குரு தீட்சை

பேரன்புடையீர்
சிந்தையை அடக்கி சும்மா இருக்கும் திறனை அறிந்த ஆன்றோர்களே, அதனை அறிய விரும்பும் அறிவார்ந்த ஆன்மீகப் பெருமக்களே முதற்கண் எமது கனிவான பணிவான வணக்கத்தைச் சமர்பிக்கிறேன்.
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.

என அய்யன் திருவள்ளுவர் கூறியது போல் உலகெங்கும் தோன்றிய அத்தனை மொழிகளுக்கும் அகரம் முதன்மையானது. அதுபோல ஆதியென்ற பரம்பொருளும் சக்தி, சிவன் என்று பகுக்கப்பட்டவன் ஆவான். பகவனை அடைந்திட உலகில் நால்வகை மார்க்கங்களை வகுத்தனர்’ முன்னோர். சரியை என்றும், கிரியை என்றும், யோகம் என்றும், ஞானம் என்றும் வகுத்தனர்.
விரும்பும் சரியை முதல் மெய்ஞ்ஞான நான்கும்
அரும்பு, மலர், காய் கனி போல் அன்றே பராபரமே

என்று சிவஞானச் செல்வர் தாயுமான சுவாமிகளும் நால்வகை மார்க்கமும் அவைகளின் பலன்களையும் அருமையாகக் கூறிச் சென்றார்.
சரியைக்கு அரும்புக்குரிய பலனும்
கிரியைக்கு மலர்க்குரிய பலனும்
யோகத்திற்கு காய்க்குரிய பலனும்
ஞானத்திற்கு கனிக்குரிய பலனும்
உண்டென்பர்.

01

சரியையின் றெழிலினாலும் சற்கிரியையினும் யோகம்
புரிதரு முயற்சியானும் பொருந்தொணதென்பர் மேலோர்
உரிய தேசிக னுரைக்கு ஒருமொழி உண்மையாலே
அரிய மெய்ஞானவீடு இங்கடைவது திண்ணமாமே

என்று நிஷ்டானுபூதி சாரம் என்னும் ஞானநூல் வரையத்துக் கூறுவது நியாயம் தானே ஒழிவிலொடுக்கம் என்னும் வேதாந்த நூல் “சரியைக் கழட்டி” என்றும் “கிரியைக் கழட்டி” என்றும் “யோகக் கழட்டி” என்றும் ஞானத்தைக் கனியென்பதால் சுகித்துச் சுவைக்க வேண்டியதால் அதை மட்டும் கூறாமல் சென்றார். ஆதலால் அனுபவத்தால் தெரிவதே ஞானம் என்பதை சொல்லாமல் சொல்லிச் சென்றார்.
அங்க சுத்தியும் ஆலயந் தொழுவது “சரியை” யென்றறைவார்கள்
மங்களத்துடன் அட்டமாசித்தியும் வரையுஞ்சக் கர பூசை
பொங்க மானது “கிரியை”யால் வாயுவைப் புரண்டிடா திழுத்திட்த்
தங்கி நின்றதோர் “யோக” மென்றிதனியே சாற்றிடும் மறைதானே
“ஞானமே” தெனக் கேட்டின் தத்துவம் நானென வுணர்ந்திந்த
ஊனை நானென வுரைத்திதை யகன்றுபின் னெழிவறத் மானம் வெட்கமுந் துக்கமுங் கவலையும் வஞ்சனை தான்போக்கி
ஈனமற்று நான் சிவமெனத் துணிந்தது மிழந்தது முடிவாமே.

-சிவானந்த போதம்
சரியை, கிரியை, யோகம், ஞானம் இந்த நான்கு நெறிகளுள் தொண்டு நெறியாகிய சரியை நெறியை “தாசமார்க்கம்” என்றும், நன்மகவு நெறியாகிய கிரியை நெறியை “சற்புத்திர மார்க்கம்” என்றும், நட்புநெறியாகிய யோக நெறியைச் “சகமார்க்கம்” என்றும் பேரறிவு நெறியாகிய ஞான மார்க்கத்தைச் “சன்மார்க்கம்” என்றும் வரையரை செய்துள்ளது சித்தர் உலகம்.

02

ஆனால் உலகில் தோன்றிய பல சமயங்கள், சரியையிலும் கிரியையிலும் காலத்தைக் கழித்து வெறும் நம்பிக்கையை மட்டுமே ஊட்டி வருவது கண்கூடு. யோக நெறியையும் நன்மார்க்க மான சன்மார்க்கமான ஞான நெறிகளையும் புறந்தள்ளி விடுவதையும் காண முடிகிறது.

ஒரு தீபத்தில் இருந்துதான் இன்னொரு தீபத்தை ஏற்றமுடியும். இது யாவரும் அறிந்த உண்மை. அதுபோல் குருநாதர் இல்லையேல் சற்சீடனும் இல்லை. இதையே எல்லா சமயங்களும் கூறுகின்றன. இராமகிருஷ்ணபரமஹம்சருக்கு ஒரு “விவேகானந்தர்” கிடைத்தது போல் மகான் யோவான் ஸ்னாகன் அவர்களுக்கு ஒரு “இயேசு பிரானும்” உருவானார்.

