சங்கர சுவாமிகளின் ஜீவசமாதி ஆலயம் உலக அறிவார்ந்தோர் இயற்கை ஞான சபை திருச்செந்தூர்

அய்யன்பட்டி அருள்மிகு இராஜரிஷி பரமஞான குருபிரான் சங்கரசுவாமிகள்

இருட்க்கதவை உடைத்தெறிய
இளம்பருதி தோன்றியது போல்
மருட்க்கதவை உடைத்தெறியப் பிண்டாதித்தன்
திருச்சீரலைவாய் அருகே அமர்ந்து
அருட்கதிர்வீச்சால் அருளாளர்களையும்
பொருளாளர்களையும்
காத்தருளி அருட்பார்வையால் நம் சிந்தை
அணு ஒவ்வொன்றையும் சிலிர்க்க வைப்பான்.
– ஞானவள்ளல் மகாகனம் தங்கசுவாமிகள்

“வாழ்நாளாம் கடிகாரம் தனக்குச்சாவி வழங்குவது
ஒரு காலே ஒரு கால் கண்டீர் கோணாக அம்முள்
நிற்பது இன்றோ என்றோ குறித்துரைக்க
அதற்குள் கண்டடைவீர்குருவைத்தேடி”

– ராஜரிஷி பரமஞான குருபிரான் அய்யன்பட்டி சங்கரசுவாமிகள்

வழிபடு மெய்ஞ்ஞானம் வாய்க்கும் வழியது கேளாய்
சுழினை என்று அவ்விடம் கண்ணும் கருத்தும்
விழிவைக்கும் சாதகத்தால்ஆண்டொன்று தப்பாமல்
சாதிக்கில் பேதகமொன்றில்லை பிடி.

– ராஜரிஷி பரமஞான குருபிரான் அய்யன்பட்டி சங்கரசுவாமிகள்

*கையற வில்லாத கண்புருவப்பூட்டு
கண்டுகளி கொண்டு திறந்துண்டு நடு நாட்டு”

– திரு அருட்பா

“வித்தகமாகப் பலகலை பயின்றும்
மேவுநற் பயன்களை யறிந்தும்
தத்துவ முழுதுங் கசடற வுணர்ந்து தன்னிலை யறிவதற்கரிதாம்
சுத்த மெய்ஞ்ஞானதேசிகன் மகிழ்ந்தே
சொல்லாமற் சொல்லுமோர் மொழியாம் முத்திரை மோன நிலையினாலன்றி
முத்தியின் நிலைகிடையாதே”

– நிட்டானுபூதி சாரம்

01

சங்கர சுவாமிகளின் அற்புதங்கள்

காமியத் தவம் காமியம் ஒன்றையும் கருதிடாத்தவம் என்றும்பூமியில் தவம் இருவகை சித்தியும் போதமும் தரும் மைந்தா ஆம் இவற்றில் ஒன்றுஇயற்றினார் ஒன்றையே அடைவர் இது தீர்வை யாம் உரைத்த அவ் இரண்டையும்
இயற்றினார் அன்றுள்ள பெரியோரே.

-கைவல்லிய நவநீதம் (சந்தேகம் தெளிதல் படலம் – 45)

தவமோ இருவகையாகும் ஒன்று காமியத்தவம் என்பர் மற்றொன்று நிட்காமியத்தவம் என்பர். காமியத்தவம் என்பது ஒரு பலனைப்பெற விரும்பிச் செய்யும் தவமாகும்.நிட்காமியத்தவம் என்பது ஒரு பலனையும் இச்சியாது செய்யும் தவமாகும். இவற்றில் காமியத்தவம் அட்டமாசித்திகளைத் தரும் நிட்காமியத்தவம் முத்தியை மட்டுமேதரும்,இவற்றில் ஒன்றையியற்றுவோர் ஒன்றையே பெறுவர். ஆனால் பேரான்ம ஆற்றல் பெற்ற ஞானிகள் இருவிதத் தவங்களையும் இயற்றினபடியால் சித்தி, முத்தி

இரண்டையும் அடைந்தார்கள். பேரான்மப் பெரியோரான பரமஞான குருபிரான் ராஜரிஷி அய்யன்பட்டி சங்கரசுவாமிகள் அவர்கள் திருச்சீரலைவாய் (திருச்செந்தூர்) எனும் திருச்செம்பதியில் ஜீவசமாதி ஆலயம் பெற்று அருள் பாலித்து வருகிறார்கள். சங்கரசுவாமிகள் இப்புவியில் தேகசஞ்சாரமும் தேச சஞ்சாரமும் செய்த காலத்தில் நடந்த அற்புதங்கள் பல உள்ளன. அவற்றில் சிலவற்றை மட்டும் இங்கு பதிவு செய்துள்ளோம்.

