"அனுபவங்களின் தொகுப்பே மறைகளில் மறைந்துள்ள மறைபொருளாகும்"
நூல் விவரம்
நூல் பெயர்: அனுபவங்களின் தொகுப்பே மறைகளில் மறைந்துள்ள மறைபொருளாகும்
ஆசிரியர்: ஞானவள்ளல் மகாகனம் தங்கசுவாமிகள்
பதிப்பு : முதல் பதிப்பு திருவள்ளுவர் 2047ம் ஆண்டு (கி.பி – 2016)
பக்கம்: 192
வெளியிடப்பட்ட இடம்: தூத்துக்குடி உமரிக்காடு ஞானசபை கிளையில் நடைபெற்ற ஞானவள்ளல் மகாகனம் தங்கசுவாமிகள் 78 வது பிறந்தநாள் விழாவில் வெளியிடப்பட்டது
வெளியீடு:
உலக அறிவார்ந்தோர் இயற்கை ஞானசபை அறக்கட்டளை
பதிவு எண் : 140/4/2000
ஞானசபை சாலை, சிவத்தையாபுரம்,
சாயர்புரம் அஞ்சல், தூத்துக்குடி – 628 251
+91 94420 56071
முகவுரை
கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்கு தக.
மேலும் குறள் ஆசான் இவ்வாறு கூறுவார்.
அறிதோறு அறியாமை கண்டற்றால்
என பிறிதோரிடத்தில். அதாவது நாம் அறிய அறியத்தான் நமது அறியாமை நமக்குப் புலப்படும். வாழ்விற்கு அடித்தளம் அமைக்க கூடிய நூல்களையே படிக்க வேண்டும்.
அதுவும் வீடுபேற்றினை அடைய வைக்கும் நூல்களையே படிக்க வேண்டும்.
காலத்தால் அழியாத நூல்களை மட்டுமே படிக்க வேண்டும். மெய்யை மட்டும் தேர்வு
செய்து படிக்க வேண்டும். அதனால் தான் கசடற கற்க வேண்டும் என்றார். கற்றால்
மட்டும் போதாது. கற்றபடி நடந்திட்டால் அன்றோ படித்ததின் முழுப்பயனை அடைய
முடியும். மேலும் குறளாசான் கூவி அழைப்பதையும் காண்போம். கற்றீண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவர்
மற்றீண்டு வாரா நெறி.
அதாவது இம்மக்கட் பிறப்பின் கண்ணே உபதேச மொழிகளை அனுபவம் உடைய ஆசான்பாற் கேட்டு அதனால் மெய்ப்பொருளை உணர்ந்தவர் மீண்டும் இப்பிறப்பின்கண் வாராத நெறியை எய்துவர்.
வருங்காலத்தை ஆளக்கூடியவன் மட்டுமே பேரான்ம பெருஞ்சுகத்தை நல்கிடும் ஞானாசான்மூலம் அகத்தேடலால் அருளானந்த சுகத்தை அகவிழிப்பார்வையால் ஆன்மதரிசனம் பெற முடியும். அறிவின் மூலத்தை உணர்ந்ததால் அறிவின் முடிவையும், முதலையும் உணர்ந்து மகிழமுடியும். ஆனந்தத்தை தேடிய அவர்கள் தாமே ஆனந்த மயமாயினர். இறுதியில் சத்தை அறிந்து சித்தை தெரிந்து ஆனந்தத்தை உணர்ந்து சச்சிதானந்த நிலை அடைந்து முழுமையுற்றார்கள்.அப்படி முழுமையுற்றவர்களின் உள்ளார்ந்த மெய்ப்பொருள்களின் வெளிப்பாடுகள் தான் மறைகள், சூத்திரங்கள், சித்தாந்த வேதாந்த ரகசியங்கள் என துணிந்து கூறலாம். அவையெல்லாம் அனுபவங்களின் தொகுப்பு எனக்கூறலாம். உதாரணத்திற்கு சத்திரிய குல மகரிஷி விஷ்வாமித்திர மாமுனிவர் இறுதியில் அந்த பிரம்மநிலையை அடைவதற்கு தனது காயத்தையே (தேகம்) திரியாக்கி ஞானாக்கினி மூலமாக தன்னை தகித்தபின் அவர் மூலமாக கிடைத்ததுதானே காயத்திரி மந்திரம்.
