உலக அறிவார்ந்தோர் இயற்கை ஞானசபை கூட்டாம்புளி கிளை

ஞானசபை உருவாக்கம்:

கூட்டாம்புளி ஞானசபைக் கிளையில் முதலில் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவில் ஐந்து நபர்கள் மட்டுமே இருந்தோம். அப்போது ஏரல் கிளை ஞானசபையானது உருவாகி சில நாட்களில் அங்குள்ள அன்பர்களிடம் பழக்கம் ஏற்பட்டது. அதன் மூலம் ஐயா அவர்கள் அடிக்கடி ஞானசபை ஏரல் கிளைக்கு வந்து சமாராதனை திருக்கூட்டம் நிகழ்த்தி எல்லோருக்கும் அருளாசி வழங்கி அந்த சபை அன்பர்கள் ஐயா அவர்களின் நேரடி கண்பார்வையில் இருப்பதை அறிந்து அப்போதுதான் ஐயாவிடம் சென்று நாங்கள் அனைவரும் ஓரிடத்தில் அமர்ந்து கூட்டு சமாராதனை நடத்துவதற்கு ஒரு ஞானசபை கிளையை உருவாக்கித்தாருங்கள் ஐயா என்று கேட்டோம். அதற்கு ஐயா உடனே சம்மதிக்கவில்லை. சபை என்பது பத்து நாட்கள் திறந்திருந்து பதினோறாம் நாள் மூடி விடுவதல்ல. ஒரு இயக்கம் என்பது எப்போதும் தொடர்ந்து இயங்க வேண்டும். அதற்குப் பெயர்தான் இயக்கம் என்றார்கள். உடனே நாங்கள் பதில் பேசவில்லை. பிறகு ஒருவாரம் கழித்து சம்மதித்தார்கள். அதற்கிணங்க திருவள்ளுவர் 2035 ஆம் ஆண்டு ஆடவை திங்கள் 27ஆம் நாள் (ஆனிமாதம்),……….. 2004ஆம் ஆண்டு எங்களுடைய கூட்டாம்புளி கிளை ஞானசபையை ஐயா அவர்கள் மரக்கன்றை ஊன்றுவதுபோல் ஊன்றி இந்த கிளை ஞானசபையானது வருகின்ற காலங்களில் பெரிய விருட்சமாக வளர்ந்து வரட்டும் என்ற பெரிய நோக்கத்தில் உருவாக்கி ஐயா அவர்களுடைய பராமரிப்புக்குரிய கண் பார்வையில் வைத்துக் கொண்டார்கள். நாங்கள் ஒவ்வொரு சமாதாரனை திருக்கூட்டத்தில் ஐயா அவர்கள் கூறியது போல் எங்களுக்கு வேண்டிய அருளும், பொருளும் நிறைவாக கிடைக்க வேண்டும் என்றும் அருளாளர்களின் எண்ணிக்கை அதிகமாக வரவேண்டும் என்றும் வேண்டிக்கொள்வோம். இப்படி தினந்தோறும் திருக்கூட்டம் நடைபெற்று வரவர நாளடைவில் சபைக்கு ஒவ்வொரு அன்பர்களாக கூட்டாம்புளியில் இருந்தும் அதற்கு அருகாமையில் உள்ள சிறுப்பாடு மற்றும் புதுக்கோட்டை, குலையன்கரிசல் போன்ற ஊர்களில் இருந்து அன்பர்கள் வரத் தொடங்கினார்கள். அப்போது சபையில் ஏற்கனவே இருந்து வந்த படித்த இளைஞர்களுக்கு வேலை கிடைத்தது. கூலி வேலை செய்து வந்த அன்பர்கள் சொந்தத் தொழில் தொடங்கி முதலாளியாக உயர்ந்தார்கள். இப்படி சமாராதனை திருக்கூட்டத்தின் மூலமாக அருள்நிலைகளிலும், பொருள் நிலைகளிலும் உயர்வு பெற்றார்கள். உடனே மறு ஆண்டே நம்முடைய கிளை ஞானசபைக்கு சொந்த இடம் வாங்க வேண்டும் என்ற எண்ணம் எழ ஆரம்பித்தது. அந்த கோரிக்கைகளையும் சமாராதனை திருக்கூட்டத்தில் நினைத்து வேண்டி வந்தோம். இப்படி படிப்படியாக சபையும் வளரத் தொடங்கியது. சபையின் மூலம் நாங்களும் வளர்ந்தோம்.