ஸ்திரிகளிடத்தில் பிறந்தவர்களில் யோவான் ஸ்நான னைப் பார்க்கிலும் பெரியவன் ஒருவனும் எழும்பியதில்லை.
                                                        – விவிலியம் – புதிய ஏற்பாடு மத்தேயு 11 : 11

தன்னுடைய குருபிரானைப் பற்றி ஏசுபிரான் அவர் வாயினால் கூறுவதை யாரும் மறுக்கவோ மாற்றவோ முடியாது.

இப்படியே குருசீடன் பரம்பரை வளர்ந்து குருபரம்பரையை
வாழையடி வாழையாக வளர்க்கும் விதத்தையும் காணலாம்.

ஒருவனுடைய ஆன்மீக வளர்ச்சிக்கு குரு என்பவர் நிச்சயம்தேவை என்பது புராதன காலத்திருந்தே அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.

குரு, சீடன் உறவு முறை என்பது வழிவழியாகவும் மிகப் புனிதமானதாகவும் முக்கியமானதாகவும் ஆகி இருக்கிறது. இது எதனால் என்றால் சீடனின் ஆன்மீக வளர்ச்சியில் நெருக்கடியான நிலைவரும் பொழுது அவருக்கு சக்தி நிலையில் ஒருசிறு உந்துதல் தேவைப்படுகிறது. 

03

அந்த உந்துதல் இன்றி அவரால் உச்சநிலை அடைய முடியாது. அவரைவிட யார் உயர்வான நிலையில் இருக்கின்றாரோ அவரால்தான் அந்த சிறு உந்துதலைக் கொடுக்க முடியும். “கு” என்றால் இருள் (அதாவது அகவிருள்) “ரு” என்றால் அகற்றுபவர். எனவே யார் உங்களது அகவிருள் அதாவது அஞ்ஞானத்தை அகற்றுபவரோ அவரே “குரு”. ஒரு குரு என்பவர், தனது முன்னிலையிலோ அல்லது குரு தனது முன்னிலையின்றியோ செயலாற்றுபவர். வார்த்தைகளின் மூலம் செயலாற்றுபவர் அல்ல. நீங்கள் தனது குருவெனக் குறிப்பிடுவது ஒரு குறிப்பிட்ட சக்தி, ஒரு நபரல்ல. குரு சீட உறவுமுறை சரீர ரீதியானதோ மனோ ரீதியானதோ, அல்லது உணர்ச்சி ரீதியானதோ அல்ல.

இது இந்த கட்டுப்பாடுகளைக் கடந்தது. ஆகவே உடலையும் மனதையும் கடந்து நீங்கள் எடுத்துச் செல்ல இந்த உறவுமுறை சாத்தியமான ஒன்று. ஆன்மீக பாதையில் பயணித்து தனக்குள் ஒரு இறுதி நிலையை நோக்கி வளரும், மனிதனுக்கு நிலைத்து நிற்கும் இந்த உறவுமுறை தேவை மிகுந்ததாக இருக்கும். ஏனென்றால் வேறு எவராலும் உங்களை அந்த நிலைக்கு எடுத்துச் செல்ல முடியாது. அதனால்தான் இந்த உறவு முறை மிகப் புனிதமானதாக வைக்கப்பட்டிருக்கிறது.

ஒரு புனிதமான ஆன்மாவிடமிருந்துதான் வேறோரு ஆன்மா தூண்டுதலை ஏற்க முடியுமே தவிர வேறு யாரிடமிருந்தும் பெற்றுக் கொள்ள முடியாது. இப்படிப்பட்ட தூண்டுதல் எங்கிருந்து வருகிறதோ அவர் தான் குரு, ஆசான்,ஞானசிரியர்.

04

 யாருடைய புனித ஆன்மா இந்த தூண்டுதலை ஏற்றுக் கொள்கிறதோ அவன்தான் சற்சீடன் என்னும் பேறு பெறுகிறான். அவன் தான் உண்மையான மாணவன் ஆகிறான். 

உலகச் சமயங்கள் பலவற்றிலும் இறைவனைக் குருவின் வடிவிலே வழிபடுகின்ற வழிமுறைதான் வழிவழியாக நிலவிவருகிறது.

மறை சொலும் பொருள்
மனித வேடமாய் வந்தது

என்பார்கள். ஆன்றவிந்தடங்கிய கொள்கைச் சான்றோர்கள். வேதங்கள் சிறப்பித்துப் பாடுகின்ற இறைவனே. குருவின் வடிவிலே வந்து தோன்றி அருள் பாலிக்கிறான் என்பார்கள்.

மாணவனின் மாண்பு எப்படி இருக்க வேண்டும் என்பது பற்றியும் அவர்கள் குருநாதரிடம் மன மொழி மெய்யில் எப்படியெல்லாம் செயல்பட வேண்டும் என்பது பற்றியும் சற்று நோக்கினால் அன்று எப்படி நடந்தது. இன்று எப்படி நடக்கிறது என்ற கூட புரியும்.

