"நான் கண்ட குருநாதர்" அனுபவ உரைகள்

R. ராமேஷ்வரி
கூட்டாம்புளி

திரு.ராஜ் நாராயணன் மனைவி ராமேஸ்வரி எழுதிக் கொள்வது.  பதிமூன்று வருடங்களுக்கு முன்பு நடந்த சம்பவங்கள். உலக அறிவார்ந்தோர் இயற்கை ஞானசபை அப்படி என்றால் என்னவென்று எனக்குத் தெரியாத காலத்தில் எனக்கு உலக அறிவார்ந்தோர் இயற்கை ஞானசபையை அறிமுகப்படுத்தி தந்த சக்திவேல் அண்ணனுக்கு மிக்க நன்றி. ஐயா தங்கசுவாமிகள் என்றால் என்னவென்று எனக்கு தெரியாது அவர்களையும் அறிமுகப்படுத்தி தந்த சக்திவேல் அண்ணனுக்கு மிக்க நன்றி. எப்படி சக்திவேல் அண்ணன் பழக்கம் என்று எனக்கு தெரியவில்லை.

ஆனால் திடீரென்று ஒரு நாள் வந்து ராஜ், வா நாம் சபைக்கு போவோம் என்று வீட்டில் வந்து அழைத்தார்கள். சரி நானும் வாரேன் என்று சபைக்கு கிளம்பிவிட்டார்கள். அதுதான் எங்களுக்கு முதல் தொடக்கம் சபையை பற்றி தெரிந்து கொள்வதற்கு. முன்னால் என் கணவர் ராஜ் அவர்களுக்கு குடிப்பழக்கம் சற்று இருந்தது. நாட்கள் செல்ல செல்ல அதிகமாகியது. வீட்டில் ரொம்ப தொந்தரவு. எல்லோருமே சக்திவேல் அண்ணனிடம் சபைக்கு கூட்டி போங்கள் அப்போது தான் எங்களுக்கு நிம்மதியாக இருக்கும் என்று சொல்வோம். இதுவெல்லாம் இரண்டு குழந்தைகள் இருக்கும்போதே நடந்தது. அதன்பின் மூன்றாவதாக ஒரு பெண் குழந்தை பிறந்தது. அதற்கு என்ன பெயர் வைக்கலாம் என ஐயாவிடம் கேட்கலாம் என்று எனது கணவர் குடி போதையில் அய்யாவிடம் கேட்டார்கள். அதற்கு ஐயா அவர்கள் இலக்கியா என்று பெயர் சூட்டினார்கள்.”

01
நாட்கள் செல்ல செல்ல அதிக போதைக்கு அடிமையாகி விட்டார்கள். சக்திவேல் அண்ணன் சபைக்கு கூப்பிட்டு போனால் மட்டுமே எங்களுக்கு நிம்மதி. வீட்டில் இருந்தால் ஒரே சண்டை அப்படியே சில நாட்கள் ஓடிப்போயின. எங்களுக்கு மூன்று பிள்ளைகள் மாமியார் மதினி பையன் என்னுடைய தம்பி இத்தனை பேரும் உள்ளனர் மொத்தம் 8 பேர். ஒரே சண்டைதான் நிம்மதி இல்லை. நிம்மதிக்கு என்ன செய்யலாம் என்று நினைத்த போது ஐயாவை பார்த்தால் சரியாகிவிடுவான் என்றார்கள். அப்பொழுது எங்களுக்கு சக்திவேல் அண்ணன் சொல்வது மிகவும் நம்பிக்கையாக இருந்தது. எனது கணவர் சபைக்கு விரும்பி போவார்கள். போதை போட்டாலும் சபையை விடவில்லை.
02

