உலக அறிவார்ந்தோர் இயற்கை ஞானசபை திருவாரூர் கிளை

திருவாரூர் ஞானசபை கிளை துவக்கம்

திருச்செந்தூரில் ஜீவசமாதி ஆலயம் பெற்றுள்ள பரமஞானகுருபிரான் அய்யன்பட்டி ராஜரிஷி சங்கரசுவாமிகளின் பரம்பரை வழித்தோன்றல் சிவகளை ஆதித்தன் பிள்ளை அவர்களின் தலைமை மாணாக்கரான அருட்தந்தை ஞானவள்ளல் மகாகனம் தங்கசுவாமிகள் அவர்களின் உயர்ந்த நோக்கத்தோடு உலக அறிவார்ந்தோர் இயற்கை ஞானசபை அறக்கட்டளை நிறுவப்பட்டது. இதன் தலைமையகம் தூத்துக்குடி மாவட்டம், சாயர்புரம் அஞ்சல், சிவத்தையாபுரம் என்னும் நல்லூரில் அமையப்பெற்றுள்ளது. இதன் பல்வேறு கிளைகள் தமிழகம் முழுவதும் இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது. தூத்துக்குடி மாவட்டம், முக்காணியைச் சேர்ந்த கனம் பொருந்திய இரா.முருகேசன் அவர்கள் குருநாதர் தங்கசுவாமிகளிடம் தீட்சை பெற்று, பயிற்சிகளை திறம்பட செய்து வந்தார்கள். ஜனவரி மாதம் 2000ம் ஆண்டு பணி நிமித்தமாக திருவாரூர் வருகை புரிந்து தண்டபாணி என்ற உள்ளூர் அன்பரிடம் வேலை பார்த்து வந்தார்கள். தியானம் மற்றும் திருக்கூட்டத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்த இரா.முருகேசன் அவர்கள் தன்னுடைய உள்ளூர் நண்பர்களிடம் குருநாதர் பற்றியும், புள்ளிக் கல்வி பற்றியும் எடுத்துக் கூறினார்கள். பிறகு அய்யன் திருவள்ளுவர் ஆண்டு 2003-ம் சுறவம் திங்கள் (தை மாதம்) 2-ம் நாள் (16-01-2002) அன்று திருவாரூர் அய்யனார் கோவில் தெருவில் உள்ள சிறிய ஓட்டு வீட்டில் குருவருளுடன் சமாராதனை மற்றும் சத்சங்கம் நடத்தி இனிதே திருவாரூர் ஞானசபை தொடங்கப்பட்டது. குருநாதர் மற்றும் இதர சபை கிளை அருட்தொண்டர்கள் 08.01.2003 அன்று திருவாரூர் சபைக்கு வருகை புரிந்து திருவாரூர் சபை உணர்வாளர்களுக்கு அருளாசி வழங்கி வாழ்த்தினார்கள். புதிய அன்பர்களுக்கு தீட்சையும் கொடுத்து சிறப்பித்தார்கள். மேலும் இரா.முருகேசன் அவர்களை திருவாரூர் சபை தலைவராகவும் அறிவித்து குருநாதர் வாழ்த்துக்களை கூறினார்கள்.

ஆரம்ப கால கட்டத்தில் திருவாரூர் ஞானசபை செயல்பட்ட இடங்கள்

குருநாதர் அவர்கள் சொல்லிக் கொடுத்த தியானப்பயிற்சிகளை முறையாக செய்து பழகவும், தனக்குள் எழும் சந்தேகங்களை சக உணர்வாளர்களிடம் கேட்டு தெளிவு பெறவும், ஞானம் சம்மந்தமான புத்தகங்களை ஆய்வு செய்யவும் திருவாரூர் ஞானசபைக்கு இடம் தேவைப்பட்டது.
ஆரம்பகாலகட்டத்தில் நிரந்தர இடம் இல்லாத காரணத்தால் பல்வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டு செயல்பட்டு வந்தது.

குருநாதர் அவர்களின் 70-வது பிறந்தநாள் விழா மற்றும் அவ்வையார் அருளிய அகவலின் ஆழம் நூல் வெளியீட்டு விழா

ஞானவள்ளல் மகாகனம் தங்கசுவாமிகளின் 70ம் ஆண்டு அகவை பிறந்தநாள்விழா மற்றும் அவ்வையார் அருளிய அகவலின் ஆழம் என்ற நூல் வெளியீட்டு விழா 02.11.2008 அன்று ஆண்டவர் திருமண மண்டபம், திருவாரூரில் சபை உணர்வாளர்களால் நடத்தப்பட்டது.