02

சங்கர சுவாமிகளின் அற்புதங்கள் -1

சங்கரசுவாமிகள் சமாதி ஆலயம் பெறுவதற்கு மூன்று மாதங்கட்கு முன் திருச்செந்தூர் ரத வீதிகளில் ஆனந்தக் களிப்பில் பாடியதை அப்போதைய போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் சுவாமிகள் குடித்துவிட்டு ஆட்டம் போடுவதாக நினைத்து சுவாமிகளை ஆபாசமாக பேசியும், சவுக்கால் பலமுறை அடித்தும்துன்புறுத்தியிருக்கிறார்.சுவாமிகளோ அடியை வாங்கிக் கொண்டு சிரித்துக்கொண்டே ஆத்தா உன்னைசாப்பிட்டு விட்டாடா என்று கூறிச்சென்று விட்டாராம். சுவாமிகளை அடித்த சப் இன்ஸ்பெக்டர் மறுநாளே வைசூரியால் பாதித்து எட்டே நாளில் மரணமடைந்து விட்டாராம். இந்த செய்தியால் திருச்செந்தூர் மக்களே ஆச்சரியப்பட்டு விட்டார்களாம். “பொறுமையாற் பிராரத்துவத்தைப் புசிக்குநாட் செய்த கன்மம் மறுமையிற்றொடர்ந்திடாமல் மாண்டுபோம் வழியேதென்னிற் சிறியவ ரிகழ்ந்து ஞானி செய்தபாவத்தைக் கொள்வர் அறிபவர் அறிந்து பூசித்து அறமெல்லாம் பறித்துண்பாரே”
என்ற கைவல்லிய நவநீதத்தின் கருத்து பரமஞான குருபிரானாகிய சங்கரசுவாமிகளுக்கும் பொருத்தமாக இருக்கிறதல்லவா. குணமென்னும் குன்றேறி நின்றவர்களின் வெகுளியின் வெப்பத்தையும் பார்க்க முடிகிறது. ஆன்றவிந்தடங்கிய கொள்கைச் சான்றோரான ஞானிகள் பவப்பிணி மாறும் வகையும்
புலப்படுகிறதல்லவா?
03

சங்கர சுவாமிகளின் அற்புதங்கள் -2

நெல்லை குறுக்குத்துறை என்ற பகுதியில் இருந்து சுமார் 65 வயது மதிக்கத்தக்க ஒருபெண் பக்தை சுவாமிகளைத் தரிசனம் செய்யவருவதுண்டு. அந்த அம்மாவின்பெயரோ செல்லம்மாள், அவர்கள் வாயிலாக கூறிய விபரம், செல்லம்மா இளமைப்பிராயத்தில் நெல்லை குறுக்குத்துறையில் வசித்த காலத்தில் அந்த அம்மா வீட்டில்தங்கித்தான் சுவாமிகள் நித்திரை கொள்வார்களாம். ஒரு நாள் செல்லம்மாள் நினைத்தார்களாம் நாம் சுவாமிகளிடம் சேர்ந்தால் சுவாமிகளைப் போல அறிவானபிள்ளை பிறக்குமே என  நினைத்து சுவாமிகள் நித்திரைகொண்ட கட்டில் அருகேசென்றார்களாம். சுவாமிகள் கட்டில் நடுவில் தஞ்சாவூர் பொம்மையைப் போல சிறியஉருவமாக மாறி செல்லம்மா கண்களுக்கு காட்சி அளித்தார்களாம். செல்லம்மா பயந்துஅருகில் உள்ள ஒரு ஆளைக் கூட்டி வந்து இந்த அற்புதத்தைக் காட்டினார்களாம்.ஆனால் அந்த நபர் பார்க்கும் போது சுவாமிகள் கட்டிலில் அயர்ந்த நித்திரை செய்தார்களாம். செல்லம்மா மனம் திருந்தி வாழ்நாள் முழுவதும் சுவாமிகளின் பக்தையாகவே இருந்து வந்தார்களாம். அது அந்த அம்மாவே தனது 65வது வயதில் மனம் நெகிழ்ந்து கூறிய செய்தியாகும்.

