விஞ்ஞானமும் மெஞ்ஞானமும் - குருநாதர் அருளுரை
எம் ஊனோடும் உயிரோடும் உணர்வோடும் கலந்த எனதருமை அருட்செல்வங்களே!
ஆன்றோர்களே. சான்றோர்களே. ஆன்மீக அன்பர்களே! உலகில் எத்தனையோ மதங்கள் தோன்றிவிட்டன. அத்தனை மதங்களும் சரியை, கிரியை, யோகம், ஞானம் என்ற நான்கு வகைக்குள் சிக்கித் தவிக்கின்றது.
‘சரியை, என்றால் கண்மூடித்தனமான ஒரு பக்தி என்று நாம் கூறலாம். ஏறத்தாழ எல்லா மதத்திலும் சரியையாளர்களே 95% ஆக்கிரமித்து உள்ளார்கள். அதிலாவது அவர்களுக்கு ஒரு மன நிம்மதி கிடைக்குமா? ஆண்டவனின் பாதாரவிந்தத்தை அடையலாமா என்ற எண்ணத்தில் கண்மூடித்தனமான ஒரு பக்தியில் ஈடுபட்டுள்ளது எல்லோருக்கும் நன்றாகத் தெரியும். அதிலும் அவர்களுக்கு சரியான ஒரு மன நிம்மதி கிடைக்கவில்லை.
அதனால் ‘கிரியை, என்ற செயலுக்கு தாவுகிறார்கள். கிரியை என்றால் ஆலயங்களை எழுப்புவது (கட்டுவது), தண்ணீர்பந்தல் அமைப்பது, அடியார்களுக்கு அன்ன, வஸ்திரங்கள் கொடுப்பது, மந்திரங்கள், ஜெபங்கள், யாகங்கள் என்று ஏதாவது செய்தாவது ஆண்டவனை அடைய முடியுமா என்ற எண்ணத்தில் அதில் செல்லக் கூடியவர்கள் ஏறத்தாழ நான்கு சதவீதம் (4%)
தொண்ணூற்றி ஐந்தும் நான்கும் (95+4=99) தொண்ணூற்றி ஒன்பது சதவீதமாக உயர்ந்து விட்டது. இனி இருப்பது ஒரே ஒரு சதவீதம்தான். அதிலும் மந்திரங்கள், ஜெபங்கள், யாகங்கள் செய்வது கூட அவர்களுக்கு சரியான ஒரு நிம்மதியைப் பெற முடியவில்லை.
ஆதலால் “யோகம், என்ற ஒரு நிலைக்கு அவர்கள் ஓடி வருகிறார்கள். ஹடயோகம், ராஜயோகம் என்ற பல்வேறு யோகங்கள் செய்து, ஆழ்நிலை தியானங்கள் செய்தாவது ஆண்டவனின் பாதாரவிந்தத்தை அடையலாமா என்ற நோக்கத்தில் அத்தனை பேரும் யோகத்திற்கு சென்று விடுகின்றார்கள்.
அதாவது Breathing Exercise (பிராணயாமம்) மூச்சுப்பயிற்சி என்று சொல்லுவார்கள். மூச்சுப்பயிற்சி என்றால் நாம் அதை எவ்வளவு நேரம் செய்ய முடியும்? மூச்சுப்பயிற்சி என்பது ஓடுகின்ற மாட்டை வாலைப் பிடித்து நிறுத்துவதற்கு சமம் என்று சொல்லுவார்கள். மாட்டை வாலைப்பிடித்து இழுத்துச் சென்றால் ஏறத்தாழ ஒரு நிமிடம் நம்முடைய சாமர்த்தியத்தால் நிறுத்தலாம்.
உடனே மாடும் அதனுடைய பலத்தினால் அந்த மனிதனை இழுத்துப்போட்டு விட்டு ஓடிவிடும். அதிலும் அவர்களுக்கு சரியான ஒரு நிம்மதி கிடைக்கவில்லை.
