"ஆனந்தக் களிப்போ சச்சிதானந்தமோ அத்துவைதானந்தமோ இவை எல்லாமே அகத்தேடலில் மட்டுமே"
நூல் விவரம்
நூல் பெயர்: ஆனந்தக் களிப்போ சச்சிதானந்தமோ அத்துவைதானந்தமோ இவை எல்லாமே அகத்தேடலில் மட்டுமே
ஆசிரியர்: ஞானவள்ளல் மகாகனம் தங்கசுவாமிகள்
பதிப்பு : முதல் பதிப்பு திருவள்ளுவர் 2046ம் ஆண்டு (கி.பி – 2015)
பக்கம்: 184
வெளியிடப்பட்ட இடம்: தூத்துக்குடி சிவத்தையாபுரம் ஞானசபை கிளையில் நடைபெற்ற ஞானவள்ளல் மகாகனம் தங்கசுவாமிகள் 77 வது பிறந்தநாள் விழாவில் வெளியிடப்பட்டது
வெளியீடு:
உலக அறிவார்ந்தோர் இயற்கை ஞானசபை அறக்கட்டளை
பதிவு எண் : 140/4/2000
ஞானசபை சாலை, சிவத்தையாபுரம்,
சாயர்புரம் அஞ்சல், தூத்துக்குடி – 628 251
+91 94420 56071
முகவுரை
உயிர்கள் எல்லாவற்றிற்கும் இறைவனே முதல்வன்
என்பதை மறந்து தாங்களே முதல்வர் என்று எண்ணும் செருக்கினால் செய்யப் பெறும் செயல்களே வினை எனப்படும் சித்தாந்த உண்மையாகும். வினைகளை உயிர்கள்
தவறாது அனுபவிக்க அனுபவிக்க அவை நமது அறியாமையை நீக்கி இறைவனை
அறியும் அறிவைப் பெறும் என்பதாகும்.
இறைவன் வினைப்பயனை ஊட்டுவித்தல் மருத்துவர் நோயாளிக்கு மருந்து கொடுத்தல்
போன்றது. ஆணவமலம் உயிர்கட்குள்ள நோய் ஆகும். அதற்கு மருந்தாய் உள்ளவை
வினைப்பயன்கள். மருந்துகளில் சில இனிக்கும் சில கசக்கும். நல்வினைப்பயனாகிய
இன்பம் இனிப்பான மருந்தை உண்பது போன்றது. தீவினைப் பயனாகிய துன்பம்
கசப்பான மருந்தை உண்பது போன்றது. இன்னும் சில வேளைகளில் அறுத்துக் கீறிச்
சுட்டுச் செய்யும் சிகிச்சைகளும் நிகழும் சந்தர்ப்பங்களும் ஏற்படுகின்றன அல்லவா?
இங்ஙனமே மிகப்பெரிய துன்பங்களையும் மிகப்பெரிய பயனாக இறைவன்
ஊட்டுவிப்பான். ஆருயிர்கள் இவைகளைத் தாங்கிக் கொள்ளத்தான் வேண்டும். இது
கருதியே அய்யன் திருவள்ளுவரும் இடுக்கன் வருங்கால் நகுக என கூறிப்போனார்
போலும்.
இப்படியே நல்லவர்களும் நல்லவர் அல்லாதவர்களும் இவ்வுலகில் விரவி வாழ்ந்து
வருகின்றார்கள். ஆனால் உலகில் வாழும்
பலர் எப்படியும் ‘முத்தி, பெற்றிட துடிப்பதையும் காணமுடிகிறது. வாக்கு சாதுர்யம்
அலங்காரச் சொற்களை கையாளும் திறமை சாத்திரங்களை விமர்ச்சனம் செய்யும்
புலமை ஆகியவை முத்திக்கு ஒருவனை எடுத்துச் செல்லமாட்டா. அவை உணவை
வேண்டுமானால் அவனுக்குக்கொடுக்கும், வயிற்றுப் பிழைப்பைத் தரலாம்.
