"குருவோடு ஒரு பயணம் "
நூல் விவரம்
நூல் பெயர்: குருவோடு ஒரு பயணம்
ஆசிரியர்: ஞானவள்ளல் மகாகனம் தங்கசுவாமிகள்
பதிப்பு : அய்யன் திருவள்ளுவர் 2056-ம் ஆண்டு மீனம் திங்கள் (பங்குனி மாதம்) 26-ம் நாள் (09.04.2025) அறிவன்கிழமை (புதன்)
பக்கம்: 576
வெளியிடப்பட்ட இடம்: திருநெல்வேலி ஞானசபை கிளையில் நடைபெற்ற ஞானவள்ளல் மகாகனம் தங்கசுவாமிகள் 84 வது பிறந்தநாள் விழாவில் வெளியிடப்பட்டது
வெளியீடு:
உலக அறிவார்ந்தோர் இயற்கை ஞானசபை அறக்கட்டளை
பதிவு எண் : 140/4/2000
ஞானசபை சாலை, சிவத்தையாபுரம்,
சாயர்புரம் அஞ்சல், தூத்துக்குடி – 628 251
+91 94420 56071
புகுமுன் தெரிமின்
ஒன்றே செய், நன்றே செய், இன்றே செய் என்கின்ற ஆன்றோர்களின் அருள் மொழிக்கு இணங்க, எமது சிந்தையில் ஆழமாக பதிந்து விட்ட எமது ஆன்மீக குருநாதர் ஞானவள்ளல் மகா கனம் தங்கசுவாமிகள் அவர்களின் போதனைகள், ஆன்மீக தாகம் கொண்ட அன்பர்கள் அனைவருக்கும் பயனுள்ளதாக அமைய வேண்டும் என்ற நோக்கத்தில், எமது குருநாதரின் அருளாசியுடன் அவரது போதனைகளை நூல் வடிவில் தொகுத்து வழங்கும் பாக்கியம் பெற்றதை எண்ணி அகம் மகிழ்கின்றேன்.
பொன்னை வைக்க வேண்டிய இடத்தில் ஒரு பூவையாவது வைக்க வேண்டும் என்பதை மனதில் கொண்டு எம்மால் இயன்ற அளவுக்கு எமது குருநாதர் ஆழ்ந்து அருளிய ஞான நூல்களில் உள்ள கருத்துக்களையும், அவரோடு சேர்ந்து பயணிக்கும் தருணத்தில் அவ்வப்போது ஏற்பட்ட அனுபவங்களையும், சத்சங்க தொடர்பினால் உண்டான அனுபவங்களையும் இந்த நூலின் மூலமாக வெளிப்படுத்துகின்றேன்.
தமிழுக்குப் பெருமை சேர்க்கும் நூல்களில் ஒன்று கைவல்லிய நவநீதம் எனும் அத்வைத இலக்கிய ஞான நூல். அந்த நூலில் ஆசிரியர் தாண்டவராய சுவாமிகள் சந்தேகம் தெளிதல் படலத்தில் எழுதிய 174 ஆம் பாடலை இங்கு பதிவு செய்கிறேன்.
“நான் என உடலைத்தானே நம்பினேன் அநேக சன்மம் ஈனராய்ப் பெரியோர் ஆகி இருந்தவை எலாம் இப்போது கானலில் வெள்ளம் போலக் கண்டு சற்குருவினாலே நான் என என்னைத் தானே நம்பி ஈடேறினேனே” விளக்கம் : பல பிறவிகளாக இந்த தேகத்தையே நான் என விபரீதமாக நம்பினேன். அதனால் கீழோனாயும், மேலோனாயும் பிறந்து பிறந்து அனுபவித்த அத்தனையும் கானல் நீர் போன்று உள்ளது. இப்போது குருவின் அருளி னால் ஞான சொரூபமே நான் என்று கண்டு ஈடேறினேன்.
எமது குருநாதரின் நூல்களை ஆய்வு செய்து, அத னால் உண்டான சந்தேகங்களை எமது குருநாதரிடம் கேட்டு தெளிவு பெற்று, அவரால் அருளப்பட்ட ஞானப் பயிற்சிகளை இடைவிடாமல் செய்ததன் பயனாக எனக்கு உண்டான சிந்தனைகளையும், அனுபவங்களையும் இந்த நூலின் மூலமாக தெரிவிக்கின்றேன்.
