ஞானம்

தத்துவ ஆராய்ச்சி வழியாக இறைவனை அறியும் அறிவே ஞானம் என்று சிறப்பித்துக் கூறப்பெறுகின்றது. எல்லா வேதங்களும் பண்டைச் சாத்திரங்களும் ஞானத்தையே முத்திக்கு நேரான வழி என்று ஒரே மாதிரியாகக் கருதுகின்றன. சைவ சித்தாந்தம் இதனை பதிஞானம் என்று குறிப்பிடும். சற்குரு மூலமாகத்தான் ஞானம் பெறல் முடியும் என்பது சித்தாந்த உண்மையாகும். சற்குரு மூலமாகத்தான் ஞானம் பெற்று உய்வடைய முடியும் என்பதற்கு ஆன்ற விந்தடங்கிய கொள்கைச் சான்றோர்களை நாம் உதரணம் காட்ட முடியும். விவேகானந்தருக்கு ஒரு ராமகிருஷ்ண பரமஹம்சர். இயேசு பிரானுக்கு ஒரு யோவான் ஸ்நானகன் இப்படியே விரிக்கிற் பெருகும். அஞ்ஞானம் அகன்ற இடமே ஞானம் என்பர். “ஒழிவிலொடுக்கம்” என்னும் ஞானநூல் கூறுவதைப் பார்ப்போம். அவர் அதிகார வைப்புகளை “சரியைக் கழற்றி” என்றும், “கிரியைக் கழற்றி” என்றும், “யோகம் கழற்றி” என்றும் எழுதியுள்ளது நினைக்கற்பாலது. ஞானம் கனியைப் போன்றதல்லவா அதுதானே முத்திக்கு வித்தாகும் அருமருந்து. அதனாலன்றோ அவ்வாறு அதிகார வைப்பை எழுதியுள்ளார். தாயுமான சுவாமிகளும்.

“சும்மா இருக்க சுகம் உதயமாகுமே
 இம்மாயா யோகமினி ஏனடா?

என்று கூறுவதைக் கவுனியுங்கள் “.
“எண்ணாயிரத்தாண்டு யோகம் இருப்பினும்
கண்ணார் அமுதனைக் கண்டறிவாரில்லை
உண்ணாடியுள்ளே ஒளிபெற நோக்கில்
கண்ணாடி போல கலந்து நின்றானே”,

என்று திருமந்திரம் எழுதிய திருமூல நாயனாரும் இதைத்தானே வலியுறுத்திக் கூறுகிறார்.
சரியையின் றொழிலி வாலும் சற்கிரி
     யையினும் யோகம்
புரிதரு முயற்சியானும் பொருந்தொணா
    தென்பர் மேலோர்
உரியதே சிகனு ரைக்கு ஒருமொழி
      உண்மை யாலே
அரியமெய்ஞ் ஞான வீரங் கடைவது
      திண்ண மாமே.

என்று நிஷ்டானுபூதி சாரம் கூறுவதும் ஈண்டு கவனிக்கற்பாலதே மேலும்
நிஷ்டானுபூதி சாரம் அறுதியிட்டு உறுதியிட்டு கூறுவதையும் பார்ப்போம்.
புத்திகொள் கிரியா யோக சாதனையைப்
புரிந்திடு பவர்களிவ் வுலகி
லெத்தனை கால மிருப்பினு மீண்டு
பிறப்பொடு பிறப்பினை யடைவர்
சத்தியமாக வறிதிநீ…..

இதிலிருந்தே புரியலாம் ஞானம் அடையாதவர்கள் மீண்டும் மீண்டும் பிறந்து பிறவிப் பிணியில் உழல்வர் என்று, ஞானம் முத்திக்கு வித்தாகும். இந்நெறி சன் மார்க்கம் என்று வழங்கிடுவர். இங்ஙனமே சிறிது பார்த்து அடுத்த பகுதி புகுவோம்.