"அறிந்தோர் உணர்வர் உணர்ந்தோர் அறிவர்"

நூல் விவரம்

நூல் பெயர்: அறிந்தோர் உணர்வர் உணர்ந்தோர் அறிவர்
ஆசிரியர்: ஞானவள்ளல் மகாகனம் தங்கசுவாமிகள்
பதிப்பு : முதல் பதிப்பு திருவள்ளுவர் 2043ம் ஆண்டு (கி.பி – 2012)
பக்கம்: 284
வெளியிடப்பட்ட இடம்: மதுரை ஞானசபை கிளையில் நடைபெற்ற ஞானவள்ளல் மகாகனம் தங்கசுவாமிகள் 74 வது பிறந்தநாள் விழாவில் வெளியிடப்பட்டது
வெளியீடு:
உலக அறிவார்ந்தோர் இயற்கை ஞானசபை அறக்கட்டளை

பதிவு எண் : 140/4/2000
ஞானசபை சாலை, சிவத்தையாபுரம்,
சாயர்புரம் அஞ்சல், தூத்துக்குடி – 628 251
+91 94420 56071

புகுமுன் தெரிமின்

கடலின் அப்பு உப்பாதல் வேண்டின் தரையில்
தவழ்ந்து அண்டாதித்தன் வெப்பமிகு கதிர்களால்
உப்பாகி உலகிற்கு உவப்பை ஊட்டுதல் போல்,
பேரான்ம ஞானாசான் மூலம் பிண்டாதித்தன் பெருமைதனை
உணர்ந்து ஞானாக்கினியால் தகிக்கப் பெற்றால் அன்றோ
ஆதிக்கு சமமான சமாதி நிலை அடைந்திடுவர்.
அடியேனும் இப்பாட்டை எழுத எப்பாடு பட்டேனும்
எம் மெய்யறிவின் துணைகொண்டு ஆன்றோரின்
கருத்தை உள்வாங்கி மீண்டும் வெளிக் கொணர்ந்து
எழுதுகின்றோம். எம்பாட்டில் தொடை தட்டும், தளை தட்டும்,
ஆனால் களையெடுத்த வயல்போல் களை கட்டும்.

“என்னுடைய அழிவற்ற ஒப்பற்ற பரசொரூபத்தை புறவிழிக்
கண்ணுக்குப் புலப்படாத என்னை அறிவிலிக் கூட்டம் யாவும்
கண்ணுக்கும் புலன்களுக்கும் தென்படும் இயல்பை உடையவன் என்று
கண்ணனும் கீதையில் கூறுவதை எண்ணிப் பாரும் உலகத்தீரே”

என்று பரந்தாமன் பகர்வதையும் அவரே கூறுவதுபோல்
கூறியுள்ளோம் மக்களெல்லாம் தேரித் தெளியட்டும் என்று.

“காலைப் பொழுதினிலே இஞ்சியுண்பீர் நண்பகல் சுக்கு உண்பீர்
மாலைப்பொழுதினிலே கடுக்காய் பொடி உண்பீர்”

என்று தேரையர் எழுதியதையும் எழுதிக் காட்டியுள்ளோம்.

“காலத்திற்கு நேற்றும் இன்றும் நாளையும் உண்டு
காலத்தை வெல்லாதாரை காலன் வெல்வான்
காலம் வெல்லும் வழியினைக் கண்டால்
காலம் காலமாய் களித்திருக்கலாம் கண்டீர்”

என இனிய எளிய நடையில் பாமரரும் உணரும்
வண்ணம் எழுதியுள்ளோம். புரியா மொழியில்
நமக்குத் தெரியா மொழியில் புகன்றிடில் என்பயன்?

“சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார்
செல்வர் சிவபுரத்தின் உள்ளார்”…

என்று மாணிக்கவாசகரும் ஒருவாசகத்தை கூறிச் சென்றார்
நான் மறைகளெல்லாம் கற்றால் என்ன! நான் மறைய
கற்றால் அன்றோ உன்னை நீ அறிய முடியும்.
இறைவனின் பாத கமலத்தை அடைந்திட வேண்டுமெனின்
நமது பாதக மலத்தை அறுத்திட வேண்டுமல்லவா!

இப்படி சொற்சிலம்ப விளையாட்டு தமிழில் ஏராளம் ஏராளம்.
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என அய்யன்
பகர்ந்தாலும் இந்த பிரம்மஞானக் கல்வி கூட
மேட்டுக்குடி வாசிகளிடம் சிக்கித் தவிப்பதையும்
எம்மால் கூறாமல் இருக்க முடியவில்லை.

“தித்திக்கும் பலாவோ வேர்களிலும் நடுமரங்களிலும் கிளைகளிலும்
      மரத்தின் மேல் நுனிகளிலும் காய்த்துக் கனிகொடுக்கும்
இத்தரையில் வாழும் மாந்தர் இறைவனின் தலையின் மீதும் தோளின் மீதும்
      வயிற்றின் மீதும் காலின் மீதும் பிறந்திடுவர் என வர்ணபேதம் காட்டுவர்
எத்திக்கில் எவ்வூரில் இருந்தாலும் பலாச்சுளையின் தித்திப்பு மாறிடுமோ
     அதுபோல் தேகத்தில் உள்ளிருக்கும் தேகிக்கு சாதி மதம் கிடையாதென்று
எத்திக்கும் புகழ்மணக்க கூறிடும் எல்லாச் சமய மறைகளும்
     அதனால் அருளறிவால் அறிந்துணர்ந்து அடிசேர் ஞானம் அடைந்திடுவீர்”

எமது மாணவ மணிகளை சிந்திக்க வைத்து
செயலாற்றவே யாம் விரும்புகின்றோம் வீண்
நம்பிக்கைகளை விதைத்து அறுவடை செய்ய விரும்பவில்லை
யாம் இதை எம்பால் அருளை அள்ளிப் பருகியோர்
உணர்வர் உணர்வோர் அறிந்து மகிழ்வர்
ஞானம் என்றாலே அஞ்ஞானம் அகன்ற இடமென்று ஆன்றோர் கூறியதால்
அஞ்ஞானத்தை எம்மால் முடிந்தவரை
அகற்றி ஞான தீபத்தை ஏற்றுவதே எமது தொழில்.
எமது தேக சஞ்சாரமும், தேச சஞ்சாரமும்
இப்புவியில் இருக்குமட்டும் எமது அருட்பணியை தொடர்ந்திடுவோம் வாரீர்! வாரீர்!
ஊழையும் உட்பக்கம் காண உடன் வாரீர்! உடனே வாரீர்!
எம் ஊனோடும் உயிரோடும் உணர்வோடும்
கலந்த எமதருமை அருட் செல்வங்களே
மலர் மாலை வாடிவிடும் என நினைத்து சொல்மாலை
தொடுத்து உமது பாத மலரில் வைக்கின்றேன்.