"நான் கண்ட குருநாதர்" அனுபவ உரைகள்

R. நாராயணன்
முக்காணி
+91 94880 70415

அடியேனுக்கும் நான் கண்ட குருநாதர் என்ற தலைப்பில் அனுபவங்களை எழுத வாய்ப்பு அருளியதற்கு ஞானவள்ளல் மகாகனம் குருநாதர் அவர்களுக்கும், இந்த நூல்உருவாக பெரிதும் காரணமாக இருந்த சகோதரர் கனம் பொருந்திய அறவாழி அவர்களுக்கும்அடியேனின் நன்றி கலந்த வணக்கத்தை முதலில் சமர்ப்பிக்கின்றேன். ஒவ்வொரு உணர்வாளர்களும் நம் குருநாதரிடம் கண்டு உணர்ந்த அனுபவங்களையும், அற்புதங்களையும் கூறி ஒரே நூலில் பதிவு செய்வது என்பது கடல் நீர் அனைத்தையும் ஒரு கமண்டலத்தில் அடைக்க நினைப்பதற்கு ஒப்பாகும். இருந்தாலும் குருவின் சிறப்பையும் மாண்பையும் சீடன் வெளிப்படுத்துவது, குருநாதர் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் சீடன் தனக்கு கிடைத்த பாக்கியமாகவும் பெருமையாகவும் நினைக்கிறான்.
எவருடைய அருளால் யானே எங்குமாம் பிரமம் என்பால் அவருடையப் புவனம் எல்லாம் கற்பிதம் என்றறிந்து
சுவரிடை வெளிபோல் யான் என் சொரூப சுபாவம்
ஆனேன் அவருடையப் பதுமபாதம் அநுதினம் பணிகின்றேனே.
– கைவல்லிய நவநீதம் (பாயிரம் -3)
அடியேனுக்கு விவரம் தெரியாத பாலர் பருவத்தில் பஜனைக்கு செல்வது, பிறகு வாலிப பிராயத்தில் ஆலயத்தில் உழவாரப் பணி செய்வது,பிறகு வாரம் ஒரு முறை ஊர் ஊராக நடைபெறும் தெய்வீக சத்சங்கத்தில் கலந்து கொள்வது. பிறகு விநாயகர் சதுர்த்தி திருநாளில் விநாயகர் உருவச் சிலையை எடுத்துக் கொண்டு தெருவெல்லாம் சுற்றுவது, பிறகு வருடத்திற்கு ஒரு முறை தமிழ்நாட்டில் உள்ள ஆலயங்களுக்கு 3 நாட்கள் ஆன்மீக பயணம் செய்வது, சில ஆதினங்களை சந்திப்பது, மடங்களுக்கு செல்வது, சந்நியாசிகளை தரிசனம் செய்வது இதுதான் ஆன்மீகம் என்று நினைத்து இருந்தேன். கோவில் கொடைவிழா காலங்களில் சாமி ஆடுபவர்களை எல்லோரும் மரியாதையாக வணங்குவார்கள். ஆனால் விழா காலம் முடிந்த பிறகு சாமியாடிகளின் நடை, உடை, பாவனைகளை பார்க்கும் போது அவர்களுடைய வாழ்வில் நிறைவு இல்லை, தெளிவு இல்லை, சுகம் இல்லை, ஆனந்தம் இல்லை. மரண பயம் மட்டும் தான் இருந்தது. இதுதான் ஆன்மீகமா? என எனக்குள் கேள்வி எழுந்தது. ஆலயங்களுக்கு சென்றால் சொற்பொழிவாளர்கள் நாயன்மார்கள் கதைகளை கூறுவார்கள். அவர்கள் கூறும் கதைகள் நடைமுறைக்கு ஒத்துவராத தன்மையாக இருக்கிறதே. அது சம்பந்தமாக அவர்களிடம் கேள்வி கேட்டால், அப்படியெல்லாம் கேட்க கூடாது. நம்பிக்கைதான் ஆன்மீகம் என்று கூறுவார்கள். அடியேனின் மனம் அதை ஏற்றுக்கொள்ள மறுத்தது. எனக்குள் ஒரு ஆன்மீக தாகம் என்னையும் மீறி இருந்து கொண்டுதான் இருந்தது. இது சம்பந்தமாக ஏரல் கிளை ஞானசபைத் தலைவர் கனம் பொருந்திய சின்னத்துரை அண்ணாச்சியும் அடியேனும் அடிக்கடி பேசிக் கொள்வோம். பிறகு அவர்கள்தான் சொன்னார்கள் திருச்செந்தூரில் மூவர் சமாதிக்கு பின்னால் சங்கர சுவாமி ஒடுக்கம் இருக்கிறது. அங்கே முழுநிலவு நாளில் குரு தங்கசுவாமிகள் தீட்சை வழங்குகிறார்கள். நான் சென்ற மாதம் தீட்சை பெற்றேன். நீங்களும் வாருங்கள் எல்லா சந்தேகங்களுக்கும் விடை கிடைக்கும். அதற்கு முன் செந்தில்வேல் என்ற பொறியாளரை பாருங்கள் என்று கூறினார்கள். நமது சபையில் கரண்ட் என்று செல்லமாக அழைக்கும் செந்தில்வேல் அவர்களை சந்தித்தேன். அவர்கள் அடியேனிடம் சில கேள்விகளை கேட்டு தெளிவுபடுத்தினர்கள்.