கூட்டாம்புளி கிளை ஞானசபை சொந்த வளாகமாக உருவாகியது:

திருக்கூட்ட கோரிக்கையின் பலனாக ஐயா அவர்களின் அருளாசியுடன் திருவள்ளுவர் 2036ம் ஆண்டு நளி திங்கள் (கார்த்திகை மாதம்) 10ஆம் நாள் 25/11/2005ஆம் தேதி கூட்டாம்புளி கிளை ஞானசபைக்கு கூட்டாம்புளி மெயின்ரோட்டில் இடம் வாங்குவதாக தீர்மானித்து நமது தலைமை பொருளாளர் கனம் பொருந்திய அருமை பாண்டியன் அண்ணாச்சியை சந்தித்து இடம் பார்த்த விதத்தைக் கூறியபோது கூட்டாம்புளி வடக்கு, தெற்கு ரோட்டிற்கு மேற்கா, கிழக்கா என்று கேட்டார்கள். அப்போது கிழக்கு என்று கூறினோம். அப்போது கிழக்கே வேண்டாம். நாம் சாமி கும்பிடும்போது மேற்கு முகமாகத்தான் கும்பிடுவோம். ஆதலால் மேற்குப்பக்கம் பாருங்கள் என்றார்கள். அதன்படி இப்போது நம்முடைய கூட்டாம்புளி கிளை ஞானசபையானது கூட்டாம்புளி மெயின் ரோட்டிற்கு மேற்கு பக்கமாகவே உள்ள இடமானது மேல் கூறிய அதே நாளில் அதே கிழமையில் பத்திரப்பதிவாகி சொந்த இடமாக மலர்ந்து அது மேலும் GOLDEN நகராக உருப்பெற்றது. இந்த நிகழ்வில் தலைமை ஞானசபைக்கு அடுத்தபடியாக சொந்த இடம் அமைந்த முதல் கிளை ஞானசபை கூட்டாம்புளி கிளை ஞானசபை என்பது பெருமைக்குரியதாக அமைந்தது.

ஞானசபை சொந்த இடத்தில் உருவாக்கம்:

முதலில் இடத்தின் அனைத்து பக்கங்களையும் பனைமட்டையை வைத்து வேலிகள் அமைத்து தென்னங்கீற்றினால் கூரை வேய்ந்து பத்துக்குப் பத்து அளவில் அமைத்து தந்தார்கள். 18/11/2006 அன்று ஐயா அவர்களின் 68 வது பிறந்தநாள் விழாவும் திருக்குறள் (தமிழாக்கம்) நூல் வெளியீட்டு விழாவும் ஆக முப்பெரும் விழாவாக அமைத்து தந்து எங்களுக்கு அருளாசியையும் வழங்கினார்கள். இந்த நிகழ்ச்சிக்கு நம்முடைய கூட்டாம்புளி பஞ்சாயத்து தலைவர் D.ஆதவன் அவர்கள் கலந்து கொண்டது சிறப்புடையதாக அமைந்தது.

ஞானசபை தியானமண்டபம் அடிக்கல் நாட்டுவிழா:

திருவள்ளுவர் 2041ஆம் ஆண்டு கடகம் திங்கள் (ஆடி மாதம்) 18ம் நாள் 03/08/2009ஆம் தேதி செவ்வாய்க்கிழமை அன்று காலை 8 மணி அளவில் ஆடிப்பெருக்கு அன்று ஐயா அவர்களின் தலைமையிலும் நமது இயக்கத்தின் தலைமை பொருளாளர் கனம் பொருந்திய அருமை பாண்டியன் அண்ணாச்சி முன்னிலையிலும் தியான மண்டப திருப்பணிக்கு கால்கோல் விழா (அடிக்கல் நாட்டு விழா) வெகு சீரோடும், சிறப்போடும் நடைபெற்றது. இந்த தமிழ்நாட்டில் எத்தனையோ சபைகள் அமைந்திருக்கின்றது. அவை எல்லாம் காடுகளிலும், மலைகளிலும், ஆட்கள் இல்லாத இடங்களிலும்தான் அமைந்துள்ளன. அது மட்டுமல்ல. அந்த இயக்கத்தின் தலைவராக இருப்போரின் சொந்த ஊரிலும் கிடையாது. ஆனால் இதிலிருந்து முற்றிலும் மாறாக நம்முடைய இயக்கத்தின் தலைமையகமாக இருந்தாலும் சரி அல்லது கிளை ஞானசபைகளாக இருந்தாலும் சரி, சொந்த ஊரில் அதுவும் ஊருக்கு மத்தியில்தான் அமைந்திருக்கிறது என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும். மேலும் இதிலிருந்தே நாம் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். ''உலகத்தை வெறுத்தவன் ஞானியல்ல. உலகை உணர்ந்தவனே ஞானியாவான்'' என்று நம்முடைய ஐயா அவர்கள் கூறியது நம் அனைவருக்கும் நினைவுக்கு வருகிறது. மேலும் இந்த நிகழ்வின் உட்பொருள் என்னவென்றால், உண்மை என்றும் அஞ்சி ஓடுவதில்லை. பொய்யான வேஷம் என்றும் அஞ்சி ஓடக்கூடியதாக இருக்கிறது. ஆதலால் சீடர்களாகிய நாம் அனைவரும் நம்முடைய ஐயாவின் உட்பொருளை புரிந்து உணர்ந்து நடந்து கொள்ள வேண்டும்.