மனிதனை மற்ற உயிரினங்களிலிருந்து வேறுபடுத்தி அவனுக்கு உயர்வைத் தருவது
அறிவு என்பதை யாவரும் அறிவர். இந்த அறிவே பேரறிவாக மாறி மெய்யறிவாக மாறி
மெய்ஞ்ஞான அறிவாக மாறிய போதுதான் பிறப்பறுக்கும் பெரிய கல்வியைப்
பெற்றவனாகிறான்.
பிறப்பென்னும் பேதைமை நீங்கச் சிறப்பென்னும்
செம்பொருள் காண்பது அறிவு.
– குறள் : 358
பேதைமை எனின் அறியாமை, எதனை அறியாமை எனின் செம்பொருளை அறியாமை.
எது செம்பொருள் மாறாத இயல்புடையது எதுவோ அதுவே செம்பொருள். இந்தச்
செம்பொருள் தனக்குவமை இல்லாததாக ஒன்றேயாக, ஏகமாக, இருப்பதால் இதனை
சிறப்பு எனும் வேறு பெயரையும் கொடுத்து ‘சிறப்பு எனும் செம்பொருள். என்றார்.
இந்தச் சிறப்பினை அறியாமல் இருக்கும் நிலை பேதைமை இப்பேதைமை
இருக்கும்வரை பிறப்பு என்பது மீண்டும் மீண்டும் ஏற்பட்டுக்கொண்டே இருக்கும்.
அறியாமைதான் பிறப்புக்குக் காரணம் என்பதால், “காரணம் இல்லாமல் காரியம்
இல்லை” என்பதால் பிறப்பு ஆகிய காரியத்திற்கு அறியாமையே தவிர வேறு ஒரு காரணமும் இல்லை என்பதால் அறியாமையே பிறப்பு, பிறப்பே அறியாமை என்னும்
இருசொற்களும் ஒருபொருளைக் குறித்தனவே என்றும் கூறுகிறார்.
01
இந்த அறியாமை
என்பது பேதபுத்தி எனப்படும். இந்த பிரம்ம ஞானத்தால், தான்ஜீவன் என்கிற
பேதைமையை நீக்குவதால் பிறப்பு நீங்குகிறது.
எந்த ஒரு நித்தியப்பொருள் நிலையற்ற. மாறும், அழியும் அனைத்துப் பொருள்களுக்கும்
ஆதாரமாக உள்ளதோ அந்த முதற்பொருளே ‘பொருள்’ எனும் இலக்கணத்திற்கு
பொருந்துவது. மாறும் இயல்புடைய உலகப் பொருள்களை பொருளாக அறிவது
அறியாமையாகிய இருள் அல்லது மருள் எப்பொருளைப் பார்க்கினும் அதற்கு
ஆதாரமான மெய்ப்பொருளைப் பார்ப்பது அருள் இந்த மருள் நீங்கிய
அருட்பார்வையால் நீக்கமற நிறைந்துள்ள அந்த பரம்பொருளை அகவிழிக் கண்களால்
காண்பது தான் ‘மாசறு காட்சி, எனப்படுகிறது. இந்த மாசறு காட்சிதான் தன்னை
அனைத்திலும் காணல், தன்னில் அனைத்தையும் காணல் ஆகும்.
நமது உணர்வுகள் இருவகை. ஒன்று வெளியுணர்வு இன்னொன்று உள்ளுணர்வு.
இவை முறையே பொய்யுணர் வென்றும், மெய்யுணர்வென்றும் வழங்கப்படுகின்றன.
முன்னையது மனம் புறத்தே விரிந்து அனைத்து பொருளல்லாத பொருளிற் படியுங்கால் விளங்குவது. பின்னையது மனங்குவிந்து செம்பொருளிற் படியப்படிய விளங்கிவருவது.