ஊரில் எல்லோரும் கேவலமாக பேச ஆரம்பித்தார்கள். அந்த அவமானத்தையும் தாங்கி கொண்டுதான் வாழ்ந்தோம். நாட்கள் ஓடின. ஆனால் போதையை நிறுத்தவே இல்லை. அதிகமாகிக் கொண்டே இருந்தது.  பக்கத்தில் ஒரு அக்கா சொன்னார்கள். அவனுக்கு செய்வினை வைத்திருக்கிறார்கள். அதை முதலில் பாருங்கள் என்றார். எனக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. நான் சக்திவேல் அண்ணனிடம் சொன்னேன். அப்படி ஒன்றும் கிடையாது. நம்ம ஐயாவிடம் சொல்லி சரி செய்து விடலாம் என்று கூறினார்கள். அப்போதும் எனக்கு முழு நம்பிக்கை கிடையாது. செய்வினைக்கு பார்ப்போம் என்று ஒரு செயின் அடகு வைத்து ரூபாய் ஏழாயிரம் செலவு செய்தோம். ஆனால் அதுவும் கேட்கவில்லை. அதற்கு பிறகு சக்திவேல் அண்ணனிடம் சொன்னேன்.

03

சக்திவேல் அண்ணன் ராஜ்க்கு அப்படியெல்லாம் ஒன்றும் இருக்காது. அவனை குணப்படுத்தி விடலாம் நீ நம்பிக்கையோடு இரு என்று கூறினார்கள். அவனுக்கு எதுவும் வராது எப்படியாவது நான் அய்யாவிடம் அவனை சரி செய்ய சொல்லி கேட்கிறேன் என்று எங்கள் குடும்பத்திற்கே ஒரு நம்பிக்கை சொன்னார்கள். சக்திவேல் அண்ணன் எனக்கு ஒரு விவரம் சொல்லி தந்தார்கள், நீ விளக்கு ஏற்றி சங்கரசுவாமி அய்யாவை தங்கசுவாமிகள் அய்யாவை நினைத்து தூங்கி எழுந்தவுடன் தியானம் செய். மாலை உறங்கும் முன் தியானம் செய். விளக்கு ஏற்றவில்லை என்றால் லைட் வெளிச்சம், இல்லையென்றால் ஏதாவது ஒரு வெளிச்சத்தை பார்த்து இருவரையும் நினைத்து தினமும் தியானம் செய். அவனை எப்படியாவது திருத்தி விடலாம் என்று கூறி எனக்கு நம்பிக்கை தந்தார்கள்.

