"நான் கண்ட குருநாதர்"

நூல் விவரம்

நூல் பெயர்: நான் கண்ட குருநாதர்
ஆசிரியர்: ஞானவள்ளல் மகாகனம் தங்கசுவாமிகள்
பதிப்பு : திருவள்ளுவர் ஆண்டு 2052 (கி.பி.2021) துலைத் திங்கள் (ஐப்பசி மாதம்)
பக்கம்: 368
வெளியிடப்பட்ட இடம்: தூத்துக்குடி ஞானசபை கிளையில் நடைபெற்ற ஞானவள்ளல் மகாகனம் தங்கசுவாமிகள் 83 வது பிறந்தநாள் விழாவில் வெளியிடப்பட்டது
வெளியீடு:
உலக அறிவார்ந்தோர் இயற்கை ஞானசபை அறக்கட்டளை

பதிவு எண் : 140/4/2000
ஞானசபை சாலை, சிவத்தையாபுரம்,
சாயர்புரம் அஞ்சல், தூத்துக்குடி – 628 251
+91 94420 56071

புகுமுன் தெரிமின்

உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும்
கல்லார் அறிவிலா தார்.
                                  – அய்யன் திருவள்ளுவர் – 140
உலகத்தோடு பொருந்த ஒழுகுதலைக் கல்லாதார் யாராயினும் பல நல்ல நூல்களைக் கற்றறிந்த மேதைகளாயினும் கல்லாதவரே என்று தான் இதுவரை உரையாசிரியர்கள் எழுதிச் சென்றுள்ளார்கள்.
உலகத்தில் பெரும்பாலோர் ஒழுக்க கேடர்களாவும், கல்வியறிவின்மை யாயிருந்தால், ஒழுக்க சீலர்களும், அறிவாளிகளும் அவர் பின்னால் சென்று அவர்களைப் பின்பற்றினால் என்னாவது என்ற ஐயப்பாடு எழுகிறதல்லவா சங்கத் தமிழ் புறநானூற்றில்
“உலகம் என்பது உயர்ந்தோர் மாட்டு” என்று கூறப்படும். ஆம் உயர்ந்தோர் வழியே உலகம் இயங்கும். ஒழுக்கமுள்ள உயர்ந்தோர் வழி உலகம் இயங்கினால் தான் சீராக இயங்கும் தலைவன் சரியாக இருந்தால் தானே அவனது அடிவருடிகளும் சரியாக இருப்பார்.
“அரசன் எவ்வழியோ அவ்வழி குடிகள்” என்பது தானே சரி.

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.
                                           – அய்யன் திருவள்ளுவர் – 1
உலகில் எந்த மொழியானாலும் ‘அ’ என்ற எழுத்தை முதலாகக் கொண்டே மற்ற எழுத்துக்கள் எல்லாம் அமைந்திருப்பது போன்று ஆதி மூலமான தெய்வ நிலையைக் கொண்டே உலகம் இயங்குகிறது என்று குறளாசான் குறிப்பால் காட்டுவார்.

“உலகெல்லாம் உணர்ந்து ஓதற்கு அரியவன்” என ‘சேக்கிழார்’ பெரியபுராணத்தை ஆரம்பித்து வைப்பார்.
“ உலகம் யாவையும் தாமுள வாக்கலும் ” என கம்ப நாட்டாழ்வாரும் நூலின் துவக்கத்தில் பாடியிருப்பார்கள்.
“உலகம் உவப்ப வலன்” என ‘நக்கீரரும்’ ‘திருமுருகாற்றுப்படையில்’ ஆரம்பித்து அடி எடுத்து வைப்பார்.
“நீடாழி உலகத்து மறை நான் கொடு” என ‘திருவில்லிபுத்தூராரும்’ திருவில்லி பாரதத்தை ஆரம்பித்துள்ளார்கள்.
ஏறத்தாழ ஆயிரத்து இருநூறு ஆண்டுகளுக்கு முற்பட்ட இறவா இலக்கியமான ‘சிலப்பதிகாரம்,’ இயற்றிய இளங்கோ அடிகளும்
“ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும்
திங்களைப் போற்றுதும் திங்களைப் போற்றுதும்
மாமழை போற்றுதும் மாமழை போற்றுதும் ”

