"உள்ளத்தை அள்ளும் ஆனந்தக் களிப்பு"

நூல் விவரம்

நூல் பெயர்: உள்ளத்தை அள்ளும் ஆனந்தக் களிப்பு
ஆசிரியர்: ஞானவள்ளல் மகாகனம் தங்கசுவாமிகள்
பதிப்பு : முதல் பதிப்பு திருவள்ளுவர் 2041ம் ஆண்டு (கி.பி – 2014)
பக்கம்: 288
வெளியிடப்பட்ட இடம்: சென்னை – மாதானங்குப்பம் ஞானசபை கிளையில் நடைபெற்ற ஞானவள்ளல் மகாகனம் தங்கசுவாமிகள் 72 வது பிறந்தநாள் விழாவில் வெளியிடப்பட்டது
வெளியீடு:
உலக அறிவார்ந்தோர் இயற்கை ஞானசபை அறக்கட்டளை
பதிவு எண் : 140/4/2000
ஞானசபை சாலை, சிவத்தையாபுரம்,
சாயர்புரம் அஞ்சல், தூத்துக்குடி – 628 251
+91 94420 56071

முகவுரை

பிறந்த மகவிற்கு முதலில் சுவைக்கக் கொடுப்பது இனிப்புச் சுவையென்பது யாவரும் அறிந்ததே. அம்மகவே வளர்ந்து ஆளானதும் அறுசுவைகளையும் ருசிக்க பிரியப்படுகிறது. ஆனால் முதலில் ஊட்டப்படும் இனிப்பான சீனியில் இருந்து லட்டு என்றும், ஜாங்கிரி என்றும், மைசூர் பாகு வென்றும், அல்வா என்றும், ஜிலேபி என்றும், மிட்டாய் என்றும், இனிப்பான பிட்டு என்றும், சாக்லெட் என்றும் எத்தனை வகையான இனிப்பு வகைகள். அதுபோல் பேரின்பத்தைப் புகட்டும் ஆன்மீகப் பாடல்களில் தான் எத்தனை உவமைகள், எத்தனை உவமேயங்கள் நினைத்தாலே இனித்திடும் உள்ளங்கவர் உவமைகள் தான் எத்தனை? எத்தனை.? அத்தனையும் அள்ளித்தர ஏடுகொள்ளாது. “உள்ளத்தை அள்ளும் ஆனந்தக் களிப்பு” என்ற இந்நூலில் எம்மால் இயன்றவரை இனிப்புகளை பல இனிப்புப் பண்டங்களாக ஆக்கித் தந்துள்ளோம்.

ஓரறிவுடைய புல் பூண்டு முதல் ஆறறிவுடைய மக்கட்கெல்லாம் உயிர்
உண்டு என்பது சராசரி மக்கள் முதல் அறிவார்ந்த அறிஞர் வரை யாவர்க்கும்
தெரியும்.
ஒன்று அறிவதுவே உற்று அறிவதுவே
இரண்டு அறிவதுவே அதனொடு நாவே
மூன்று அறிவதுவே அவற்றொடு மூக்கே
நான்கு அறிவதுவே அவற்றோடு கண்ணே
ஐந்து அறிவதுவே அவற்றொடு செவியே
ஆறு அறிவதுவே அவற்றொடு மனனே
நேரிதின் உணர்ந்தோர் நெறிப்படுத்தினரே
– தொல்காப்பியம் 1526

புல்லும் மரனும் ஓர் அறிவினவே – – தொல்காப்பியம் 1527
நந்தும் முரளும் ஈர் அறிவினவே – தொல்காப்பியம் 1528
சிதலும் எறும்பும் மூவரினவே – – தொல்காப்பியம் 1529
நண்டும் தும்பியும் நான்கு அறிவினவே – தொல்காப்பியம் 1530
மாவும் மாக்களும் ஐ அறிவினவே – தொல்காப்பியம் 1531
மக்கள் தாமே ஆறு அறிவுயிரே – தொல்காப்பியம் 1532

என தொல்காப்பியம் மூவாயிரம் ஆண்டுகட்கு முன்னரே தெளிவாய்க்
கூறியுள்ளது. உயிருக்கு உருவம் கிடையாது என்பதும், அந்த உயிரின்றி
எதுவும் நடவாது என்பதும் யாவரும் உணர்ந்ததே ஆனால் இந்த உயிர் எங்கே இருக்கிறது. எவ்வாறு செயல்பட்டு வருகிறது என்பதை விஞ்ஞானிகளோ. மருத்துவ விற்பன்னர்கள் கூட இதுவரை ஆய்வு செய்தும் காணமுடியவில்லை.