வெளியுணர்வு பொய்யானது. அது பொறுமை, அமைதி, சாந்தம், அன்பு, அருள்,
ஒப்புரவு முதலிய நறுங்குணங்களை வளர்க்கும் ஆற்றல் இல்லாதது. ஆனால் மக்களில்
99 விழுக்காடு புலன் வழிச்செல்லும் விஷய சுகங்களில் ஈடுபட்டு இதுதான் உண்மை
என நினைத்து மீண்டும்
மீண்டும் இச்சகத்திற்கே வந்து விடுகிறார்கள்.
02
ஆனால் “மந்திரம் ஓதுதல், என்ற செயல் இல்லாமலேயே இறை ஆற்றலை எய்துகிற
முறையை ஞானிகள் வகுத்துச் சொல்லியிருக் கிறார்கள். இது மனத்தை நேராகவே
இறைவன்பால் அழைத்துச் செல்கின்ற முறையாகும். மூர்த்தி தலம் தீர்த்தம் ஆகிய
அனைத்தும் இந்த உடம்புக்குள்ளேயே உள்ளன. சேத்திராடனம் எனும் புனித
யாத்திரை செய்து கொள்வது கூட இந்த உடம்புக்குள்ளேதான். மனிதன்
கோயில்தோறும் சென்றுவழிபட வேண்டிய நிலையில் இந்த ஞானியோ தம்
உள்ளத்தினுள்ளேயே உடம்புக்குள்ளேயே இந்தப் பயணச் செலவுகளை
மேற்கொள்கிறான்.
ஆனால் இருந்த இடத்தில் இருந்து கொண்டு செய்கின்ற இந்த உடற்பயணம்
அவ்வளவு எளிதாகவா முடிகிறது? இல்லை. எளியதுபோல் தோன்றினாலும் மிகவும்
அரியதாக இருக்கிற இந்த உடற்பயணத்திற்கான வழித்துணையாக ஞானப்பாடல்கள்
விளங்குகின்றன. வழி காட்டி நூலைமட்டும் நம்பித் தனியாக இந்த உடற்பயணமாகிய
ஞானயாத்திரையை மேற்கொள்ளக் கூடாது. அதற்கு வழித் துணையும் வேண்டும்.
இங்கு வழித்துணை என்பது ‘ஓர் ஞான ஆசானின் நேர்முகத் துணையாகும். இதன்
காரணமாகத்தான் பயிற்சி நூல்களை பரிபாஷை மொழிகளிலேயே சொல்லி
யிருப்பதோடு.கூடவே மனத்தையும் அதன் செயல்களையும் இறை யுணர்வில்
ஈடுபடுத்துவதற்கு குருவை இன்றியமையாதவராக வற்புறுத்துகிறார்கள். இறைவனை உள்ளத்திலே அமர்த்திக் கொள்ளக் கூடிய ஆற்றல் ஒருவனுக்கு வந்துவிட்டால்
அவனுக்கு எவ்விதமான புறச்சடங்குகளும் வேண்டுவதில்லை.
03
ஆனால் இந்த
ஒருநிலை அவனுக்கு வரும் வரை சரியைகளையும், கிரியை களையும், யோகத்தையும்
கடைப்பிடித்தாக வேண்டும் என்பதே ஞானிகளின் கருத்தாகும்.
ஆத்ம பரிபக்குவம் ஏற்பட்ட பிறகு இறைவனை வழிபடுகின்ற பாவனை முறை
கைவசம் ஆகிவிட்டால், எவ்விதமான வழிபாட்டுச் சடங்குகளும் ஒருவனுக்குத்
தேவையில்லை. இவர்கள் கோவில் களையும், விக்கிரக ஆராதனைகளையும், ஆகமச்
சடங்குகளையும் எள்ளி நகையாடுவதும் இதற்காகவே, வேடங்களையும், ஆசாரங்
களையும் புறசம்பத்துக்களையும் மதிக்கின்ற இந்த உலகத்தில் இவையொன்றும்
இல்லாமல் பித்தரைப் போலும், பேயரைப் போலும் காட்சி தருகின்ற சித்தர்களையும் ஞானி களையும் பைத்தியக்காரர்கள் என்றும், கிறுக்கர்கள் என்றும் பட்டம் சூட்டி
உதாசீனம் செய்கிறது இந்த உலகம்.