எமது குருநாதரால் நிறுவப்பட்ட உலக அறிவார்ந்தோர் இயற்கை ஞான சபையின் ஒரு கிளையானது தூத்துக்குடி மாவட்டம் கூட்டாம்புளி என்னும் ஊரில் அமைந்துள்ளது. அந்த ஞான சபை கிளையின் தலைவராக இருக்கும் கனம் பொருந்திய சக்திவேல் என்பவருடன் பழகும் வாய்ப்பு எனக்கு ஏற்பட்டது.
அவர் அடிக்கடி தியான பயிற்சிகள் செய்வதை பார்த் தும், சத்சங்க நிகழ்வுகளுக்கு செல்வதை பார்த்தும், அவரி டம் குருநாதரை பற்றியும், ஞான சபையின் பயிற்சி முறை களை பற்றியும் கேட்டு தெரிந்து கொண்டேன். ஒவ்வொ ருவரும் தனது நிஜ சொரூபத்தை உணர வேண்டுமென்ற நோக்கத்தில் ஞான சபை நிகழ்வுகள் அமைந்ததை பார்த்து எனக்கு வியப்பாக இருந்தது. கடையனையும் கடைத்தேற்ற வேண்டும் என்ற குருநாதரின் எண்ணம் எனக்கு ஆர்வத்தை தூண்டியது. அந்த காலகட்டத்தில் நான் தனியார் துறையில் weldor பணியை செய்து வந்தபோது எனக்கு பல்வேறு பிரச்சனைகள் இருந்தன. பிரச்சனைகளிலிருந்து எவ்வாறு விடுபட வேண்டும் என்ற மன குழப்பத்தில் இருந்தேன். எப்படியாவது எல்லா பிரச்சனைகளிலிருந்தும் விடுபட்டு மன நிம்மதியோடு வாழ வேண்டும் என்ற முடிவோடு 2005 ஆம் ஆண்டு திருச்செந்தூரில் அமைந்துள்ள அய்யன் பட்டி ராஜரிஷி பரமஞான குருபிரான் அருள்மிகு சங்கர சுவாமிகள் ஜீவசமாதி ஆலயத்தில் பௌர்ணமி தினத் தன்று எமது குருநாதரிடம் திருவடி உபதேசம் (தீட்சை) பெற்றேன். பிறகு படிப்படியாக எனது நிலைகளுக்கு ஏற்ப குருநாதர் ஞானப் பயிற்சிகளை வழங்கினார். குருநாதரின் தொடர்பும் சத் சங்க தொடர்பும் எனக்கு மிகவும் பயனுள் ளதாக அமைந்தது. ஆனால் பிராரப்த வினையின் தூண் டுதலால் நான் தடுமாறி தடம் மாறினேன். சுய ஒழுக்கமே ஞானத்திற்கு அடிப்படை என்பதை மறந்து புலன்களுக்கு அடிமையானேன். எனது தவறான பழக்கவழக்கங்களால் எனது குடும்பம் மிகவும் பாதிப்புக்கு உள்ளானது. எனது உடல் நிலையும் மிகவும் பாதிக்கப்பட்டது.
அப்பொழுது யார் எந்த அறிவுரை கூறினாலும் அதை ஏற்றுக் கொள்ளும் பக்குவத்தில் நான் இல்லை. என்னை திருத்தி ஒரு மாண்புள்ள மனிதனாக மாற்றுவதற்கு எனது குடும்பத்தினர் எமது குருநாதரிடம் தஞ்சமடைந்தனர். ஞான சபை அன்பர்களும் எனது குடும்பத்தினரும் என் னைப் பற்றி குருநாதரிடம் அடிக்கடி முறையிட்டு வந்த னர். குருநாதரின் அருட்பார்வையால் சில காலங்களுக்குப் பிறகு எனது வினைப் பயனின் வலிமை குறைய ஆரம்பித் தது. மீண்டும் பயிற்சிகளை முயற்சியோடு செய்து வந்தேன். 2018 ஆம் ஆண்டு எனது குருநாதருக்கு சில பணிகளை செய்வதற்கு என்னை நியமித்தனர். குருநாதர் அழைக்கும் போது, அவரிடம் சென்று அவர் கூறும் பணியை நிறைவு செய்துவிட்டு பிறகு எனது இல்லத்திற்கு சென்று விடுவேன். 2019 ஆம் ஆண்டிலிருந்து குருநாதருக்கு முழு நேர உதவி யாளராக செயல்பட வேண்டிய சூழ்நிலை உருவானது. எமது குருநாதர் தானாகவே முன்வந்து முழு மனதுடன் என்னை பணி செய்ய அழைத்ததற்கு நான் அளவற்ற மகிழ்ச்சி அடைந்தேன். எனது பணிகளையும் சேவைக ளையும் குருநாதருக்கு தொய்வின்றி செய்து வந்தேன். எத்தனையோ அவமதிப்புகளையும் இடையூறுகளையும் சந் திக்க வேண்டிய சூழ்நிலை உருவானது ஆனால் எமது குரு நாதரின் அருட் கனல் என்னை ஒரு கவசமாக பாதுகாத்து வந்தது. ஒரு சாதாரண பணியாளராக சேர்ந்த என்னை ஒரு உதவியாளராகவும் பின்னர் எமது குருநாதருக்கு personal secretary ஆகவும் தரம் உயர்த்தினார்.