01
” உடலில்லா உயிரைக் காண ஒருவர்க்கும் எட்டாதாலே உடலுளோன் அறிய என்றால் உடலெடுத்து அறிந்தோன் வேண்டும் “ என்று மெய்வழி ஆண்டவர் கூறிச் சென்றுள்ளார்கள். அது போல் பேரின்பம், பேரின்பம் என்று எல்லோரும் கூறி வருகின்றார்களே, அது எப்படி இருக்கும் என்ன உணர்வோடு இருக்கும் என்பதையும், பலர் கேள்விக் கணைகளால் துளைத்தெடுப்பதையும் நாம் கண்டுவருகிறோம். ஆனால் சிற்றின்பம் என்பதை எல்லோரும் உணர்ந்தது தான். அதையே எப்படி இருக்கும் என்பதைக் கூற முடியுமா? அல்லது எழுதிக்காட்டத்தான் முடியுமா? முகத்தில் கண்கொண்டு காண்கின்ற மூடர்காள் அகத்தில் கண்கொண்டு காண்பதே ஆனந்தம் மகட்கு தாய்தன் மனாளனோடாடிய சுகத்தைச் சொல்லென சொல்லுமாறு எங்ஙனே” – திருமந்திரம் என்று திருமந்திரம் கூறியிருப்பதையும் நாம் சிந்திக்க வேண்டியுள்ளதல்லவா. தன் இனமும், மாற்றினமும் கலந்திடும் போது கிடைப்பது தான் சிற்றின்பம், இதையே தன்னைக் கொன்று அனுபவிப்பது சிற்றின்பம் என்று ஆன்மீகவாதிகள் கூறுவர். தன்னை வென்று அனுபவிப்பது பேரின்பம் என்றும் கூறுவர். ஞானாசான்கள் மூலம் கிடைக்கும் ஆரம்ப உணர்வை அதே ஞானாசான்கள் மூலம் உயிர் உதித்த இடமான மூலப் பொருளை பல்வேறு உள்முகப் பயிற்சி மூலமாக உணர்த்துவார். அதாவது தாய் தந்தையார் இட்டுச் சென்ற மூலப்பொருளான சுக்கில சுரோணிதம் இணைந்துள்ள பிணைந்துள்ள சக்தியும் சிவனும் இணைந்துள்ள பதியை உணர்த்துவார். அதையே “உதித்த இடத்தில் ஒடுங்கி இருத்தல் அது கன்மம்” என்று ரமணரிஷி அவர்கள் பெருமையோடு பேசி மகிழ்வார். இதையே சிவவாக்கியரும்.
02
” உதிக்குகின்ற தெவ்விடம் ஒடுங்குகின்ற தெவ்விடம்” என்று தனக்கே உரிய பாணியில் பேசுவார். மூலப்பதியான மூலப்பொருளை உணர, உணர, மேலான பேரின்ப நிலையை உணர்வர். அதுவே “நின்ற நிலை”, என்பார் அதுவே நிருவிகற்ப சமாதிக்கும் தன்னை அழைத்துச் செல்லும் என்பார் தாயுமான சுவாமிகள். ” நின்ற நிலையே நிலையே வைத்தான் அந்த நிலைதானே நிருவிகற்ப நிலையுமாகி என்று மழியாத இன்ப வெள்ளம் தேக்கி தொடர்ந்து தொடர்ந்து இருக்குமந்தோ” கடவுள் எங்கோ தூரத்திலில்லை எங்கும் நிறைந்த அவர் உன்னுள்ளேயே இருக்கிறார். நீ அவரிடத்திலேயே யிருக்கிறாய். நீ அவர் அம்சமே நீ உன் ஆன்மாவைக் கண்டால் ஈசுவரனுடைய உண்மைச் சொரூபத்தைக் காண்பாய் ஏனெனில் இரண்டும் இனத்தில் ஒன்றே நீ அவனில் ஒரு பாகமே “நீ அந்தச் சச்சிதானந்தப் பிரம்மமே” என்று கூறியதேயன்றி வேறில்லை. “ஆன்மாவே பிரம்மாயிருக்கிறது” என்ற மறை வாக்கியப்படி “நாம் பிரம்ம சொரூபமே” அதாவது “அகம் பிரம்மாஸ்மி” என்ற திடம் வராமல், நாம் வேறு, பிரம்மம் வேறு என்ற புத்தியிருக்கும் மட்டும் ஒருபோதும் முத்தி கூடாது என்பர் ஆன்றவிந்தடங்கிய கொள்கைச் சான்றோர்கள். ஆன்மாவின் இலட்சணங்கள் தான் என்ன? இந்த தேகத்தின் இலட்சணங்கள் தான் என்ன? என்பதை சற்று ஆராய்ந்தால் தெளிவு ஏற்படும்.