01
அடியேன் நம் குருவை தரிசனம் செய்ததும் குண்டலினி ஞானதிருவடி உபதேசம் (தீட்சை) பெற்றதும் ஒரே நாள், அந்த நன்நாள் பொன்நாள் 16.08.2000 அன்றுதான் அடியேனின் அறிவு கண் திறக்கப்பட்டது. நான் யார்? இந்த பிறவியின் நோக்கமென்ன? மனித பிறப்பின் சிறப்பென்ன? மற்ற சீவராசிகளுக்கும் நமக்கும் என்ன வித்தியாசம் அதுவும் உழைக்கிறது, உண்ணுகிறது, உறங்குகிறது, பாசம் வைக்கிறது, இயற்கையோடு இணைந்து வாழ்கிறது. வியாதியில் அதிகம் பாதிப்பது இல்லை. ஆனால் மனிதனும் உழைக்கிறான், உண்ணுகிறான், உறங்குகிறான், மரணம் நிச்சயம் என்று தெரிந்தும் மரணத்தைக் கண்டு அஞ்சுகிறான். வியாதியில் அவஸ்தைப்படுகிறான். எதைக் கண்டாலும் அச்சப்படுகிறான். அறியாமையில் உழலுகிறான். எல்லா வசதி வாய்ப்புகளையும் உருவாக்கி கொண்டாலும் மன வேதனையும் கூடிக் கொண்டே இருக்கிறது. சரி மனவேதனை யாருக்கு இருக்கிறது என்று ஆய்வு செய்தால் படித்தவர், படிக்காதவர், ஏழை, பணக்காரர், அதிகாரம் அந்தஸ்து படைத்தவர், செல்வாக்கு உள்ளவர் என யாரையும் மன வேதனை விட்டு வைக்கவில்லை. மனக்கவலையை மாற்ற முடியுமா? யாரால் மாற்ற முடியும்? உலகம் என்றால் என்ன? எது இன்பம் எது துன்பம்? எது நிலையானது? எது நிலையற்றது? உடல் என்றால் என்ன? மனம் என்றால் என்ன? உயிர் என்றால் என்ன? பள்ளி கல்வி புள்ளி கல்வி என்றால் என்ன? அறிவு என்றால் என்ன? பொய்யறிவு யாது? மெய்யறிவு யாது? புறவிழிப்பார்வை என்றால் என்ன? அகவிழிப்பார்வை என்றால் என்ன? ஞானம் என்றால் என்ன? அஞ்ஞானம் என்றால் என்ன? கோபத்தீ, காமத்தீ, ஞானத்தீ என்றால் என்ன? நம் அறிவு விஞ்ஞான புதுமைகளை செய்து நம்மை மிரள வைத்தாலும் இந்த அறிவின் மூலம் சாந்தம், நிறைவு, தெளிவு, சுகம், நிலைத்த ஆனந்தம், பிறவிப் பிணியை போக்கும், தன்மை இவைகளை கொடுக்க முடியவில்லையே ஏன்? ஏன் பிறவிப் பிணியை போக்க வேண்டும்? ஒழுக்கம் என்றால் என்ன? நம் முன்னோர்கள் நமக்கு வழிகாட்டிய மேலான நூலின் தன்மை யாது? அவைகளை உள்ளபடி உள் பொருளை புரிந்து கொள்வது எப்படி? பரிபாசை என்றால் என்ன? இந்த ஞான வழி எல்லோருக்கும் (சாதி, மதம், இனம், மொழி, தேசம் கடந்து) சாத்தியமா?
02
ஆலயம் என்றால் என்ன? இறைவன் எங்கு இருக்கிறான்? அறம் என்றால் என்ன? கொடி மரம் என்றால் என்ன? பலிபீடம் என்றால் என்ன? உழவார பணி என்றால் என்ன? இருமுடி என்றால் என்ன? துள்ளுமரி பலியிடுதல் என்றால் என்ன? தீர்த்தம் ஆடுதல் என்றால் என்ன? நெற்றிக்கண் என்றால் என்ன? சரியை, கிரியை யோகம், ஞானம் என்றால் என்ன? யோகி என்பவர் யார்? சித்தர்கள் யார்? அவர்கள் எப்படிப்பட்டவர்கள்? ஞானி என்பவர் யார்? அடக்கம், முக்தி, வீடுபேறு என்றால் என்ன? முக்தி என்பது உடலோடு உயிர் இணைந்திருக்கும் போது அனுபவிப்பதா அல்லது உடலை விட்டு உயிர் பிரிந்த பிறகு அனுபவிப்பதா? ஆன்மீகம் என்றால் வயது முதிர்ந்த பிறகு தெரிந்து கொள்வதா அல்லது இளமையிலே உணர்ந்து கொள்வதா? சிற்றின்பம் என்றால் என்ன? பேரின்பம் என்றால் என்ன? உணர்வு என்றால் என்ன? உணர்ச்சி என்றால் என்ன? சீவசிருஷ்டி என்றால் என்ன? ஈஸ்வர சிருஷ்டி என்றால் என்ன? உயிர் பிறக்கும் இடம் எது? உயிர் ஒடுங்கும் இடம் எது? அமுததாரனை என்றால் என்ன? வேதாந்தம் தெரிந்தால் மட்டும் போதுமா அல்லது அதை சற்குருவின் மூலம் உணரவேண்டுமா? எல்லா சமய நூல்களின் சாராம்சம் என்ன? நரை, திரை, மூப்பு, பிணி சாக்காடு என்பதை உடல் சார்ந்து சிந்திக்க வேண்டுமா? உயிர் சார்ந்து சிந்திக்க வேண்டுமா? மனிதனின் இறுதிநிலை எப்படி இருக்கும். புனிதரின் இறுதிநிலை எப்படி இருக்கும்? ஞானிகளுக்கு பிணிகள் வருமா வராதா? வந்தால் அதை ஞானிகள் எப்படி பார்க்கிறார்கள்? இந்த உலகம் ஞானிகளை எப்படி பார்க்கிறது? உலகம் எப்படி பார்த்தாலும் ஞானிகள் உலகம் உய்வடைய தன்னை எப்படி அர்ப்பணிக்கிறார்கள்? காரண,காரிய குரு என்றால் என்ன? உடல் தத்துவம் யாது? எவ்வாறு பிறவி உண்டாகிறது? வினை என்றால் என்ன? நல்லவர்களாக வாழ்ந்தால் மட்டும் போதாதா! குருநாதர் தொடர்பு தேவையா ? குரு நம் உடலை நோக்குகிறார்களா, நம் உள்ளத்தை நோக்குகிறார்களா? குருநாதர் செய்வதை செய்ய வேண்டுமா? அல்லது சொல்வதை செய்ய வேண்டுமா? தீட்சை என்றால் என்ன? தீட்சை வகை யாது? தீட்சைக்கு முன் எப்படி இருந்தோம்? தீட்சைக்கு பின் எப்படி இருக்கிறோம்? இந்த ஞான வழி மனிதன் வாழ்வில் அவசியமா?