இந்த மந்திரத்தை தான் பிரம்மாவின் முகத்தில் பிறந்தோர் எனக்கூறிக் கொள்ளும் அவர்கள் இன்றும், எல்லா நேரங்களிலும் சப்தத்தோடும் மானசீகமாகவும் கூறி வருவதை யாவரும் கண்டு வருகிறோம். அதனால் தான் அனுபவமே முந்தியது மறைகள் பிந்தியது என்ற பதிலும் வருகிறது. நோற்றலிலே ஆற்றல் நிலைப்பட்டால்தான் இறையருள் கிட்டும் என்பதை வரலாறுகள் நமக்கு பாடமாக உணர்த்துகிறது என்பதற்கு சான்றுகள் பல உள்ளது. இப்பூமி பந்தில் கோடிக்கணக்கான மாந்தர்களின் இதய சிம்மாசனத்தில் உள்ள ஏசுபிரான் அவர்கள் நாற்பது நாள் நோன்பிருந்து (தவக்காலம்) தான் இறையருளை முழுமையாக பெற முடிந்தது. அண்ணல் முகமது நபிகள் நாயகம் அவர்கள் இருபத்தியேழு நாட்கள் அருந்தவம் ஆற்றிய பின்னரே திரு குர் ஆன் வசனங்கள் இறையருளால் அருளப்பட்டது. தமிழகத்தில் பதினெட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்து தமிழக மக்களின் உள்ளங்களை எல்லாம் கொள்ளை கொண்ட திரு அருட்பிரகாச வள்ளலார் சுவாமிகள் இறையாற்றலை பெற அவர் பட்ட பாடுகளை அவர் வாயிலாக அறிந்திடுவோம்.
பனிரண்டாண்டு தொடங்கியிற்றைப் பகலின்வரையுமே
படியிற் பட்ட பாட்டைநினைக்கின்மலையும் கரையுமே
துனியா தந்தப் பாடு முழுதுஞ்சுகம தாயிற்றேதுரையே
நின்மெய் யருளிங்கெனக்குச் சொந்த மாயிற்றே.
என மனமுருகப்பாடி மேலும்
ஈராறாண்டு தொடங்கி யிற்றைப்பகலின் வரையுமே
எளியேன் பட்ட பாட்டை நினைக்கின்இரும்பும் கரையுமே
ஏரா யந்தப் பாடு முழுதுயின்பமாயிற்றேஇறைவா
நின் மெய் யருளிங்கெனக்குச் சொந்த மாயிற்றே.
இப்படி பேரான்ம தீர்க்கதரிசிகளான ஞானவான்கள் யாவரும் இறையாற்றலை முழுமையாக பெற்றிட அவர்கள் பட்ட பாட்டினை எழுதத்தான் முடியுமோ? மனிதர்களுக்கு பிரமானந்தப் பேற்றையளித்தற்கென்றே இறையருள் முழுமையாகப் பெற்ற பேரான்மஞானிகள் மறைகளை யருளியிருக்கிறார்கள். யார் மோட்சம் அடைய வேண்டும் என்ற வைராக்கியத்தோடு முயன்று மேற்கண்ட மறைகளில் கூறப்பட்ட வழியில் நடத்து பிரம்மநிஷ்டர்களாகிய பெரியோர்களின் சகவாசத்தில் இருந்து காமகுரோதாதி வாசனைகளை ஒழித்து, சாதனைகளை அடைத்து நித்தியம் எது, அநித்தியம் எது என்று பிரித்தரியும் விவேகம்
உடையவர்களாய், விவேகம் அற்ற தன்மையான மாயையாகிய பேத புத்தியை ஒழித்து, ஓர் நிலையில் நின்று பிறப்பறுக்கும் ஞானகுருவான காரணகுருவை அடைகிறார்களோ, அவர்கள் பிறபிறப்பாகிய பவசாகரத்தை கடந்து முத்தியடைந்து கரை சேர்வார்கள் இது சர்வ நிச்சயம். இந்த நூல் யாருக்கு சொந்தம் என்ற எண்ணம் எழாமல் போகாது. ஆரம்ப சாதகர்களுக்கும் அப்பியாசிகளுக்கும் ஆர்வம் இருப்பினும், அவர்கட்கு புரிவதும் உணர்வதும் சற்று கடினமாகத்தான் இருக்கும். சதா நிஷ்டர்கள் சகச நிஷ்டர்களான சதானந்தத்தை அனுபவிப்போருக்கே தெளிவாக விளங்கும்
நின்ற நிலையே நிலையா வைத்து ஆனந்தநிலைதானே
நிருவிகற்ப நிலையுமாகிஎன்றும் அழியாத
இன்ப வெள்ளம் தேக்கி இருக்க எனைத்தொடர்ந்து
தொடர்ந்து இழுக்கும் அந்தோ.