04
அதன்படி நான் செய்து கொண்டிருந்தேன். அப்படியும் அவர்கள் திருந்தவில்லை. எனக்கு பாதி நம்பிக்கையும் பாதி நம்பிக்கையில்லாமலும் இருந்தது. கூட்டாம்புளி சபையில் விழா வைத்திருந்தார்கள். பெண்களுக்கு மாத்தி மாத்தி பொன்னாடை போர்த்தினார்கள். அப்போது எனக்கும் பொன்னாடை போர்த்தினார்கள். எனக்கு மிகவும் சந்தோஷம் ஒரு பக்கம் இருந்தாலும் அழுகை ஒரு பக்கம் இருந்தது. நம்மவீட்டுக்காரர் குடிகாரர் என்று பார்க்காமல் அவங்க வீட்டுக்காரம்மாவுக்கும் பொன்னாடை போர்த்தினார்கள் எனக்கு அப்பத்தான் யாரையும் வித்தியாசமாக இந்த சபையில் பார்க்க மாட்டார்கள் போல் என்று நினைத்தேன். எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருந்தது. ஒரு பக்கம் கவலையாகவும் இருந்தது. எல்லா வீட்டுகாரங்களும் குடிக்காமல் நன்றாக இருக்கிறார்கள்.
05
நம்மவீட்டுக்காரர் என்றைக்கு இப்படி குடிக்காமல் எல்லோரையும் போல் இருப்பார்கள் என்று நினைத்துக் கொண்டிருந்தேன் . ஆனால் குடித்தாலும் சபைக்கு சக்திவேல் அண்ணன் கூட போய்விடுவார்கள். அவர் எந்த நிலையிலும் அதுமட்டும் விடவே இல்லை. நானும் வாரத்தில் ஒரு முறை அய்யாவை பார்த்துவிட்டு அய்யாவிடம் இப்படி தினசரி குடித்துவிட்டு வருகிறார்கள் வீட்டில் நிம்மதி இல்லை என்று சொல்லிவிட்டு வருவேன். ஊரில் எல்லோரும் சபைக்கு போவதனால் தான் குடிக்கிறான் என்று கூறினார்கள். எங்கள் அத்தை சபைக்கு போனால்தான் இவன் திருந்துவான் என்று எல்லோரிடம் சொல்வார்கள். எங்கள் அத்தை அப்படி சொல்லும் போது எனக்கு மிகவும் ஆறுதலாக இருக்கும். ஒரு நாள் உடம்பு சரியில்லாமல் போய்விட்டது.
06
அய்யாவை பார்க்க போனபோது, அய்யா எனது கணவரிடம் ரூ.500/- கொடுத்து பிள்ளைகளுக்கு ஏதாவது வாங்கி கொண்டு போ என்று கூறினார்கள். அவர்கள் 300 ரூபாய்க்கு குடித்து விட்டு ரூபாய் 200/-க்கு பண்டம் வாங்கி வந்தார்கள். அவர்கள் அம்மா கேட்கிறார்கள் உன்னிடம் பணம் எப்படி வந்தது என்று, ஐயா 500/- ரூபாய் தந்தார்கள். நான் 300/- ரூபாய்க்கு குடித்துவிட்டு மீதி பணத்திற்கு பண்டம் வாங்கி வந்தேன் என்று சொன்னார்கள். எங்கள் அத்தை என்னிடம் நீ அய்யாவை போய் பார்த்துவிட்டு வா ஐயாவிடம் ரூபாய் எதுவும் கொடுக்க வேண்டாம் என்று சொல்லிவிட்டு வா என்று கூறினார்கள். சரி அத்தை நான் சொல்லிவிடுகிறேன் என்று ஐயாவை பார்க்க நான் வந்தேன். ஐயா என்னிடம் கேட்டார்கள் அவன் ரூ.500/- தந்தானா? என்று. ஆமாம் ஐயா நீங்கள் 500 ருபாய் கொடுத்தீர்களாம். 300 ரூபாய்க்கு குடிச்சாச்சு.
07

ஐயா சொன்னதுக்காக மட்டும் தான் 200 ரூபாய்க்கு பண்டம் வாங்கி வந்தேன் இல்லை என்றால் அதையும் குடித்திருப்பேன் என்று என்னிடம் சொன்னார்கள். இனிமேல் அவங்களிடம் ரூபாய் எதுவும் கொடுக்காதீர்கள் ஐயா என்று சொல்லத்தான் இங்கு வந்தேன். ஐயா சொன்னாங்க என்னிடம், அது என்ன அது போனா போகட்டும் இந்தா 500 ருபாய். நீ பிள்ளைக்கு பண்டம் வாங்கி விட்டு போ என்று என்னிடம் தந்தார்கள். எனக்கு ஒரே அழுகையாக வந்தது. பாதி மனது வாங்க சொல்லுது, பாதி மனசு வாங்க வேண்டாம் என்று சொல்லுது. அதற்கு பிறகு எனக்கு வேறு வழி தெரியலை. துட்டுக்கு ரொம்ப கஷ்டம் அதனால அய்யா தந்த பணத்தை நான் வாங்கிக் கொண்டேன். இலக்கியா பிறந்த நாளில் இருந்து சபைக்கு நான் செல்ல ஆரம்பித்தேன். இலக்கியா 3 மாத குழந்தையாக இருந்தபோது நான் சிவத்தையாபுரம் சபைக்கு வர ஆரம்பித்தேன்.