03
குருநாதர் நம்மை நான்மறை கற்க வழிகாட்டுகிறார்களா? “நான்” மறைய கற்க வழிகாட்டுகிறார்களா? நம் குருவின் ஆன்மீக பயணம் இல்லறம் சார்ந்ததா? துறவறம் சார்ந்ததா? எது உண்மையான துறவறம்? குருநாதர் கற்றுத்தரும் ஞானகல்வி நம்பிக்கை மட்டும் ஊட்டுகிறதா அல்லது சிந்திக்கவும் வைக்கிறதா? நம் அறியாமையின் காரணமாக ஞானக் கல்வியில் முழுமை பெறாமல் குருநாதரை விட்டு விலகி சென்றால் அது நமக்கு பாதகமா, சாதகமா? இப்படிப்பட்ட பல கேள்விகளுக்கும் இன்னும் பல எழுதப்படாத கேள்விகளுக்கும் அடியேனுக்கு விளங்க வைத்து தெளிவையும், திடத்தையும் வாரிவாரி வழங்கி கொண்டிருக்கும் குணகுன்றான ஞானவள்ளலை போற்றி அவர்களின் திருக்கரத்தால் ஸ்பரிசித்தும், திருப்பார்வையால் நோக்கியும், திருஎண்ணத்தால் உணர்த்தியும் எல்லா சீடர்களுக்கும் வழிகாட்டி கொண்டிருக்கும் ஐயனை மனம் மொழி மெய்யால் வணங்குகிறேன். ஆரம்ப காலங்களில் குருநாதர் முழுநிலவு நிகழ்ச்சி முடிந்த பிறகு சங்கர சுவாமிகளுக்கு பூசையில் வைத்த வெற்றிலையை போடுவது வழக்கம். அடியேன் அருகில் இருந்தேன். அப்பா என்ன தொழில் செய்கிறார்கள் என குருநாதர் அவர்கள் கேட்டார்கள். வெற்றிலை விவசாயம் என்றேன். அடியேனிடம் ஒரு வெற்றிலையை கொடுத்து இந்த வெற்றிலை ஆண் வெற்றிலையா, பெண் வெற்றிலையா என்று கேட்டார்கள். அடியேனுக்கு ஒன்றும் புரியவில்லை. வெற்றிலையில் இப்படி ஒரு தன்மை இருக்கிறதா என வியந்தேன். குலதொழிலாக பல ஆண்டுகள் செய்து வரும் வெற்றிலை பற்றியே நமக்கு ஒன்றும் தெரியவில்லையே. நாம் என்ன வாழ்க்கை வாழ்கிறோம். எதை செய்தாலும் அதை முழுமையாக தெரிந்து புரிந்து அறிந்து செய்தால்தான் சிறப்பு, நிறைவு என்பதை அன்று கற்றுக் கொண்டேன். பிறகு அதற்குரிய விளக்கத்தை கொடுத்து அடியேனுக்கு புரிய வைத்தார்கள்.
04
அடியேனுக்கு குருநாதர் அவர்கள் பல பயிற்சிகளை தந்தருளினார்கள். அதில் பல அனுபவங்கள் ஆனந்தத்தை கொடுத்தது. அதில் ஒரு அனுபவத்தை மட்டும் கூற விரும்புகிறேன். சூரிய கலை பயிற்சி செய்து கொண்டிருக்கும் போது உடல் ரீதியாக ஒரு மாற்றத்தை உணர்ந்தேன். என்னவெனில் எனது உடம்பில் சரிபாதி வலது பக்கம் உள்ளங்கால் முதல் உச்சந்தலை வரை வேர்க்க ஆரம்பித்தது. இடது பக்கம் உடலில் சரிபாதி சராசரியான வெப்ப நிலையை உணர்ந்தேன். கையால் இரண்டு பக்கமும் தொட்டு பார்த்தேன். வியந்தேன். குருநாதர் நமக்கு தரும் பயிற்சியின் ஆற்றலை உணர்ந்தேன். குருநாதர் நமக்கு ஒவ்வொரு பயிற்சிகளையும் அனுபவரீதியாக உணர்த்தி வழிகாட்டுகிறார்கள். எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் அடியேன் போன்று எத்தனையோ சீடர்களுக்கு அடுத்த நிலைக்கு கொண்டு செல்லும் ஞானதேசிகரை எப்படி வார்த்தைகளால் அளவிடமுடியும். இந்த அனுபவத்தை குருநாதரோடு பகிர்ந்து கொள்ளும் போது வழக்கம் போல் புன்முறுவல் புரிந்தார்கள். அந்த புன்முறுவல் அடியேனுக்கு இது ஆரம்பம்தான், இன்னும் எவ்வளவோ பேரானந்த நிலைகள் இருக்கிறது என்பது போல் உணர்த்தியது. குருநாதர் கற்றுத்தரும் இந்த ஞானகல்வியை கூற வேண்டுமானால் அய்யன் திருவள்ளுவரின் குறள்தான் நினைவுக்கு வருகிறது.
அறிவாற்றங் காக்குங் கருவிசெறுவார்க்கும்
உள்ளழிக்க லாகா அறன்.
– குறள் : 421
உரை : அறிவானது எந்த ஓர் அழிவும் ஏற்படாத விதத்தில் பாதுகாக்கும் கருவியாகும். அது எப்படிப்பட்ட பகைவராலும் சீரழிக்க முடியாத காவற் கோட்டையாகும்.
