"நான் கண்ட குருநாதர்" அனுபவ உரைகள்

Dr. C. பொன்ராஜ் MS. MCH (URO)
திருநெல்வேலி

எனக்கு 25 வயது நடக்கும் பொழுது 1998ம் ஆண்டு எனது நண்பன் மற்றும் உறவினர் நடுவை இராஜாவின் மூலமாக குருநாதரின் அறிமுகம் கிடைத்தது. அந்த காலகட்டத்தில் நான் எனது மருத்துவப்படிப்பை முடித்துவிட்டு அறுவை சிகிச்சை மேல்படிப்பிற்கு தேர்வாகியிருந்தேன். அந்த காலகட்டத்தில் மிகவும் முன் கோபியாகவும், நான் செய்வது மட்டுமே சரி என்று வாதிடுபவனாகவும் ஒரு அவசர குடுக்கையாகவும் இருந்து வந்தேன். இதையெல்லாம் அறிந்தும் எனது ஆசான் திரு. இராஜா அவர்கள் அறிமுகத்தால் எனக்கு பரமஞான சற்குரு அய்யன்பட்டி சங்கரசுவாமி திருக்கோவிலில் வைத்து 05/05/1998 அன்று தீட்சை அருளினார்கள். அந்த காலகட்டத்தில் ஆன்மீகம் என்றாலே எள்ளளவும் அறியாதவனாக இருந்தேன்.
அந்த காலகட்டத்தில் குருவிடம் பாதம் பணியும் பொழுது ஒரு இனம் புரியாத அமைதியும், ஆனந்தமும் உத்வேகமும் கிடைப்பதை உணர்ந்தேன். அதற்காகவே குருநாதரை அடிக்கடி சந்தித்து கொண்டிருந்தேன். அந்த காலகட்டத்தில் மிகச்சிறிய அறுவை சிகிச்சைக்கு உதவி செய்வதே மிகக்கடினமாக உணர்ந்தேன். அதை குருநாதரிடம் கூறினேன். அதற்காக குருநாதர் எனக்கு சூரியகலை என்ற ஒரு பயிற்சியை அளித்து ஊக்கப்படுத்தினார். அந்த பயிற்சியை நன்றாக செய்ததால் எனது அறுவை சிகிச்சை செய்யும் திறமை சீராக நன்றாக வளர்ந்தது. அந்த காலகட்டத்தில் எனது தேவைகளும் குருநாதரிடம் கேள்விகளும் ஒரு வாலிபனின் தேவைக்கேற்றவாரே இருந்தது. சுத்தமான ஆன்மீகம் எந்த இடத்திலும் இல்லை இந்த கால கட்டத்தில் உமரிக்காடு சி, சரவணன் என்ற சிறந்த பயிற்சியாளரிடம் நெருங்கிய நட்பு கிடைத்தது. அவருடைய உத்வேகத்தாலும், குருநாதரின் பரிவாலும் எனது பயிற்சி சற்று பண்படத் துவங்கியது. அந்த காலகட்டத்தில் உணர்வுகளை அதிகப்படுத்த பல பயிற்சிகளை மேற்கொண்டோம். இந்த காலகட்டத்திலும் மனதைத்தாண்டி எதுவும் இருப்பதாக அறிய முயற்சிக்கவில்லை. உலகியலில் வெல்வதே குறிக்கோளாக இருந்தது.
01
2001 ஜீலை 8ம் தேதி குருநாதர் ஆசியுடன் எனது வாழ்க்கைத் துணை திருமதி காசி ராணியைக் கைப்பிடித்தேன். சென்னையில் நான் முதலில் தங்கிய வாடகை வீட்டில் குருநாதர் பால் காய்த்து எங்களை குடி அமர்த்தினார். பிறகு சிறுநீரக அறுவை சிகிச்சை மேற்படிப்பிற்காக ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்ந்து பேராசிரியர். மரு DC என்று அழைக்கப்படும் சந்திரசேகரிடம் பயின்றேன். இந்த காலகட்டத்தில் மிகுந்த மன அழுத்தத்துடன் குருநாதர் அருகில் அமர்ந்தேன். அது நொடியில் காணாமல் போவதை உணர்ந்தேன். எனக்கு இரண்டு குழந்தைகள் பிறந்தன. பல சோதனைகள் வந்தது. ஆனால் தடைக்கற்கள் அனைத்தும் குருவின் அருளால் படிக்கற்கள் ஆயின.
