"மேடையிலே வீசிய மெல்லிய பூங்காற்றும் மென் காற்றில் வரும்சுகமும்"
நூல் விவரம்
நூல் பெயர்: மேடையிலே வீசிய மெல்லிய பூங்காற்றும் மென் காற்றில் வரும்சுகமும்
ஆசிரியர்: ஞானவள்ளல் மகாகனம் தங்கசுவாமிகள்
பதிப்பு : அய்யன் திருவள்ளுவர் 2053-ம் ஆண்டு துலைத்திங்கள் (ஐப்பசி மாதம்) 27-ம் நாள் (13.11.2022) ஞாயிற்றுக்கிழமை
பக்கம்: 576
வெளியிடப்பட்ட இடம்: திருநெல்வேலி ஞானசபை கிளையில் நடைபெற்ற ஞானவள்ளல் மகாகனம் தங்கசுவாமிகள் 84 வது பிறந்தநாள் விழாவில் வெளியிடப்பட்டது
வெளியீடு:
உலக அறிவார்ந்தோர் இயற்கை ஞானசபை அறக்கட்டளை
பதிவு எண் : 140/4/2000
ஞானசபை சாலை, சிவத்தையாபுரம்,
சாயர்புரம் அஞ்சல், தூத்துக்குடி – 628 251
+91 94420 56071
புகுமுன் தெரிமின்
பார்த்தாலும் நினைத்தாலும் படித்தாலும் படிக்கப்
பக்கம் நின்று கேட்டாலும் பரிந்து உள் உணர்ந்தாலும்
ஈர்த்தாலும் பிடித்தாலும் கட்டி அணைத்தாலும்
இத்தனைக்கும் தித்திக்கும் இனித்த சுவைக் கரும்பே
வேர்த்தாவி மயங்காது கனிந்த நறுங்கனியே
மெய்ம்மை அறிவானந்தம் விளங்கும் அருளமுதே
தீர்த்தாய் அன்பரெல்லாம் தொழப்பொதுவில்
நடிக்கும் தெய்வ நடத்தரசே என் சிறுமொழி ஏற்றருளே
-திருவருட்பா
பேரண்ட ஆற்றலையோ அதனைஉணர்ந்தவர்களையோ பார்த்தாலும், அவர்கள்பெற்ற அனுபவங்களைப் படித்தாலும், படிக்க பக்கம் நின்று கேட்டாலும்,அவ்வனுபவத்தை நாமும் எப்போது பெறுவோம் என்று உள்ளுருகி நின்றாலும்,அவர்களால் ஈர்க்கப்பட்டு அவர்கள் அருகே இருந்தாலும், அவர்களுடன் எந்தக் கருத்துப் பரிமாற்றமும் செய்து கொள்ளாமல் அவர்கள் அனுபவித்த அந்தரங்க மோன அனுபவத்தை நினைந்து நின்றாலும் அவர்களைப் பிடித்துக் கட்டி அணைத்தாலும்
தித்திக்கும் மோன ஞான அனுபவம் இது.
உடலின் நினைவும் ஊனின் நினைவும் உள்ள வரை நிரந்தரமான அருள்
அனுபவத்தைப் பெறமுடியாது. வருவதும், போவதுமான சிந்தனையே எஞ்சும். ஆன்மப் பயணத்தில் மேல் நிலைக்கு ஏகும் உயிர் உடல் கடந்த அனுபவத்தை நுகர முற்படும் போது உடல் சார்ந்த உணர்ச்சிச் சிதறல்கள் அவ்வுயிரைக் கீழே இறக்கிவிட ஏதுவுண்டு.
கானுறு கோடி கடிகமழ் சந்தனம்
வானுறு மாமலர் இட்டு வணங்கினும் ஊனினை
நீக்கி உணர்பவர்க்கு அல்லதுதேனமர்
பூங்கழல் சேர வொண்ணாதே.
– திருமந்திரம்
வானுயர் அளவிற்கு கோடி தண்மலரிட்டு ஓயாது இறைஞ்சினாலும் ஊன் அனுபவம்செயல்படும் வரை உணர்வு அனுபவத்தினை உணர முடியாது என்பதே ஆன்றோர் காட்டிய முடிவு.