“உடற்குயிர்போலும் கட்கிமை போலு
      மூசியு நூலுமே போலும்
படப்பொறியரவைப் பிடியெனப் பிடிக்க
     பாயுவெம் புலிதனைத் தழுவத்
தொடற்கருந்தழலை யெடுவென வெடுக்கத்
     தும்பி முன்னஞ்சாதிருக்க
விடற்கருஞ் சித்தமென்னவே யுதவும்
     விவேகியற் களித்திடலாமால்”

                                                    – நிஷ்டானுபூதி சாரம் (ஞானியார் அடிகள்)

05

மேலும் இன்னும் சில கருத்துக்களையும் அவர்கள் வாயிலாகவே கேட்டுக் கொள்வோம். ஆச்சரியத்தால் ஆனந்தம் கொள்வோம்.

“தேனிரம்பு மலரையளி தேடுவபோ லெங்குந்
         தேசிகனைப் பலநாளுந் தேடிக் கண்டளவில்
 ஞானகுருவிவன்பாகஞ் சோதிக்க வேண்டி
         நடுக்கங்களுறவே யென்நாளுஞ் செய்வித்தும்
ஈனமாந் தொழிலதனி லேமிக விடுத்து
       மிரக்கமிலா தேயடித்து மிழி புரையால் வைது
மானமின்றிச் செயும் போதுங் குருபத்தி வழுவா
      வாய்மையருக்குக் குயர் நிட்டை வழுத்திடலுந் தகுமால்”

                                                    -நிஷ்டா னுபூதி சாரம் (ஞானியார் அடிகள்)

நிஷ்டானுபூதி சாரம் எனும் இந்த இரண்டு பாடல்களில் இருந்து நமக்கு என்ன தெரிகிறது. அன்றுள்ள நிலைமை நமக்கு நன்கு புரிகிறது. இந்த கலிகாலத்தில் இவ்வளவு கடுமையாக இருந்தால் மாணவர்கள் குருநாதர் தொடர்பு எப்படி இருக்கும் என்பதை அவரவர் எண்ணத்திற்கே விட்டுவிடுவோம்.

பாலில் இருந்து தயிர் கிடைப்பது போல், தயிரில் இருந்து மோர் கிடைப்பது போல், மோரில் இருந்து வெண்ணெய் கிடைப்பது போல், வெண்ணையிலிருந்து நெய் கிடைப்பது போல். நல்ல செயல்களில் இருந்து தான் மேலும்

06

ஒரு நல்ல காரியம் உருவாகிறது. நெய்யில் தான், கண்ணாடியில் தெரிவது போல் நமது உருவத்தையும் தோற்றத்தையும் காணமுடியும். அது போல் தான் நல்ல சற்சீடனை உருவாக்க குருநாதர் காத்திருந்து பலனை எதிர்பார்க்கிறார் என்று கொள்ளலாமல்லவா.

சொற்களைக் கடந்து அதிர்வு நிலையை ஞானகுருவானவர் வாயினால் சொல்லாமல் கையினால் தொட்டு அதிர்வு எழும்படியாக அசைக்கச் செய்கிறார். இதுவே “குண்டலி ஞான தீட்சை” என்றும் “அசபா தந்திரம்” என்ற பயிற்சி நிலை அசபை என்றால் ஜெயிக்க முடியாதது என்றும், செபிக்கப்படாதது என்றும் பொருள்படும். இந்த அதிர்வை ஞானகுரு செய்து காட்டும் போது வீணா தண்டத்தின் அடியிலே அடைந்து கிடந்த ஆற்றல் வெளிக் கிளம்பி மேலே செல்லத் தொடங்குகிறது. இந்த குண்டலினி ஞானக் கல்வியை அவ்வையார்

“குண்டலியதனில் கூடிய அசபை
விண்டெழுமந்திரம் வெளிப்பட உரைத்து
மூலதாரத்தின் மூண்டெழு கனலை
காலாலெழுப்பும் கருத்தறிவித்து”

என்று வினாயகர் அகவலில் சுட்டுகின்றார்.

“மூலாதாரத்தின் மூண்டெழு கனலை
காலாலெழுப்பும் கருத்தறி வித்தே”

என்ற அவ்வையாரின் ஆழ்ந்த கருத்தினை நோக்கினால்

அகார உகார மகாரங்கள் ஒன்று கூடி ஓங்காரம் என்று உண்டாவதனாலே அதை “மூன்று காத ஒலி” என்றும் “முக்காத

07

ஆறு” என்று ஞான உலகம் பேசி மகிழும். “அ, உ, ம்” என்ற மூன்று ஒலிகளாலும் ஒன்றி நிற்கின்ற “ஓம்” என்ற ஆதார ஒலியாகும். “அ” என்ற எழுத்து “இடைநாடி”. இது இடக்கண் பார்வையோடு பொருந்தியது.

