"குருவோடு ஒரு பயணம் பாகம் - 2"


நூல் விவரம்
நூல் பெயர்: குருவோடு ஒரு பயணம் (தொடரும்) –
பாகம் 2
ஆசிரியர்: ரா. ராஜ் நாராயணன் உலக அறிவார்ந்தோர் இயற்கை ஞான சபை கிளை – கூட்டாம்புளி.
முதல் பதிப்பாண்டு : 2025
பக்கம்: 288
முகவரி : நெ. 7/43, சாமி கோயில் தெரு, கூட்டாம்புளி, புதுக்கோட்டை அஞ்சல் தூத்துக்குடி மாவட்டம் – 628103
வெளியீடு:
உலக அறிவார்ந்தோர் இயற்கை ஞானசபை அறக்கட்டளை
பதிவு எண் : 140/4/2000
ஞானசபை சாலை, சிவத்தையாபுரம்,
சாயர்புரம் அஞ்சல், தூத்துக்குடி – 628 251
+91 94420 56071 | 7708861877
முகவுரை
அநேக கோடி பிறவி கடந்து வலை படு மீன் போல் சிக்கி தவித்த எம்மை ஆட் கொண்டு, புற இருள் அகற்றிடும் வான் கதிர் போன்று எமது அக இருள் நீக்கி, சுடர் ஒளி விரலால் என் நெற்றிக்கண் பூட்டை திறந்து, தன்னகத்துள் எம்மை ஈர்த்து,கடல் போன்ற கருணையால் எம்மை வழி நடத்தி, உன்னது சொரூபம் இதுவென உணர்த்தி, அந்தி பகல் அற்ற இடத்தில் அருவமாய் ஏகமாய் நிறைந்து, எமது மேருமலை உச்சி மீது நீக்கமற ஆட்சி செய்து, மாயை வசப்படும் பேதை நெஞ்சை ஞான திசை நோக்கி மடை மாற்றி, எமது பிறவிப் பிணி அகற்றி, இனி அல்லல் வாழ்வு நெருங்கா வண்ணம் எம்மை காத்தருளும், பிறப்பும் இறப்பும் இல்லா ஏக நாயகன்,எமது அருட் குருநாதர், ஆசான், ஞானவள்ளல் அவர்களின் சீடனாகவும், சேவகனாகவும் விளங்கிட என்ன புண்ணியம் செய்தேனோ, இந்த பாக்கியம் பெற்றேன்.
எனதருமை குருநாதர் பேனா மை கொண்டு தீட்டிய எழுத்துக்கள் யாவும் அவர்தம் பட்டறிவின் தொகுப்புக்கள் என்பதை உணர்ந்து கொண்டு, பல தருணம் எமக்குரைத்த உபதேசங்கள் யாவும் எமக்கு மட்டும் கூறியதென்று இருந்திடாமல், ஒன்றை விடாமல் எழுத்து வடிவில் உரு மாற்றிட, குருவின் ஆசி பெற்று இந்நூலை எழுதிட, ஓய்வில்லா பணிகளுக்கு இடையே என் பேனாவை கொண்டு எழுதிய கருத்துக்கள் யாவும் பகலில் தெரியும் நிலவு அன்று மாறாக பாதையில் பயணம் செய்பவர்க்கு வெளிச்சம் காட்டும் முழு நிலவைப் போன்று இருக்கும் என நம்புகின்றேன்.
அடியேன் பண்டிதன் இல்லை என்றாலும் திறமையான பாமரன் ஆக்கிய பெருமை ஆருயிர் குருவைச் சேரும். அழகில்லாத ஓடம் பயணிகளை ஏற்றி கொண்டு கரை சேர்ப்பதை போன்று, மனத்துக்கண் மாசில்லா மாணவன் படைப்பான குருவோடு ஒரு பயணம் (தொடரும்) எனும் இந் நூல் உருவாகிட உறுதுணையாக, வழிநடத்தியாக இருக்கும் எமது குருநாதர் ஞான வள்ளல் மகாகனம் தங்கசுவாமிகள் அவர்களுக்கும், யாம் எழுதிய கருத்துக்களை முறைப்படி இணைத்து, தொகுத்து, அவ்வப்போது தொலைபேசியில் கூறிய
அனுபவங்களையும் எழுத்து வடிவில் உருவாக்கி, இந்த நூலுக்கு தேவையான மேற்கோள், குறிப்புகள், தந்து உதவிய மேல்மருவத்தூர் ஞான சபை கிளை தலைவர் கனம் பொருந்திய சு.சரவணன் அவர்களுக்கும், எமது குருநாதரால் தோற்றுவிக்கப்பட்ட உலக அறிவார்ந்தோர் இயற்கை ஞான சபையின் அன்பர்களுக்கும், குருவின் சேவைக்கு எம்மை அர்ப்பணித்துக் கொள்ள முழு மனதுடன் சம்மதம் தெரிவித்த எமது குடும்பத்தார்க்கும் எனது இதயபூர்வமான நன்றியை உரித்தாக்குகிறேன்.