அதற்கும் குருநாதர் பற்றிய இலக்கணம் யாது எனக் காண்போம்
தேனிரம்பு மலரையளி தேடுவ போலெங்கும்
தேசிகனைப் பலநாளுந் தேடிக் கண்டளவில்
ஞானகுரு விவன்பாகஞ் சோதிக்க வேண்டி
நமக்கங்களுறவே யென்நாளுஞ் செய்வித்தும்
ஈனமாந் தொழிலதனிலே மிக விடுத்து
மிரக்கமிலா தேயடித்து மிழிபுரையால் வைது
மானமின்றிச் செய்யும் போதுங் குருபக்தி வழுவா
வாய்மையருக்குயர் நிட்டை வழுத்திடலுந் தகுமால்
– நிட்டானுபூதி சாரம்
இழிவான செயல்களைக் கூட மனம் கூசாமல்செய்கின்றானா என்று பார்ப்பார்களாம்.சில நேரங்களில் சுடு சொற்களால் சுட்டுப் பொசுக்குவாராம், சிலபோழ்து கசையடிகொடுத்து இங்கு வராதே என்று கூறுவாராம். இதையெல்லாம் சகித்துக் கொண்டுநம்மிடம் பாடம் பயில வருகிறானா என்று பார்ப்பாராம். இப்படி செய்தும் குருபக்தி குறைகிறதா அல்லது குருபக்தி மேலோங்குகிறதா என்று பார்த்து அவர்களையே தனக்கேற்ற மாணவனாக தேர்வு செய்வார்கள். இன்னும் சில நோக்குவோம்
உடற்குயிர் போலுங் கட்கிமை போலு
மூசியு நூலுமே போலும்
படப்பொறி அரவைப் பிடியெனப் பிடிக்கப்
பாயுவெம் புலிதனைத் தழுவத்
தொடற்கருந் தழலை யெடுவென வெடுக்கத்
தும்பிமுன் னஞ்சுறாதிருக்க
விடற் கருஞ் சித்த மென்னவே யுதவும்
விவேகியற் களித்திடலாமால்
– நிட்டானுபூதி சாரம்
உடலும் உயிரும் போலும், ஊசியும் நூலும் போலும், கண்ணும் இமையும் போலும் படமெடுக்கும் நல்ல பாம்பைப் பிடித்து வா எனக் கூறியதும் பதில் ஏதும் கூறாது அதை செயல்படுத்த முனைவதும்,இரத்த வெறி பிடித்த வேங்கையை எதிர்கொள் என்று கூறியதும் அதை அப்படியே செயல்படுத்த முனைவதும், சுடுதழலை எடு என்றதும் நொடிப்பொழுதில் செய்து காட்டியும், மதம் கொண்ட கொல் களிறை எதிர்கொள் என்று கூறியதும் அதை அப்படியே செயல்படுத்திக் காட்டியும், ஆம் இப்படிப்பட்ட எஃகு உள்ளங் கொண்ட விவேகம் கொண்டவனையே மாணவனாக ஏற்றுக்கொள்வது அந்தக்கால கொள்கையாக இருந்தது.
இப்படி எல்லாம் ஞானக்கருத்துகளை அறிந்து தெரிந்து உணர்ந்து வைத்தாலும் நாம் இந்த வழியில் வெற்றி கொள்ள முடியுமா? என்ற எண்ணமும் என் மனதில் எழத்தான் செய்தது. நாமோ இல்லறவாசி இதில் வெற்றிக்கனியை சுவைத்திட முடியுமா? என்ற எண்ணம் அவ்வப்போது வரத்தான் செய்தது.
இருட்கதவை உடைத் தெறிய
இளம்பரிதி தோன்றியது போல்
மருட்கதவை உடைத்தெறிய பிண்டாதித்தன்
திருச்சீரலைவாய் அருகே அமர்ந்து
அருட்கதிர் வீச்சால் அருளாளர்களையும்
பொருளாளர்களையும் காத்தருளி
அருட்பார்வையால் நம் சிந்தை அணு
ஒவ்வொன்றும் சிலிர்க்க வைப்பான்
என்ற பாமாலை என் உள்ளத்தில் பதிவாகி இருந்த காரணத்தால் பேரான்ம பெரியோரான பரமஞான குருபிரான் ராஜரிஷி, அய்யன்பட்டி சங்கரசுவாமிகள் திருச்சீரலைவாய் (திருச்செந்தூர்) எனும் திருச்செம்பதியில் சமாதி ஆலயம் பெற்று அருள் பாலித்து வருகின்றார்கள். முழுமையாக உணர்ந்த காரணத்தாலும், அவர்களும்
இல்லற ஞானியாக ஒடுக்கம் பெற்றவர்கள் என்பதை உணர்ந்ததாலும் அவர்களின் தலை மாணாக்கர் எமது குருநாதர் சிவகளை ஆதித்தன் பிள்ளை சுவாமி அவர்களும் ஒரு இல்லற ஞானிதான் என்பதாலும் சற்று அமைதி அடைந்தோம். இருப்பினும்,
பந்தமனைத்துறந்து அதிதிகளாய்
இருந்து அடைவர் பரமஞானம்
அந்தணர் மன்னர் வணிகர் சூத்திரராய்
இருந்து சிலர் அடைவர் ஞானம்
இந்தவகை சாத்திரத்தும் உலகத்தும் நடப்பது
கண்டு இருந்தும் மைந்தா
சிந்தனையில் மயக்கம் என்னே சுருதி யுத்தி
அனுபவத்தால் தெளிந்திடாயே
– கைவல்லிய நவநீதம்- ச.தெ.ப.-163
மகனே! சிலர் பந்தமான இல்வாழ்க்கையை விட்டுத் துறவிகளாக இருந்து பிரம்ம ஞானத்தைப் பெறுவார்கள் சிலர் அறவழிச் (அதாவது தவ ஆற்றல்) செல்லும் அறவோர்களாகவும், பல்வேறு தொழில் செய்யும் வணிகர்களாகவும், நாட்டையே வளப்படுத்தும் தொழிலாளியாகவும் இருந்து பிரம்ம ஞானத்தை அடைவார்கள். இவ்வகையை மறைகளில் கண்டிருந்தும், படித்திருந்தும் உனக்கு மயக்கம் வேண்டிய தில்லையப்பா விவேகத்தோடு, வைராக்கியத்தையே நீ அடைவாயப்பா.
சந்நியாசிகள் (வரன், வரியான், வரிட்டன்) நிராசையினால் பிரம்ம ஞானத்தை எய்துகின்றார்கள், எனவே ஞான வழியைக் கடைபிடிப்பவரும் பிரம்ம ஞானத்தை அடைவர் என்பதில் சந்தேகம் தேவையில்லை.
