குண்டலினி தீட்சை

ஒரு தீபத்தில் இருந்துதான் இன்னொரு தீபத்தை ஏற்றமுடியும். இது யாவரும் அறிந்த உண்மை. அதுபோல் குருநாதர் இல்லையேல் சற்சீடனும் இல்லை. இதையே எல்லா சமயங்களும் கூறுகின்றன. இராம கிருஷ்ணபரமஹம்சருக்கு ஒரு “விவேகானந்தர்” கிடைத்தது போல் மகான் யோவான் ஸ்நானகன் அவர்களுக்கு ஒரு “இயேசுபிரானும்” உருவானார்.

ஸ்திரிகளிடத்தில் பிறந்தவர்களில் யோவான் ஸ்நானகனைப் பார்க்கிலும் பெரியவன் ஒருவனும் எழும்பியதில்லை
                                                 விவிலியம் – புதிய ஏற்பாடு மத்தேயு 11:11

தன்னுடைய குருபிரானைப் பற்றி ஏசுபிரான் அவர் வாயினால் கூறுவதை யாரும் மறுக்கவோ மாற்றவோ முடியாது.

இப்படியே குருசீடன் பரம்பரை வளர்ந்து குருபரம்பரையை வாழையடி வாழையாக வளர்க்கும் விதத்தையும் காணலாம்.

ஒருவனுடைய ஆன்மீக வளர்ச்சிக்கு குரு என்பவர் நிச்சயம் தேவை என்பது புராதன காலத்திருந்தே அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.

குரு, சீடன் உறவு முறை என்பது வழிவழியாகவும் மிகப் புனிதமானதாகவும் முக்கியமானதாகவும் ஆகி இருக்கிறது. இது எதனால் என்றால் சீடனின் ஆன்மீக வளர்ச்சியில் நெருக்கடியான நிலைவரும் பொழுது அவருக்கு சக்தி நிலையில் ஒருசிறு உந்துதல் தேவைப்படுகிறது. அந்த உந்துதல் இன்றி அவரால் உச்சநிலை அடைய முடியாது. அவரைவிட யார் உயர்வான நிலையில் இருக்கின்றாரோ அவரால்தான் அந்த சிறு உந்துதலைக் கொடுக்க முடியும். “கு” என்றால் இருள் (அதாவது அகவிருள்) “ரு” என்றால் அகற்றுபவர். எனவே யார் உங்களது அகவிருள் அதாவது அஞ்ஞானத்தை அகற்றுபவரோ அவரே “குரு”. ஒரு குரு என்பவர், தனது முன்னிலையிலோ அல்லது குரு தனது முன்னிலையின்றியோ செயலாற்றுபவர். தனது வார்த்தைகளின் மூலம் செயலாற்றுபவர் அல்ல. நீங்கள் குருவெனக் குறிப்பிடுவது ஒரு குறிப்பிட்ட சக்தி, ஒரு நபரல்ல.  குரு சீட உறவுமுறை சரீர ரீதியானதோ மனோ ரீதியானதோ, அல்லது உணர்ச்சி ரீதியானதோ அல்ல .

இது இந்த கட்டுப்பாடுகளைக் கடந்தது. ஆகவே உடலையும் மனதையும் கடந்து நீங்கள் எடுத்துச் செல்ல இந்த உறவுமுறை சாத்தியமான ஒன்று. ஆன்மீக பாதையில் பயணித்து தனக்குள் ஒரு இறுதி நிலையை நோக்கி வளரும், மனிதனுக்கு நிலைத்து நிற்கும் இந்த உறவுமுறை தேவை மிகுந்ததாக இருக்கும். ஏனென்றால் வேறு எவராலும் உங்களை அந்த நிலைக்கு எடுத்துச் செல்ல முடியாது. அதனால்தான் இந்த உறவு முறை மிகப் புனிதமானதாக வைக்கப்பட்டிருக்கிறது.

ஒரு புனிதமான ஆன்மாவிடமிருந்து தான் வேறோரு ஆன்மா தூண்டுதலை ஏற்க முடியுமே தவிர வேறு யாரிடமிருந்தும் பெற்றுக் கொள்ள முடியாது. இப்படிப்பட்ட தூண்டுதல் எங்கிருந்து வருகிறதோ அவர் தான் குரு, ஆசான். ஞானசிரியர். யாருடைய புனித ஆன்மா இந்த தூண்டுதலை ஏற்றுக் கொள்கிறதோ அவன்தான் சற்சீடன் என்னும் பேறு பெறுகிறான். அவன் தான் உண்மையான மாணவன் ஆகிறான். உலகச் சமயங்கள் பலவற்றிலும் இறைவனைக் குருவின் வடிவிலே வழிபடுகின்ற வழிமுறைதான் வழிவழியாக நிலவிவருகிறது.
மறை சொலும் பொருள்
மனித வேடமாய் வந்தது

என்பார்கள். ஆன்றவிந்தடங்கிய கொள்கைச் சான்றோர்கள். வேதங்கள் சிறப்பித்துப் பாடுகின்ற இறைவனே. குருவின் வடிவிலே வந்து தோன்றி அருள் பாலிக்கிறான் என்பார்கள்.