என்று உலகமே போற்றும் வைர வரிகளை எழுதியுள்ளார். உலகம் செழித்திட வேண்டு மென்று தான்ஆரம்பித்துள்ளார். சங்க இலக்கியமாம் “புறநானூறு” என்னும் புறப்பாட்டில் எழுதிய ‘கணியன் பூங்குன்றனாரும்”
“யாதும் ஊரே யாவரும் கேளீர்” என்று உலகமே போற்றிப் புகழும் ஒப்பிலா வரிகளை எழுதியுள்ளார். இப்படி எல்லா பேரான்ம பெருஞ்சுகம் பெற்ற ஞானிகளும், ஆன்றோர்களும், சான்றோர்களும், உலகம் உய்வடைய வேண்டும் என எண்ணுகின்ற உத்தமத் தலைவர்களும், ‘உலகம் ‘ என்ற ஒன்றையே முன்னிலைப் படுத்தி அன்றிலிருந்து இன்று வரை பேசியும், எழுதியும் வருகின்றனர்.
அதனால் அன்றோ நமது ஞான சபைக்கும் உலக அறிவார்ந்தோர் இயற்கை ஞானசபை என பெயரும் வைக்கப்பட்டது. ஞானசபைக் கொள்கையும், “உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்” என்பது தான். அருளாளர்களின் வாழ்த்தும் வாழ்க! வளர்க!! என்பது தான், உடலாலும் உள்ளத்தாலும் வாழ்ந்து, எண்ணத்தாலும் செயலாலும் வளர்ந்து, அருளும் பொருளும் நிறைவடைய வாழ்த்துவதே உலக அறிவார்ந்தோர் இயற்கை ஞான சபையாகும்.

01

In Kundalini Gnanam, One teacher, one path, one method, one master, one idea and one pointed faith and sensation all the above make up the secret of success in spiritual life.
இந்த உலகத்தில் ஞானப்பயிற்சி செய்யப் புகும் ஒரு மாணவனை ஞானகுரு ஆட்கொள்ளும் பொழுது அவனைத் தம்மோடு கூடவே மெய்த்தொண்டர் குழாத்துடன் சேர்த்து இணைத்துக் கொள்கிறார். இந்த இணைப்புத்தான் அவனுடைய ஆன்ம வளர்ச்சிக்கு இரவும் பகலும் உறுதுணையாக அமைகிறது. குருநாதர் இவ்வாறு மாணவனை இணைக்கின்ற மெய்தொண்டர் குழாமான ஆதிகுருவான பரமகுருவிலிருந்து தொடங்கி நேர்நின்று உணர்த்துகின்ற குருநாதர் வரை வழிவழியாக விளங்கி வருகின்ற ஞானியர் குழுவாகும்.
இந்த ஞானக் குழுவானது அன்றிலிருந்து இன்று வரை மாறுதலோ, மறைதலோ இல்லாது என்றென்றும் நிலை பெற்று நின்று வருகின்றது. இந்த மெய்த்தொண்டர் குழுவானது ஞானப்பயிற்சியில் ஈடுபடுகிற மாணவனுக்கு அவனுடைய உள் உடம்பில் புகுந்து துணை செய்கின்ற மாபெரும் ஞானத் திருக்கூட்டமாகும். உலக நாடுகள் அனைத்திலும் உள்ள மகான்களும், ஞானிகளும் இந்த திருக்கூட்டத்தை UNSEEN MASTERS (தோன்றாத் துணைவர்கள்) என்றும் INVISIBLE HELPERS (அருவநிலையிலும் வழி நடத்துவோர்) என்றும் அழைக்கிறார்கள். இந்த மெய்த்தொண்டர் குழாத்து ஞானிகள் உருவத்தில் அல்லாது அருவத்தில் நின்று மாணவனுக்கு உதவி செய்கிறார்கள். எல்லா வகையிலும் ஞானம் பயில்கின்ற ஒரு மாணவனை இத்தகைய மெய்த்தொண்டர் குழாத்திலேதான் ஒப்படைக்கிறார்கள். குருமார்களே நேருக்கு நேராக தாங்கள் உதவி செய்வதோடு அருவ நிலையிலும் ஞான உதவியை அந்த மாணவனுக்கு எய்துகின்ற முறையில் அந்த மெய்தொண்டர் குழாத்திலே கூட்டுகிறார்கள் ஞானாசிரியர்கள். இந்த உண்மை ஞானியர் உலகத்தில் வழிவழியாக வழங்கி வருகின்ற ஒரு பெரிய இரகசியமாகும்.
இந்த இரகசியத்தைத்தான் ‘மெய்தொண்டர் குழாம், என்ற சொற்றொடர் உணர்த்துகின்றது என்பது ஞானியர் கருத்தாகும். இந்த அனுபவத்தையும், ஆனந்தத்தையும், அள்ளிப் பருக வாரீர்! வாரீர்!! என உலகஅறிவார்ந்தோர் இயற்கை ஞானசபையும் அழைத்து அரவணைத்துக் கொள்கிறது.