யாம் தீர்க்கமான ஒரு முடிவெடுத்து ஆன்மீகப் பயணத்தை வெற்றியோடு முடித்திடஇப்பாட்டுக்களும் கைவல்ய நவநீதம் நூலும் துணையிருந்தன என்றால் அது மிகையாகாது.
இலக்கை நோக்கி பயணிப்பவனே இலட்சியவாதியாம்
நல்ல குணம் கொண்ட அவனின் மனமொழி மெய்யோ
சிந்தாமல் சிதறாமல் குவிந்து நிற்கும் இலக்கினை
அடைந்திட உடல் பசி நினைத்திடான் செவிக்குணவை
சேர்த்துக் கொள்வான் நல்ல குணாதீத
நிலையடைய இலக்கினைவிட்டு எள்ளளவோ
எள்முனையளவோ மாற மாட்டான் செவி
கசக்கும் சொற் பொறுப்பான் தன் கருமமே
பெரிதென நினைத்திடுவான் இலக்கினை
அடையும் வரை பக்கத்தில் பழமிருந்தாலும்
பாலோடு தேனிருந்தாலும் உண்ணாது நோற்றலிலே
தலைப்பட்டு வெற்றிக்கனி பறித்திடுவான்
– அறிந்தோர் உணர்வர் உணர்ந்தோர் அறிவர்-83
2012ஆம் ஆண்டு இந்தப் பாட்டை அறிந்தோர் உணர்வர் உணர்ந்தோர் அறிவர், என்ற எமது நூலில் பதிவு செய்துள்ளோம். பல நல்ல பல ஆன்மீக அருளாளர்களையும் சில ஞான சபைகளையும் உருவாக்கிய பின்னர் தான் இதை எழுத முடிந்தது.
A Leader is one who Knows the way,
Goes the way, and Shows the way
என ஆன்றோர்கள் கூறுவர் “ஒரு இயக்கத்தின் தலைவனோ இயக்கத்தின்
வழிமுறைகளை அறிந்தவனாக இருக்க வேண்டும்.” இயக்கத்தில் பயணிப்போரை ஒழுங்கான வழிக்கு செலுத்துபவனாக இருக்க வேண்டும். ஊரறிய உலகறிய இயக்குபவனாகவும் இருக்க வேண்டும்.
பேசுவதில் பயனில்லை அனுபவத்தால்
எய்துவதே பேரின்பம் என்றான்
முறுக்கு மீசை முண்டாசுக் கவிஞர் அனுபவங்களை உணர்த்தியும் அனுபவமிக்க மாண்புடைய மாணவர்களை உருவாக்கிய பின்னர்தான் இயக்கத்தை ஒழுங்காக வழிநடத்திச் செல்ல முடியும் இவைகள் எல்லாம் முறையாக நடந்து வந்த காரணத்தால்தான் யாமும் இயக்கத்தை உருவாக்க முடிந்தது.
If you want to master in any subject Try to teach it.
என அறிஞர் பெருமக்கள் கூறுவார்கள். நமது கொள்கை கோட்பாடுகளை அறிய விரும்பும் ஆர்வலர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்றால் அவர்கள் புரியும் வண்ணம் நாம் வாய் மொழி மூலமாக அடிக்கடி தெரியப்படுத்த வேண்டும். அப்போதுதான் ஆற்றல்மிக்க தலைவனாக முடியும்.
என்னிடம் சொன்னதை நான் மறந்து விடக்கூடும்
என்னிடம் காண்பித்ததை நான் நினைவில்
வைத்துக் கொள்ளக் கூடும்
என்னை ஈடுபடுத்தினால் நான் புரிந்து கொள்வேன்
என்பது “சீனப் பழமொழி” என்பதை நினைவு கூர்ந்தால் புரிந்துவிடும். ஏறத்தாழ பதினேழு ஆண்டுகள் ஒலிவாங்கி ( மைக் ) முன்னால் யாம் பேசிய சொற்பொழிவுகளே இந்நூல் உருவாகக் காரணம். ஒன்று விடாமல் சேர்த்து வைத்த பெருமை புதுக்கோட்டை (தூத்துக்குடி மாவட்டம்) கனம்பொருந்திய அன்னபாண்டி அவர்களைத்தான் சேரும். அவர்கள் சேர்த்து வைக்காவிட்டால் அத்தனையும் காற்றோடு கலந்துவிடும்.
ஆனால் அத்தனை கருத்துக்களையும் தேதிவாரியாக சிறுகச்சிறுக எடுத்து எமக்கு அனுப்பிய பெருமை திருவாரூர் கனம்பொருந்திய தனபால் அவர்களையும் அவர்கள் வாழ்க்கைத் துணைவியார் அவர்களையும் சேரும். எல்லா ஞானசபை உணர்வாளர்களும் இல்லறவாசிகள் என்பதுதான் நமது சபையின் சிறப்பு. இந்த இயக்கத்தில் பயணிப்போர் தள்ள வேண்டியது எது? கொள்ள வேண்டியது எது? என்பதை அவர்களே சில நாட்களில் முடிவு செய்து கொள்வார்கள். மனிதன் கட்டற்ற சுதந்திரம் கொண்டு செயல்படலாமா? அல்லது கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு செயல்பட வேண்டுமா? என்ற கேள்விகள் அவ்வப்போது எழத்தான் செய்கிறது.
மனிதன் என்பவன் தன்னை கட்டுப்பாடுகளுக்கு
உட்படுத்திக் கொள்கிற சுதந்திரம் கொண்டவன் என்று எண்ணி வாழ்ந்தால் மட்டுமே நலமாகவும் பலமாகவும் வாழ முடியும்.