அதனால் எண்ணத்தின் மூலமாக, கருத்தின் மூலமாக ஒரு ஆன்மீக வழிக்கு செல்லலாமா, ஆண்டவனின் பாதாரவிந்தத்தை அடையலாமா என்ற நோக்கத்தில் ‘ஞான பயிற்சியில், ஈடுபடுவோர் உண்டு.
‘ஞான பயிற்சியில், ஈடுபடுவோர் ஏறத்தாழ 0.002 என்று எமது குருநாதர் கூறுவார். இதை கணக்கு புள்ளியியல் தெரிந்த மேதைகள், எத்தனை பேர் என்று கணித்துக் கொள்ளலாம்.
அதிலும் அந்த ஞான பயிற்சியில் ஈடுபட்டு உள்ளே செல்லக்கூடிய உறுப்பினர்கள் அதிலும் 0.002 என்று சொல்வார்கள். அப்படி உறுப்பினராக சேரக்கூடியவர்கள் லட்சத்தில் இரண்டு பேர்தான். இலட்சத்தில் இரண்டு பேர்கள் மட்டும்தான் இந்த ஞானப்பயிற்சிக்கு செல்கின்றார்கள்.
ஏனென்றால் இந்த சரியைக்கும், கிரியைக்கும், யோகத்திற்கும், ஞானத்திற்கும் உள்ள வேறுபாடுகளை தாயுமானசுவாமிகள்
விரும்பும் சரியை முதல் மெஞ்ஞானம் முதலாய்
அரும்பு, மலர், காய், கனி போல் அன்றோ பராபரமே!
என்று சொல்லுவார்.
சரியைக்கு அரும்புக்கு உள்ள ஒரு பலனும், கிரியைக்கு மலருக்கு உள்ள ஒரு பலனும், யோகத்திற்கு காய்க்குரிய ஒரு பலனும், ஞானத்திற்கு கனிக்கு உரிய ஒரு பலனும் உண்டு என்பார். கனிகள்தான் விதைகளை தூவும். விதைகள் மீண்டும் தன்னுடைய வம்சங்களை விருத்தி பண்ணும்.
அதனால்தான் எல்லோரும் ஞான பயிற்சியில் ஈடுபட்டு இந்த வேண்டாத ஒரு பிறப்பை அறுக்கக்கூடிய இந்த ஞான பயிற்சியில் ஈடுபட்டு அவர்கள் ஒரு சாயுச்சய நிலையை அடைவதற்குதான் அந்த காலத்தில் சித்தர்களும், முத்தர்களும், ஞானிகளும், அதிமேதாவிகளும் இந்த ஞானத்திற்கு வழிகாட்டி சென்றிருக்கின்றார்கள். அந்த ஞான பயிற்சிதான் என்ன என்பதை விஞ்ஞான ரீதியாக நாம் சில நிமிடங்கள் கூறினால் உங்களுக்கு ஓரளவு புரியும் என்று நினைக்கின்றேன். இந்த சூரியனை மையமாக வைத்துதான் இந்த பிரபஞ்சம் சுற்றிச் சுழன்று வருகின்றது என்பது எல்லோருக்கும் தெரியும். இதை இன்றைய விஞ்ஞானிகள் தெள்ளத்தெளிவாக நவகிரகங்களும் சூரியனை சுற்றி வருவதை அருமையாக கோடிட்டு காண்பிக்கின்றார்கள். சிறிய வயதிலும் படித்திருக்கின்றோம். பெரியவர்களும் அதைத்தான் கூறி வருகின்றார்கள்.
ஏனென்றால் இந்த பூமி சூரியனை சுற்றி வருவதற்கு ஏறத்தாழ 365 நாட்கள் என்று கணக்கிட்டு இருக்கின்றார்கள். ஒருமுறை இந்த பிரபஞ்சத்தில் சூரியனை சுற்றி வர 365 நாட்கள் என்றால் இந்த பிரபஞ்சம் எப்பேர்ப்பட்ட ஒரு அகன்ட வெளி என்பதை நீங்கள் புரிந்து கொள்ளுங்கள்.