அடியேன் குருநாதரோடு புளியநகரில் தள்ளுவண்டியில் அமர்ந்தும், பஸ் ஸ்டாப்பிலும், நடுவகுறிச்சி சினிமா தியேட்டர் அருகிலும், ஏரல் ஆற்று மணலிலும் சந்தித்த சந்திப்பை என்னும் போதெல்லாம் ஆனந்தம் பெருகும். குருநாதரோடு இணைந்து இருக்கும் ஒவ்வொரு கணமும் இந்த கல்லை செதுக்கி சரியான உருவத்தை உருவாக்க முயற்சி செய்து கொண்டே இருப்பார்கள். பயிற்சிகள்தான் நிறைவுக்கும் தெளிவுக்கும் வழிகாட்டும் என்பார்கள்.
05
அருட்தந்தையின் அற்புதத்தை கூற வேண்டுமாயின் எனது தந்தையாரை பற்றி கூறியாக வேண்டும். அடியேனுக்கு 1994 -ல் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை கிடைத்தது. எல்லோருடைய தந்தை போன்றே எனது தந்தையும் எங்கள் குடும்ப நலனுக்காக அல்லும் பகலும் கூலி வேலைக்குச் சென்று கஷ்டப்பட்டதை உணர்ந்த அடியேன், இனி அப்பா வேலைக்குச் செல்லக்கூடாது அவர்களை வீட்டில் இருக்க வைத்து சுகமாக கவனித்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் 2002-ல் அவர்களை வேலைக்குச் செல்ல வேண்டாம் என வேண்டி அவர்களை வீட்டில் இருக்க வைத்து விட்டேன். அந்த நேரத்தில் அந்த சம்பவம் எனக்குப் பெருமையாக இருந்தாலும் பிறகுதான் எனக்குத் தெரிந்தது. நான் செய்தது பெரும் தவறு என்று காரணம் வேலைக்கு அப்பா செல்லக்கூடிய காலத்தில் அவர்களுக்கு சைக்கிள் ஓட்டத் தெரியாது தினமும் கிட்டதட்ட 15 கிலோ மீட்டர் நடந்தே வேலைக்குச் சென்று வருவார்கள். இதனால் அவர்கள் உடல் நலம் சீராக இருந்தது. 2006- ல் அப்பாவின் உடல் நலத்தோடு மனநலமும் குன்றியது. காரணம் வீட்டில் முழுமையாக இருந்ததால் யார் எதை செய்தாலும் குற்றம் காண்பது, குறை கூறுவது என ஆரம்பித்து அவர்களால் எங்கள் வாழ்வில் புயல் வீச ஆரம்பித்தது. எல்லோரும் நிம்மதி இழந்தோம். அவர்கள் செய்யக்கூடிய காரியம் சிறுபிள்ளைத்தனமாகவும் அதை அவர்கள் அறியாமல் செய்வது போலவும் இருந்தது. எந்த அளவிற்கு அன்பும் பாசமும் வைத்திருந்தேனோ அந்த எண்ணம் மாறி வெறுப்பு ஏற்பட்டது. அப்போது என் மனதில் ஒரு சிந்தனை உருவாகியது. நம் தந்தை இப்படி இருக்கிறார்களே என்ற நினைப்பைவிட ஒவ்வொரு மனிதரும் தன்னுடைய இறுதி காலங்களில் இப்படித்தானே உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் வேதனைப்படுகிறார்கள்.
06
படித்தவர், படிக்காதவர் ஏழை, பணக்காரர், அதிகாரம் உள்ளவர், அதிகாரம் இல்லாதவர், உயர்பதவியில் இருப்பவர், உயர் பதவியில் இல்லாதவர் என எந்த பாகுபாடுமில்லாமல் இந்த வேதனை தொற்றிக் கொள்வதை நாம் பார்க்கிறோம். மரணத்தை கண்டு அஞ்சுகிறார்கள் அனைவரும். மரணத்திற்கான கணம் யாருக்கும் நிச்சயிக்கப்படுவதில்லை. ஒவ்வொரு கணமும் மரணத்திற்கான கணம்தான். இந்த உண்மை தெரிந்தாலும் மரணமில்லா பெருவாழ்வை யாரும் தேடுவதில்லை. தனக்கு உள்ளே கடவுள் இருப்பதை மரண தருவாயிலும் மனிதன் அறிந்து கொள்வது இயலாது. ஏனெனில் அவன் மனதில் அப்போது வலியும், துயரமும் நிறைவேறாத ஆசைகளும் நிரம்பி இருக்கின்றன. உடலில் வரும் நறுமண வாசனை வேறு எங்கோ இருந்து வருகிறது என நினைத்து அறியாமல் வெளியே தேடி அலையும் கஸ்தூரி மான் போல் அவனுக்குள்ளும் கடவுள் இருக்கிறார். ஆனால் அவரை தேடி வெளியே அலைகிறான். கானகத்திலும், கல்லிலும், செம்பிலும், வானிலும் எங்கோ தூரத்திலும் இருப்பதாகவும் தேடி அலைகிறான். மனதுக்குள் அமைதியாகச் சலனமின்றி வீற்றிருக்கும் தெய்வீகத்தை அவன் எட்டி கூடப் பார்ப்பதில்லை. தேடுதல் என்று சொன்னாலே வெளியே என்று எண்ணுகிறான் உள்ளே என்று உணர்வதில்லை. நமக்கும் நாளை இந்த நிலைதானா! என மனம் பதைப்பதைத்தது. அதுமட்டுமல்ல அப்பாவின் தினசரி தொந்தரவுகள் எல்லாம் சேர்ந்து என்னை உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் மிகவும் பாதித்தது. பாதிப்பின் விளைவு உடல் நடுக்கம், பசியின்மை, தூக்கமின்மை, காண கூடாத ஒன்றை கண்ட ஒருவர் ஈரகுலை நடுங்கியது என்பார். அந்த ஈரக்குலை நடுக்கத்தை ஒவ்வொரு கணமும் என்னால் உணர முடிந்தது. இந்த நிலை சரியாகிவிடும் என நினைத்தேன் தொடர்ந்து கொண்டிருந்தது சில தினங்கள். இந்த நிலை மாற மருத்துவரிடம் சென்றால் தீர்வாகாது. இது மனம் சார்ந்த பாதிப்பு என முடிவு செய்து பேருந்தில் ஏறி புண்ணியரை நாடி புளிய நகர் வந்தேன். குருநாதரை சந்தித்து ஆசிபெற்ற அடியேன் நிலையை விவரமாக எடுத்து கூறினேன். குருநாதர் அவர்கள் எல்லா விவரங்களையும் முழுமையாக கேட்டுக் கொண்டு, இது எல்லா குடும்பத்திலும் இருப்பதுதான் என்று பாமரத்தன்மையில் பேசிக் கொண்டிருந்தார்கள் பிறகு அவர்கள் அன்று சொன்ன வார்த்தைகள் என் காதில் இன்றும் ஒலித்து கொண்டிருக்கிறது. அது யாதெனில் நாம் பெற்றோரிடம் அதிக அன்பும், பாசமும் வைத்திருப்போம். அவர்களும் அப்படியே. எதிர்பாரா நேரத்தில் நாம் அவர்களை இழக்க நேரிடும் போது அந்த இழப்பை நம்மால் தாங்க முடியாது. ஆகவே அவர்களுடைய கடைசி காலத்தில் அவர்கள் செயல்கள் நமக்கு அவர்கள் மீது வெறுப்பை வழங்கும் சூழ்நிலை ஏற்படும். அப்போது நம் மனம் எதையும் தாங்கிக் கொள்ளும் சக்தியை பெறுகிறது என்றார்கள்.