மனிதன் சில நேரம் உணர்ச்சியின் பிடியில் இருக்கிறான். சில நேரம் அழிவின் பிடியில் இருக்கிறான். சிலநேரம் கவலை உணர்வுகளில் தவிக்கிறான்.
அறிவை உணர்ச்சிகள் வெல்வது இயல்பு
அறிவால் உணர்ச்சிகளை வெல்வது உயர்வு
என்பதுதான் ஆன்றோர் வாக்கு. நம்முடைய சலனங்களைக் கட்டுப்படுத்திக்கொண்டு வேண்டாத திசையிலிருந்து சரியான திசையில் கொண்டு செலுத்துவது என்பது கட்டுக்கடங்காத குதிரைக்கு கடிவாளம் போட்டு அதை நேர் பாதையில் கொண்டு
செலுத்துவதைப் போல் ஆகும்.
குதிரை வீரர்கள் வெல்வதெல்லாம் கடிவாளத்தை சரியாக கையாளும் முறையில்தான்.
“நிர்வாணம்” என்பது என்ன? இந்த புற உடலைப் பல ஆடைகளால் மூடியுள்ளோம். இவையாவும் உண்மையை மறைக்கிற பொய்யுரையே. உறைகளை நீக்கினால் எது உள்ளதோ அது உண்மை நிலை. அதுபோல நம் உள் அரங்கம் பல உறைகளால் மூடப்பட்டுள்ளது.
அந்த உறைகளையும் நீக்கி உள்ளதை உள்ளவாறு உணர்வதே “நிர்வாணா” அந்த உள்ளத்தை உணர்வதற்கு அதை மூடியுள்ள பொய் உறைகளைச் சுட்டிக்காட்டி நாம் அதுவல்ல என்பர். பொய் உறைகளை அகற்றி எது அறியப்படுகிறதோ அதுவே உண்மை நிலை அதுவே “நிர்வாணா” அஞ்ஞானமே சூத்திரத்துவம், சூத்திரன் என்றால் பாமரன் உழைப்பாளி என்பது பொருள். எவனுக்கு அஞ்ஞானம் அகல வில்லையோ அவனே சூத்திரனாவன். பிரம்ம ஞானம் உள்ளவன் சூத்திரன் என்று அழைக்கப்பெற்றவனாயிருந்தாலும் பிரம்மஞானியேயாவான். வனவேடராகிய “வான்மீகர்” பிரம்மஞானம் அடைந்ததால் பிரம்ம ஞானி, என்று பேர் படைத்தார். மேற்குலத்திற் பிறந்தவனானாலும் ஆத்மானந்தத்தை அப்பியாசிக்காதவன் சூத்திரனேயாவான். நீங்கள் நேரே இலட்சியத்தை நோக்கிச் செல்வது என்று தீர்மானித்தால் அதனால் என்ன கஷ்டம் வந்தாலும் எத்தனை கசப்பான விஷயங்களை சந்திக்க வேண்டியிருந்தாலும், நேரே செல்ல உறுதி கொண்டால் எவ்வளவோ தொல்லைகள் குறையும். அச்சமின்றி உறுதியோடு நில்லுங்கள் தடைகள் எல்லாம் மறைந்துவிடும்.
“ஞானாக்கினி; சர்வகர்மாணி பஸ்மாத் குருதே,,
-கீதை
ஞானத்தீ சர்வகர்மங்களையும் பஸ்பமாக்கிவிடும். என்பதில் பரிபூர்ண மனோநாச கர்மநாசம் தானேயொழிய பிராரார்ப்தம் என்ற ஒன்றை மட்டும் விட்டு வைப்பதிற்கில்லை. தீபத்தை ஏற்றி வைத்தால் புறவிருள் ஓடிவிடுகிறாற் போல் ஞானோதயத்தின் பிரகாசத்தில் மாயையின் இருட்டு ஓடியே போய் விடுகிறது என்பதில் சந்தேகமில்லை. எமது தேச சஞ்சாரமும் (உலா வருதல்), தேக சஞ்சாரமும் செய்த காலத்தில் அதிலும் குறிப்பாக ஒலிவாங்கி முன் சொற்பொழிவு ஆற்றியதில் மந்தமாருதக் (இளந்தென்றலைப் போன்ற) கருத்துக்களும் சண்டமாருதக் (புயலைப் போன்ற) கருத்துக்களும் விரவி வந்ததும் உண்டு. அவைகளில் சில கசப்பான உண்மைகளையும் பேசியுள்ளோம்.
ஆதிசங்கரரோதனது 40வது வயதிலும்
வள்ளலாரோ தனது 50 வது வயதிலும்
பாரதியாரோ தனது 39 வது வயதிலும்
இயேசு பிரானோ தனது 33வது வயதிலும்
விவேகானந்தரோதனது 46வது வயதிலும்
இராமகிருஷ்ணரோ தனது 50வது வயதிலும்
சித்தி பெற்றார்கள் என்பது வரலாறு.