08

அடிக்கடி வர ஆரம்பித்தேன். வாரத்தில் 4 நாட்களும் சிவத்தையாபுரம் சபையில்தான் இருப்பேன். எதுக்கு என்று கேட்டால் வீட்டில் ஒரே சண்டை எங்கள் அத்தை பிள்ளையை தூக்கிக்கிட்டு சபைக்கு போ மீதி இரண்டு பிள்ளைகளையும் நான் பார்த்துக் கொள்கிறேன் என்று கூறுவார்கள். அந்த தைரியத்தில்தான் நான் இலக்கியாவை 3 மாதத்திலேயே தூக்கிக்கிட்டு பால் டப்பா பிஸ்கெட் தண்ணீர் பாட்டில் இவை அனைத்தையும் கொண்டு சபை முன் மண்டபத்தில் தான் இலக்கியாவை கிடத்தி போட்டு விட்டு அதிலே இருப்பேன். எந்த நேரமும் பார்க்காமல் அப்போதே நான் ஐயாவை பார்க்க இலக்கியாவை தூக்கி கொண்டு வருவேன். மூன்று பிள்ளைகளுக்கும் 3 ரூபாய் பிஸ்கெட் பாக்கெட் வாங்க வழியில்லாமல் இருந்தது. எனக்கென்று என் குடும்பத்திலும் சரி என் வீட்டுக்காரர் குடும்பத்திலும் சரி, உதவி செய்ய ஆட்கள் இல்லை. 3 ரூபாய் பிஸ்கெட் பாக்கெட் வாங்கி அதில் மொத்தம் 9 பிஸ்கெட் இருக்கும் அதை மூன்று பிள்ளைகளுக்கும் ஒரு வாரம் வைத்து கொடுப்பேன்.

