குருசீடன் உறவு
மாணவனின் மாண்பு எப்படி இருக்க வேண்டும் என்பது பற்றியும் அவர்கள் குருநாதரிடம் மன மொழி மெய்யில் எப்படியெல்லாம் செயல்பட வேண்டும் என்பது பற்றியும் சற்று நோக்கினால் அன்று எப்படி நடந்தது. இன்று எப்படி நடக்கிறது என்று கூட புரியும்.
“உடற்குயிர்போலும் கட்கிமை போலு
மூசியு நூலுமே போலும்
படப்பொறி யரவைப் பிடியெனப் பிடிக்க
பாயுவெம் புலிதனைத் தழுவத்
தொடற்கருந்தழலை யெடுவென வெடுக்கத்
தும்பி முன்னஞ் சுறாதிருக்க
விடற்கருந் சித்தமென்னவே யுதவும்
விவேகியற் களித்திடலாமால்”
-நிஷ்டானுபூதி சாரம் (ஞானியார் அடிகள்)
மேலும் இன்னும் சில கருத்துக்களையும் அவர்கள் வாயிலாகவே கேட்டுக் கொள்வோம். ஆச்சரியத்தால் ஆனந்தம் கொள்வோம்.
“தேனிரம்பு மலரையனி தேடுவபோ
லெங்குங் தேசிகனைப் பலநாளுத்
தேடிக் கண்டளவில்
ஞானகுரு விவன்பாகஞ் சோதிக்க
வேண்டிநடுக்கங்க ளுறலே
யென்நாளுஞ் செய்வித்தும்
ஈனமாந் தொழிலதனி லேமிக விடுத்து
மிரக்கமிலா தேயடித்து மிழி புரையால் வைது
மாளமின்றிச் செயும் போதுங் குருபத்தி
வழுவா வாய்மையருக்குக்குயர்
நிட்டை வழுத்திடலுந் தகுமால்”
-நிஷ்டா னுபூதி (ஞானியார் அடிகள்)
நிஷ்டானுபூதி சாரம் எனும் இந்த இரண்டு பாடல்களில் இருந்து நமக்கு என்ன தெரிகிறது. அன்றுள்ள நிலைமை நமக்கு நன்கு புரிகிறது. இந்த கலிகாலத்தில் இவ்வளவு கடுமையாக இருந்தால் மாணவர்கள் குருநாதர் தொடர்பு எப்படி இருக்கும் என்பதை அவரவர் எண்ணத்திற்கே விட்டுவிடுவோம்.
பாலில் இருந்து தயிர் கிடைப்பது போல், தயிரில் இருந்து மோர் கிடைப்பது போல், மோரில் இருந்து வெண்ணெய் கிடைப்பது போல், வெண்ணையிலிருந்து நெய் கிடைப்பது போல், நல்ல செயல்களில் இருந்து தான் மேலும் ஒரு நல்ல காரியம் உருவாகிறது. நெய்யில் தான், கண்ணாடியில் தெரிவது போல் நமது உருவத்தையும் தோற்றத்தையும் காணமுடியும். அது போல் தான் நல்ல சற்சீடனை உருவாக்க குருநாதர் காத்திருந்து பலனை எதிர்பார்க்கிறார் என்று கொள்ளலாமல்லவா.