புத்தர் பேதியாலும்
ஆதிசங்கரர் மூலத்தாலும்
இராமகிருஷ்ணர் பிளவையாலும்
விவேகானந்தர் நீர்க்கோர்வை ரோகத்தாலும்
இரமணர் புற்றுநோயாலும்
இறுதியில் சித்தி பெற்றார்கள். இதுவெல்லாம் ஆராய்ச்சிக்கு உகந்தது தான். வள்ளலார் ஞானிகளுக்கெல்லாம் ஒரு தமிழ் ஞானியாக இருந்தாலும் உளம்நொந்து
களக்கமறப் பொது நடனம் நான் கண்டு கொண்ட தருணம்
கடைசிறியேன்உளம்பூத்து காய்த்த தொரு காய்தான்
விளக்கமுறப் பழுத்திடுமோ வெம்பி உதிர்ந்திடுமோ
வெம்பாது பழுக்கினும் என்கரத்தில் அகப்படுமோ
கொளக் கருது மலமாயை குரங்கு கவர்ந்திடுமோ
குரங்கு கவராது என்குறிப்பில் அகப்படினும்
துளக்கமற உண்பேனோ தொண்டையில் விக்கிக் கொள்ளுமோ
சோதி திருவுளம் எதுவோ ஏதும் அறிந்திலேனே
என்று உடலுருக தித்திக்கும் ஞானக்கனியை புசிப்பேனா என்று புலம்புவதையும் பேசியுள்ளோம். அதன்பின் அவர் வெற்றித் திருமகனாய் அந்த பேரானந்தப் பெருநிலை கிட்டிய பின் அந்த ஆனந்தத்தையும் பேசியுள்ளோம்.
காற்றாலே புவியாலே ககனமதினாலே
கனலாலே புனலாலே கதிராதியாலே
கூற்றாலே பிணியாலே கொலைக் கருவியினாலே
கோளாலே பிறவியற்றும் கொடுஞ்செயல்களாலே
வேற்றாலே எஞ்ஞான்றும் அழியாதே விளங்கும் மெய்யளிக்க
வேண்டுமேன்றேன் விரைந்தளித்தான் எனக்கே …
பின்னர் வெற்றிக்களிப்பில் ஆனந்தக் கூத்தாடியதையும் பேசியுள்ளோம்.
கி.பி 2000 க்கு முன்னர் பேசிய சொற்பொழிவுகளில் விஞ்ஞானத்தையும்,
மெய்ஞ்ஞானத்தையும் ஒப்பிட்டு பேசிய காலமும் இருந்தது. உலக மக்கள்
அனைவரையும் விஞ்ஞான உலகம் எப்படி வளர்ச்சி அடைய வைக்கிறது. எப்படி செயல்படுகிறது வானொலி, தொலைக்காட்சி நாம் பார்த்து மகிழ ஒவ்வொரு நிகழ்வுகளையும் தன் கைவசம் உள்ள தொடுதிரை கைப்பேசி கணினிகளின் பங்களிப்பு ஆகாய விமானங்கள், அதிவேக ரயில் பயணம், உலக வரலாறுகளை கண்முன்னே காட்டும் திரைப்படங்கள், காணொளிக் காட்சிகள் இரவைப் பகலாக்கும் மின் அமைப்புகள் இப்படியே பேசினாலும் அதில் மக்களுக்கு நிம்மதி கிடைத்திடுமோ? அல்லது பிறப்பிறப்பற்ற ஒரு பெருநிலை கிட்டிடுமோ? இந்த ஆன்மீக பயணம்தானே உங்களுக்கு பேரின்ப பெருவாழ்வை நல்கிடும் எனவும் ஆணித்தரமாக பேசிய காலமும் இருந்தது. அதன்படி 2000 ஆண்டிற்கு பின்னர் தற்போது வாழும் மக்கள் விஞ்ஞானப் புதுமைகளை அதிகமாக அனுபவித்து வருவதை கண்கூடாகக் காணமுடிகிறது. 2020, 2021, 2022 ஆண்டுகளில் நமது மாணவச் செல்வங்கள் தொடுதிரைக் கைப்பேசி மூலமாக இல்லத்திலிருந்தே கல்வி கற்பதை காணமுடிகிறதே. இதை விட வேறென்ன பெருமை வேண்டும். நாம் எவ்வளவு உறுதியாக ஞானக்கருத்துக்களை பேசினாலும் எழுதினாலும் உலகில் நூற்றுக்கு 99 விழுக்காட்டினர் புறத்தே தேடித்தேடி புறத்தே நாடி நாடித்தான் செல்வதை கண்கூடாக காணமுடிகிறது.
காயத்துள் இருக்கும் இறைவனை
தேயத்துள் தேடுவது அறியாமை
என்றும்,
புறத்தே தேடினால் புலப்படான் அவனை
அகத்தே தேடினால் அகப்படுவான்
என்பதையும் பேச முடிந்தது. ஆனால் மக்கள் மத்தியில் பேசத்தான் முடியுமோ? அப்படி பேசியவர்கள் பட்ட பாட்டினை நினைத்தாலே நெஞ்சம் கனக்கிறது. திருச்செந்தூரில் வடக்கு ரத வீதியில் அய்யன்பட்டி பரமஞான குருபிரான் ராஜரிஷி சங்கரசுவாமிகள் பட்டபாட்டினை குருபூஜை அழைப்பிதழ்களில் பார்த்தாலே புரியும் தானே.
இதையெல்லாம் உணர்ந்த காரணத்தினால்தான்
அறிந்தோர் உணர்வர்; உணர்ந்தோர் அறிவர் என்ற எமது
படைப்புகளில் இவ்வாறு எழுத முடிந்தது.