02

யாம் அருளும் மெய்யுணர்வால் ஈர்க்கப்பட்ட ஆயிரக்கணக்கான மாணவர்களுள் மருத்துவர்களும், வழக்குரைஞர்களும், நீதியரசர்களும், பேராசிரியர்களும், வணிகர்களும், கூலித்தொழிலாளிகளும் அடங்குவர்.
கடையனையும் கடைத்தேற்றுவதே எமது வாழ்வின் குறிக்கோள். சாதி, மதம், இனம், மொழி, கல்வி, தேசம் போன்ற எந்த பேதமும் பார்க்காது இந்தப் புள்ளிக் கல்வியை ஆன்றோர்கள் தொட்டுக்காட்டியதை, அவர்கள் விட்டுச் சென்றவைகளைத்தான் சாசுவத சம்பிரதாய முறைப்படி உணர்த்தி வருகிறோம். இக்கல்வி ஒன்று தான் ஏற்ற தாழ்வற்ற சமதர்ம சமுதாயத்தை உருவாக்கும் சன்மார்க்க வழி என்பதும் பிறப்பு இறப்பற்ற பெருவழி என்பதும்உண்மை. மகான்களும், ஞான தேசிகர்களும் மெய்க்கல்வியை மெய்யென்று உணர்த்தினாலும்
ஆசான் அருளால் அடிசேர் ஞானம் வந்திடும்
மற்றொன்றினாலும் வாராதாகுமே
என சைவ சித்தாந்த சமய நூலான ‘சிவஞான சித்தியார், என்ற ஞானநூல் கூறினாலும்
இறுதி பரியந்தம் நிலைத்து நிற்பவனே என்னைக் கண்டடைவான்
என்று கிறித்துவ வேதஆகம விவிலியத்தில் இயேசுபிரான் என்ற ஞானியான தீர்க்கதரிசி கூறினாலும் ஆசான் அருளை நாடாமல் அவர்கள் மீது அன்பு செலுத்தாமல் பாதி கற்றாலே போதும் மீதியை வேறு யாரிடமும் சென்று சித்து வேலைகளை பயின்று கொள்ளலாம் என்றெண்ணி ‘இக்கரைக்கு அக்கரை பச்சை’ என்று செல்வோர் அன்றும்
உள்ளனர், இன்றும் உள்ளனர். அப்படிபட்டவர்களின் செயல் அவர்களின் பிராரத்த கர்மமாக வந்தது என எண்ண வேண்டும். அதனால்தான்
யோக ஞானமே முக்தியைத் தரும்.
       எனில்ஒழிந்த சித்திகள் வேண்டி
மோகம் ஆய் உடல் வருத்தினார் சிலசில
        முத்தர்கள் ஏன் என்றால்

போகம் ஆய் பிரார்த்த கர்மங்கள்
       புசித் தன்றோ நசித்து ஏகும்
ஆகையால் அந்தச் சித்திகள்
      பிரார்த்தம் ஆகும் என்று அறிவாயே.
– கைவல்லிய நவநீதம் (சந்தேகம் தெளிதல் படலம் : 47)