“உ”என்ற எழுத்து “பிங்களை நாடி.” இது வலக்கண் பார்வையோடு பொருந்தியது.

“ம” என்பது சிர நடுவின் உச்சியிலே உள்ள அதிர்வு நிலை. இதுவே “சுழுமுனை நாடி”யில் உள்ள ஓங்கார ஒலி ஒலிக்குமிடமாகும். சித்தமாமுனிவர்கள் கூறும் மூன்று மண்டலங்கள் என்பதை அவர்களின் இரகசியமாகும்.

மூலக் கனலை காலால் எழுப்புவதே காலனை காலால் உதைக்கின்ற உத்திமுறை என்றும் மரணமிலாப் பெருவாழ்வுக்கு வழி என்றும் பெருமை பேசும் ஞான உலகம். அந்த உத்திமுறையின் பயன்களையும் சொல்லிச் சென்றுள்ளார்கள். “அந்தகன் எழுதிய எழுத்தை அழித்தெழுதும் எழுத்து” கூற்றுவன் எழுதிய எழுத்தையே மாற்றி எழுதும் வழி இது ஒன்றுதான் என்பது ஆன்றோர் கூற்றாகும்.

இரண்டாயிரம் ஆண்டிற்கு முன்னரே மேலை நாட்டில் இருந்து வந்துள்ள கிறித்துவ விவிலிய நூல் மூலக் கனலை எழுப்பும் வழியை எவ்வாறு கூறியுள்ளது என காண்போம்.

“இதனிமித்தமாக நான் உன்மேல் என் கைகளை வைத்ததினால் உனக்கு உண்டான தேவவரத்தை நீ அனல் மூட்டி எழுப்பி விடும்படி உனக்கு நினைப்பூட்டுகிறேன்.”
                                                                                – இரண்டாம் தீமேத்தேயு- 1:6

08

“Therefore I remind you to stir up the gift of God which is in you through the laying on of my hands”
                                                                                    -The Second Tmothy-1:6

ஆம் ஏசுபிரான் காலத்தில் மூலக் கனலை அனல் மூட்டி எழுப்பிய ஞானப் பயிற்சி இருந்தது. ஆனால் இன்றோ உங்கள் ஆய்விற்கே விட்டு விடுகிறோம்.

சுழுமுனையாவது மூலாதாரத்திலிருந்து முதுகுத் தண்டின் ஊடே சந்திரகலை சூரியகலை வழியே செல்லும் ஒரு நாடி சூரியகலை நாடியானது இடது கால் பெருவிரலிலும், சந்திரகலை நாடி வலது கால் பெருவிரலிலும் புகுந்து குறி தாண்டி சிரநடுவில் உச்சியில் உள்ள சுழுமுனை நாடியுடன் இணைகிறது. ஞானாக்கினியின் செயல்களை முழுமையாக அறிந்து உணர்ந்த ஞானகுருபிரான் மாணவனுக்கு தனது நெருப்புக் கரத்தால் மூலாதாரத்தின் மூண்டெழுகனலை தனது திறமையால் எழுப்பி புருவ மத்தியில் வைத்து பேரானந்த பெருநிலையை உணர்த்துவார்.

குருவே அருள் வடிவாக விளங்குகிறார். அவருடைய திருவடிகள் பரஞானம் அபரஞானம் இரண்டையும் அருளவல்லன. அதாவது அருளியல் அறிவையும் உலகியல் அறிவையும் தருபவை குருவின் திருவடிகள் ஆகும்.

நாம் ஒரு புதிய இடத்தை அடைய வேண்டுமானால் அந்த இடத்தைப்பற்றி அறிந்த ஒருவரின் வழி காட்டுதல் நமக்குத் தேவை. அதுபோல், நாம் முத்தியை அடைய வழிகாட்டுபவராய் அமைகின்ற குரு முற்றறிவினராய் உபதேசத்தை நாமும் ஐயமின்றி மேற்கொண்டு நடக்க வேண்டும்.

09

“குருப் பிரம்மா குருவிஷ்ணு குருதேவோ மகேச்வர;
குரு சாட்சாத் பரப்பிரம்மா”
என்பது ஆன்றோர் வாக்கு.

கப்பலின் துணையின்றி கைகளால் நீந்திக் கடலைக் கடக்க முடியாததைப் போல பிறவிக் கடலை குருவின் துணையின்றிக் கடக்க முடியாது.

“கரவிலாத பேரன்பினுக்கு எளிவருங் கருணைக்
குரவனார் அருளன்றிக் கொடிய வெம்பாசம்
புரையில் கேள்வியாற் கடப்பது புணையினாலன்றி
உரவுநீர்க் கடல் கரங்கொடு நீந்துவ தொக்கும்.”

வாதவுரடிகளுக்கு உபதேசித்தது
                                                                            -திருவிளையாடற் புராணம்.