07
இப்படி பேசிக் கொண்டிருக்கும் போதே என்னுடைய உடலிலும், மனதிலும் சில தினங்களாக குடிகொண்டிருந்த பதட்டம், பசியின்மை, தூக்கமின்மை, ஈரக்குலை நடுக்கம், ஒவ்வொரு கணப்பொழுதும் இருந்த அந்த நிலை, கொஞ்ச கொஞ்சமாக குறைவதை என்னால் உணர முடிந்தது. கொஞ்ச நேரத்தில் அந்த துயரத்திலிருந்து முழுமையாக விடுதலை பெற்றதை உணர்ந்தேன். என்ன அதிசயம்! என்ன அற்புதம்! குருநாதரிடம் ஐயா என்னுடைய பதட்டம் நீங்கி விட்டது இப்போது என சொன்னேன். அப்போதும் கூட குருநாதர் அவர்கள் அப்படியா! என ஒன்றுமே அறியாதவர் போல் தன்னை காட்டிக் கொண்டார்கள். இப்படிபட்ட ஒரு மாமனிதரை அடியேன் இதுவரை கண்டதில்லை. அப்பொழுதும் கூட எனக்குப் பயம் நீங்கவில்லை. ஐயா, இன்று இரவு தூக்கம் வரவில்லை என்றால் என்ன செய்வேன் என கேட்டேன். குருநாதர் நினைத்தால் உனக்கு எல்லாம் சரியாகி விட்டது நீ கவலைப் படவேண்டாம் என்று கூறியிருக்கலாம். என் அறியாமையை கண்டும் கூட அப்படியா! எனக் கேட்டுக் கொண்டு மாத்திரை எழுதி தந்தார்கள். புறப்படும் நேரம் வழக்கம் போல் குருவின் துணைவியார் கனி அம்மா அவர்கள் வந்தவர்களை மனமுவந்து பலகாரங்களை தந்து அம்மையார் மகிழ்ச்சி கொள்வது வழக்கம். அது போல் அடியேனுக்கு தந்தார்கள் உண்டேன். அங்கிருந்து குருவிடம் விடை பெற்று சென்றேன். அன்று இரவு அந்த மாத்திரை பயன் இல்லாமல் போனது. மீளா அடிமை உமக்கே ஆளாய்ப் பிறரை வேண்டாதே மூளாத் தீப்போல் உள்ளே கனன்று முகத்தால் மிக வாடி ஆளாய் இருக்கும் அடியார் தங்கள் அல்லல் சொன்னக் கால் வாளாங்கு இருப்பீர் திருவாரூரில் வாழ்ந்த போதீரே. என்ற பாடல் தான் அடியேனுக்கு நினைவுக்கு வருகிறது. – சுந்தரர் தேவாரம் 7.95 நூற்றுக்கணக்கான நூல்களை பல ஆண்டுகள் படித்து பெறமுடியாத ஆன்மீக உணர்வை ஞானிகளோடு சில மணித்துளிகள் இணங்கி இருந்தால் பெறமுடியும் என்பதை அடியேன் அன்று நன்கு உணர்ந்தேன். ஞானிகளிடம் அஞ்ஞானிகள் தன் பாவத்தைப் போக்கிக் கொள்ள வேண்டும். அதனால் ஞானிகள் பூரணத்துவம் ஒருபோதும் குறையாது என்பதையும் அடியேன் அனுபவத்தில் உணர்ந்தேன்.
புணர்ந்த பாவமெல்லாம் பரிபூரணம்
உணர்ந்த ஞானி விழிபட ஓடுமே.

-சசிவன்ன போதம் (பாடல் : 2)
அடுத்த நிகழ்வு யாதெனில் ஞானிகள் முக்காலமும் உணர்ந்தவர்கள் என்பதை உணர வைத்த அற்புதம்! அதிசயம்! அய்யன் திருவள்ளுவர் 2051 ம் ஆண்டு மேழம் திங்கள் (சித்திரை மாதம்) 10-ம் நாள் (23 . 04. 2020) வியாழக்கிழமை சீர்மிகு மேல்மருவத்தூர் ஞானசபை கிளை தியான அரங்க திறப்பு விழா என்பதை யாவரும் அறிந்ததே. விழாவிற்கு வேண்டிய ஏற்பாடுகள் தலைமை சபையில் நடந்து கொண்டிருந்தது. ஒவ்வொரு சபை திறப்பு விழா முன்னிட்டும் அந்த சபையில் கல்வெட்டு வைப்பது வழக்கம்.