தியான மண்டப எண்கோண கும்பம் ஏற்றியது:

திருவள்ளுவர் 2042ஆம் ஆண்டு துலை திங்கள் (ஐப்பசி மாதம்) 11ஆம் நாள் 28/10/2011 வெள்ளிக்கிழமை அன்று காலை ஐயா அவர்கள் தலைமையிலும் பாண்டியன் அண்ணாச்சி முன்னிலையிலும் எண்கோணத்தின் உச்சியில் கும்பம் ஏற்று விழா வெகு சீரோடும், சிறப்போடும் நடைபெற்றது.

தியான மண்டபம் திறப்புவிழா:

திருவள்ளுவர் 2042ஆம் ஆண்டு துலை திங்கள் (ஐப்பசி மாதம்) 06/11/2011 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று உலக அறிவார்ந்தோர் இயற்கை ஞான சபை நிறுவனர் தலைவர் ஐயா அவர்களின் 73 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவாகவும், கூட்டாம்புளி கிளை ஞானசபையின் திறப்பு விழாவாகவும், தாண்டவராயசுவாமிகளின் கைவல்ய நவநீதம் என்ற நூலின் மூலமும் எளியஉரையும் என்ற நூல் வெளியீட்டு விழாவாகவும் ஆக முப்பெரும்விழாவாக சீரோடும் சிறப்போடும் நடைபெற்றது. இதுநாள் வரை உள்ளூர் கோவில் இடங்களிலும், வாடகை இடங்களிலும், படிப்பகங்களிலும் பிறகு சொந்த இடத்தில் தென்னங்கீற்றால் ஆன கூரைகளிலும் இருந்து வந்த எங்களை காற்றாலும், மழையாலும், குளிராலும், வெயிலாலும் எந்த இடையூறும் இல்லாதவண்ணம் காண்போரை கவரக்கூடிய வகையில் அருமை பாண்டியன் அண்ணாச்சி கட்டிட வடிவமைப்பைக் கொடுத்து காலாகாலத்திற்கும் நிலைத்து நிற்குமாறு நல்லமுறையில் அமைத்து தந்தார்கள். அதற்கு மற்ற கிளை சபைகளில் உள்ள அன்பர்களும் எங்களுடைய கூட்டாம்புளி சபை அன்பர்களும் ஒரே சிந்தனையாக ஒருமித்த செயல்பாட்டுடன் ஒத்துழைத்தார்கள். மேலும் கூட்டாம்புளி அன்பர்கள் வேலை செய்வதற்கு கூலி எதுவும் வாங்காமல் ஒவ்வொரு அன்பர்களும் தாங்கள் சபையில் கட்டிக் கொண்டு வந்த ஏலச்சீட்டு பணத்தையும் கொடுத்தார்கள். ஐயா அவர்கள் திருவாக்கால் திறப்பு விழா அன்று இந்த சபையானது மற்ற சபைகளைப் போல் வெறும் மண்ணும் செங்கல்லால் கட்டப்பட்ட கட்டடம் அல்ல. அருளாளர்களின் உணர்வால் கட்டப்பட்ட சபை என்று ஐயா அவர்களால் இந்த கிளை ஞான சபையானது மேலும் சிறப்படைந்தது.

