"அகத்தேடலும் ஆத்ம ஞானமும் "
நூல் விவரம்
நூல் பெயர்: அகத்தேடலும் ஆத்ம ஞானமும்
ஆசிரியர்: சு. சரவணன்
பதிப்பு : அய்யன் திருவள்ளுவர் 2055-ம் ஆண்டு துலைத் திங்கள் (ஐப்பசி மாதம்) 17-ம் நாள் (03.11.2024) ஞாயிற்றுக்கிழமை
வெளியிடப்பட்ட இடம்: ஞானசபை தலைமையகம் சிவத்தையாபுரத்தில் நடைபெற்ற ஞானவள்ளல் மகாகனம் தங்கசுவாமிகள் 86 வது பிறந்தநாள் விழாவில் வெளியிடப்பட்டது
வெளியீடு:
உலக அறிவார்ந்தோர் இயற்கை ஞானசபை அறக்கட்டளை
பதிவு எண் : 140/4/2000
ஞானசபை சாலை, சிவத்தையாபுரம்,
சாயர்புரம் அஞ்சல், தூத்துக்குடி – 628 251
+91 94420 56071
புகுமுன் தெரிமின்
‘அவனின்றி (இறைவன்) ஓர் அணுவும் அசையாது’ என்ற உண்மையைப் போல் குருவின் அருள் இன்றி ஆன்ம அனுபவம் கிட்டாது என்று அறிக.
கப்பலின் துணை இன்றி கடலை கடக்க முடியாததை போல் குருவின் துணை இன்றி பிறவிப் பெருங்கடலை கடக்க இயலாது என்பதை அறிக.
பேரின்பத்தின் வற்றாத ஜீவ நதியாக விளங்கிக் கொண்டிருக்கும் எம்முடைய ஆன்மீக குருநாதர் ஞானவள்ளல் மகாகனம் தங்க சுவாமிகள் அவர்களின் பொற்பாதத்தில் இந்த நூலை சமர்ப்பிக்கின்றேன்.
எமது இளமைப் பருவம் முதல் இன்று வரை தொடரும் எமது ஆன்மீக தேடலுக்கு உறுதுணையாக ஒத்துழைப்பு நல்கிவரும் எமது ஞான குருவிற்கும், எமது குருநாதரின் சக மாணவர்களுக்கும், எமது குருநாதரின் உதவியாளர் கூட்டாம்புளி கனம் பொருந்திய ராஜ் நாராயணன் ஆகியோருக்கும் எமது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
எமது குருநாதரின் மானசீகமான கட்டளைக்கு கீழ்படிந்தும், அவரால் தோற்றுவிக்கப்பட்ட உலக அறிவார்ந்தோர் இயற்கை ஞான சபை எனும் ஆன்மீக கல்வி இயக்கத்தின் கொள்கை கோட்பாடுகள் இந்த மனித சமூகத்திற்கு பயனுள்ளதாக அமைய வேண்டும் என்ற நோக்கத்திலும், எமது குருநாதர் ஆய்ந்து அருளிய காலத்தால் அழியாத ஞான நூல்களின் நுட்பமான மற்றும் ஆணித்தரமான கருத்துக்களை பிரதிபலிக்க வேண்டும் என்ற எண்ணத்திலும், காகம் எவ்வாறு உணவை பகிர்ந்து உண்கிறதோ அவ்வாறே வித்தகமான எமது குருநாதரின் பல உத்தம சீடர்களுடன் கலந்துரையாடும் பொழுது ஏற்பட்ட உணர்வு ரீதியான அனுபவங்களை பகிர்ந்து கொள்வதற்காகவும், ‘சாதனம் இன்றி ஒன்றை சாதிப்பார் உலகில் இல்லை’ என்கிற சொல்லுக்கு இணங்க எனது குருவினால் அருளப்பட்ட ஞான பயிற்சிகளால் உண்டான அனுபவத்தை குறிப்பிடும் நோக்கத்திலும்இந்த நூலானது எழுதப்பட்டிருக்கின்றது.
மனிதனாக பிறப்பெடுத்த அனைவரும் மீண்டும் பிறவா நிலையை அடைவதே இலக்காக கொள்ள வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு அத்தகைய இலக்கை நோக்கி பயணிக்கும் பொழுது ஏற்படும் பேரானந்த அனுபவத்தை இந்த நூலின் வாயிலாக எமது சிற்றறிவுக்கு தகுந்தபடி எழுதி இருக்கின்றேன்.
‘யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்’ என்ற உயர்ந்த சிந்தனையை லட்சியமாகக் கொண்டு தாம் அடைந்த ஆன்ம அனுபவத்தையும் அதனால் உண்டான பேரின்ப சுகத்தையும் அனைவரும் பெற்று பயனடைய வேண்டும் என்ற நோக்கத்தில் சுமார் 45 ஆண்டுகளுக்கு மேலாக ஆன்மீக திருப்பணிகள் செய்து வரும் எம்முடைய குருநாதரின் வாழ்க்கை அனுபவங்களை தெரிந்து கொண்டதன் மூலம் எமது சிந்தையில் ஆழமாக பதிந்து விட்ட பொதுநலம் என்ற உயர்ந்த பண்பு இந்த நூலை எழுதுவதற்கு எமக்குத் துணையாக இருந்தது என்றால் அது மிகை ஆகாது. இந்த நூலில் உள்ள கருத்துக்களில் பெரும்பாலானவை எமது குருநாதரின் நூல்களில் இருந்தே எடுத்துக் கொள்ளப்பட்டது.
திருக்குறள், திருமந்திரம், கைவல்லிய நவநீதம், கிறிஸ்தவ வேதாகமம், திருக்குர் ஆன் போன்ற நூல்களில் இருந்தும் கருத்துக்கள், பாடல்கள் ஆய்வுக்காக எடுத்துக் கொள்ளப்பட்டது மற்றும் பல இதர நூல்களில் இருந்தும், இணையதளத்தின் மூலமும், சில கருத்துக்கள் எடுத்துக் கொள்ளப்பட்டன.
‘நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து
மறைமொழி காட்டி விடும்’
– திருக்குறள் -28
இந்த நூலில் பிழை அல்லது குறை ஏதேனும் இருந்தால் பொறுத்துக் கொள்ளும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
இப்படிக்கு
சு சரவணன்.