08
அந்த கல்வெட்டில் திறப்பு விழா தேதி சில மாதங்களுக்கு முன்னே பொறிக்கப்பட்டு தலைமை சபையில் தயார் நிலையில் வைத்திருப்பது வழக்கம். அதுபோல் மேல்மருவத்தூர் சபைக்கு உண்டான கல்வெட்டை வாங்குவதற்காக குருநாதர், உமரிக்காடு ஞானசபைத் தலைவர் கனம் பொருந்திய முருகேசன் மற்றும் அடியேன் மூவரும் தூத்துக்குடிக்கு சென்றோம். நாங்கள் சென்றது கொரோனா ஊரடங்கு அறிவிப்புக்கு முன்னால் என்பது குறிப்பிடத்தக்கது. வழக்கம் போல் கல்வெட்டில் உள்ள பதிவை வாசித்து பார்த்தேன். திறப்பு விழா பொறிக்கப்பட்டு தேதி மட்டும் பொறிக்கப்படவில்லை. இப்படி எந்த ஞானசபை கல்வெட்டிலும் தேதி குறிப்பிடாமல் இருந்ததில்லையே என நினைத்துக் கொண்டு, அங்கு வைத்தே குருநாதரிடம் ஐயா, தேதி பொறிக்கப்படவில்லையே என கேட்ட போது, குருநாதர் அவர்கள் அன்றைக்கு போவதற்கு எப்படி வாய்ப்பு இருக்கிறதோ தெரியவில்லை, அப்புறம் அங்குள்ள ஆளை வைத்து தேதியை போட்டுக் கொள்ளலாம் என்ன, என்று அவர்கள் பாணியில் சொன்னார்கள். கல்வெட்டைக் காரில் ஏற்றி தலைமை சபையில் கொண்டு சேர்த்தோம். இருந்தாலும் என் ஐயப்பாடு தீரவில்லை. எல்லா சபை கல்வெட்டிலும் முன்கூட்டியே தேதியை பதிவு செய்யும் குருநாதர் ஏன் மேல்மருவத்தூருக்கு மட்டும் முன்கூட்டியே தேதி பதிவு செய்யவில்லை என குழம்பி கொண்டிருந்தேன். பிறகுதான் கொரோனா ஊரடங்கு அறிவிப்பு வருகிறது. ஞானியின் சிறப்பை தாயுமான சுவாமிகள் இவ்வாறு கூறுவார்.
காலமொரு மூன்றுங் கருத்திலுணர்ந் தாலுமதை
ஞாலத் தனக்குரையார் நல்லோர் பராபரமே.
– பராபரகண்ணி – 191. அஞ்ஞானிகளுக்கு இறந்த கால நினைவுகளும், நிகழ்கால சம்பவங்களும் மட்டுமே புலப்படும். எதிர்காலம் பற்றி உணரார். ஞானிகள் முக்காலம் உணர்ந்தாலும் குறிப்பாக எதிர்கால விளைவு தெரிந்தாலும் சாட்சியாய் இருப்பார். நடுவான சீவமுத்தர். எதிர்கால நிலை முன்கூட்டியே நமக்கு தெரிந்தால் நிகழ்காலத்தின் சுகம் பறிப்போய் விடும். ஞானிகள் எல்லாவற்றையும் முன்கூட்டியே உணர வல்லவர்கள் என்பதை இச்சம்பவம் வாயிலாக அறிய முடிகிறது. இப்படி எவ்வளவோ சம்பவங்களை கூற முடியும். இருந்தாலும் இவைகளை தாண்டி நாம் காணும் குருநாதர் அடியேன் அனுபவத்தில் கூற வேண்டுமெனில், ஆரம்ப காலங்களில் ஆன்மீக தாகம் கொண்டு அலைந்து திரியும் காலங்களில் நாம் புத்தர் இயேசு, நபிகள் நாயகம், இரமணர், இராம கிருஷ்ணர் பரமஹம்சர் போன்றோர் தேக சஞ்சாரம் செய்த காலங்களில் நாம் பிறக்காமல் போய்விட்டோமே! அப்படி பிறந்திருந்தால் பவ பிணி நீங்கியிருக்குமே, இனி இவர்களுக்கு இணையான குருநாதர்களை ஞான சூரியனை எங்கே தேடுவேன் எப்படி உபதேசம் பெறுவேன் என ஏங்கி தவித்தேன்.