தியான மண்டபம் அமைத்ததின் நோக்கம்:

  • வாழையடி வாழையாக வளரக்கூடிய இந்த மெய்த்தொண்டர் குழாத்தில் நல்ல பல தொண்டர்கள் உருவாக்கப்பட வேண்டும் என்பதற்காகவும்,
  • குருநாதர் அவர்கள் அருளிய ஞானநூல்களை ஆய்வு செய்து அதன் நுட்பமான கருத்துக்களை பயிற்சியின் மூலம் ஆய்வு செய்து கொள்ள வேண்டும் என்பதற்காகவும்,
  • தொடர்ந்து முயற்சியுடன் கூடிய முறையான பயிற்சி செய்து பழகக்கூடிய ஒரு இடமாக அமைய வேண்டும் என்பதற்காகவும்,
  • உணர்வு என்னும் அருளாற்றலால் ஒன்றிணைக்கப்பட்ட நாம் அனைவரும் ஒருமித்த சிந்தனையுடன் ஒற்றுமையாக இயங்க வேண்டும் என்பதற்காகவும்,
  • தன்னைத்தானே ஆய்வு செய்து அதில் அனுபவம் அடைந்தவர் நம்மைச் சார்ந்த அன்பர்களுக்கு ஒரு பக்கபலமாக இருக்க வேண்டும் என்பதற்காகவும்,
  • வளர்ச்சி என்றாலே ஒரே சீராக இருக்க வேண்டும் என்பதற்காக சமாராதனை திருக்கூட்டம் தொடர்ந்து நடத்தப்பட வேண்டும் என்பதற்காகவும்,
  • நம்முடைய இயக்கம் சார்ந்த அறப்பணிகளுக்கு கூடி ஒரு சரியான திட்டமிடல் நடக்கும் ஒரு இடமாக அமைய வேண்டும் என்பதற்காகவும்
  • நம்மைச் சார்ந்து சிந்தித்து செயல்பட்டு பலன் அடைந்த நாம் இந்த சமுதாயத்தில் நாமும் ஒருவர் என்பதால் சமுதாயம் சார்ந்த அறப்பணிகளையும் செய்ய வேண்டும் என்பதற்காகவும்,
  • இந்த புள்ளிக் கல்வியின் மூலம் ஒரு ஜீவன் தான் யார் என்று தெரிந்து, தெளிந்து நிலைபெறுதல் வேண்டும் என்பதற்காகவும்,
  • ''உலகம் என்பது உயர்ந்தோர் மாட்டு'' என்ற உயர்ந்த நோக்கத்தோடு வெறும் வார்த்தையாக இல்லாமல் அதை செயல்படுத்திக் காட்டிய நமது ஐயா அவர்களின் இந்த மெய்ஞானக் கல்வியினை உலகமெங்கும் பாமர மக்களும் புரிந்து செயல்படக்கூடிய வகையில் கொண்டு சேர்க்க வேண்டும் என்பதற்காகவும் இந்த அருளாற்றல் மிகுந்த தியான மண்டபம் அமைத்ததின் நோக்கமாகும்.

உலக அறிவார்ந்தோர் இயற்கை ஞானசபை கூட்டாம்புளி - நிகழ்வுகள்

  • தினசரி அதிகாலை தியானம் காலை 5.00 மணிக்கும் மற்றும் இரவு 7.00 மணிக்கு சத்சங்கம் குருவின் திருவருளோடு நடந்து வருகின்றது.
  • ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை இரவு 10.00 மணிக்கு திருக்கூட்டம் மற்றும் சமாராதனையும் நடைபெற்று வருகின்றது.
  • பெண்களுக்கான தியானம் வியாழக்கிழமை தோறும் மாலை 4.00 மணி அளவில் நடந்து வருகின்றது.
  • ஒவ்வொரு தமிழ் மாதம் முதல் ஞாயிறுதோறும் மாலை 3.00 மணி முதல் 5.00 மணி வரை திருக்குறள் செம்பொருள் ஆய்வு மன்றம் திருக்கூட்டம் நடந்து வருகின்றது.

உலக அறிவார்ந்தோர் இயற்கை ஞானசபை கூட்டாம்புளி - புகைப்படங்கள்

தொடர்புக்கு

தியான மண்டபம் - முகவரி

உலக அறிவார்ந்தோர் இயற்கை ஞானசபை கிளை-கூட்டாம்புளி, தியான மண்டபம், கோல்டன் நகர், புதுக்கோட்டை மெயின்ரோடு, கூட்டாம்புளி – 628 103 தூத்துக்குடி மாவட்டம்.