ஆம் தாயுமான சுவாமிகள் கூறியபடி நின்ற நிலையை நிலையாக பெற்றவனே இந்த நூலுக்கு அதிபதி என்று கூறலாம். அவன் தானே நிருவிகற்ப சமாதிக்கு ஏகிச்செல்லும் பெருஞ்சுகம் பெற்றவன். அவன் தானே ஜீவன் முத்தன் என்ற சொல்லுக்கு தகுதியானவன் ஆகிறான்.அறவழிச் செல்லும் தவ ஆற்றல் மிக்கோர் எல்லா நேரத்திலும் அகவிழிப் பார்வையால் இருப்பதால் அவர்கள் எந்த நேரமும் எந்த சூழ்நிலையிலும் மோனநிலையில் இருந்திடுவர். ஞானானந்த சுகத்தில் இருந்திடுவர்.
இதோ தேவனுடைய ராஜ்ஜியம் உங்களுக்குள் இருக்கிறதேஎன்றும் கிறிஸ்தவ வேதாகமமான விவிலியம் உண்மைகளை மறைக்காமல் கூறிய கருத்தையும் பதிவு செய்துள்னோம்.ஞானாக்கினியால் தன்னை தகித்துக் கொண்டவர்களை இறுதி நாளில் அவர்கள் தேகத்தை நெருப்பில் இட்டு அழிக்க வேண்டுமோ? வேண்டவே வேண்டாம். அவர்கள் உடம்பு முன்னமே ஞானக்கினியால் வறுக்கப்பட்டதால் பேசாமல் அவர்களை “குகை” செய்து அவர்களை புதைத்து வழிபடுங்கள் என்று பெருந்திரட்டு என்ற ஞான நூல்கூறியதையும் குறித்துள்ளோம்.ஞானத்தை அருட்கொடையாக அருளும் ஞானாசானின் அமைப்பு சத்சங்கமாக தூய்மையான தொண்டர்களை கொண்ட திருக்கூட்டமாக இருக்கும் என்பதையும் குறிப்பிட்டுள்னோம். வாழையடி வாழையென வந்த திருக்கூட்டத்தை அருளும், பொருளும் நிறைவெய்து, வளமோடு நலமாக வாழ என்றும் வாழ்த்தி யனுப்புவதை தொடர்ந்து செய்து வருகிறது உலக அறிவார்ந்தோர் இயற்கை ஞான சபை.“தேகம் யாதேனும் சித்தி பெறச் சீவன் முத்திஆகும் நெறி நல்ல நெறி ஐயா பராபரமே”என்று தாயுமான சுவாமிகள் கூறிய நல்ல நெறி பாரெங்கும் பரவட்டும் என்று வேண்டிக்கொள்வோம். இந்த நூல் வெளிவரக் காரணமான எமது ஊனோடும், உயிரோடும், உணர்வோடும் கலந்த அருட் செல்வங்களான எமது அன்பு மாணவச்செல்வங்கட்கு சொல் மாலை தொடுத்து அழகு பார்க்கின்றோம்.