09
அம்மா இன்னொன்று வேணும் என்று பிள்ளைகள் கேட்டால் அந்த பிள்ளைகளை நான் அடிப்பேன். இப்படித்தான் என் வாழ்க்கை ஓடிக் கொண்டிருந்தது. அதையும் மீறி குடி ரொம்ப அதிகமாகிவிட்டது. மாதத்தில் 28 நாட்கள் குடி போதையில் இருந்து அவர்கள் ஒரு நாள் திடீரென்று உடம்பு சரியில்லாமல் போய்விட்டார்கள். சக்திவேல் அண்ணன் புதுக்கோட்டை மருத்துமனைக்கு கூட்டி சென்றார்கள். அங்கு இப்படி உள்ள ஆளை நாங்கள் சேர்க்க மாட்டோம் என்று கூறிவிட்டார்கள். அதற்கு பிறகு சாயர்புரம் செல்வகுமாரி மருத்துவமனையில் சேர்த்தார்கள். நான் மருத்துவமனையில் இருக்கிறேன். ஐயா அவர்கள் சைக்கிளில் பார்க்க வந்திருக்கிறார்கள். அறவாழி அண்ணனும் வந்திருந்தார்கள். என் கணவரை ரொம்ப திட்டிவிட்டு வந்தார்கள். அதற்கு பிறகு அய்யா என்னிடம் ரூ.1000/- தந்தார்கள். செலவுக்கு வைத்துக் கொள்ளுமாறு கூறினார்கள். அனைவரும் சென்ற பிறகு எனது கணவர் என்னிடம் ஐயாவே என்னை பார்க்க வந்திருக்கிறார்கள்.
10
அவ்வளவு தூரம் அந்த வெயிலில் சைக்கிள் ஓட்டி வந்து பார்த்து விட்டு போகிறார்கள். நாம் அவர்களுக்கு என்ன கைமாறு செய்யப் போகிறோம் என்று கூறினார்கள். நான் அவரிடம் நீங்கள் குடியை நிறுத்தினால் தான் அவர்களுக்கு செய்யும் கைமாறு என்று கூறினேன். அப்படியே சில நாட்கள் கழிந்தன. ஒரு நாள் மாதம் முழுவதும் குடித்துவிட்டு படுத்தாச்சு கண் சொக்கிவிட்டது. அப்படியே கிடக்கிறார்கள். எனக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. உடனே சக்திவேல் அண்ணனிடம் சொல்வேன். நான் உடனே வருகிறேன் என்று சொன்னார்கள். மருத்துவமனைக்கு கூட்டி போவோம். அவர்கள் மருத்துவமனைக்கு வர மாட்டேன் என்று சொன்னார்கள். சக்திவேல் அண்ணன் உனக்காக அய்யா கார் கொடுத்திருக்கிறார்கள் நீ வரமாட்டேன் என்று சொல்லுகிறாயே என்று சொன்னார்கள். அதற்கு பிறகு ஒன்றும் சொல்லவில்லை. பாதி தூரம் போகும் போது எனக்கு குடிக்க விஸ்கி வாங்கி தாருங்கள் என்று கேட்கிறார்கள். அதுக்கு சக்திவேல் அண்ணன் ஏல இப்ப எப்படி போய் வாங்க முடியும் என்று சொல்கிறார்கள்.
11
ஊசி போட்டுவிட்டு வந்தவுடன் நான் உனக்கு பிராந்தி வாங்கி தருகிறேன் என்று சமாதானம் செய்தார்கள். மருத்துவமனைக்கு போய் கொண்டு இருந்தபோது இல்லை எனக்கு இப்பவே வேண்டும் என்று கேட்டு சத்தம் போட்டுகொண்டே இருக்கிறார்கள். இப்போ உனக்கு என்ன செய்யனும் என்று கேட்ட போது எனக்கு பிராந்தி வேணும் இல்லை என்றால் பணம் தாருங்கள் என்று கேட்கிறார்கள். ஏல உனக்கு எவ்வளவு வேணும் என்று சக்திவேல் அண்ணன் கேட்கிறார்கள். எனக்கு 1000 ரூபாய் வேண்டும் என்று சொல்லி கேட்ட போது அந்த அண்ணன் 1000 ரூபாயை சட்டை பைக்குள் வைத்துவிட்டார்கள். அதற்கு பிறகு மருத்துவமனைக்கு போனபோது ஊசி போடமாட்டேன் என்று அடம் பிடிக்கிறார்கள். அதுக்கு என்ன செய்வது என்று எங்களுக்கு தெரியாமல் விழித்துக் கொண்டிருந்தோம். அதற்கு பிறகு சக்திவேல் அண்ணன் யாரிடமோ போனில் பேசினார்கள். அதற்கு பிறகு மருத்துவமனைக்கு உள்ளே சேர்த்தார்கள். நான் பல நாட்கள் நினைத்திருக்கிறேன்.
12
எல்லோரும் குடிக்காமல் இந்த சபைக்கு எப்படி குடும்பத்தோடு வந்து செல்கிறார்கள். நாமும் இப்படி எப்போது குடும்பத்தோடு வருவோம் என்று நினைத்த காலங்கள் உண்டு. நம்ம வீட்டுக்காரரும் எல்லோரைப் போலவே குடிக்காமல் வெள்ளை சட்டை போட்டுகிட்டு நிக்கனும் அதை நான் எப்போது பார்ப்பேன் என்று நினைத்திருக்கிறேன். மருத்துமனைக்கு செல்லும் ஒரு நாள் முன்னே எனக்கு ஒரு கனவு. அது கனவு என்று சொல்ல முடியாது நிஜத்தில் நடந்த சம்பவம் போல்தான் இருந்தது. அது என்னவென்றால் என் கணவர் இறந்து போய்விட்டதாகவும் சபையில் நாலு பேர் வந்து தூக்கி சென்று சிவத்தையாபுரம் சபையில் கிடத்தி போட்டு அவர்களை சுற்றி நான்கு பேர் அமர்ந்து யாகம் வளர்த்தது போலவும் 3 நாட்கள் அவர் வீட்டிற்கு வரவில்லை. நான்காவது நாள் ஆனதும் வீட்டிற்கு வருகிறார்கள். ஊரில் எல்லோரும் ஆச்சரியமாக பார்க்கிறார்கள். செத்தவன் எப்படி உயிரோடு வருகிறான் என்று. எனக்கு அப்படி நிஜத்தில நடந்தது போல தெரிகிறது. அய்யாவிடம் என் குறைகளை சொல்ல சொல்லத்தான் எனக்கு சக்திவேல் அண்ணன் உருவத்தில் அய்யா வந்து இந்த உதவி செய்கிறார்கள் என்று நான் நினைத்துக் கொண்டேன்.
13
ஆனால் இது பொய் அல்ல நிஜத்தில் என் வாழ்க்கையில் நடந்து நான் என் வாழ்வில் அனுபவித்த ஒரு உண்மை. ஒரு கடையை வைத்தால் அதில் லாபம் மட்டுமே வரும் என்று நினைத்து கொள்ளக்கூடாது. அதில் நஷ்டமும் கூட வரும். அதையும் நம் மனம் ஏற்று கொள்ளத்தான் வேண்டும். அதே போலத்தான் அய்யாவிடம் நல்ல எண்ணத்தோடு நாம் சென்றால் நமக்கு எல்லாமேநல்லதே நடக்கும் என்று எனக்கு தெரிந்தது. அய்யாவிடம் ஒரு நாள் ஜாதகம் பார்க்க வேண்டும் என்று கூறினேன். உங்களுக்கு தெரிந்த ஆட்கள் யாரும் இருந்தால் சொல்லுங்கள் என்று கேட்டேன். அய்யா சொன்னார்கள் அய்யாவோட நண்பர் ஒரு நபர் ஏரலில் இருக்கிறார்கள். அவர் இருக்கிற இடத்தையும் சொன்னார்கள். அங்கே போய் நான் என் தம்பியை அழைத்துக் கொண்டு ஜாதகம் பார்க்க போனேன். ஜாதகர் சொல்கிறார் உங்கள் வீட்டுக்காரருக்கு நேரம் சரியில்லை என்று. அதுக்கு என்ன செய்ய வேண்டும் என்று நான் கேட்டபோது அவர் சனீஸ்வரனை வாரத்தில் ஒரு முறை சுற்றி கும்பிட்டு வந்தால் சரியாக வாய்ப்பு இருக்கிறது என்று கூறினார். அப்படியே செய்கிறேன் என்று சொல்லிவிட்டு வந்தேன்.
14