04

சங்கர சுவாமிகளின் அற்புதங்கள் – 3

பாரதத்தை வெள்ளையர்கள் ஆண்டு வந்த காலத்தில் சங்கர சுவாமிகள் பாளையங்கோட்டை ஊசிக்கோபுரம் அருகில் செல்லும்போது வெள்ளைக்கார பாதிரியார் ஒருவர் சுவாமிகளை அழைத்து தாங்கள் எங்கள் ஏசு சுவாமிகள் போல அற்புதம் செய்தால்தான் நம்புவோம் அல்லது தாங்கள் ஆசாமியே என்று கூற, சுவாமிகளும் என்ன அற்புதம் செய்ய வேண்டும் என்று கேட்க, பாதிரியார் அவர்களை அருகில் நின்ற தென்னை மரத்தில் உள்ள இளநீரில் உயிருள்ள மீன்களைக் காட்ட முடியுமா? என கேட்க, சுவாமிகளும் அப்படியே செய்கிறேன் என்று அருகில் உள்ள தென்னையில் உள்ள இளநீரை வெட்டி எடுத்து பாத்திரத்தில் விட அதில் மூன்று மீன்குஞ்சுகள் நீந்தியது. உடனே பாதிரியார் சுவாமிகளிடம் மன்னிப்பு கோரியதுடன், Really you are a Saint? (உண்மையில் தாங்கள் ஒரு மகானே) என்று கூறி வழி அனுப்பி வைத்தார். அய்யன்பட்டி சங்கர சுவாமிகளின் அருளை அள்ளிப் பருகிட வாரீர்! வாரீர்!! என அன்போடு அழைக்கின்றோம்

அருள்மிகு அய்யன்பட்டி சங்கரசுவாமிகளின் ஒடுக்கத்திற்கு செல்லும் வழி
திருச்செந்தூர் முருகன் கோயில் சூரசம்ஹார மேடைக்குத் தென்புறம் அய்யா வைகுண்டவாசர் நாராயணசுவாமி கோயிலுக்கு மேல்புறம் அமைந்துள்ளது.

05

முக்கிய குறிப்பு

ஆன்மீக தாகம் உள்ள அன்பர்களே பிரதி மாதம் பௌர்ணமி இரவு அன்று

திருச்செந்தூரில் ராஜரிஷி, பரமஞான குருபிரான் அய்யன்பட்டி சங்கரசுவாமி அவர்களின் சமாதி ஆலயத்தில் உலக அறிவார்ந்தோர் இயற்கை ஞான சபையின் நிறுவனர் தலைவர் சங்கரசுவாமிகளின் குரு பரம்பரை ஞானவள்ளல் மகாகனம் தங்கசுவாமிகள் அவர்களால் ஆன்மீக குண்டலினி ஞான திருவடி தீட்சை அருளப்படும்.

“காகம் உறவு கலந்துண்ணக் கண்டீர் அகண்டா கார சிவ போக மெனும்பேரின்ப வெள்ளம் பொங்கித் ததும்பிப் பூரணமாய் ஏக வுருவாய்க் கிடக்குதையோ இன்புற்றிட நாம் இனியெடுத்த தேகம் விழுமுன் புசிப்பதற்கு சேரவாருஞ் சகத்தீரே”
என்று தாயுமான சுவாமிகள் அழைப்பது போல் பேரின்ப பெருவாழ்வு வாழ உலக அறிவார்ந்தோர் இயற்கை ஞானசபை உங்களை அழைக்கிறது.

“ALWAYS IN ALL WAYS MAINTAINING AWARENESS
IN THOUGHTS, WORDS AND DEEDS”
“MAY ALL OF US ENJOY THE ETERNAL BLISS “

06

உலக அறிவார்ந்தோர் இயற்கை ஞானசபை திருச்செந்தூர் - நிகழ்வுகள்

  • ஒவ்வொரு மாதமும் அய்யன்பட்டி இராஜரி´ சங்கரசுவாமிகளின் ஒடுக்கம் பெற்ற மகம் நட்சத்திரத்தில் பூசை மற்றும் அன்னதானம் சிறப்பாக நடந்து வருகின்றது.
  • ஒவ்வொரு மாதமும் பெளர்ணமி பூஜைகள் மற்றும் சத்சங்கம் திருக்கூட்டம் இரவு 07.00 மணிக்கு நடந்து வருகின்றது.

தொடர்புக்கு

திருச்செந்தூர் முருகன் கோயில் சூரசம்ஹார மேடைக்குத் தென்புறம் அய்யா வைகுண்டவாசர் நாராயணசுவாமி கோயிலுக்கு மேல்புறம், திருச்செந்தூர் கடற்கரை – திருச்செந்தூர்