03
சத்துசித்துஆனந்தம்அகண்டம்” இதுவே “ஆன்மா” வின் நான்கு இலட்சணங்கள் என்பர். அதாவது “சத்து” எனின் இருப்பு என்பர். “சித்து” எனின் உணர்வு என்பர். “ஆனந்தம்” எனின் மகிழ்வு என்பர். “அகண்டம்” எனின் கண்டமின்றி ஏகமாய் இருப்பது என்பர். அகண்டம் என்ற ஏகத்திற்கு அநேக விளக்கமுண்டு. சுத்த சித்தாயுள்ள இந்த பிரம்மம் நாமரூபமென்ப தில்லாதது. தோற்றம் மறைவு என்னும் விஷமம் (சமமின்மை) இல்லாதது. காரண காரிய மென்னும் மயக்கமில்லாதது. கட்டுக்கு உட்படாதது உணர்வாய், ஒளியாய், நிறைவாய் நிற்பது. எல்லாவற்றிற்கும் ஆதாரமாயிருப்பது தனக்கொரு ஆதாரமில்லாதது. ஒரு கற்பனையினாலும் உண்டாகாதது. சகல கற்பனைகளையும் உண்டாக்கி அவை தன்னில் பொருந்த, தான் அவைகளில் பொருந்தாத அசங்கமாய் இருப்பது. இதன் ஆதாரத்தில் தோன்றிய இதன் கற்பனையாகிய சக சீவ பரமென்னும் திரிபதார்த்தமும் பெறும் செயற்கையாகத் தானே மெய்யாயுள்ளது. இது மனதால் நினைக்க முடியாத சொல்லாத அரும் பொருளாகும்.
04
இனி தேகத்தின் இலட்சணங்களையும் விளக்குவோம். “அசத்து – சடம் – துக்கம் – கண்டம்” = இது தேகத்தின் நான்கு இலட்சணங்கள் என்பர். “அசத்து” – எனின் மித்தை என்னும் நிச்சயத்தைத் தருவது எதுவோ அது இல்லாதது என்பர். “சடம்” எனின் “உணர் வின்றியது” என்பர். “துக்கம்” – எனின் “துயரம்” என்பர். “கண்டம்” – எனில் ஒன்றாயிராமை அல்லது பலவாகக் கண்டிக்கப்பட்டிருப்பது உதாரணத்திற்கு ஆப்பிரிக்கா கண்டம், ஆஸ்திரேலியா கண்டம், அமெரிக்கா கண்டம், ஆசியாக் கண்டம் என்று தனித்தனியாக இருப்பதைக் கூறலாம். ஆன்மாவின் இலட்சணம் அழிவில்லாதது. நித்தியமானது என்பது தெரிகிறது. தேகத்தின் இலட்சணம் அழியக்கூடியது. அநித்தியமானது என்பது தெரிகிறது. அதாவது நாமரூபம் கொண்டதால் தோற்றமும், மாற்றமும் மறைவும் கொண்டதெனப்படுவது ஆகும். உதாரணத்திற்கு நாமரூபத்தில் உருவான இந்த பூமி கூட நான் நிரந்தரமானவன் அல்ல என்பதை நிலநடுக்கங்களால் அழிந்து விடும். உயர்ந்த மாடமாளிகைகளும் மக்களும், ஆழிப் பேரலைகளின் ஆர்ப்பரிப்பால் அழிந்துபோகும். கடற்கரையிலுள்ள மாடங்களும் மக்கள் தொகையும், சீற்றம் கொண்டு கிளம்பி வரும் எரிமலைக் குழம்பால் கவின்மிகு காடுகளும், காட்டு விலங்குகளும், பறவையினங்களும் ஏன் மக்களும் தான், சுற்றிச் சுழன்று அடித்துப் போடும் சூறாவளிக் காற்றும், பூமிப்பந்தினையே நடுங்க வைத்திடும் இடி மின்னல்களையும் கூறலாமல்லவா.
