வையகம் பஞ்சமாம் 
எண்ணரு மன்னர் இழப்பார் அரசே.
                                                                   – திருமந்திரம்

என்று திருமூலர் திருமந்திரத்தில் கூறப்பட்டிருப்பதை
மனதில் கொண்டு செயல்பட வேண்டும்.

மேலும் திருவருட்பா என்னும் அருட்பாவில் வள்ளலார் சுவாமிகள் கூறுவதையும் சிந்திப்போம்.

பிறந்தவரை நீராட்டிப் பெருகவளர்
       திடுகின்றீர் பேயரே நீர்
இறந்தவரைச் சுடுகின்றீர் எவ்வணஞ்சம்
      மதித்தீரோ இரவிற் றூங்கி
மறந்தவரைத் தீமூட்ட வல்லிரா
     னும்மனத்தை வயிர மான
சிறந்தவரை யெனப்புகழச்செய்து
     கொண்டீர் ஏன் பிறந்துதிரி கின்றீரே.

                                                        -திருவருட்பா

பரனளிக்குத் தேகமீது இடுவதப
        ராதமெனப் பகர்கின் றேனீர்
சிரநெளிக்கச் சுடுகின்றிர்
       செத்தவர்கள் பற்பலருஞ் சித்த சுவாமி
உறனளிக்க வெழுகின்ற திருநாள்வந்
       தடுத்தனவீ துணர்ந்து நல்லோர் வரனளிக்கப்
புதைத்தநிலை காணீரோகண்கெட்ட மாட்டி னிரே.
                                                                  -திருவருட்பா

என்ற ஆன்றோர்களின் அருட்பாடல்களை நோக்கினால் புரிந்துவிடும். ஆனால் நம் முன்னோர் வடவர்கள் செய்யும் எரியூட்டும் முறையை பின்பற்றி வருவது ஏன் என்று புரியவில்லை.

தமிழக கிராமங்களில் இன்றும் மக்கள் இறந்தபின் அடக்கம் நடந்தத அடக்கம் எப்போது என்று பேசுவது இன்னும் வழக்கில் உள்ளது. அடக்கம் என்றால் உயிர் இந்த உடலோடு ஐக்கிய மாவதையே அடக்கம் என்றனர் ஆன்றோர். அதாவது இந்த உயிர் உடலோடு ஒடுங்கி இருத்தலையே முன்னோர்கள் ஒடுக்கம் என்றனர். ஜீவன் முத்தர்களின் ஜீவ சமாதியை ஒடுக்கம் என்று அழைப்பது இன்றும் வழக்கத்தில் உள்ளதை யாவரும் அறிவர் இது கருதியன்றோ அய்யன் திருவள்ளுவரும்

அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை
ஆரிருள் உய்த்து விடும்.
                                            – குறள் : 121
என்று கூறிச்சென்றார்.

 உயிர் இந்த உடலோடு அடங்கி ஒடுங்கி இருத்தலே தேவர்களோடு அதாவது தெய்வத் தன்மையோடு கூடிய தெய்வநிலைக்கு கொண்டு சேர்க்கும். அடங்காமை அதாவது உயிர் வேறு உடல் வேறு பிரிந்த நிலையானது பிறவி என்ற இருளில் தள்ளிவிடும் என்பதையே எளிய நடையில் யாவர்க்கும் உணர்த்துவராயினர். இது கருதியன்றோ கைவல்லிய நவநீதம் போன்ற வேதாந்த நூல்களும் சச்சிதானந்த சொரூபியாய் யாவர்க்கும் அருள்பாலிக்கும் ஜீவன் முத்தர்களையே வணங்கி பலனைப் புசிக்க வேண்டுமென்று கூறும்.

பொன்னில மாத ராசை
      பொருந்தினர் பொருந்தாருள்ளம்
தன்னிலந் தரத்திற் சீவ
      சாட்சி மாத்திரமாய் நிற்கும்
எந்நிலங் களினுமிக்க
     வெழுநில மவற்றின் மேலாம்
நன்னில மருவு மேக
      நாயகன் பதங்கள் போற்றி.

                                – கைவல்லிய நவநீதம் (பாயிரம் -1)

பொன்னாசை, மண்ணாசை, பெண்ணாசை இவற்றின் மேல்
ஆசையுடையோர், அதாவது அஞ்ஞானிகள் உள்ளத்திலும், இவற்றின் மேல் பற்றில்லார் . அதாவது ஞானிகள் உள்ளத்திலும் எதிலும் பேதமின்றி ஆகாயத்தைப்போல எதிலும் தாக்கற்று சீவசாட்சி மாத்திரமாய் விளங்கி நின்ற எல்லாப் பூமிகளுக்கும் மேலான ஏழு ஞான பூமிகளிற் சிறந்த துரிய பூமியிற் பொருந்தி யொளிரும் சச்சிதானந்த சொரூபியாகிய பரம் பொருளின் தோற்றமாம் ஜீவன் முத்தர்களின் பாதம் பணிந்து வணங்குவோம் என்று கூறியதை இங்கு சிந்திப்போம்.

முற்றும் துறந்த முனிவர்களது அதாவது ஜீவன் முத்தர்களது பெருமையை பேசப்பேச வாய்மணக்கும் எண்ண எண்ண எண்ணமாளாது என்று அய்யன் திருவள்ளுவர் கூறுவதையும் பார்ப்போம்.

துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்து
இறந்தாரை எண்ணிக் கொண்டற்று.
– குறள் : 22

ஆம் உலகில் இறந்தவர்களின் எண்ணிக்கை எவ்வளவு என்று கூறமுடியுமா? முடியாதல்லவா அது போலத்தான் உண்மையாகவே பற்றுகளைத் துறந்த உத்தமர்களின் பெருமையையும் அளவிடவே முடியாது. ஆதலின் பவப்பிணி போக்கும் ஞானிகளைப் போற்றி வணங்குவோம். வாழ்த்துவோம். ஒருமையுடன் நினது திருமலரடி நினைக்கின்ற உத்தமர்தம் உறவு வேண்டும் என்ற வள்ளலார் எண்ணப்படி அவர்களது உறவு என்றும் வேண்டும் என்போம்.

தம்மை மறந்து அருளமுதம் உண்டு
தேக்கும் தகையுடையார்
திருக்கூட்டம் சார்ந்திடுவோம்
சிறப்பறுக்கும் பெருநெறியை பயின்றிடுவோம்.

ஒன்றுகேள் மகனே புமான் முயற்சி
      யால் உரைத்தது மாநுடர்க்கு ஈசன்
நன்று செய்யவே காட்டிய நூல்வழி
     நடந்து நல்லவர் பின்னே
சென்று துட்டவாதனைவிட்டு விவேகி
     யாய் செனித்த மாயையைத் தள்ளி
நின்று ஞானத்தை அடைந்தவர்
    பவங்கள் போம் நிச்சயம் இதுதானே.
                            – கைவல்லிய நவநீதம் (சந்தேகம் தெளிதற்படலம்-62)

என்று கைவல்லிய நவநீதம் கூறும் நிச்சயமான ஞானத்தை அடைந்து பேரின்ப பெருவாழ்வு வாழ்ந்து பவப்பிணி போக்கிடுவோம். காலம் உள்ளளவும் இந்த ஞாலம் உள்ளளவும் நிலமிசை நீடுவாழும் நிலையை அறிந்து உணர்ந்து வாழ்வோம்.