இவ்விழாவில் குருநாதர் தலைமையேற்று, பொருளாளர் பாண்டியன் அண்ணாச்சி அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சபை உணர்வாளர்கள் விழாவிற்கு வருகை தந்து சிறப்பு செய்தார்கள்.

குருவின் திருக்கரங்களால் அன்னக்கொடி ஏற்றப்பட்டது. திருவாரூரில் உள்ள ஆன்மீக ஆர்வலர்கள், பெண்கள், குழந்தைகள் கலந்து கொண்டு குருவிடம் ஆசி பெற்றனர். விழாவிற்கு வருகை தந்த அனைவருக்கும் நூலினை வழங்கியும், சத்சங்கத்தை சிறப்பாக நடத்தி, அன்னதானமும் செய்யப்பட்டு விழா இனிதே நிறைவு பெற்றது.

திருவாரூர் ஞானசபை தலைவர் இரா.முருகேசன், உணர்வாளர்கள் கேசவன், சண்முகபாண்டியன், தண்டபாணி, பழனிவேல் உள்ளிட்டோர் விழாவை சிறப்பாக ஏற்பாடு செய்து குருவின் அருளைப் பெற்றனர்.

திருவாரூரும் குருநாதரும்

குருநாதர் அவர்கள் திருவாரூரை ஆன்மீகபூமி என்றுதான் அழைப்பார்கள். காரணம் திருவாரூரைச் சுற்றி எண்ணிலடங்கா ஜீவசமாதி ஆலயங்கள் அமையப்பெற்றுள்ளன. மேலும் குருநாதர் அவர்கள் தன்னுடைய பள்ளிப்பருவத்தில் இருந்தே தமிழ்மொழி மீதும், தமிழ் அறிஞர்கள் மீதும் அதீத பற்று வைத்திருந்தார்கள். 

குருநாதர் அவர்கள் சீடர்களோடு ஜீவசமாதி சுற்றுலா செல்லும்போது திருவாரூருக்கும் வந்து செல்வதுண்டு. குறிப்பாக மடப்புரம் தெட்சிணாமூர்த்தி சுவாமிகள் ஜீவசமாதி, நன்னிலம் நாராயணகுரு – தாண்டவராய சுவாமிகள் ஜீவசமாதி, சன்னாநல்லூர் சின்னான் சுவாமிகள் ஜீவசமாதி, கோரக்கர் ஜீவசமாதிக்கு எல்லாம் சென்று திருவாரூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் வான்மழை பொழிந்து மக்கள் செழிப்புடன் வாழட்டும் என சமாராதனை போடுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

திருவாரூர் சபை உணர்வாளர்களின் இல்ல நிகழ்ச்சிகளிலும் குருநாதர் அவர்கள் கலந்து கொண்டு அருளாசி வழங்கி மகிழ்ச்சியில் ஆழ்த்துவார்கள் என்றால் அது மிகையாகாது. திருவாரூர் சபையின் ஆண்டு விழாக்களிலும் கலந்து கொண்டு சீடர்களை புள்ளிக்கல்வியில் ஊக்கப்படுத்திக் கொண்டே வருகின்றார்கள்.

குருநாதர் அவர்கள் திருவாரூருக்கு முதன்முதலில் வந்தபோது இங்கே நமது இயக்கத்தின் தியான மண்டபம் அமைந்தால் இங்குள்ள ஆன்மீக இளைஞர்களுக்கும், பகுத்தறிவாளர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும் என்று எண்ணியதாக சொல்லுவார்கள்.

எண்ணிய எண்ணியாங் கெய்துப எண்ணியார்
திண்ணியர் ஆகப் பெறின்.
-திருக்குறள் 666

குருநாதர் அவர்களின் எண்ணம் திண்ணமாகி 2018-ம் ஆண்டு திருவாரூர் வாசன் நகரில் அழகிய தியான மண்டபம் திறக்கப்பட்டதை நினைத்தால் உள்ளம் மகிழ்ச்சி அடைகின்றது.