உலகில் வாழ்வாங்கு வாழ அதாவது குறிக்கோளாகிய பேரின்ப வீட்டை அடைவதற்குரிய அன்பு வழியைக், கைக்கொண்டு அருள்வாழ்வு வாழ்வதற்கேற்ற அறிவைப்பெருதல் “அபரஞானமாகும்”

பிறப்பை கடந்து இறைவர் திருவடியை அடைதற்குரிய அருளியல் அறிவை உணர்த்துவது “பரஞானம்” ஆகும். இவ்விரண்டின் மயமாக விளங்குவன சற்குரு நாதரின் திருவடிகளாகும். சற்சீடனுக்கு தூயதெளிவு தோன்றி விட்டால் பிறகு சந்தேகங்களுக்கிடமே இல்லை. நிச்சயமாக ஆன்மா பேரின்ப முத்தியை எய்திவிடும்.
“தெளிவு குருவின் திருமேனி காண்டல்
தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல்
தெளிவு குருவின் திருநாமம் செப்பல்
தெளிவு குருவுருச்சிந்திப்பதாமே”
                                                                                -திருமந்திரம்

10

குரு என்பவர் நெறியைக் காட்டுபவர் என்பதோடு கூட நெறியிலே நம்மை நடத்திச் செல்பவர் என்பதே சாலச்சிறந்தது.

இறை நாட்டமுடைய உயிரை பக்குவம் செய்விக்க வேண்டி கடவுள் குரு மூர்த்தியாக எழுந்தருளுகின்றார். அதாவது குருவானவர் புறத்தே மானுட வடிவிலும், அகத்தே காரண குருவடிவிலும் தோன்றுகிறார்.

புறத்தே குருவைக் கண்டவுடன் பரம்பொருளே நம்மை ஆட்கொண்டு அன்பிற்குரிய குரு உருவில் எழுந்தருளியுள்ளார் என்ற பூரண நம்பிக்கையுடன் அவர் திருவடி மலர்களில் பணிந்து வணங்கித் தொழுது உருகிப் போற்ற வேண்டும். அவர் அருளும் உபதேசப்படி அருள் வாழ்க்கை வாழவேண்டும்.அருள் நிஷ்டை பழக வேண்டும்.

அவ்வாறு பழகப் பழக குரு பெருமானின் திருவருளால் பொறிபுலன்கள் அசைவற்று உள்ளே ஒடுங்கும். தவநிலை வாய்க்கும் அப்போது வினைகளினின்றும் விடுபடக் கூடிய உயர்நிலை வாய்க்கும் என்று சித்தர் உலகம் பேசும்.

குருவைத் தேர்ந்தெடுக்கும் முன்பு மிகவும் ஆராய்ந்து உண்மையைத் தெரிந்து மெய்யான குருவினைத் தெளிந்து அதன் பிறகே அவரை ஞானகுரு என்று பற்றிப் பிடிக்க வேண்டும்.

11

வெளியே உள்ள குரு நம்முடைய உடம்புக்குள்ளே இருக்கிற குருவை நமக்குக் காட்டுகிறார் என்பார்கள். அப்படிப்பட்ட தகுதிகள் வாய்ந்த மாபெரும் ஞானியினையே குருவாக நாம் கொள்ள வேண்டும் என்பதை சித்தர் பாடல்கள் எச்சரிக்கையாகத் தெரிவிக்கின்றன.

குருடனுக்கு வழிகாட்டுகிறவன் அறிவுக்கண் நன்றாகத் தெரிந்தவனாக இருக்க வேண்டும். அவனே மூடக் குருடனாக இருந்து விட்டால் எப்படி வழிகாட்ட இயலும்?

மத ஐயப்பாடுகளை அகற்றவோ பாபங்களைப் போக்கவோ ஆற்றலற்ற ஒருவரை நாம் கொள்ளுதல் பேதைமையாகும். அப்படிப்பட்ட வரை நாம் குருவாகக் கொண்டால் அது குருடனுக்கு குருடன் வழி காட்டுவரை ஒக்கும். அதன் பயனை திருமூலர் திருமந்திரத்தால் தெளிவாய் உணரலாம்.

“குருட்டினை நீக்கும் குருவினைக் கொள்ளார்
குருட்டினை நீக்காக் குருவினைக் கொள்வர்
குருடும் குருடும் குருட்டாட்ட மாடிக்
குருடும் குருடும் குழிவிழு மாறே”

சொல்லாமல் சொல்லும் திறன் பெற்றவரே குரு அதாவது வெறும் சொற்களிலேயே பேசாமல் அனுபவ பூர்வமான செயல் மூலம் பேசுதல் இந்த நிலையில் அந்த குருவினுடைய வாய் பேசுவதற்கு பதிலாக அவருடைய செயலே உடலே பேசும்.

12

நமக்கு வாய்த்துள்ள மனம் வாக்கு காயம் ஆகிய திரிகரணங்களின் அசைவினால் சொல் செயல்  இவை தோன்றுகின்றன. நல்லவையாயின் புண்ணியமும் தீயவையாயின் பாவமும் உண்டாகுகின்றன. இவை எத்தனையோ பிறவிகளாக சேர்ந்து குவிந்து கிடக்கின்றன.