09
மூர்த்தி தலம் தீர்த்தம் முறையாய் தொடங்கினோர்க்கு வார்த்தை சொல்ல சற்குருவும் வாய்க்கும் பராபரமே. என்ற தாயுமான சுவாமிகளின் பாட்டிற்கிணங்க எனை ஆட்கொண்ட குருநாதர் ஞானவள்ளல் தங்கசுவாமி அவர்களை சந்தித்தேன். பிறகு அந்த ஏக்கம் முழுமையாக நிறைவேறியது. நம் குருநாதர் யாம் பெற்ற இன்பம் மட்டும் தான் நம்முடைய ஞான செல்வங்கள் பெற வேண்டும். நாம் இந்த பரிபூரண நிலை பெற தாங்கி கொண்ட துன்பம், அவஸ்தை, அவமானம், சிரமங்கள் எதையும் நம் குழந்தைகள் படக்கூடாது எனும் உயர்ந்த எண்ணம் கொண்டு, ஆன்மீக தாகம் கொண்டு வரக்கூடிய அடியேன் போன்றவர்களிடம் கூட, உள்ள குறைகளை பொருட்படுத்தாமல் நிறையை மட்டுமே காணும் உள்ளம் கொண்ட உத்தமர். யாரையும் ஒருமையில் கூட பேசுவதில்லை, பன்மையில் தான் பேசுவார்கள். அடியேனை கூட வாங்க, போங்க என்று சொல்லும் போது, நம்மை குருநாதர் ஒருமையில் பேசும் நாள் என்று வருமோ என்று ஏங்கி தவிக்கிறேன். நாம் இன்னும் குருநாதர் எண்ணத்தோடு இணங்கவில்லையோ என எண்ணுவது உண்டு. குருநாதரை எந்த நேரத்திலும் நேரடியாக சந்திக்கும் வாய்ப்பு, எந்த நேரத்தில் தொலைபேசியில் தொடர்பு கொண்டாலும் இன்முகத்தோடு பேசும் உள்ளம் சிறந்த முறையான பயிற்சிகள் ஆச்சார அனுஷ்டானங்களை கூறுவதோடு மட்டுமல்லாது ஒவ்வொரு கணமும், தாம் கடைபிடிக்கும் தன்மை கொண்ட சீலர். உலகத்தில் எந்த ஆன்மீக குருவும் செய்யாத செய்ய விரும்பாத புனித செயல் ஒன்றை நம் குருநாதர் அவர்கள் செய்து கொண்டிருக்கிறார்கள். அதுதான் இலவசமாக பெற்ற இந்த ஞானகல்வியை இலவசமாக வழங்கும் ஞானவள்ளல். அது மட்டுமல்ல தோற்றத்தில் எளிமை, உடுத்தும் உடையில் எளிமை, வழங்கும் உரையில் எளிமை, இருக்கும் உறைவிடத்தில் எளிமை. எங்கெல்லாம் ஆன்மீக தாகம் கொண்ட உணர்வாளர்கள் இருக்கிறார்களோ அது சிற்றுரானாலும் சரி பேருரானாலும் சரி எவ்வளவு சிரமம் இருந்தாலும் சிரமங்களை பார்க்காமல் அந்த ஊர் உணர்வாளர்களின் ஒத்துழைப்போடு ஒரு தியான அரங்கத்தை கட்டித்தந்து அவர்கள் மகிழ்ச்சியில் தன் மகிழ்வை காண்பார்கள். அது மட்டுமல்ல உலக மக்கள் அஞ்ஞானத்தில் உழண்டு கொண்டிருக்கிறார்கள். அவர்கள் ஞானம் பெற வேண்டும். நீசனாக அலையும் மனதை ஈசனாக்க வேண்டும். புற பற்றுகளில் சீவித்து கொண்டிருக்கும் சீவனை சிவனாக்க வேண்டும் என்ற எண்ணமே குருநாதர் உள்ளத்தில் மேலோங்கி இருப்பதாக அடியேன் காண்கிறேன்.
10
மனிதனின் இந்த குழப்பமான புற அக வாழ்விற்கு அறியாமையே காரணம். அறியாமை மலம் அகற்றப்பட வேண்டும். அறிவே சிவம் என்று ஏற்றப்பட வேண்டும். அறியாமை ஒருவரை வாழ்வில்அடிமைப்படுத்துகிறது. அறிவோ வாழ்வில் விடுதலை பெற செய்கிறது என்பதை எல்லோருக்கும் உணர்த்துகிறார்கள். நம்பிக்கையை விதைக்காமல் சிந்திக்க வைக்கிறார்கள். இருள் தனக்குள் அகப்பட்ட எதையும் அறிய விடாது. எதுவாக இருந்தாலும் மறைத்து வைத்து கொள்ளும். அறியாமையும் அவ்வாறே எதையும் அறிய விடாது. ஆகவே, அறியாமை இருளோடு ஒப்பிடப்படுகிறது. ஒருவகையில் பார்த்தால் இருளைவிட கொடியது அறியாமை ஏன்? – சைவசித்தாந்த மெய்யாசிரியர்களில் ஒருவரான உமாபதி சிவம் சொல்கிறார்.
ஒரு பொருளும் காட்டாது இருள்
உருவம் காட்டும் இரு பொருளும் காட்டாது இது

– திருவருட்பயன் இருள்மலநிலை-3
அதாவது இருள் தான் மூடி வைப்பவற்றை காட்டாது, தன்னை காட்டும். இருளுக்குள் இருக்கும் பொருள்தான் தெரியாதே ஒழிய இருள் இருப்பது தெரியும். ஆனால் அறியாமையின் விவகாரம் வேறு. அறியாமை தான் மூடி வைத்திருப்பவற்றையும் காட்டாது. தன்னையும் காட்டாது. அப்படிப்பட்ட அஞ்ஞான அகஇருளை நீக்கி அருள்ஒளி ஏற்றுபவர் நம் குருநாதர். அது மட்டுமல்ல உலகத்தில் மனிதன் எந்த மார்க்கத்தில் இருந்தாலும் அந்தந்த மார்க்கத்தின் புனித நூல்கள் எல்லாம் இறைநிலை என்ற ஒரே இடத்தை அடையவே வழி காட்டுகின்றது என்பதை சொல்லுவதோடு இல்லாமல், எல்லா சமய நதிகளும் ஞானக் கடலை நோக்கியே செல்கிறது என்பதை உறுதிப்படுத்தி கீதை, விவிலியம், திருக்குரான், திருக்குறள், திருமந்திரம், சைவம், வைணவம், வள்ளலார், தாயுமான சுவாமிகள், அத்வைதம், வேதங்கள் இன்னும் பல ஞான நூல்கள் மற்றும் வேதாந்த அத்வைத நூலான கைவல்லிய நவநீதம் என இவைகள் எல்லாம் பரிபூரணத்தை நோக்கியே வழிகாட்டுகிறது என்பதை மதபேதம் பார்க்காமல் தனது நூலின் வாயிலாக ஒப்பிட்டு எடுத்துக்கூறி வழிகாட்டுகிறார்கள். இது எந்த ஒரு சமயமும் எந்த ஒரு சமய வழிகாட்டியும் செய்யாத பணியாகும். ஏனெனில் ஒருவர் எந்த சமயத்தை சார்ந்தவரோ அவர்கள் மூலம் வெளிவரும் நூல்கள் அந்த சமயத்தின் பெருமையை மட்டுமே கூறும். ஆனால் நம் குருநாதர் செய்யும் இந்த பணி, எல்லா சமயத்தவரிடம் ஒரு நட்புறவை ஏற்படுத்தும். இப்படி எவ்வளவோ அவர்களுடைய அற்புதங்களையும், அதிசயங்களையும் நம்மோடு பகிர்ந்த அனுபவங்களையும் பதிய வைத்துக் கொண்டே போகலாம் முடிவு பெறாது.