திருவாரூர் தலைவராக இருந்து வந்த கனம் பொருந்திய இரா.முருகேசன் அவர்கள் பணி நிமித்தமாக வெளியூர் சென்ற காரணத்தினால், குருநாதர் அவர்கள் கனம் பொருந்திய கேசவன் அவர்களை 2013-ம் ஆண்டு முதல் தலைவராக நியமித்து வாழ்த்துக்களை தெரிவித்தார்கள். அப்போது திருவாரூர் சபையில் 25க்கும் மேற்பட்ட அன்பர்கள் தீட்சை பெற்று இருந்தாலும், பத்து பேர் மட்டுமே குருவின் தொடர்பில் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
“Quality is better than Quantity”

திருவாரூர் தியான மண்டபம் அடிக்கல் நாட்டு விழா

2015-ம் ஆண்டு முதல் தியான மண்டபத்திற்கு இடம் தேடிக் கொண்டிருந்தோம். குருநாதரிடம் சொன்னபோது, இடம் சிறியதாக இருந்தாலும், அன்பர்கள் எளிதாக வந்து செல்லும்படியான இடத்தினை தேர்வு செய்யுங்கள் என்றும், புறநகரில் இடம் தேட வேண்டாம் என்றும் அறிவுறுத்தினார்கள்.

இரண்டு ஆண்டுகளுக்கும் மேல் இடம் தேடியும் சரியான இடம் எதுவும் அமையவில்லை. அப்போதுதான் திருவாரூர் சபை உணர்வாளர் கனம் பொருந்திய கருமலை அவர்கள் சபைக்கு இடம் கொடுத்தால் திருவாரூரில் தியானமண்டபம் அமையும் என்ற எண்ணத்தில், தான் வீடு கட்டுவதற்காக திருவாரூர், வாசன் நகரில் வாங்கி வைத்திருந்த இடத்தில் ஒரு பகுதியை தியான மண்டபத்திற்கு பத்திரப்பதிவு செய்து கொடுத்தார். இடம் மற்றும் பத்திரப்பதிவுக்கான செலவை திருவாரூர் சபை உணர்வாளர்கள் தங்களுக்குள் பகிர்ந்து கொண்டனர்.

குருவின் திருவருளால் 22.08.2017 அன்று தியான மண்டப பத்திரப்பதிவும, தியான மண்டப அடிக்கல்நாட்டு விழாவும், குருநாதர் தலைமையிலும், பாண்டியன் அண்ணாச்சி முன்னிலையிலும், சபையின் மற்ற கிளை தலைவர்கள் மற்றும் உணர்வாளர்களால் சிறப்பாக நடந்தது. அதனைத் தொடர்ந்து ஆண்டவர் திருமண அரங்கில் சங்கரசுவாமிகளுக்கு மகம் நட்சத்திரம் பூஜையும், அன்னதானமும் மற்றும் சத்சங்கமும் இனிதே நடைபெற்றது.

 