03

ஆன்ம பரமான்ம ஐக்கியத்தை யளிக்கும் ஞானமே முத்தியைத் தருமென்றாலும் சிலர் சித்திகளை அடைய விருப்பம் கொண்டு அதற்கான முயற்சிகளில் ஈடுபட வேண்டிய காரியமேதெனில் அவர்களின் கடந்த சன்மத்தில் சித்திகளை விரும்பியதால் என எண்ணிக் கொள்ள வேண்டும். இந்த சன்மத்தில் இந்த குருநாதரிடம் சித்திகளை (சித்துகளை) அடையும் வழி இல்லையே என்றுதான் ‘வேலி தாண்டிய வெள்ளாடுகள்’ போல் பிராப்த வலியால் தூண்டப்பட்டு அட்டமாசித்திகளையடைந்தார்களன்றி வேறில்லை.
இந்நூலில் சொல்லோவியங்களாய் பதிவு செய்துள்ள எம் ஊனோடும், உயிரோடும், உணர்வோடும் கலந்த அருட்செல்வங்களின் அன்பு மடல்களில் உண்மையைத் தவிர வேறு செய்திகள் இல்லை. கற்பனைகள் எள்ளவாவது எள்முனையளவாவது எங்கும் காணோம். ஆன்மா இரு சாரார்க்கும் பொது என்பதால் யாம் யாரைப் பாராட்ட என்று யோசிக்கும் போது எமது இரு பெண் அருளாளர்களைப் பற்றி சிந்தித்தேன். அவர்கள் பள்ளியில் படிக்கும் போது ஆன்மீகத்தைப் பற்றி ஏதும் அறிந்திலர் திருமணமான பின்னரும் ஏதும் அறிந்திலர். சமீபத்தில் சுமார் ஐந்தாண்டுகட்கு முன்னர்தான் திடீரென்று இந்த ஆன்மீக வழிக்கு வந்துள்ளார்கள். யாம் அவர்கட்கு எந்தவித தனிக்கவனமும் செலுத்தாமலேயே இந்த ஆன்மீக வழிக்கு வந்தது எமக்கே ஆச்சரியமாகத்தான் இருக்கிறது.
‘குல வித்தை கல்லாமலே பாகப்படும்’ என்ற ஆன்றோர்களின் முதுமொழி மெய்யாகத்தான் செயல்படும் போல் தெரிகிறது என நினைத்துக் கொண்டோம்.
அய்யன் திருவள்ளுவர் 2043 ஆம் ஆண்டு ( கி.பி 2012 ) யாம் எழுதிய அறிந்தோர் உணர்வர் உணர்ந்தோர் அறிவர். என்ற நூலில் ‘எது சுதந்திரம்,’ என்ற குறுங்கவிதை எழுதினோம். அதை மீண்டும் இந்த நூலில் பதிவு செய்தால் நிறைவு ஏற்படும் என நினைக்கிறோம்.

04

பண்பான ஒரு பேரான்ம பெரு முனிவர்
முன்பு அதிசயவரம் நல்கும்
உண்மையான தேவதை தோன்றி அய்யனே
தங்கட்கு என்ன வரம் வேண்டும்
என்று கேட்டிட அவரோ அம்மையே
தொல்லையில்லா நிம்மதியுடன் என்றும்
சுதந்திரமாய் இருக்கவிடு என்று அன்போடு
கூறிவிட்டார். கடவுள் எனக்கிட்ட கட்டளை என்றும்
நீர் யாரைத் தீண்டினாலும் நோய்
மறைந்து துன்பமெல்லாம் ஒரு நொடிப் பொழுதில்
அகன்று விடும் என்றார். அறிவிலே
முதிர்ச்சி பெற்றவர் அப்படியானால் அதில்
ஒரு திருத்தத்துடன் எனக்குத் தந்தால் ஏற்றிடுவேன் என்றார்
நான் தொட்டால் நோய் போகும் என்பதை
மாற்றி என் பின்னால் என்னைத் தொடரும் எமது
நிழல் யார் மீது படுகிறதோ
அவர்களின் தொல்லையும் துயரமும் நீங்கி
பிணிகளோ பிணிக்காது விலகட்டும்
இப்படிப்பட்ட வரம் தந்தால் அதுவே
எமக்குச் சம்மதம் என்றார்
அம்மையே யான் தொட்டால் குணமாகும்
என்றால் அது எமக்கு தேவையற்ற
கர்வத்தை தந்து இன்னல்களைத் தந்துவிடும்
எமது நிழல் என்றால் யார் மீது பட்டு
சரியானார்கள் என்பது எனக்கும் தெரியாது
யாம் எமது வழியில் பயணத்தைத் தொடர முடியும்.
எமது சிறப்புத் தன்மை எம்மை அடிமையாக்காது யாமோ
எப்போதும் போல் சுதந்திரமாய்
செயல்படுவேன் என்றாராம் இந்த வரம்
தருவதானால் பெற்றுக் கொள்வோம்
என்று கண்டிப்போடு கூறிவிட்டார்
அவர் எண்ணப்படியே வரம் கிடைத்தது
வாழ்வாங்கு வாழ்தலுற்றார் மாமுனிவர்
ஆழமாக சிந்திக்கும் நிகழ்வே நடந்தது.
தனது இறுதி காலம் வரை திருக்கூட்டத்தை விட்டு அகலாதிருப்போரும் உண்டு பிராரத்த வலியால் அகன்று போனோர் அந்த நாளிலும் இருந்தனர். இந்நாளிலும் இருந்து வருகின்றனர். இருப்பினும் ஞானாசான் வாழ்க்கை மிகவும் வித்தியாசமான வாழ்வாக அமைகிறது.