05
அப்படியானால் நாம் தேட வேண்டியது, நாட வேண்டியது எது என்ற கேள்வியும் பிறக்கிறது. “மிகு காலம் மூன்றும் கெடாதிருப்பது சத்து” என்று கைவல்லிய நவநீதம் கூறுவதைக் கவனித்தால், நாம் தேட வேண்டியது நாடவேண்டியது சத்து என்பது புலனாகின்றது. பிரம்ம ஞானம் என்னும் விழிப்பு மனிதனுக்கு உண்டானால் பிறவிப்பெருங்கடலில் அவனுக்கு உண்டாகும் துன்பத்தையெல்லாம் அது துடைத்துத் தள்ளுகிறது. ஞானத்தை அடைந்தவனுக்குத் தன்சொரூபமாகிய பேரானந்தம் கிட்டுகிறது. மனிதனுக்கு சர்வதுக்க நிவிர்த்தி செய்வது பரஞானம். இதைத்தான் பல்வேறு பாடல்கள் மூலமும் எளிய கருத்துக்கள் மூலமும் “உள்ளத்தை அள்ளும் ஆனந்தக் களிப்பு” என்ற நூல் வடிவில் கொடுத்துள்ளோம். ” கானல் நீர் கிளிஞ்சில் வெள்ளி கந்தர்ப்பநகர் கனாவூர் வானமை கயிற்றிற் பாம்பு மலடி சேய் முயலின் கோடு பீனம் ஆம் தறியுமானின் பிரபஞ்சம் எல்லாம் பொய்யே ஞானமெய் மகனே உன்னை நம் ஆணை மறந்திடாயே” – கைவில்லய நவநீதம் – 109. என்ற செய்யுட்கு சற்சீடனே அஞ்ஞானியின் உடம்பில் உள்ள ஜீவாத்மாவே பரமாத்மாவாக இருக்கிறது என்று குருநாதரின் உபதேசத்தாலும், இந்த உயிர்கள் எல்லாம் உய்வடைய எழுதப்பட்ட மறைகளாலும், உண்டானதே ஞானம் என்பதை அறிந்து கொள்.
06
இந்த ஞானத்தால் கானலில் தோன்றிய நீர் பொய் என்றும், கிளிஞ்சலில் (முத்துச் சிப்பி) தோன்றிய வெள்ளி பொய் என்றும், மந்திரவாதி காட்டிய கந்தர்வ நகர் பொய் என்றும், சொர்ப்பன நகரம் பொய் என்றும், ஆகாயத்தில் தோன்றுகிற பாம்பு பொய் என்றும், முயலுக்குக் கொம்பு தோன்றிய நீலநிறம் பொய்யென்றும், கயிற்றில் தோன்றிய பாம்பு பொய்யென்றும், முயலுக்கு கொம்பு இல்லை என்றும், கட்டையில் தோன்றிய கள்ளனும் பொய், ஆகவே மேலே கண்ட அனைத்தும் பொய் என்றும், பிரம்மத்தினிடத்தில் இருந்து தோன்றிய பிரபஞ்சம் அனைத்தும் பொய் என்று கண்ட ஞானம் உன்னிடத்தில் உள்ள ஞானம் தானே ஆகையால் அந்த ஞானமே மெய் என்பது நம் ஆணை மறந்திடாதே என்று உபதேசம் செய்தார். என எளிய விளக்கம் கொடுத்தோம். ஆனால், மேற்கண்ட செய்யுட்கு, அருப்புக்கோட்டை வேதாந்த வித்தகர் கைவில்லியம் கந்தசுவாமி அவர்கள் எழுதிய “சகத் மித்தை பிரம்மம் சத்தியம்” என்ற நூலின் மேலான கருத்துக்களையும் எடுத்தாண்டுள்ளோம். நினைத்தாலே இனித்திடும் கருத்தாக அமையும். உண்மையான ஆன்மீக அன்பர்கட்கு அதுபோல் சிவ நேசச் செல்வர் தாயுமானசுவாமிகளின் ” அடிமுடியும் நடுவுமற்ற பரவெளிமேற் கொண்டால் “அத்துவித ஆனந்த” சித்தமுண்டாம் நமது குடிமுழுவதும் பிழைக்குமொரு குறையுமில்லை யெடுத்த கோலமெல்லாம் நன்றாகுங் குறைவு நிறை வறவே விடியுமுத யம்போல வருளுதயம் பெற்ற வித்தகரோ டுங்கூடி விளையாட லாகும் படி முழுதும் விண்முழுதுந் தந்தாலுங் களியாப் பாலருடன் உன்மத்தர் பிசாசர் குணம் வருமே” பாட்டுக்கும் யாம் எல்லோரும் ஒத்துக் கொள்ளும் எளிய விளக்கம் கொடுத்தோம்.