குருவோடு ஒரு பயணம் (தொடரும்) என்ற இந்த நூலானது இதற்கு முன்பு யாம் எழுதிய குருவோடு ஒரு பயணம் என்ற நூலின் தொடர்ச்சியாகும்.
ஆன்மீகத்தின் உயர்ந்த நிலையாம் சீவ பிரம்ம ஐக்கியம் அடைவதற்கு தேவையான உபதேசங்களை உள்ளடக்கிய எமது குருநாதர் ஞான வள்ளல் மகாகனம் தங்க சுவாமிகள் அவர்களின் நூல்களிலிருந்தும், படர்ந்த வேதாந்தத்தின் ஞான மற்றும் முக்திக்கான சாதனங்களை தமிழ் மொழியில் ஆய்ந்து அருளிய நன்னிலம் தாண்டவராய சுவாமிகளின் கைவல்லிய நவநீதம் எனும் அத்வைத இலக்கிய நூலிலிருந்தும், திருமூலர் அருளிய சைவத் திருமுறையின் பத்தாம் திருமுறையான திருமந்திரம் எனும் மெய்யியல் நூலிலிருந்தும், வான் புகழ் கொண்ட தமிழகத்தின் தெய்வப் புலவராம் திருவள்ளுவர் இயற்றிய அறம் பொருள் இன்பம் ஆகிய மூன்றின் தொகுப்பாகிய திருக்குறள் எனும் பொது மறையிலிருந்தும், உலகின் மீட்பராக தோன்றி, நீதி நெறி ஒழுக்கத்தை போதித்த இயேசு பிரானின் போதனைகளை உள்ளடக்கிய பரிசுத்த வேதாகமத்திலிருந்தும், இஸ்லாமியர்களால் போற்றப்படும் திருக்குர்ஆன் எனும் புனித நூலிலிருந்தும், தாயுமானவர் சுவாமிகளின் மெய் ஞான பாடல்களிலிருந்தும்,
பார் போற்றும் முண்டாசு கவிஞர் பாரதியார் பாடல்களிலிருந்தும், சமரச சுத்த சன்மார்க்க வழி காட்டிய வள்ளலார் சுவாமிகளின் ஞான களஞ்சியத்திலிருந்தும், ஏனைய பிற நூல்களிலிருந்தும் ஆய்வுக்காகவும், மேற்கோள் காட்டவும் கருத்துக்கள் இந்த நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஆயுட்காலம் என்பது எத்தனை ஆண்டுகள் இந்த உலகில் உயிருடன் வாழ்ந்தோம் என்பதல்ல. உடல் மறைந்த பின்பும் எத்தனை காலம் நாம் பிறர் நினைவில் வாழ்கிறோம், எத்தனை காலம் பிறரால் பேசப்படுகிறோம் என்பதுதான் நமது உண்மையான ஆயுட்காலம்.
இந்த மாய உலகில் நாம் பிறந்தது முதல் நமது இறுதி காலம் வரை நிஜத்தை மறந்து நிலையற்ற விஷயங்களின் பின்னே சென்று வாழ்நாளை தொலைத்து விடுகிறோம். நமக்குள் இருக்கின்ற உண்மையான மெய்ப்பொருளை உணராமல் வாழ்நாளை கழிக்கின்றோம்.
சிந்தனை சந்தேகத்தை வளர்க்கும், சந்தேகம் ஆராய்ச்சியை வளர்க்கும், ஆராய்ச்சி உண்மையை வளர்க்கும், உண்மையானது குருட்டு நம்பிக்கைகளை குழி தோண்டி புதைக்கும் என்ற எழிலார்ந்த கருத்துக்களை உணராமல் கண்மூடித்தனமான வாழ்வையே ஏற்று வாழ்கிறோம்.