05

காமம் ஆதிகள் வந்தாலும் கணத்தில் போம்மனதில் பற்றார் தாமரை இலைத் தண்ணீர் போல் சகத்துடன் கூடி வாழ்வார்
பாமரர் எனக் காண்பிப்பார் பண்டிதத் திறமை காட்டார்
ஊமரும் ஆவார் உள்ளத்து உவகையாம் சீவன்
முத்தர்.
                     – கைவல்லிய நவநீதம்- தத்துவ விளக்கப் படலம் – 89.
இல்லறத்திலுள்ள ஞானி சாட்சியாக யாவற்றையும் நோக்கிக் கொண்டும், வேடதாரி போல் உலகத்தாரைப் போலவே நடித்துக் கொண்டிருப்பதால் ஒவ்வோர் போது இச்சை, கோபம், துயர் முதலியன அவர் மனதில் எழலாம் ஆனால் எழுந்த அக்கணமே வீழும் ஏனெனில் அவர் மனதில் புறப்பற்றும் இல்லை அகப்பற்றும் இல்லை ஆதலால் தாமரை இலைத் தண்ணீர் போன்று ஒட்டியும் ஒட்டாது யாதொரு பற்றின்றி வாழ்வர். அவரே பற்றின்றி நடப்பதால்
அடைந்தவர்க்கு அருள் செய்வான்
அகன்றவர்க்கு அருள் செய்யான்
– என்ற கைவல்லியத்தின் கருத்துப்படி தான் கதைகளும் நடந்து கொண்டிருக்கும் என்பதை அறிய வேண்டும். இருப்பினும் அவர் அருளிய அருளல் என்ற உணர்வு அகன்றோர்க்கும் அவனை அகலாது நினைவூட்டிக் கொண்டு தான் இருக்கும்.
“ஈனமாம் பலசன்ம சஞ்சித வினை எத்தனை ஆனாலும்
ஞானம் ஆம் கனல் சுடும் என்றமறை மொழி நம்பினால் வீடு உண்டே”
– என்ற கைவல்லிய நவநீத வைர வரிகளை நம்பியவர்கள் பிறவிப் பிணி அகன்று பேரின்ப நிலையை என்றும் அடைந்திடுவர். இந்த உலக அறிவார்ந்தோர் இயற்கை ஞானசபை, தமிழகத்தில் பல மாவட்டங்களில் வளர்ந்து வருகிறது என்பதை அறிந்தோர் உணர்வர்உணர்ந்தோர் அறிவர்,
A leader is one knows the way, goes the way, and shows the way
என்ற தலைமைப் பண்பை முழுமையாக உணர்ந்தவர்கள் தொடர்ந்து தொடர்பை ஏற்படுத்தி வருகின்றார்கள். ‘நின்ற நிலையை, நிலையாக
அறிந்துணர்ந்தால் நிருவிகற்ப சமாதி, நிச்சயம் அந்த அருளாளர்களை வாழ்க வளர்க’ என்று உளங்கனிந்து
வாழ்த்துகிறோம்.

May all of us enjoy the ETERNAL BLISS

06