ஆனால் அவர்களோ பிறர் தம்மைப் பார்த்து நகையாடுவதையும் உதாசீனம்
செய்துவிட்டு, தன்பாட்டுக்கு தனிவழியில் போய்க் கொண்டிருக்கிறார்கள்.
இந்நூலின் முதற்பாகத்தில் மக்கள் எப்படி நாமரூப நாட்டத்தில்
மாட்டிக்கொள்கிறார்கள் என்பதையும். அது இன்றளவும் தொய்வில்லாமல் தொடர்ந்து
நடைபெற்று வருவதையும் தெளிவாகக் கூறியுள்ளோம். இது யாரையும் குறித்து
எழுதப்படவில்லை. சிந்தித்து தெளிவு பெறவே இதை எழுதியுள்ளோம். இரண்டாவது
பாகத்தில் அவர்கள் ஏன் அகத்தே தேடி அகத்திலே கண்டுணர்ந்த ஆனந்தக்
களிப்பையும் எழுதியுள்ளோம்.
04
பிரம்மத்தை அறிந்துணர்ந்தால் பிரம்மமாகவே ஆகிறான்
என்பதே அத்துவைத கருத்தாகும். அவன் தேகத்திற்கு உள்ளிருக்கும் தேகியான
ஆன்மாவைக் கண்டுணர்ந்து அத்துவைதானந்த சுகத்திலே சொக்கி மகிழ்கிறான்.
அங்கே நாமமோ ரூபமோ கிடையாதென்பதால்
நாமரூப நாட்டம் விடின் நமது சொருபம் தோன்றிவிடும்
இதை அனுபவத்தில் மட்டுமே அறிந்துணர முடியும்.
இந்த தேகத்திற்கு உள்ளிருக்கும் சீவனை
அறிந்துணர்ந்தால் நீ சிவமாகி விடுவாய்
என்பதே சைவ சித்தாந்த கொள்கையாகும். அருளாசான் மூலம் குண்டலினி ஞான
தீக்கை பெற்று மூலக்கனலை அனல்மூட்டி எழுப்பி ஞானாக்கினியில் நிலை
கொண்டால் இமையா நோக்கில் இருந்திடும் நிலை அமையும். இதுவே சைவ சித்தாந்த
கொள்கையாகும்.
ஆனால் தமிழ்நாட்டுச் சித்தர்களும் முத்தர்களும்
வெட்ட வெளிதன்னை மெய்யென்றிருப்போர்க்கு
பட்டயம் ஏதுக்குடி
என்று வெட்டவெளியை நோக்கி சுகம் கண்டார்கள். ஆன்மா என்பது வடசொல்
ஆனதால் வெளி என்று பெயர் சூட்டி, பரமானந்த
நிலையை வெட்ட வெளி என்று சொல்லி மகிழ்ந்தனர். அந்த பேரானந்த நிலைக்கு
மதியமுது, மாங்காய்ப்பால், காயாப்பால், அமுதப்பால், கருநெல்லிச்சாறு, கபாலத்தேன்,
சோமப்பால், பஞ்சாமிர்தம் உச்சியிலே பிச்சை எடுத்தல், உச்சியிலே தாகம் தீர்த்தல்
என அவர்கள் பிரியப்படி எழுதி மகிழ்ந்தனர். எல்லோர்க்கும் ‘இலக்கு’ ஒன்றுதான், அதற்கு அவர்கள் பல பெயர் சூட்டி மகிழ்ந்தனர். தமிழகத்தின் தலைநகரம்
சென்னைக்கு, தரை மார்க்கமாகவும் கடல் மார்க்கமாகவும், வான் மார்க்கமாகவும்
சென்றடையலாம். இலக்கு ஒன்று ஆனால் வழிகள் பல இப்படி நினைத்துப் பார்த்தால்
இலகுவாக புரிந்துவிடும்.