இவை “சஞ்சிதம்” எனப்படும். இவற்றுள் அனுபவித்து வரும்படி இவ்வுடலைக் கொடுத்து இறைவன் நம்மை அனுப்பியுள்ளான். இப்பிறவியில் அதனை அனுபவித்தே ஆகவேண்டும். அது “பிராரப்தம்” எனப்படும்.

இப்பிறவியில் நாம் புரியும் புதியவினை “ஆகாமியம்” எனப்படும். இதுவும் சஞ்சிதத்துடன் சேர்ந்து குவிந்து பிறவிப்பிணியை வளர்த்துக் கொண்டே போகும்.

இவ்வாறு வினை வளர்ந்து கொண்டே போனால் நாம் என்றுமே பேரின்ப முத்தியைப் பெற இயலாமற் போய்விடும்.

ஆனால் கருணை மயமான குருநாதர் நம் வினை வளர்ச்சிக்கு முற்றுப்புள்ளி வைத்து நம்மை பேரின்ப முத்திக்கு ஆளாக்குகிறார் என்றும் இரகசியத்தை ஞானகுரு உணர்த்துவார். மலைபோல் குவிந்து கிடக்கும் “சஞ்சிதம்” என்னும் முன்னைத் திரளைக் குருநாதர் தம் மெய்ஞ்ஞானக் கனலால் எரித்து சாம்பலாக்கி விடுகிறார்.

13

இப்பிறவியில் சேரும் “ஆகாமியம்” என்னும் புதிய வினையினை நம்மைச் சேரவொட்டாமல் தடுத்து விடுகிறார். அடியவர்களின் உடல் பொருள் ஆவி அனைத்தையும் நமக்கு அர்ப்பணமாக ஏற்றுக் கொண்டு அருள்வாழ்வு வாழச் செய்து தவத்தை வளர்த்து தவக்கனலை ஓங்கச்செய்கிறார்.

அந்நிலையில் அடியவர்களின் எண்ணம், சொல், செயல் அனைத்திலும் தான் எனும் முனைப்பு அடியோடு நீங்கி விடுவதால் அவர்கள் செயல்கள் யாவும் சீவச்செயல்கள் ஆகாமல் சிவச் செயல்களாகவே ஆகின்றன.

ஆதலால் அவர்கள் அறிந்தோ அறியாமலோ செய்யும் செயல்களினால் ஏற்படும் புண்ணிய பாவங்கள் அவர்களை நெருங்க வொட்டாமல் அவர்களின் தவக்கனல் தடுத்துவிடுகிறது.

“தன்னை யறிந்திடும் தத்துவஞானிகள்
முன்னை வினையின் முடிச்சையவிழ்ப்பார்கள்
பின்னை வினையை பிடித்துப் பிசைவார்கள்
சென்னியில் வைத்த சிவனரு ளாலே”

                                                                                           – திருமந்திரம்

திருமூலரின் கூற்றை யார் மறுக்க முடியும்! முடியவே முடியாது. ஏனெனில் இதுதானே உண்மை.

14

குருநாதர் திருவருளுக்கு ஆட்பட்ட அடியவர்கள் இவ்வாறு “சஞ்சிதம்” ஆகிய முன்வினையினின்றும் “ஆகாமியம்” ஆகிய வருவினையினின்றும் விடுபடுகின்றனர். பிறப்பெடுத்துவந்த “பிராரப்தம்” என்னும் வினையை மட்டும் அனுபவித்தேயாக வேண்டும். அதற்கும் குருவருள் துணை நின்று அவ்வினை வலிமையைக் குறைத்துத் தாமும் துணையிருந்து எளிதாக அனுபவித்து முடிக்கும்படி அருள்புரிகிறார். பின்னரே பேரின்ப முத்தியை அடையச் செய்கிறார். இவ்வாறக இருவினை நீங்கி விடுவதால் பசுதத்துவமாகிய ஜீவத் தன்மை குறையும், ஏகப் பொருளாய் அழியா மெய்ப்பொருளாய் விளங்கும்.

மந்திரம் ஓதுதல் என்ற செயல் இல்லாமலேயே இறை ஆற்றலை எய்துகிற முறையை ஞானிகள் வகுத்துச் சொல்லியிருக்கிறார்கள்.

இது மனத்தை நேராகவே இறைவன்பால் அழைத்துச் செல்கின்ற முறையாகும்.

மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய அனைத்தும் இந்த உடம்புக்குள்ளேயே உள்ளன. சேத்திராடனம், எனும் புனித யாத்திரை செய்து கொள்வது கூட இந்த உடம்புக்குள்ளே தான். மனிதன் கோயில் தோறும் சென்று வழிபட வேண்டிய நிலையில் இந்த ஞானியோ தம் உள்ளத்தினுள்ளேயே உடம்புக்குள்ளேயே இந்தப் பயணச் செலவுகளை மேற்கொள்கிறான்.