07
வேதாந்தம் என்பது 'நியாயம்', 'யோகம்', போல ஒருதர்க்க முறை அல்ல. முரண்பாடுகளின் நடுவே உண்மைக் காட்சியைப் பெறுதல் என்ற அனுபவமே வேதாந்தமாகும். சம்ரதாயத்தை (மரபு வழிகளை) நன்கு அறிந்துள்ள கைதேர்ந்த ஞான குருவினால் தான் பரம்பரை பரம்பரையாகப் பின்பற்றி வரும் பயிற்சி முறைகளைக் கொண்டு ஆத்மஞானத்தைப் போதிக்க இயலும் மொழி நடையும் விளக்கும் முறைகளும் காலத்திற்கு ஏற்றாற்போல மாறலாம். ஆனால் சாத்திர ஞானத்தை விளக்கும் போதனை முறையின் அடிப்படையில் மாற்றம் இருக்காது. அது என்றும் ஒன்று போலவே இருக்கும். சீவனும் பிரம்மாவும் ஒன்று என்னும் (சீவாத்ம ஐக்கிய) உண்மையை உணர்ந்தவனும், பேதம் ஒழித்து உலகமனைத்தையும் ஆத்ம சொரூபமாகக் காண்கிறவனும் ஜீவன் முத்தன் அல்லது ஞானி என்று கருதப்படுகிறான். அத்தகையவனே சீவனுக்கும் பிரம்மாவுக்கு உள்ள உறவைக் காணும் ஞானக்கண் படைத்தவனாக உள்ளான். சத்குருவினால் வேதாந்த உண்மைகள் புகட்டப் பெற்ற பின்னர் யாரிடம் சமநோக்கு ஏற்படுகிறதோ அவரே சீவன் முத்தராவர். (உடலோடு கூடிய முத்தி) ஒரு சீவன் நான் இந்த உடல் நான் சத்திரியன், நான் மனிதன் என்று எப்படி நிச்சயமாகக் கருதுகிறனோ அது போல ஜீவன் முத்தனும் நான் இந்த உடல் அல்ல, நான் சத்திரியன் அல்ல, நான் மனிதன் அல்ல, என்பதில் நிச்சயத்துடன் இருக்கிறான். எதிலும் பற்றில்லாதவனாக உடல், சாதி, சமயம், எதனுடனும் சம்பந்தமில்லாதவனாக உள்ளான். எப்படி ஆகாயம் எதனோடும் சம்பந்தப்படாமலும், பாதிக்கப்படாமலும் உள்ளதோ அதுபோல ஆத்மாவும் அனைத்தையும் கடந்தது. எதனோடும் தொடர்பில்லாதது. நான் (செய்கிறேன்) என்ற உணர்வோடு சீவன் முத்தன் எந்தக் காரியத்தையும் செய்வதில்லை. ஆகவே எந்தப் பயனும் அவனைப் பற்றுவதில்லை.
08
சீவன் முத்தன் தான் வேறு பிரம்மம் வேறு என்ற எண்ணம் இல்லாதவன் ஆகையால் ஆத்மாவின் உண்மை இயல்பாகிய சச்சிதானந்த (சத்+சித்+ஆனந்தம்= சச்சிதானந்தம்) சொரூபனாகிவிடுகிறான். எல்லாவற்றையும் ஒளிரச்செய்பவனாகவும் ஒளிக்கு ஒளியாகவும், சுயம் பிரகாசனனாகவும், அவன் விளங்குகிறான். புற உலகப்பொருட்களையும், பிரகாசப்படுத்துபவனாக உள்ளான். கண்களை மூடிக்கொண்டாலும் சுற்றுப்புறப் பொருட்களை நினைத்துப் பார்க்க முடிவதற்குக் காரணம் பரஞானம் என்னும் சைதன்யப் பொருள் எண்ணங்களையும் அவற்றைத் தோற்றுவிக்கும் மனம் புத்தி சித்தம் அகங்காரம் என்னும் உட்கருவிகளையும் ஒருங்கே பிரகாசிக்கச் செய்கிறது. அத்துவித ஆனந்த நிலைதான் பிரம்மத்தை உணர்ந்து இரண்டறக் கலந்து நிலையானது. அதாவது இரண்டற்ற நிலையைத் தான் தாயுமான சுவாமிகள் “ஒரு குடிமுழுதும் பிழைக்கும்” என்று பெருமையாகக் கூறுகின்றார். ஆனால் எம்மால் அத்து+வைதானந்தம் என்ற மேலான நிலையை இவ்வளவு தான் விளக்க முடிந்தது. ஆனால் “அருப்புக்கோட்டை வேதாந்த வித்தகர் கைவில்லியம் கந்தசுவாமி அவர்கள் “அத்துவைதானந்தம்” என்ற மேலான நிலையை விளக்கும் விதம் நினைந்து நினைந்து இன்புற வைத்தது அதனால் அவர்கள் கூறிய கருத்தினை அப்படியே கூறி நூலினை நிறைவு செய்துள்ளோம்.