கனிதரும் மரங்களைத்தான் மக்கள் எத்தனை முறை தடி
கொண்டு தாக்கினாலும் கல் பல எறிந்திட்டாலும்
இனிப்பான கனிகளையே மறு ஆண்டும் கொடுத்து
மக்களை மேன்மேலும் களிப்படைய வைக்கும்
கூனியைப் போல் சகுனியைப் போல் வெறுப்படையும்
செயல்பல செய்திட்டாலும் நல்ல ஞானக்
கனி கொடுக்கும் காரணக் குருவின் குணந்தான்
எள்ளளவோ எள் முனையளவோ மாறாதையா
இப்படி எழுதிய பின்னரே சற்று எம் மனதும் ஆறுதல் அடைந்தது. ஒரே உவமையின் மூலமாக ஆன்மீகக் கருத்துக்களைக் கூற முடியுமா என பல திங்களாக காத்திருந்து ஒரு பாடலை எழுதியுள்ளோம் அதுவும் இதோ தரப்பட்டுள்ளது.
தித்திக்கும் பலாவோ வேர்களிலும் நடு
மரங்களிலும் கிளைகளிலும்
மரத்தின் மேல் நுனிகளிலும் காய்த்து கனி
கொடுக்கும் இத்தரையில் வாழும் மாந்தர்
இறைவனின் தலையின் மீதும் தோளின் மீதும்
வயிற்றின் மீதும் காலின் மீதும் பிறந்திடுவர் என
வர்ண பேதம் காட்டுவர் எத்திக்கில் எவ்வூரில்
இருந்தாலும் பலாச்சுளையின் தித்திப்பு மாறிடுமோ
அதுபோல் தேகத்தில் உள்ளிருக்கும் தேகிக்கு
சாதி மதம் கிடையாதென்று எத்திக்கும் புகழ் மணக்க
கூறிடும் எல்லாச் சமய மறைகளும்
அதனால் அருளறிவால் அறிந்துணர்ந்து
அடிசேர் ஞானம் அடைந்திடுவீர்
எமது மாணவ மணிகளை சிந்திக்க வைத்து செயலாற்றவே யாம் விரும்புகின்றோம். வீண் நம்பிக்கைகளை விதைத்து அறுவடை செய்ய விரும்பவில்லை யாம் இதை எம்பால் அருளை அள்ளிப் பருகியோர் உணர்வர், உணர்வோர் அறிந்து மகிழ்வர். ஞானம் என்றாலே அஞ்ஞானம் அகன்ற இடமென்று ஆன்றோர் கூறியதால் அஞ்ஞானத்தை எம்மால் முடிந்தவரை அகற்றி ஞான தீபத்தை ஏற்றுவதே எமது தொழில். எமது தேக சஞ்சாரமும், தேச சஞ்சாரமும் இப்புவியில் இருக்குமட்டும் எமது அருட்பணியைத் தொடர்ந்திடுவோம்.
எமது மாணவமணிகள் நலமோடு வாழ பல நல்ல மருத்துவ குறிப்புகளையும் அண்ணல் நபிகள் நாயகம் கருத்துக்களையும் பதிவு செய்து பேசியுள்ளோம். இதோ.
பாலுண்போம் எண்ணை பெறில் வெந்நீரில் குளிப்போம்
பகல் புணரோம், பகல் துயிலோம், பயோதரமும் மூத்த
ஏலஞ்சேர் குழலியரோடிளவெயிலும் விரும்போம்
இரண்டடக்கோம் ஒன்றை விடோம்இடக்கையில்படுப்போம்
மூலஞ்சேர்கறிநுகரோம் மூத்த தயிர் உண்போம்
முன் நாளில் சமைத்தகறி அமுதெனினும் உண்ணோம்
நமனார்க்கிங் கேதுகவை நாமிருக்கு இடத்தே
உண்ப திரு பொழுதொழிய மூன்று பொழுது உண்ணோம்
உறங்குவது இரவொழிய பகலுறக்கம் கொள்ளோம்
பெண்ணுறவு திங்களுக்கு ஒருகால் அன்றி மருவோம்
பெருந்தாக மெடுத்திடுனும் பெயர்த்து நீர் அருந்தோம்
வாழையினம் பிஞ்சொழிய கனியருந்தல் செய்யோம்
மண்பரவு கிழங்குகளில் கருணையன்றி புசியோம்
நண்பு பெற உண்ட பின்பு குறுநடையும் பயில்வோம்
நமனார்க்கு இங்கு ஏது அவை நாம் இருக்கும் இடத்தே
-தேரையர்.
விளக்கத் தேவையில்லை, ‘தேரையர்’ சுகாதாரவிதிகள்.
மருந்து என வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது
அற்றது போற்றி உணின்
-அய்யன் திருவள்ளுவர் – 942
உண்ட உணவு செரிப்பதற்கான கால இடைவெளி தந்து, உணவு அருந்துகிறவர்களின் உடலுக்கு வேறு மருந்தே தேவையில்லை.
காட்டில் புலி கொல்லும் வீட்டில் புளி கொல்லும்
என்ற கருத்தும் சித்தர் பெருமக்கள் எவ்வாறு வாழ்வை வளமாகவும், நலமாகவும் வாழ வேண்டும் என்பதை கண்டிப்போடு கூறியதையும் பதிவு செய்துள்ளோம். நாம் உண்ணும் உணவு இரைப்பையில் மூன்றில் ஒரு பகுதியும், மூன்றில் ஒரு பகுதி தண்ணீரும், மூன்றில் ஒரு பகுதி காற்றும் இருக்க வேண்டும் என்று திருக்குரானில் அண்ணல் நபிகள் நாயகம் கருத்துக்களையும் பதிவு செய்துள்ளோம். ஆனால் இன்று எவ்வாறு உணவு உண்டு அவஸ்தைப்படுகிறார்கள் என்பதை உங்கள் ஆய்விற்கே விட்டு விடுகிறோம்.