15

வழிகாட்டி நூலை மட்டும் நம்பித் தனியாக இந்த உடற்பயணமாகிய ஞான யாத்திரையை மேற்கொள்ளக் கூடாது. அதற்கு வழித்துணையும் வேண்டும். இங்கு வழித்துணை என்பது ஓர் ஞான ஆசானின் நேர்முகத் துணையாகும். இதன் காரணமாகத்தான் பயிற்சி நூல்களை அருளியுள்ள ஞானிகள் எல்லோரும் தங்கள் பாடல்களை பரிபாஷை மொழிகளிலே சொல்லியிருப்பதோடு கூடவே மனத்தையும் அதன் செயல்களையும் இறையுணர்வில் ஈடுபடுத்துவதற்கு குருவை இன்றியமையாதவராக வற்புறுத்துகிறார்கள்.

இறைவனை உள்ளத்திலே அமர்த்திக் கொள்ளக் கூடிய ஆற்றல் ஒருவனுக்கு வந்துவிட்டால் அவனுக்கு எவ்விதமான புறச்சடங்குகளும் வேண்டுவதில்லை. ஆனால் இந்த ஒரு நிலை அவனுக்கு வரும்வரை சரியைகளையும், கிரியைகளையும், யோகத்தையும் கடைப் பிடித்தாக வேண்டும் என்பதே ஞானிகளின் கருத்தாகும்.

ஆத்ம பரிபக்குவம் ஏற்பட்ட பிறகு இறைவனை வழிபடுகின்ற பாவனை முறை கைவசம் ஆகிவிட்டால் எவ்விதமான வழிபாட்டுச் சடங்குகளும் ஒருவனுக்குத் தேவையில்லை என்று வற்புறுத்துகிறார்கள்.

16

இவர்கள் கோயில்களையும் விக்கிரக ஆராதனை ஆகமச் சடங்குகளையும் எள்ளி நகையாடுவதும் இதற்காகவே.

எல்லாமாகி, எங்குமாகி, நீக்கமற நிறைந்த பரம்பொருள். பேரும் உருவமும் இல்லாததாய் இந்த பிண்ட சரீரத்துக்குள்ளும் கலந்து நிற்கிறது, இறைவனை இந்த உடம்பாகிய ஆன்ம ஆலயத்தில் கண்டு தரிசனம் செய்யவேண்டும் என்கிறார்கள்.

“ஓடிஓடிஓடிஓடி உட்கலந்த சோதியை
நாடி நாடி நாடி நாடி நாட்களும் கழிந்து போய்
வாடி வாடி வாடி வாடி மாண்டு போன மாந்தர்கள்
கோடி கோடி கோடி கோடி எண்ணிறந்த கோடியே”

                                                                                        -சிவவாக்கியர்.

ஞானிகள் முத்திப் பேற்றை நோக்கி வழி நடக்கும் போதும் அஷ்டமா சித்திகள் என்றும் எண்வகையான அணிமா, மகிமா, லகிமா, கரிமா பிராத்தி, பிரகாமியம், ஈசத்துவம், வசித்துவம் என்பவை

இவைகளின் மாயக் கவர்ச்சியில் மயங்காது மேலும் மேலே செல்பவனே முத்தியாகிய இறைவனைச் சந்திக்கிறான். இறைவனை சந்திக்கப் புறப்படும் வழியில் அஷ்டமா சித்திகளான இந்த மந்திர ஆற்றல்களில் மட்டும் மயக்கம் கொள்பவர் பரம்பொருளைச் சந்திக்காது பாதி வழியிலேயே திரும்பி விடுகின்றனர்.

17

“முனிவர் சித்திகள் விநோத மாத்திரம் தரும்
முத்தியைத்தாராவே”

ஆம் சுத்த வேதாந்த நூலான கைவல்லிய நவநீதம் கூறுவதை சிந்தித்தால் சித்தம் தெளிவு பெரும்.

தீட்சையை ஆமை, மீன், பறவைக்கு ஒப்பிட்டு சித்தர் உலகம் பேசி மகிழ்கிறது.

“குளத்திலே கிடக்கும் ஆமை குளக்கரை முட்டையிட்டுக்
குளத்து நீர்க்குள்ளிருந்து குறிப்புடன் நினைக்கும் போது களத்திலே புதைத்த முட்டை கருவுரு வானாற் போலுன் உளத்திலே நாகை நாதர் உருவறிந்துணர்வாய் நெஞ்சே”

                                                                                   -நெஞ்சறி விளக்கம் – 12

“வாரணம் முட்டையிட்டு வயிற்றில்வைத்தணைத்துக்கொண்டு
பூரணக் கூடுண்டாக்கிப் பொரித்திடுங் குஞ்சுபோலக்
காரணக் குருவை மூலக் கனல்விளக் கதனாற் கண்டு
நாரணன் அறியாநாகை நாதரைப் பணிவாய் நெஞ்சே”

                                                                                           -நெஞ்சறி விளக்கம் – 14

“தண்ணீரிலிருக்கும் மீன்கள் தண்ணீரிற் கருவைப் பித்திக் கண்ணீனாற் பார்க்கும் போது கயலூறு வானுற் போல நண்ணிய குருவைக் கண்டு நாதனல் லுருவைச் சேர்த்து விண்ணில் மேல் நாகை மெல்லடி வெளிபார் நெஞ்சே”
                                                                                          – நெஞ்சறி விளக்கம் – 16

18

ஞான குருவானவர் தனது மாணவனை தனது திருக்கரத்தால் தொட்டும், தனது திருநோக்கால் பார்த்தும், தனது உள்ளத்தால் நினைத்தும் உயர்வான நிலைக்கு உயர்த்துவார் என்பது தெரிகிறது.