ஆன்மீக முப்பெரும் விழா - 2018

அய்யன் திருவள்ளுவர் ஆண்டு 2049-ம் துலைத்திங்கள் (ஐப்பசி மாதம்) 25-ம் நாள் (11.11.2018) ஞாயிற்றுக்கிழமை அன்று ஞானசபைக்கிளை திருவாரூர் தியான அரங்கம் திறப்புவிழாவும், WINGS நிறுவனர் தலைவர் ஞானவள்ளல் மகாகனம் தங்கசுவாமி அவர்களின் 80வது ஆண்டு அகவை பிறந்தநாள் விழாவும், சுவாமிகளின் “உள்பொருளை உள்வாங்கியது” என்ற நூல் வெளியீட்டு விழாவும் சேர்ந்து முப்பெரும் விழா சீரோடும் சிறப்போடும் இனிதே நடைபெற்றது. இந்த முப்பெரும் விழா குருநாதர் தலைமையிலும், பொருளாளர் பாண்டியன் அண்ணாச்சி முன்னிலையிலும் நடந்தது. மேலும் குருநாதர் அவர்களின் துணைவியார் மற்றும் குருநாதரின் மகன் ஞானசபையின் துணைத்தலைவர் த.அறவாழி அவர்களும், மகள்கள் திருமதி அன்னம் மற்றும் கீதா அவர்களும் கலந்து கொண்டு சிறப்பு செய்தனர். தியானஅரங்கம் திறப்பு விழா நிகழ்வாக திருவாரூரில் ஆர்வமுள்ள பெண்களுக்கு திருவடி தீட்சை குருநாதரின் பேராற்றலோடு பாண்டியன் அண்ணாச்சியின் மூலம் வழங்கப்பட்டது. அன்று முதல் பெண்கள் தியானம் ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமைதோறும் மாலை 4.00 மணிக்கு நடைபெற்று வருகின்றது. பெண்கள் அனைவரும் மனவளம் பெருகி மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர். தியான அரங்கத்தில் சிறிய நூலகம் ஒன்று குருவின் ஆசீர்வாதத்தால் அமைக்கப்பட்டு உள்ளது. குருவின் படைப்புகளாக அமைந்துள்ள நூல்களும், திருக்குறள் நூல்களும் இதில் இடம்பெற்றுள்ளன. உணர்வாளர்கள் நூல் ஆராய்ச்சி செய்திட இந்த நூலகம் பயன் உள்ளதாக அமைந்துள்ளது. ஞானசபைக்கிளை திருவாரூரில் 2018 முதல் ஒவ்வொரு ஆண்டும் தலைமைப் பொறுப்பாளர்கள் பங்கேற்புடனும், குருநாதர் தலைமையிலும், துணைத்தலைவர் த.அறவாழி அவர்கள் வருகையிலும், அனைத்து ஊர் ஞானசபைக்கிளை தலைவர்கள், உணர்வாளர்கள் பங்கேற்புடன் ஆண்டு விழா சிறப்பாக நடந்து வருகின்றது. உணவுப்பஞ்சம் தவிர்ப்பதற்காக ஒவ்வொரு ஆண்டு விழா நிகழ்வின் போதும் விழாவின் துவக்கத்தில் அன்னக்கொடி ஏற்றப்படுகின்றது. திருக்கூட்ட சமாராதனை நிகழ்த்தப்பட்டு வான்மழை பொழிந்து வையகம் செழித்திட எல்லாம் வல்ல இறையருளை வேண்டிக் கொள்கின்றோம். இருபது ஆண்டுகளைக் கடந்து குருவின் திருவருளால் திருவாரூர் ஞானசபை சிறப்பான முறையில் செயல்பட்டு வருகின்றது. மேலும் பல நூற்றாண்டுகள் குருவின் அருட்பார்வை திருவாரூர் சபைக்கு கிடைக்கட்டும் என குருவின் திருவடிகளை வேண்டிக் கொள்வோம்.

உலக அறிவார்ந்தோர் இயற்கை ஞானசபை திருவாரூர் - நிகழ்வுகள்

  • தினசரி அதிகாலை தியானம் காலை 5.00 மணிக்கும் மற்றும் இரவு 7.00 மணிக்கு சத்சங்கம் குருவின் திருவருளோடு நடந்து வருகின்றது.
  • ஒவ்வொரு மாதமும் அய்யன்பட்டி இராஜரி´ சங்கரசுவாமிகளின் ஒடுக்கம் பெற்ற மகம் நட்சத்திரத்தில் பூசை மற்றும் அன்னதானம் சிறப்பாக நடந்து வருகின்றது.
  • ஒவ்வொரு மாதமும் பெளர்ணமி மற்றும் அமாவாசை திருக்கூட்டம் இரவு 10.00 மணிக்கு நடந்து வருகின்றது.
  • ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை இரவு 10.00 மணிக்கு திருக்கூட்டம் மற்றும் சமாராதனையும் நடைபெற்று வருகின்றது.
  • பெண்களுக்கான தியானம் வியாழக்கிழமை தோறும் மாலை 4.00 மணி அளவில் நடந்து வருகின்றது.
  • ஒவ்வொரு தமிழ் மாதம் முதல் ஞாயிறுதோறும் மாலை 3.00 மணி முதல் 5.00 மணி வரை திருக்குறள் செம்பொருள் ஆய்வு மன்றம் திருக்கூட்டம் நடந்து வருகின்றது.

உலக அறிவார்ந்தோர் இயற்கை ஞானசபை திருவாரூர் - புகைப்படங்கள்

தொடர்புக்கு

தியான மண்டபம் - முகவரி

உலக அறிவார்ந்தோர் இயற்கை ஞானசபை கிளை – திருவாரூர் ,
தியான மண்டபம், மருதம்பட்டிணம் – வாசன் நகர் இணைப்பு சாலை , திருவாரூர் – 610001.