09
அரிய மெய்ஞ் ஞானத் தீயா லவித்தையா முடனீறாகும் பெரியதூ லமுங்கா லத்தாற் பிணமாகி விழுமந் நேரம் உரியசூக் குமசரீர முலைஇரும்புண்ட நீர் போல் துரியமாய் விபுவாய் நின்ற சொரூபத்திலிறந்து போமே கைவில்லிய நவநீதம் – 105. என்ற பாட்டிற்கு வேதாந்த ஆராய்ச்சியாளர்களும், சித்தாந்த ஆராய்ச்சியாளர்களும் ஒத்துக் கொள்ளும் கருத்துக்களையே எழுதியுள்ளோம். யாவரும் விரும்பும் உடன்பாடான கருத்துக்களையே எடுத்தாண்டோம். ” மாயை என்பதேது உடையர் ஆர் எப்படி வந்தது வருவான் ஏன் மாயை என்பது பிரம்மத்தின் வேறெனில் வஸ்துவும் இரண்டாமே மாயை என்பதும் பிரம்மமும் ஒன்றெனில் வஸ்துவும் பொய்யாமே மாயை என்றமே கங்களுக்கு ஒருசண்ட மாருத குருமூர்த்தி” – கைவல்லிய நவநீதம் (ச. தெ 94) மாயை என்பது எது? மாயையை உடையது யார்? மாயையும் பிரம்மமும் வெவ்வேறு எனில் வஸ்துவும் இரண்டா? மாயையும் பிரம்மமும் ஒன்று எனில் பிரம்மமும் பொய்யாகுமே? இப்படி எழுந்த அய்யப்பாடுகளை தெளிவாக்கவேண்டும் அய்யனே என்று ஆசானிடம் கேட்டான் அன்பு மாணவன்.
10
அதற்கும் எம்மால் முடிந்த அளவுதான் விளக்கம் கொடுக்க முடிந்தது. ஆனால் அருப்புக்கோட்டை கனம் பொருந்திய கைவில்லியம் கந்தசாமி அவர்களின் அற்புதமான, இனிய எளிய நடையில் பாமர மக்களும் புரியக் கூடிய வகையில் தந்த விளக்கத்தையும் தந்துள்ளோம். அதில் ஒரு பகுதியை மட்டும் இங்கு கூறுவோம். "சுக்கில சுரோணிதத்தில் சீவன் அணுமயமாக இருக்கின்றான். இந்த அணுமயமான சீவனுக்கு ஆதாரம் அணுவளவு கூடஸ்தன். இந்த அணுவளவு கூடஸ்தனை நீ உண்டாக்கிக் காட்டு அல்லது அழித்துக் காட்டு அல்லது காப்பாற்றிக்காட்டு, இவற்றில் எந்த ஒன்றைச் செய்தாலும் நான் உன்னைப் புகழ்கிறேன் என்று சொன்னார்." "இந்த வார்த்தையைக் கேட்டமாயை, அய்யனே நான் பொய்யானவைகள் எவ்வளவு பெரிதானும், சிறிதானாலும், அரிதானாலும் ஆக்கிக் காத்து அழித்துக் காட்டுவேன். ஆனால் அணுவளவு ஆதாரமான கூடஸ்த மெய்ப் பொருளை என்னால் ஆக்கவோ, காக்கவே, அழிக்கவோ முடியவில்லையே! என்ன செய்வேன் நான் உங்களுடைய ஞானத்தின் மகிமையைத் தெரியமால் ஆணவத்தால் வீண் சம்பம் பேசி விட்டேன் சுவாமி! என்னை மன்னித்து விடுங்கள் என்று அவர் காலடியில் விழுந்து வணங்கித் தன் ஆணவத்தை ஒடுக்கிக் கொண்டு போயிற்று" இப்படிச் சுவை பல உண்டு.
11