நாம் இருக்கக்கூடிய இடத்தில் ஒரு மணி நேரம் இருந்தால் சுமார் ஆயிரம் மைல்கள் பிரயாணம் செய்வதாக அர்த்தம். பூமி இந்த பிரபஞ்ச வான வீதியில் ஏறத்தாழ 24 மணி நேரத்தில் 25000 மைல்கள் பிரயாணம் செய்வதாக கணித்திருக்கின்றார்கள்.
இப்படி எண்ணற்ற கிரகங்கள், எண்ணற்ற கோள்கள் இந்த பிரபஞ்சத்தை சுற்றிச் சுழன்று வந்து கொண்டிருக்கின்றது. அவைகள் இதுவரை எந்த கோள்களும் முட்டியதும் இல்லை, மோதியதும் இல்லை. ஒவ்வொரு கோள்களும் சுற்றிச் சுழன்று வரக்கூடிய நேரத்தில் ஒரு சுழல் அலையும் ஒரு விரிவலையையும் ஏற்படுத்துகின்றது. அதாவது All the Planets of the create whirling wave and spreadling wave என்று சொல்லுவார்கள்.
ஒவ்வொரு கிரகங்களும் பூமியை சுற்றி வரும்போது சுழல் அலை அதாவது பூமியை சுற்றி ஒரு காந்த சக்தியை உருவாக்குகின்றது. அது வெளிப்படுத்தவும் செய்கின்றது. இப்படியே ஒவ்வொரு கிரகங்களும் ஒரு ஈர்ப்பு சக்தியையும் ஒரு காந்த சக்தியையும் உருவாக்குகின்றது.
அதாவது இதை ஆங்கிலத்தில் Universal magnet force என்று சொல்வார்கள். தமிழில் அதை வான் காந்தம் என்று சொல்லலாம். இதை ஆன்மீக வார்த்தையில் சொல்ல வேண்டும் என்றால் இதை பரமாத்மா என்றும் சொல்லலாம்.
ஏனென்றால் இந்த பரமண்டலங்களிலும் இந்த Force இந்த வான் காந்த துகள்கள் பரவியிருப்பதால் இதை பரமாத்மா என்று அவர்கள் அருமையாக கூறுகின்றார்கள். நமது பூமியின் ஈர்ப்பு சக்தி பத்து கிலோ மீட்டருக்கு மேல் ஒரு பொருளை நாம் தூக்கி எறிந்தால் மூன்று வினாடியில் அது ஈர்ப்பு (Observe) செய்யும் என்று இந்த காலத்தில் விஞ்ஞானிகள் கண்டுபிடித்து இருக்கிறார்கள்.
ஆனால் குரு கிரகமான வியாழன் (Jupiter) கிரகத்தில் பத்து கிலோ மீட்டருக்கு மேல் ஒரு பொருளை தூக்கி எறிந்தால் எறிந்த ஒரு வினாடியில் ஈர்ப்பு (observe) செய்யும். அந்தளவுக்கு ஒரு காந்த சக்தி அந்த வியாழன் (Jupiter) கிரகத்திற்கு இருப்பதாக கணக்கிட்டு இருக்கின்றார்கள்.
இப்படி எண்ணற்ற கோள்கள் இந்த பிரபஞ்சத்தில் சுற்றிச் சுழன்று வந்து கொண்டு இருக்கின்றது. ஆனால் நமக்கு தெரியக்கூடிய ஒரு கிரகங்களின் அமைப்பு ஏறத்தாழ நவகிரகங்கள் மட்டுமே. ஆனால் வள்ளலார் சுவாமிகள் ஏறத்தாழ 3500 சூரிய குடும்பங்கள் இந்த பிரபஞ்சத்தில் சுற்றி சுழன்று வருவதாக அவர்களுடைய நூல்களில் எழுதியிருக்கின்றார்கள்.