சோற்றில் விருப்பம் சூழ்ந்திடில் ஒருவன் துன்னும் நல்
தவம் எல்லாம் சுருங்கி ஆற்றிலே கரைத்த புளியெனப்போம்
என்று அறிஞர்கள் உரைத்திடல் கேளாயோ
என்று வள்ளலார் கூறுவதையும் சிந்திப்பீர்.
தோளுக்கு துணையிருந்து பின் அவர்களுக்கு
விலங்காகும் விலங்கு
மனத்தினராக மாறி விட்டாலும்
பாலுக்குள் நெய்போல் மறைந்துள்ள சிலபேர் உடன்
பிறப்பாய் என்றும் இருப்பேன் என்போர்உடன்
பிறந்தே கொல்லும் வியாதிபோல் இருந்திட்டாலும்
கோளியக்கம் இயல்பான இயக்க நிலைமாறி தடம்மாறி
தடுமாறி வீழ்ந்து கொடிய செயல்
பல இங்கே நடந்திட்டாலும்
ஊழினையும் புறங்காண ஓயாது உழைத்துவரும் எஃகு
உள்ளம் கொண்டோரை கோள் என் செய்யும்
விலங்குமனம் என்செய்யும் கூட இருந்தே
குழிபறிக்கும் துரோகம் என் செய்யும்
– அறிந்தோர் உணர்வர், உணர்ந்தோர் அறிவர்
தோளுக்கு துணையிருந்து அவர்களே தாளுக்கு விலங்காகும் விலங்கு மனத்தினர் எல்லா காலத்திலும் இருந்து கொண்டேதான் இருப்பர் என்பதையும் எமது நூல் வாயிலாக பதிவு செய்துள்ளோம்.
இனி சங்க காலத்தில் ஆவதைக் கணித்துக் கூறும் பாட்டுகள் உண்டா என ஆய்வு
செய்தோம்.
புறநானூறு போன்ற சங்க இலக்கியத்தில் இதோ
யாதும் ஊரே யாவரும் கேளிர்
தீதும் நன்றும் பிறர்தர வாரா
நோதலும் தணிதலும் அவந்றோரன்ன
சாதலும் புதுவது அன்றே வாழ்தல்
இனிதுஎன மகிழ்ந்தன்றும் இலமே முனிவின்
இன்னா தென்றலும் இலமே மின்னோடு
வானம் தன்துளி தலைஇ ஆனாது
கல்பொருது இரங்கும் மல்லற் பேர்யாற்று
நீர்வழிப் படூஉம் புணை போல் ஆருயிர்
முறைவழிப் படூஉம் என்பதை திறவோர்
காட்சியின் தெளிந்தனம் ஆகலின் மாட்சியின்
பெரியோரை வியத்தலும் இலமே
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே.
-புறநானூறு 192-கணியன் பூங்குன்றனார்.
உலகில் எவ்வூராய் இருந்தாலும் அது எம் ஊர்தான் இப்பூமிப்பந்தின் யாங்கனும் வாழும் மாந்தர் அனைவரும் எம் உறவினரே, தீமைகளும், நன்மைகளும், தணிதலும் பிறரால் வருவதில்லை. அவைகளெல்லாம் எம்மாலே விளைவதாம். சாதலோ இவ்வுலகில் புதிய செய்தியன்று வாழ்வது இனிது என மகிழ்வதும், வெறுத்து அதனை இன்னாதென ஒதுக்குதலும் செய்யோம்.
பெரியாற்று நீரிலே செல்லும் மிதவை போல எம் அரிய உயிரானது முறையாகச் சென்று கரை சேரும் என்பதனைத் துறவோர் காட்சியினால் தெளிந்தோம். எனவே செல்வச் செழிப்புடைய பெரியவரை மதித்தலும் செய்யோம். சிறியோரை இகழ்தலும் செய்யோம். அவரவர் நல்லுள்ளத்தின் பாங்கினை மட்டுமே யாம் கருதுவோம்.
இனிவரும் பாட்டோ நிலையாமை பற்றியது.
ஓரில் நெய்தல் கறங்க ஓர்இல்
ஈர்ந்தன் முழவின் பாணி ததும்பப்
புணர்ந்தோர் பூவணி அணியப் பிரிந்தோர்
பைதல் உண்கண் பணிவார்ப்பு உறைப்ப
படைத்தோன் மன்றஅப் பண்பிலாளன்
இன்னாது அம்ம இவ்வுலகம்
இனிய காண்க இதன் இயல்புணர்ந் தோரே.
– புறநானூறு- 194-பக்குடுக்கை நன்கணியார்.
அம்மம்மா! இந்த உலகே மிகமிகக் கொடியது எனலாம். ஒரு வீட்டில் ஓர் உயிர் பிரிந்து செல்லச் சாப்பறை ஒலித்து பிணவிழா நடக்கின்றது. இன்னொரு வீட்டிலே மங்கல ஒலி எழுப்பி மணவிழா இனிதே நடக்கின்றது. மற்றோர் இல்லத்திலோ கணவரைப் பிரிந்த மகளிர் கண்ணீர் சோரக் கலங்குகின்றனர். இவ்வாறு மகிழ்வும், துயரமும் ஒரு சேரப் படைத்து விட்டான் பண்பிலாப் படைப்பாளன். இவ்வியல்பு உணர்ந்த யாவரும் இல்லாதவைகளை சிந்தனையினின்றும் ஒதுக்கி இனியவற்றை மட்டுமே கண்டு வாழ்வீராக.