அய்யாவிடம் நான் போய் அய்யா இப்படி ஜாதககாரர் சொல்கிறார் என்று கூறினேன். அய்யா சொன்னார்கள் அவர் என்ன சொன்னாரோ அதைப்போலவே செய் என்று கூறினார்கள். சரி என்று வீட்டிற்கு வந்து விட்டேன். எனது கணவர் மருத்துவமனையில் இருந்தார்கள். மருத்துவமனையை விட்டு டிஸ்சார்ச் செய்து கூட்டி வந்த பிறகு வாரம் வாரம் கோவிலுக்கு போய் கொண்டிருந்தேன். எனது கணவர் எந்த கோயிலுக்கு போகிறாய் என்று கேட்டார்கள். ஜோசியர் வாரம் ஒரு முறை சனீஸ்வரரை சுற்றி கும்பிடு உன் கிரகம் சரியாகும் என்று சொன்னார்கள் என்று சொன்னேன் . எனது கணவர் அதற்கு வியாழன்தோறும் குருவுக்கு உகந்தநாள் வியாழன்தோறும் அய்யாவை பார்த்து உனக்கு என்ன வேண்டும் என்று நினைத்து வா அது உனக்கு நன்றாகவே நடக்கும். ஆனால் நல்லதே நினை நல்லதே நடக்கும் என்று மனதினில் நினைத்து அய்யாவை பார்த்து வா வேற எதுவும் நினைக்காதே என்று சொன்னார்கள். அவர்கள் சொல்லி சுமார் 5 வருடம் ஆகிவிட்டது. நானும் அதை இன்றும் கடை பிடித்துக்கொண்டு வந்துவிட்டேன். இந்த பூமியில் வாழும் கடைசிவரையிலும் இதை கடைபிடிக்க வேண்டும் என்று சங்கரரையும் நம் குருவையும் வேண்டிக் கொண்டிருக்கிறேன்.அவர்கள் மருத்துவமனையை விட்டு வந்து ஐந்தாண்டுகள் ஆகிறது undefined மருத்துவமனையிலிருந்து வந்தது முதல் அவர்கள் குருநாதரே அவர்களின் மாபெரும் கருணையால் சுத்தமாக குடிப்பதை விட்டுவிட்டர்கள் இன்று நானும் என் குடும்பமும் மகிழ்ச்சியுடனும் நிறைவுடனும் வாழ்வதற்கு குருநாதரே காரணம் .