ஆனால் அவர்கள் எழுதிய பாட்டில் கோடிக்கணக்கான அண்டங்கள் இருப்பதாக கூறுகின்றார். ஏனென்றால்,
ஒரு பிரம்மஅண்டங்கள் அடிமுடிப்
பெருமையே உன்ன முடியாது அவற்றின்
ஓராயிரம் கோடி மால் அண்டம் அரனண்டம்
உற்ற கோடா கோடியே
திரு கலறு பல கோடி ஈசன் அண்டம் சதா
சிவ அண்டம் எண் இறந்த
திகழ்கின்ற மற்றைப் பெருஞ்சத்தி
சத்தர்தஞ் சீர் அண்டம் என் புகலுவேன்
உரும் உரு இவ் அண்டங்கள் அனைத்தும்
அருள் வெளியில் உறு சிறு அணுக்களாக
ஊடசைய அவ்வெளியில் நடுநின்று நடன
மிடும் ஒரு பெருங்கருணை அரசே
மருவி எனை ஆட்கொண்டு மகனாக்கி
அழியா வரந்தந்த மெய்த் தந்தையே
மணிமன்றில் நடு நின்ற ஒரு தெய்வமே
யெலாம் வல்ல நடராஜபதியே.
வள்ளலார்
இந்த பிரபஞ்சத்தில் திறந்த வெளியில் எத்தனை கோடிக்கணக்கான அண்டங்கள் சுற்றிச் சுழன்று வந்திருக்கின்றன என்பது உங்களுக்கு நன்றாகத் தெரியும். இதை 1880 ஆம் ஆண்டு தாமஸ் ஆல்வா எடிசன் என்ற ஒரு பெரிய விஞ்ஞானி மின்சார சக்தியை கண்டுபிடித்து மின்சாரத்தின் மூலமாக பல்வேறு சாதனைகளை நிகழ்த்தலாம் என்ற உண்மையை உலகிற்கு அறிவித்தார். பேச்சாற்றலை உலகம் முழுவதும் பரப்ப முடியும் என்ற காரணத்தால் வானொலி என்ற அற்புதமான ஒரு காரியத்தை செய்து காட்டினார்கள். இன்னும் சில முன்னேற்றங்கள் செய்து நம்முடைய படங்களை அனுப்பி வைத்தார்கள்.
அதாவது கணினி தொலைக்காட்சி என்றும் அனுப்பி வைத்து உலகம் முழுவதும் நாம் காணக்கூடிய செயல்களை நாம் ஒரே இடத்தில் இருந்து காணக்கூடிய அளவிற்கு நாம் இன்றைக்கு மின்சார சக்தியின் மூலத்தை இந்த காந்த சக்தியின் மூலமாக உணர்ந்திருக்கின்றோம்.
தற்சமயம் கைத்தொலைபேசி மூலமாக உலகம் முழுவதும் நாம் தொடர்பு கொள்ளக்கூடிய அளவில் இந்த magnet power. அதாவது இந்த காந்த சக்தி அந்தளவுக்கு இயங்கி வருவதை நாம் கண்கூடாக காண்கிறோம்.
ஆனால் ஞானிகள் இந்த உடம்பிலேயே ஒரு ஜீவகாந்த சக்தி இருக்கின்றது அண்டமே பிண்டம். பிண்டமே அண்டம். அண்டத்தில் உள்ளதுதான் பிண்டத்தில் உள்ளது. ஏனென்றால் பஞ்சபூதத்தின் கூட்டுறவாலான இந்த உடம்பில் நெருப்பு இருக்கின்றது. நீர் இருக்கின்றது. காற்று இருக்கின்றது. ஆகாயம் இருக்கின்றது. மண் இருக்கின்றது. இப்படி பஞ்சபூதங்களின் கூட்டுறவாலான இந்த உடம்பில் எல்லாம் கலந்திருப்பதால் இதிலும் நாம் ஒரு ஜீவகாந்தத்தை உற்பத்தி பண்ணலாம்.
ஏனென்றால் அண்டமே பிண்டம். பிண்டமே அண்டம் என்று சொல்வார்கள். ஒவ்வொரு மனிதனிடத்திலும் ஒரு ஜீவகாந்த சக்தி இருக்கின்றது. இந்த மனிதனே ஒரு சிற்றண்டம் என்று கூறலாம். ஒரு திடகாத்திரமான யவ்வன புருசனின் சக்தியானது ஏறத்தாழ நான்கு கோடி Sperms அதாவது ஆண் அணுக்கள் இருப்பதாக கணக்கிட்டு இருக்கின்றார்கள்.