இதுவும் புறநானூற்றில் காலத்தை கணித்துக் கூறும் பக்குடுக்கை நன்கணியார் இயற்றியது தான். நிலையாமை பற்றி அவர்கள் கூறும் கருத்து நம்மை ஆழமாக சிந்திக்க வைக்கிறது?
யாதும் ஊரே! யாவரும் கேளிர்!
என்ற வைரவரிகள் குபேரபுரியாம் அமெரிக்காவில் ஐக்கிய நாட்டு சபை வளாகத்தின் நுழைவு வாயிலில் தமிழில் பொறித்து வைத்துள்ளார்கள் என்பதை அறிய முடிகிறது.
சங்ககாலத்துப் புலவர்கள் நிலையாமை பற்றியும், அகநானூற்றில் பிசிராந்தையார் என்ற பெரும்புலவர் வாழும் காலத்தில் அவரது சொந்த ஊரில் ஆன்றவிந்தடங்கிய கொள்கைச் சான்றோர்களான பேரான்ம பெருஞ்சுகம் பெற்ற ஞானிகள் வாழ்ந்ததால் எமது வாழ்வில் கவலை தலை காட்டவில்லை. என்பதையும் நினைக்கும் போதே மகிழ்கின்றோமே.
யாண்டு பலவாக நரையில வாகுதல்
யாங்காகியர் என வினவுதிர் ஆயின்
மாண்ட என் மனைவியொடு மக்களும்
நிரம்பினர்யான் கண்டனையர் எம் இளையரும்
வேந்தனும் அல்லவை செய்யான் காக்கும் அதன் தலை
ஆன்றவிந்தடங்கிய கொள்கைச்
சான்றோர் வாழும் எம் ஊரே.
– புறநானூறு : 191: பிசிராந்தையார்
இந்த முதிர்ந்த வயதிலும் நரையின்றி எப்படி வாழ முடிகிறது என கேட்கின்றீர்கள். மாட்சிமை பொருந்திய எமது வாழ்க்கைத் துணைவியார் அவர்களும் எமது பிள்ளைகளும் எமது ஊர் இளைஞர்களும், நல்லவர்கள். அதைவிட எமது ஊரில் ஆன்றவிந்தடங்கிய ஞானிகள் இருப்பதால் யாமும் நலமோடும், வளமோடும், நிம்மதியோடும் வாழ்கின்றோம் என்பார்.
சங்க காலத்தில் இது போன்ற அற்புதமான கருத்துக்கள் கொண்ட பாடலையும் பதிவு
செய்துள்ளோம்.
The winds and waves are always with the able
NAVIGATOR
“அதாவது ஒரு கப்பலை முறையாகச் செலுத்தும் மாலுமி (கப்பல் கேப்டன்) யைச் சுற்றிலும் காற்றும் அலைகளும் ஓயாது இருந்து கொண்டு தான் இருக்கும்”.
ஆனால் கப்பலில் ஏறிப்பயணம் செய்யும் பயணிகளை அக்கரையில் சேர்ப்பதே நல்ல மாலுமியின் கடமை. அலைவருகிறதே புயல் உருவாகி விட்டதே, என்ற நிலையில் அவன் கொஞ்சமும் பதறாமல் அவர்களைக் காத்து அக்கரையில் அமைதியாக இறக்கிவிடுவதே அவர் பணி.
அதுபோலவே அருளாளர்களும் அவர்களின் ஐயப்பாடுகளை எம்மிடம் தெரிவித்து பின் தெளிந்து பயணத்தைத் தொடர்கின்றனர்.
முரட்டுத் தனம் இல்லாப் பலமும்
பலவீனம் இல்லாப் பணிவும்
தொல்லை இல்லாத் துணிவும்
கோழைத் தனம் இல்லா அடக்கமும்
தற்பெருமை இல்லாப் பெருமையும்
எதையும் தாங்கும் இதயமும்
தூற்றுவோரையும் போற்றும் பக்குவமும்
செவிகசக்கும் சொற்பொறுக்கும் பண்பும்
உடும்பனைய கொள்கைப் பிடிப்பும்
இனமானம் காக்கும் எஃகு உள்ளமும்
வீணான நம்பிக்கைகளை விதைக்காமல்
சிந்திக்க வைக்கும் உயர்பண்பும்,
தீதும் நன்றும் பிறர்தர வாரா என்ற இறுதி நிலையும்
மானம் காத்திட மடிந்த மாணவன் மீதுஇருதுளி கண்ணீரும்
எந்த நிலை வந்தாலும் இயல்பு நிலை மாறா நின்ற நிலையும்
ஏற்றத் தாழ்வு வந்தாலும் சமநோக்கில் இருந்திடும் நிலையும்
யாவரும் ஏற்கும் தலைமைப் பண்பும்
இவைகள் எல்லாம் தலைமைப் பண்பு என முன்னோர்கள் வகுத்துள்ளார்கள். இதையெல்லாம் அறிந்துணர்ந்த காரணத்தினால்தான் அருளாளர்களின் ஆன்மீகப் பயணமும் இனிதே தொடர்கிறது.
“மேடையிலே வீசிய மெல்லிய பூங்காற்றும், மென்காற்றில் வருசுகமும்” என்ற இந்நூலின் சிறப்பு, எந்தப்பக்கம் புரட்டினாலும் பயனுள்ள கருத்துக்கள் வந்து கொண்டே இருக்கும். யாரும் மாற்றியோ, மறுத்தோ பேசமுடியாத கருத்துக்கள் ஏராளம் ஏராளம்.
ஊழையும் உப்பக்கம் காண உடன் வாரீர்! உடனே வாரீர் என அழைக்கிறோம்.