அன்று முதல் இன்று வரை அவரோடு சேர்ந்து பய ணிக்கும் தருணத்தில் மனம் மொழி மெய்யால் எனக்கு உணர்த்தப்பட்ட அறிவுரைகளையும் போதனைகளையும் உள்வாங்கி இந்த நூலின் மூலமாக வெளிப்படுத்துகின் றேன்.
கருணை வடிவான எமது குருநாதருக்கு எம்மால் இயன்ற ஒரு சிறிய கைமாறு செய்ய வேண்டும் என்ற நோக் கத்தில் இந்நூலை எழுத தீர்மானித்தேன்.
“பரிசன வேதி பரிசித்த தெல்லாம் வரிசை தரும்பொன் வகையாகுமா போல் குருபரிசித்த குவலயம் எல்லாம் திரிமலம் தீர்ந்து சிவகதி யாமே”
திருமந்திரம் : 2054.
குருவிடம் திருவடி உபதேசம் பெற்று அவரோடு நிலைத்து இருந்தால் ஜீவாத்மாவாகிய நம்மை பற்றியுள்ள அழுக்குகளான ஆணவம், கன்மம், மாயை போன்றவை அனைத்தும் நீங்கி நித்திய பேரின்பத்தை அடையலாம் என்று மேற்கூறிய பாடலில் இருந்து புரிந்து கொள்ள முடி கிறது.
இந்த நூலில் எமது குருநாதர் எழுதி அருளிய பல் வேறு நூல்களில் உள்ள கருத்துக்களையும், எனது அனுப வங்களையும், மேலும் திருக்குறள், திருமந்திரம், கிறிஸ்தவ வேதாகமம், கைவல்லிய நவநீதம் போன்ற நூல்களில் உள்ள பாடல் மற்றும் கருத்துக்களையும் பதிவு செய்துள்ளேன். ஒரு சீடன் எப்படிப்பட்டவனாக இருந்தாலும் குரு வின் அருள் பார்வை பட்டால், சீடனின் வாழ்வு எவ்வாறு மேன்மை அடையும் என்பதற்கு எனது வாழ்வே ஒரு சான்று.
ஞானப் பாதையை தேர்ந்தெடுத்து அதில் பயணிக் கின்ற மாணவர்களுக்கு இந்த நூல் உதவியாக இருக்கும் என்ற நம்பிக்கையில் இந்த நூலை சமர்ப்பிக்கின்றேன்.
இந்த நூலை எழுதுவதற்கு எனக்கு வழிகாட்டியாகவும் உறுதுணையாகவும் இருக்கின்ற எமது குருநாதர் ஞான வள்ளல் மகா கனம் தங்க சுவாமிகள் ஐயா அவர்களுக்கும், எமக்கு ஆன்மீக சிந்தனைகளையும், குருநாதரின் அருமை பெருமைகளையும் கூறி மெய்க் கல்வியை கற்றுணரும் திருக்கூட்டத் தொடர்பை ஏற்படுத்தித் தந்த கூட்டாம்புளி WINGS ஞானசபை கிளை தலைவர் கனம் பொருந்திய சக்திவேல் அவர்களுக்கும், எமது எண்ணத்திற்கு தகுந்த படி இந்த நூலில் உள்ள கருத்துக்களை தொகுத்து வழங்க உதவி செய்த மேல்மருவத்தூர் WINGS ஞான சபை கிளை தலைவர் கனம் பொருந்திய சு.சரவணன் அவர்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த நூலில் குறைகள் அல்லது பிழைகள் எதுவாக இருப்பினும் பொறுத்துக் கொள்ளும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
இங்கனம்
ராஜ் நாராயணன்
உலக அறிவார்ந்தோர் இயற்கை ஞான சபை
கைத்தொலைபேசி : 7708861877