விஞ்ஞானிகள் ஒரு தனி மனிதனின் விந்தணுக்கள் உலகத்திலுள்ள அத்தனை கன்னிப் பெண்களுக்கும் கருவூட்ட முடியுமாம்! அந்தளவுக்கு இவனிடம் சக்தி இருப்பதால் இவனை சிற்றண்டம் என்றே கூறலாம் என்று கூறுவார்கள். இவனிடம் உள்ள இந்த குண்டலினி சக்தி என்பது கருவாய்க்கும் எருவாய்க்கும் இடையில் உள்ள அந்த Seminal Fluid அதாவது உறங்கிக் கிடந்த தூங்கிக் கிடந்த குண்டலினி சக்தியை குருநாதரின் சக்தியால் தட்டி எழுப்பி முதுகுத் தண்டு வழியாக புருவ மத்தியில் கொண்டு வைத்து அங்கு ஒரு பேராற்றலை உருவாக்குகின்றார்கள்.
அதனால் நமக்கு கிடைப்பது (Peace of Mind) அமைதியான ஒரு சூழ்நிலை. இந்த ஜீவகாந்த சக்தியை சிறுகச்சிறுக நாம் ஏகாக்கிர நிலையில் பயிற்சியை கொடுத்து உயர்ந்த நிலைக்கு வரும்போது அந்த இடத்தில் ஒரு புளங்காகித நிலை ஏற்படும். ஒரு அமைதியான சூழ்நிலை ஏற்படும்.
இச்சூழ்நிலையை அவர்கள் வளர்த்துக் கொண்டே வர, வர பல்வேறு பயிற்சிகள் மூலமாக இந்த நிலையை குருநாதர் மேலும் மேலும் பெருகச் செய்வார். ஏனென்றால் ஒரு மனிதன் B.A., என்ற பட்டப்படிப்பு (Degree) முடிக்க வேண்டுமென்றால் முதலில் ஆரம்பக் கல்வியில் (Primary School) பயின்று அப்புறம் உயர்நிலைப்பள்ளியில் (High School) பயின்று அதன் பின் மேல்நிலைப்பள்ளியில் (Higher Secondary School) படித்து கலைக்கல்லூரியில் (Arts College) படித்தால்தான் அவர்களுக்கு B.A., என்ற பட்டப்படிப்பு (Degree) கிடைக்கும்.
அதேபோல் இந்த ஆன்மீக வளர்ச்சியிலும் நிச்சயமாக பல்வேறு பயிற்சிகள் கொடுத்த பின்னரே அந்த உயிர் பிறக்கக்கூடிய அந்த இடத்தை இந்த ஜீவன் அறிய முடிகின்றது. ஏனென்றால் உயிர் என்றால் எல்லோருக்கும் தெரியும். உயிர் இருப்பதால்தான் இந்த உலகத்தில் ஒவ்வொரு மனிதனும் நடமாடுகின்றார்கள்.
ஒவ்வொரு ஜீவன்களும் ஓடி ஆடி உலாவுகின்றன. தேக சஞ்சாரம், தேச சஞ்சாரம் செய்கின்றன என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால் உயிரைக் காக்கக்கூடிய மருத்துவர்களிடம் (Doctor) where is the soul? உயிர் எங்கே இருக்கின்றது என்று கேட்டால் I don’t know என்ற பதில்தான் இதுவரைக்கும் வந்து கொண்டு இருக்கிறது. இனிமேலும் அப்படித்தான் வரும். மனம் எங்கே இருக்கின்றது என்ற கேள்வியெழுப்பினால் அவர்களும் I don’t know என்றுதான் சொல்வார்கள்.
இப்படி விடை தெரியாத சில கேள்விகளெல்லாம் இருக்கத்தானே செய்கின்றது. அப்பொழுது இந்த உயிரைப் பற்றி தெரிய வேண்டுமானால் உயிரைப் பற்றி அறிய வேண்டுமானால் உயிரைப்பற்றி உணர வேண்டுமானால் உயிரினைப் பற்றி தெரிந்தவர்கள், அறிந்தவர்கள், உணர்ந்தவர்கள்தான் உணர்த்த முடியும்.