11
சென்றது கருதார் நாளைச் சேர்வது நினையார் கண்முன் நின்றது புசிப்பார் வெய்யில் நிலவாய் விண்விழுது வீழ்ந்து பொன்றின சவம் வாழ்ந்தாலும் புதுமையாய் ஒன்றும் பாரார் நன்று தீது என்னார் சாட்சி நடுவான சீவன் முத்தர் – கைவல்லிய நவநீதம் (த.வி.ப -91) என்ற கைவல்லிய பாட்டிற்கு இணங்கவாழ்வதோடு மட்டுமல்லாமல் கைவல்லியமாகவே வாழ்ந்து கொண்டு நமக்கெல்லாம் வழிகாட்டிக் கொண்டிருக்கிறார்கள் நம் குருநாதர் அவர்கள். அடியேன் ஐயனை முதலில் சந்திக்கும் போது உடலால் விருந்தாளியாக வந்தேன். பிறகு உள்ளத்தால் வேலைக்காரணமாக இருக்க முயற்சிக்கிறேன். உணர்வால் நன்றியுள்ள சீவனாக (நாயிற்கடையாய் கிடக்கும் அடியேனை) தங்கள் திருப்பாதத்தில் கிடக்க அருள்புரிந்து அடியேனின் பிறவிப் பிணியை போக்கி அருள எல்லாம் வல்ல குருவருளை விரும்பி வேண்டிக் கொள்கிறேன். இந்த களிமண்ணையும் உருவம் கொடுத்து உயிரோட்டமாக்கிய பிரம்மத்திற்கு நன்றி சொல்ல வார்த்தை ஏது? கைமாறு ஏது செய்வேன் அடியேன் குருவை தாயாக, தந்தையாக, குருவாக, இறைவனாக, ஆலோசகராக, நண்பராக, குழந்தையாக, மருத்துவராக, இக்காலத்திற்கேற்ற மாமனிதராக உணர்ந்து கொண்டிருக்கின்றேன்.
நிறைவாகும் எந்த குறைவுமில்லை இந்த குண்டலினி
ஞான தவத்தின் மூலம் சிந்துகின்ற சிந்தையெல்லாம்
குவிந்து சும்மா இருந்திடலாம் நிறைவு பெற்று தீய
செயலகலும் வாழ்வில் என்றும் நம் வாழ்வில் என்றும்
அழியாத இன்ப வெள்ளத்தில் இணைத்து விடும்
முறையான பயிற்சிகளே இறைநிலையை முழுமையாக
சேர்த்து வைக்கும் தொடர்ந்து தொடர்ந்து பேரின்ப
நிலையை கொடுத்து வரும் மறை பொருளாம்
மகத்துவத்தை அருளறிவால் முழுமை பெற்று
இருந்ததனை இருந்தபடி இருந்து காட்டும்
நம் ஞானாசான் பாதம் பணிவோம்.

என்ற பாடலை குருநாதர் அருளிய அறிதோர் உணர்வர் உணர்ந்தோர் அறிவர் என்ற நூலில் முதல் பாகத்தில் 38பாடலாக பதிவு செய்திருக்கிறார்கள். இந்த பாடல் ஒன்றே போதும் மனிதன் முறையாக அகவாழ்க்கையும் புறவாழ்க்கையும் வாழ்வதற்கும் உயிர் ஆற்றல் முக்கியத்துவம், தவத்தின் சிறப்பு, சிந்தை எப்படி இருக்க வேண்டும். அழியாஇன்பநிலை பெறுவது எப்படி? முறையான பயிற்சிகள்தான் இறைநிலையை கொடுக்கும்.
12
மறை பொருளின் மகத்துவத்தை புரிந்து கொண்டு ஞானாசான் திருபாத கமலம் பற்றினால் நம் பாதக மலம் நீங்கும் என்றும் ஞான கல்வியின் ஒட்டுமொத்த கருத்துக்களையும் எளிய தமிழில் கவிதை நடையில் பாமர மக்களுக்கும் புரியும் வண்ணம், உணரும் வண்ணம், எல்லா ஞான நூல்களின் மொத்த கருத்தையும் பதிய வைத்து நம் உள்ளம் எல்லாம் கொள்ளை கொள்ளும் ஞான தந்தையின் அதிசயமும் அற்புதமும் வேறெதுவாக இருக்க முடியும்.
“மெய்யே உன் பொன்னடிகள் கண்டின்று வீடுற்றேன்”
ஐயனே நிறைவாக குருவிடம் அடியேனின் தாழ்மையான வேண்டல் சீடன் விரும்பும் குருவாக இல்லாமல் குருவிரும்பும் சீடனாக,
சீடன் எண்ணம் நிறைவேற்றும் குருவாக இல்லாமல் குருவின் எண்ணம் நிறைவேற்றும் சீடனாக,
நன்மை விரும்பும் சீடனாக இல்லாமல், உண்மை விரும்பும் சீடனாக அடியேனை ஆக்கி அருளுங்கள். இப்பேற்பட்ட ஞானியின் திருவடியைப் பற்றி அடியேன் காலம் முழுவதும் தொண்டாற்ற கூடிய பக்குவத்தை அடியேன் உள்ளத்தில் என்றும் நிலைத்திருக்க திருவருள் புரிக என்று வேண்டி ஞான வள்ளலை பணிந்து நிறைவு செய்கின்றேன். குற்றம் இருப்பின் உலகம் பொறுக்க.
13
நன்றி!