15

இந்த சபைக்கு வரும் போது பாண்டியன் அண்ணாச்சி என்றால் யார் என்று எனக்கு தெரியாத காலம் உண்டு. இன்றைக்கு அவர்களுடன் அவர் குடும்பத்துடன் எப்படி எங்கள் குடும்பம் இணைந்தது என்று எனக்கு தெரியவில்லை. இதையெல்லாம் பார்க்கும் போது என்ன சொல்வது என்று எனக்கு தெரியவில்லை. இதையெல்லாம் பார்க்கும் போது அய்யாவும் பாண்டியன் அண்ணாச்சியும் எங்களை அவங்க பார்வையில் வைக்கனும் என்று நினைத்ததனால்தான் அவங்களோடு இருக்க முடிகிறது என்று என்னால் உணர முடிகிறது. நாங்கள் எந்த ஜென்மத்தில் என்ன புண்ணியம் செய்தோமோ இந்த ஜென்மத்தில் ஐயாவோடு இணைந்து இருக்கின்றோம். இது எப்பவும் நிலைத்திருக்க என் குடும்பத்தில் அனைவரும் வேண்டிக் கொள்கிறோம். அய்யாவோட குருநாதர் அய்யாவை பார்த்து நீ இந்த கடலில் குதி என்று சொன்னார்களாம். வீட்டை கூட நினைக்காமல் உடனே கடலில் குருநாதர் குதித்தார்களாம் என்று கேள்விபட்டிருக்கிறோம். காலம் முழுவதும் அய்யாவுக்கும் பாண்டியன் அண்ணாச்சி வீட்டிற்கும் இப்படியே பணி செய்து கொண்டே எங்கள் காலங்களை கழிக்க நாங்களும் முடிவு எடுத்துக் கொண்டோம்.

16
அய்யாவை நம்பி கெட்டவர்கள் யாரும் கிடையாது. நம்பாமல் கெட்டவர்கள் உண்டு. நாம் எந்த ஒரு நல்லது செய்தாலும் அதை நல்ல எண்ணத்தோடு, நல்ல மனதோடு செய்து வந்தாலே அய்யாவே ஒரு நபர் உருவத்தில் வந்து நமக்கு நல்லது செய்வார்கள் என்று எனக்கு நடந்த அனுபவத்தை வைத்து கூறுகிறேன். இந்த உண்மைஅனுபவம் இன்னும் தொடரும். ஐயா அடிக்கடி கூறுவார்கள் கஷ்டத்தை நினைத்துதான் சபைக்கு வருகிறார்கள், ஞானத்தை கற்றுக்கொள்ள யாரும் வருவதில்லை என்று. நிச்சயமாக நான் ஞானத்தை கற்றுக்கொள்ள சபைக்கு வரவில்லை கஷ்டத்தை நினைத்துதான் வந்தேன். காலம் கடந்தவுடன் ஞானத்தை கற்றுக்கொண்டே இருக்கிறேன்.
17
நன்றி !