உடலிலா உயிரைக் காண ஒருவருக்கும் எட்டாதாலே உடலுளோன் அறிய என்றால் உடலெடுத்து அறிந்தோன் வேண்டும்
என்று மெய்வழி ஆண்டவர் போன்ற ஞானிகள் மகான்கள் கூறிச் சென்றதை நாம் கவனிக்க வேண்டும்.
ஆதலால் உயிர் பிறக்கக்கூடிய இடத்தை நாம் அறிய வேண்டும், தெரிய வேண்டும், உணர வேண்டும், மகான் ரமணரிஷி அவர்கள் கூட “உதித்த இடத்தில் ஒடுங்கி இருத்தல் அது கன்மம்” உதித்த இடம் என்றால் இந்த ஜீவன் உதிக்கக்கூடிய இடம் ஒன்று உண்டு.
ஆரம்பத்தில் நம்முடைய ஜீவனும் Sperm சேர்ந்து மூளையின் மைய பகுதியான பிட்யூட்டரி கிளாண்ட் என்ற இடத்தில்தான் முதலில் ஆரம்பமாகின்றது. ஆங்கிலேயர்கள் கூட அதனை அருமையாக சொல்கின்றார்கள். Pituitary Gland “It Control Physically and Mentally, so it called master gland” அந்த இடத்தை நாம் அறியாமலே, தெரியாமலே, உணராமலே நாம் மீண்டும் மீண்டும் பிறந்து கொண்டு இருக்கின்றோம்.
குருநாதர் பல்வேறு பயிற்சிகள் மூலமாக அதனை உணர்த்துவார். ஆரம்ப காலத்தில் அவர் ஃ பயிற்சி என்று ஒரு பயிற்சியை உணர்த்துவார். ஃ என்றால் உலகத்திலே எந்த மொழிக்கும் இல்லாத ஒரு சிறப்பம்சம் நமது தமிழ் மொழிக்கு உண்டு. ஏறத்தாழ 2200 மொழிகள் இந்த பிரபஞ்சத்தில் பேசிக்கொண்டு இருப்பதாக கணக்கிட்டு இருக்கின்றார்கள் (எழுத்து வழக்கிலும் பேச்சுவழக்கிலும்). ஆனால் இதில் எந்த மொழிக்கும் இல்லாத சிறப்பு நம் தமிழ் மொழிக்கு உண்டு. அதுதான் அந்த ஆயுத எழுத்து. நமது தமிழ்மொழிக்கு மட்டும்தான் உண்டு.
இதை அறிந்துதான் “அஃகன் அருள் சொக்கி எக்களிப்பு அடைவீர்” என்று மகிமை அறிந்தே அவர்கள் அதனுடைய அருமை பெருமைகளை உணர்த்தியிருக்கின்றார்கள்.
அந்த பயிற்சி கொடுத்து விட்டு கண்டயோக பயிற்சி என்றும், சூரிய கலைப் பயிற்சி என்றும், அடிமூல பயிற்சி என்றும், இமையா நாட்ட பயிற்சி என்றும் பல்வேறு பயிற்சிகளை கொடுத்து உயர்ந்த நிலைக்கு மாணவனை உயர்த்துவார்.
கைவல்லிய நவநீதம் என்ற அருமையான ஒரு வேதாந்த நூலில்,
தாலத்தின் மரங்கள் காட்டித் தனிப்பிறை காட்டுவார் போல்
ஆலத்தின் உடுக்கள் காட்டி அருந்ததி காட்டுவார் போல்
தூலத்தை முன்பு காட்டிச் சூக்குமசொரூபம் ஆன
மூலத்தைப் பின்பு காட்ட முனிவரார்தொடங்கினாரே
– கைவல்லிய நவநீதம் (த.வி.ப.18)
ஆரம்ப காலத்தில் குருநாதர் தூல தேகத்தில் கண்ணுக்கு தெரியக்கூடிய இந்த உடலில்தான் இந்த உணர்வுகளை உணர்த்தி காட்டுவார்.