02
சிறுநீரக அறுவை சிகிச்சை பட்டப்படிப்பை முடித்த பிறகு திருநெல்வேலி மாவட்டத்தில் எனது மருத்துவப்பணியை துவங்கினேன். சிறந்த அறுவை சிகிச்சை நிபுணன் என்று பெயர் வாங்கினேன். இரண்டு மருத்துவமனைகளை நிர்வாகம் செய்தேன். குருநாதர் கூறிய பயிற்சிகளை செய்து வந்தேன். ஆனாலும் ஆன்மீகம் திளைக்கவில்லை, குருநாதரும் சளைக்கவில்லை.
03
2014ம் ஆண்டு வரை குருநாதர் எங்களுக்கு ஆன்மீகம் புரிய வேண்டும் என்பதற்காக அருப்புக்கோட்டை, திரு. கைவல்லியம் கந்தசாமி அவர்கள் வாயிலாகவும். முக்காணி இரா.நாராயணன் மூலமாகவும் பல சொற்பொழிவுகளை நிகழ்த்தி எங்களுக்கு ஆன்மீகத்தை உணர்த்த முயன்றார்கள். ஆனால் நான் தண்ணீரில் உள்ள கூழாங்கற்கள் போலவே இருந்து வந்தேன்.
04
2014 ஆம் ஆண்டு முதல் குருநாதர் எழுதிய புத்தகங்களை படிக்கக் கூறினார்கள். நானும் சிறிது படித்தேன். 2015இல் மிகவும் இக்கட்டான சூழலை சந்தித்தேன். அப்பொழுது குருநாதர் எழுதிய உலகம் உய்வடைய அன்றும் இன்றும் என்றும் ஞானமே என்னும் நூலில் வினையும் வினைப்பயனும் அந்தகன் எழுதிய எழுத்தை அழித்து எழுதும் எழுத்து என்ற இரு அத்தியாயத்தையும் படித்தேன். அப்பொழுது புரிந்தது நாம் எவ்வளவு பெரிய தவறை செய்து கொண்டு இருக்கிறோம் எவ்வளவு உயரிய ஆன்மீகத்தை நமது குருநாதர் போதித்துக் கொண்டிருக்கிறார்கள். நாமோ உயரிய சந்தனக்கட்டையையே எரித்து குளிர் காய்கிறோமே என்று.
05
எனது குருநாதரிடம் அவர்கள் எழுதிய கைவல்லிய நவநீதம் மூலமும் எளிய உரை என்ற நூலை மொழி பெயர்க்க அனுமதி கேட்டேன். அவரும் மெல்லிய புன்னகை புரிந்து உங்களால் முடியுமா என்றார். நானும் ஆங்கில அகராதி இருக்கிறது என்ற கர்வத்தினால் முடியும் என்றேன். குருவின் அருளினாலும், வழிகாட்டுதலினாலும் இரண்டு ஆண்டுகளில் அதை முடித்தேன். அப்பொழுதுதான் தேகம் என்றால் என்ன, தேகி என்றால் என்ன என்பது எனக்கு ஓரளவு புரிந்தது. குருநாதர் வானத்தில் உள்ள சூரியனைக் காட்டினால் நான் கீழே உள்ள பதரை நோக்கிப் போகிறேனே என்று, இப்பொழுது எனது சாதனங்களின் நோக்கம் மாறி இருந்தது. எனவே பஞ்சகோசமும் கடந்து, பாழையும் தள்ளி ஒன்றாய் நின்ற பூரணத்தைக் கண்டேன். இந்த காலகட்டத்தின் எனது உடல் உபாதைகள் கூடின. ஆனால் எனதருமை குருநாதரோ புன்னகை மாறாமல் என்னையும் எனது குடும்பத்தையும் காத்து அருளினார்.