05
தமிழ்நாட்டுச் சித்தர்களும், முத்தர்களும் அத்துவைத கருத்துக்களையோ, சைவ
சித்தாந்தக் கருத்துக்களையோ ஏற்றுக்கொள்ளாமல் அவர்கள் பிரியப்படி
பரிபாஷைகளில் எழுதிச் சென்றதால் அவர்களை பலர், கஞ்சாப்பிரியர்கள் என்றும்
மதுப்பிரியர்கள் என்றும், ஏசியும் பேசியும் வருவதை இன்றும் காணலாம்.
ஆனால் அவர்கள் ஜீவசமாதி ஆலயம் பெற்று மக்களின் மனக்குறை போக்கும்
மாமருந்தாகவும், அருட்கதிர்வீச்சுக்களை அள்ளித்தரும் அட்சய பாத்திரமாகவும்
இருப்பதை யாவரும் அறிந்து தானே இருக்கிறோம்.
அவர்களின் தவநிலைகளை இரண்டு வகையாக ஆன்மீக உலகம் பேசுகிறது என்பதை
கைவல்லிய நவநீதம் எனும் வேதாந்த ஞானநூல் துல்லியமாகக் கூறுவதையும்
காண்போம்.
காமியத் தவம் காமியம் ஒன்றையும்
கருதிடாத் தவம் என்றும்
பூமியில் தவம் இருவகை சித்தியும்
போதமும் தரும் மைந்தா
ஆம் இவற்றில் ஒன்று இயற்றினால்
ஒன்றையே அடைகுவர் இது தீர்வை யாம் உரைத்த அவ்விரண்டையும்
இயற்றினார் அன்றுள்ள பெரியோரே.
தவமோ இருவகையாகும் ஒன்று காமியத்தவம் என்பர். மற்றொன்று நிட்காமியத்தவம்
என்பர். ‘காமியத்தவம்’என்பது ஒரு பலனைப் பெற விரும்பிச் செய்யும் தவமாகும்.
நிட்காமியத்தவம் என்பது ஒரு பலனையும் இச்சியாது செய்யும் தவமாகும். இவற்றில்
‘காமியத்தவம்’ அட்டமாசித்திகளைத் தரும். 'நிட்காமியத்தவம் முத்தியை மட்டுமே தரும்.
இவற்றில் ஒன்றையியற்றுவோர் ஒன்றையே பெறுவர்.
06
ஆனால் பேரான்ம ஆற்றல்
பெற்ற ஞானிகள் இருவிதத் தவங்களையும் இயற்றினபடியால் சித்தி, முத்தி
இரண்டையும் அடைந்தார்கள். சித்தியையும் முத்தியையும் அடையப்பெற்ற பேரான்மப்
பெரியோரான பரமஞான குருபிரான் ராஜரிஷி அய்யன்பட்டி சங்கரசுவாமிகள்
அவர்கள். திருச்சீரலைவாய் (திருச்செந்தூர் ) யெனும் திருச்செம்பதியில் ஜீவசமாதி
ஆலயம் பெற்று அருள் பாலித்து வருகிறார்கள் என்பது யாவரும் அறிந்ததே.
ஒரு ஜீவனுக்கு கொடுக்கும் கொடைகளுள் முடிவானது பிரம்மாஞானம் இதை
அறிந்தோர் உணர்வர் உணர்ந்தோர் அறிவர்.
புணர்ந்த பாவம் எல்லாம் பரிபூரணம்
உணர்ந்த ஞானி விழிபட ஓடுமே.
என்ற வைரவரிகளை மனதிற்கொண்டு வழிபடுவோம். மீண்டும்
பிறவாப் பெருநிலை பெற்றிடுவோம்.
ஆன்றவிந்தடங்கிய கொள்கைச் சான்றோர்களான பேரான்மப் பெருஞ்சுகத்தை
அள்ளித்தரும் அருளாசான்களின்
மலர்ப்பாதங்களில் மலர்மாலை வாடி விடும் என்றெண்ணி
சொல்மாலைகளையும் பாமாலைகளையும் அணிவித்து
அகமகிழ்ந்திடுவோம்.
07