பின்னால்தான் அந்த மூலப்பொருளை உணர்த்துவார் (காட்டுவார்). மூலத்தை பின்பு காட்ட முனிவரார் தொடங்கினாரே என்று சொல்லுவார். அவர்தான் மூலப்பொருளை சிறுகச்சிறுக பல்வேறு பயிற்சிகள் மூலமாக அந்த நிலையை உணர்த்துவார்.
உணர்த்தி அதே நிலையில் இருந்து இந்த உயிர் ஒடுங்கக்கூடிய ஒரு பயிற்சியை அவர் கொடுப்பார். ஏனென்றால் “உதித்த இடத்தில் ஒடுங்கி இருத்தல் அது கன்மம்.” அதுதான் இந்த ஜீவன் உதிக்கக்கூடிய இடம்.
மீண்டும் ஒடுங்கக்கூடிய இடமும் அதே இடம்தான். அப்படி ஒடுங்கினால்தான் மீண்டும் பிறவாத ஒரு நிலையை அடைய முடியும். மற்றவர்கள் பிறந்தும் இறந்தும் மீண்டும், மீண்டும் இந்த பிறவிப்பிணியிலே கிடப்பார்கள்.
அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை
ஆரிருள் உய்த்து விடும் – குறள் எண்.121
என்று அருமையாக வள்ளுவர் சொல்லுவார்.
அடக்கம் என்றாலே உயிர் உடலோடு அடங்கி ஒடுங்கி கொள்வது சமாதி நிலை கொள்வது. சமாதி என்றால் நீங்கள் பயந்து விட வேண்டாம் ஆதிக்கு அவன் சமமாகி விடுகிறான். அதைத்தான் சமாதி என்று சொல்லுவார்கள். மற்றவர்கள் (அப்படி அடங்காதவர்கள்) எல்லாம் மீண்டும், மீண்டும் பிறவி என்ற பிணியில் பிறந்து கொண்டே இருப்பார்கள் என்பதை அய்யன் திருவள்ளுவர் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னாலே அருமையாகக் கூறிச் சென்று விட்டார்கள்.
இப்படிப்பட்ட நிலைகளை அன்று சித்தர்களும், முத்தர்களும், ஞானிகளும் தொட்டுச் சென்ற ஒரு கல்வியை அவர்கள் விட்டுச் சென்ற ஒரு கல்வியை மீண்டும் நாம் தொட்டுக் காட்டுகின்றோம். இங்கு மந்திரத்திற்கு இடமில்லை. தந்திரத்திற்கு இடமில்லை.
இந்த உயிர் உய்வடைய வேண்டும் என்ற பெரு நோக்கில்தான் இந்த ஞான சபையை நாங்கள் ஆரம்பித்தோம். இன்று உலகம் முழுவதும் இந்த கல்வியை கற்றுக் கொள்ளக்கூடிய அளவில் ஒரு சூழ்நிலை உருவாகி வருகின்றது. ஆன்மீக அன்பர்களே வாருங்கள்… வாருங்கள்… இந்த அற்புதமான ஒரு கல்வியை பயின்று மீண்டும் பிறவாத ஒரு நிலைக்கு நீங்கள் நிச்சயம் வர வேண்டும்.
காகம் உறவு கலந்துண்ணக் கண்டீர் அகண்டா கார
சிவ போக மெனும் பேரின்ப வெள்ளம் பொங்கித் ததும்பிப் பூரணமாய்
ஏக உருவாய்க் கிடக்குதையோ: இன்புற்றிட நாம் இனி எடுத்த
தேகம் விழு முன் புசிப்பதற்குச் சேர வாரும் சகத்தீரே!
என்று தாயுமான சுவாமிகள் கூறுவதைப் போல், அருளை அள்ளிப் பருகிட, உலக அறிவார்ந்தோர் இயற்கை ஞான சபை உங்களை வாரீர் வாரீர் என அன்புடன் அழைக்கின்றது.