மனிதர்களுக்கு பிரச்சனை இருக்கும் வரை தான் இறைவனுக்கு அர்ச்சனை செய்யப்படுகிறது. இறைவன் நமக்குள் தான் இருக்கின்றார் என்பதை மறந்து இறைவன் எங்கோ வெகு தூரத்தில் இருக்கின்றார் என்ற அறியாமையில் தான் இருக்கின்றோம்.
இறைவன் உலகியலிலிருந்து வேறுபட்டவர்களோடு (ஞானிகளோடு) ஒன்றியிருக்கிறான். உலகியலில் ஆழ்ந்து விட்டவர்களிடமிருந்து விலகி நிற்கிறான்.
இறைவனுக்கும் நமக்கும் இடையே இருக்கின்ற அஞ்ஞானம் எனும் திரையை அழித்தால் அன்றோ இறைவனை உணர முடியும். அஞ்ஞானம் அகன்றிட ஞானக்கல்வி பயின்றிட வேண்டும். பள்ளிக்கல்வியில் நமது அறிவு கண்களைத் திறந்து வைப்பவர்.
ஆசிரியர். அதைப் போன்று ஞான கல்வியில் குரு என்பவர் இன்றியமையாதவர். கடவுள் யார் என்று நமக்கு உணர்த்துபவர் குரு. ஆகவே குருவே முழுமுதற் கடவுள். உலகியல் வாழ்வில் நாம் கற்றுக் கொள்ளும் எல்லாவற்றிற்கும் ஒரு ஆசிரியரின் துணை தேவைப்படும். ஆன்மீக வாழ்வில் ஈடேற வேண்டுமென்றால் சாகாக் கல்வியை கற்றுணர்ந்த காரண குருவின் தேவை அவசியமாகின்றது.

பல ஜென்ம அசுப வாசனைகளால் மயங்கி, ஒழுங்கீனம் எனும் புதைக்குழியில் சிக்கிய எம்மை மீட்பராக வந்து ஆட்கொண்டு, மன்னிப்பு அருளி, ஈடேற்றி, குண்டலினி ஞான பயிற்சிகளையும், உபதேசங்களையும் போதித்து எம்மை வழி நடத்தும் எனது உயிர் மூச்சான குருநாதர் ஞானவள்ளல் மகாகனம் தங்கசுவாமிகள் அவர்களால் பெற்ற சுய அனுபவங்களையும், அவர்களுக்கு ஒரு சேவகனாக இருந்து பயணிக்கும் போது அவ்வப்போது அவர் கூறிய அவரது வாழ்க்கை அனுபவங்களையும் ஒரு நூலாகத் தொகுத்து வெளியிடுவதன் காரணம் என்னவென்றால் வையகம் செழிப்படைய வான் மழை வேண்டி நிற்பதை போன்று, இவ்வுலகின் உயிர்கள் உய்வடைந்து, இறைவனோடு இரண்டறக் கலந்து, என்றும் அழியாத
இன்ப வெள்ளத்தில் திளைத்திட ஆர்வமும் தேடலும் உள்ள அன்பர்கள், இந்த நூலை படித்து ஆய்வு செய்து, காரண குருவை நாடி, அவரை தஞ்சம் அடைந்து, அனுதினமும் அனுபூதி வாழ்வு வாழ்ந்திடவும்
தேனுக்குள் இன்பம் கறுப்போ? சிவப்போ?
வானுக்குள் ஈசனைத் தேடும் மதியிலீர்
தேனுக்குள் இன்பம் செறிந்திருந்தாற் போல்
ஊனுக்குள் ஈசன் ஒளிந்திருந்தானே
– திருமந்திரம்
இதோ, இங்கே என்றும், அதோ, அங்கே என்றும் சொல்லப்படுகிறதற்கும் ஏதுவிராது இதோ தேவனுடைய ராஜ்யம் உங்களுக்குள் இருக்கிறதே என்றார் – லூக்கா 17:20
என்று இயேசு பிரான் கூறியதையும் சிந்தித்து, தெளிவு பெற வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
இந்த நூலில் குறைகள் அல்லது பிழைகள் ஏதும் இருந்தால், நிறை ஏற்று பிழை பொறுக்கும் படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
இங்கனம்
ரா.ராஜ் நாராயணன்
உலக அறிவார்ந்தோர் இயற்கை ஞான சபை
கூட்டாம்புளி : 77088 61877


