தத்துவமனைத்தும் ஞான உலகில் எப்படி பேசப்படுகிறது. எந்தப் பொருளை மையப்படுத்தி பரிபாஷைகளில் எழுதப்பட்டள்ளன என்று கேள்வி எழுந்தால் அதற்கு ஒரே பதில்தான் வருகிறது. உலகில் தோன்றிய அத்தனை மறைகளும் விந்துவை மையப்படுத்தியே எழுதப்பட்டுள்ளன.

அவைகளையும் சற்று நோக்குவோம்.

“விந்துநிலை தனையறிந்து விந்தைக் கண்டால்
விதமான நாதமது குருவாய்ப் போகும்
அர்த்தமுள்ள நாதமது குருவாய்ப் போனால்
ஆதி அந்தமான குரு நீயே ஆவாய்
சந்தேகமில்லையடா சகலகலை ஞானங்
களும் இதற் கொவ்வாது
முந்தி நீ இருவரும் கூடிச் சேர்ந்த
மூலமதை அறியாவிட்டால் மூலம் பாரே”

                                                                     – அகத்தியர்

வித்தென்றால் அதுதான் முத்தான, ஏன், சத்தான பொருள். அதுதான் நமது சொத்து என்பதை சித்த மாமுனிவர்கள் அன்றே கூறிச் சென்றுள்ளார்கள்.

“காணப்பா சாதி குலம் எங்கட்கில்லை
கருத்துடனே என் குலம் சுக்கிலம் தான் மைந்தா”

– காகபுசுண்டர் ஞானம் – 66

19

“உன் வாலிபப் பிராயத்தில் உன் சிருஷ்டிகரைநினை”
என கிறித்துவ விவிலியம் கூறுவதும் இதுவன்றே.

“ஆதி யென்ற விந்துவுக்கு அழிவு வந்தால் அரனாலும் அரியாலும் முடியாதிருப்பா” என்று குரு முனிச்சித்தர் அடித்துப் பேசியதை மறுக்க முடியுமா.

“இந்திரியங்களை வீணே விரயம் பண்ணுகிறவன்
நஷ்டவாளிகளில் ஒருவன் ஆவான்”
என்று திருக்குரான் கூறுவதும் உண்மையன்றோ.

குண்டலினி ஞானம் முழுவதுற்குமான ஒரு தனிச் சிறப்பியல்பு என்னவென்றால் எல்லா முயற்சிகளும் உள் முகமாகவும், மேல் நோக்கியும் ஆற்றப்படுவதுதான்.

சுக்கிலத்தை அடக்கி மேல் நோக்கி செலுத்தும் பயிற்சியை “விந்துமறித்தல்” என சித்தர் உலகம் பேசும்.

“உண்ணும் போதுயிரெழுத்தை உயர வாங்கி
        உறங்குகின்ற போதெல்லா மதுவே யாகும்
பெண்ணின் பாலிந்திரியம் விடும் போதெல்லாம்
       பேணி வலம் மேல்நோக்கி அவத்தில் நில்லு
தின்னும் காயிலை அருந்தும் போது வதுவே யாகும்
      தினந்தோறும் அப்படியே செலுத்தவல்லார்
மண்ணூழி கால மட்டும் வாழ்வார் பாரு
     மறலிகையில் அகப்படவு மாட்டார் தாமே”

                                                                                         -அகத்தியர்

20

“உருத்தரித்த நாடியில் ஒடுங்குகின்ற வாயுவை
கருத் தினால் இருத்தியே கபால மேற்ற வல்லீரேல்
விருத்தரும் பாலராவர் மேனியும் சிவந்திடும்
அருள் தரித்த நாதர்பாதம் அம்மை பாதம் உண்மையே”

                                                                                          – சிவவாக்கியர்

இப்பாட்டுக்களையெல்லாம் அனுதினமும் அனுஷ்டிக்கும்
அனுஷ்டானங்களாகவே கை கொண்டால் அனுபூதி வாழ்வு சர்வநிச்சியம் எனலாம்.

பிரம்ம ஞானம் பெற்ற அளவில் ஜீவன் முத்தர்கள் வினைக்கட்டுகளிலிருந்து விடுதலையுறுகின்றனர்.  வினைக் கட்டே பிறப்பு இறப்புக்குக் காரணமாகிறது. ஜீவன் முத்தனுக்கு கர்மப் பிணைப்பு இல்லை எனலாம்

“May all of us enjoy the ETERNAL BLISS”

 

21