06
ஒரு முறை எனது தந்தையார் மிகவும் கவலைக்கிடமான நிலையில் இருந்தார். அப்பொழுது குருநாதரும் பாண்டியன் அண்ணாச்சியும் எங்களது மருத்துவமனைக்கு வருகை புரிந்து எனது தந்தையின் உயிரை மீட்டுத் தந்தனர். எனது குருநாதர் கடையனையும் கடைத்தேற்றும் வல்லமை படைத்தவர் என்பதற்கு நான் ஒரு அருமையான எடுத்துக்காட்டு அவர் கல்லடி படும் மரம். கல்லடிக்கு அஞ்சாமல் பழத்தைக் கொடுப்பது போல் தன்னை நாடி வந்தவர்களுக்கு இளைபாறுதலும் சங்கடங்களையும் குறைப்பார். எனது சோதனைக் காலத்தில் சிறுகணம் கூட என்னை விட்டு விலகாமல் காத்தார். அவர் முக்காலத்தையும் உணர்ந்தவர் என்பதை பலமுறை எனது வாழ்வில் உணர்த்தியவர். இந்தக் கோர நோய் கொரோனா காலகட்டத்திலும் எங்கள் உணர்வாளர்களோ அல்லது அவர்களின் குடும்பத்தினரோ யாரும் பாதித்திடாத வண்ணம் காத்து அருளினார். இந்த கொரோனா காலத்தில் ஒருமுறை எனது உடல்நிலை சீர்கெட்டு செயற்கை சுவாசம் தேவைப்படும் என்ற அளவில் இருந்த பொழுது, எனது உயிர் காப்பான் தோழர்கள் மரு.சுபகணேஷ் மற்றும் ஃபிராங்க் எனது ஆசானிடம் கூறி மன்றாடினார்கள். நான் ஒரு நிமிடத்தில் எழுந்து உட்கார்ந்தேன், இது மிகவும் வியப்புக்குரிய அதிசயம். எனது குருநாதர் நிகழ்த்தியது.
07
ஒரு முறை பெண்களுக்கு அடியிறங்குதல் என்ற நோய்க்கான லேப்ரோஸ்கோபி அறுவை சிகிச்சை பற்றி யோசித்துக் கொண்டே குருநாதர் அருகில் தியானம் செய்தேன். அப்பொழுது அந்த அறுவை சிகிச்சை முறையில் எந்த இடத்தில் மாற்றி அறுவை சிகிச்சை செய்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது. நானும் அவ்வாறே செய்து அந்த நோயை குணப்படுத்தினேன். சரியாக ஆறு மாதம் கழித்து ஒரு அறுவை சிகிச்சை கருத்தரங்கில் ஒரு அமெரிக்க அறுவை சிகிச்சை நிபுணரிடம் நான் செய்ததை கூறியபோது அவர் ”’VERY GOOD WE ALSO FOLLOW THE SAME” என்று கூறினார். இதன் மூலம் நமது மகான் ஒரு அறிவு கருவூலம் என்பது தெள்ளத் தெளிவாகிறது. எனது குருநாதரும் பாண்டியன் அண்ணனும் செய்யும் சேவையானது மனிதனை தெய்வமாக்கும் சேவை. இந்த சேவை செய்வதற்கு அவர்களுக்கு மிகவும் பெரிய மனமும் மனதில் இடம் இருக்கிறது. அவர்களுக்கு முன் நான் இருக்கும் போது கூனி குறுகி என்னை உணருகிறேன். இந்த மனிதர்கள் மீது எவ்வளவு கனிவு இருந்தால் தங்களுக்கு ஏற்படும் கஷ்டங்கள் அவமானங்களை சகித்துக் கொண்டு இந்த மனிதர்களை இறைவனாக்கும் பயிற்சியை கற்றுக் கொடுக்கிறார்கள். இவர்கள் போற்றப்பட வேண்டியவர்கள் என்பதில் சிறிதளவும் ஐயமில்லை.
08
நன்றி!