"நான் கண்ட குருநாதர்" அனுபவ உரைகள்
ஆ.நாகராஜன் BSc, MA,BL
மதுரை
திருச்சீரலைவாய் என்னும் திருச்செந்தூரில் ஆர்ப்பரிக்கும் அலைகடலின் அருகினிலே அழகும் அருமையும், ஆகர்ஷன ஆற்றலும் நிரம்பிய அய்யன்பட்டி அருள்மிகு இராஜரிஷி பரமஞான குருபிரான் சங்கரசுவாமிகளின் ஜீவசமாதி அருளாலயம்தான் ஞானத்தின் ஊற்றுக்கண். எல்லாம் வல்ல, எங்கும் நிறைந்த இந்த பிரபஞ்சத்திற்குக் கடவுளான, மனித உடலெடுத்து வந்துள்ள, சீர்மிகு சிவத்தையின் சிம்மாசனத்திலே அமர்ந்து செங்கோலேச்சும் சிவன், எம் குருநாதரின் மலரடி தொழுகின்றேன். அகிலத்தின் ஆரிருளை அகல்விக்கும் ஆதவன் போல், இந்த அவனியிலே அபூர்வமாய், அதிசயமாய், அவசியமாய் அவதரித்த குருபகவானின் பாதம் பணிகின்றேன்.
ஈசனே குருவாய், குருவே ஈசனாய் எமது ஊனோடும், உயிரோடும். உணர்வோடும், உதிரத்தோடும், இரண்டறக் கலந்திருக்கும், சற்குருநாதர் ஞானவள்ளல் மகாகனம் அருள்மிகு தங்கசுவாமிகளின் மலர்பாதம் சரணடைகின்றேன். ஆணவத்தையும், கன்மத்தையும், மாயையையும் உணர்த்தி அதிலிருந்து காத்தருளிய குருவே சரணம். உலக அறிவார்ந்தோர் இயற்கை ஞானசபையில் உள்ள உணர்வாளர்கள் மட்டுமல்லாமல், உலகத்திலே இருக்கிற எல்லா உயிர்களும், உய்வடைய வேண்டும், ஞானத்தையும் முக்தியையும் பெற வேண்டும் பிரம்மத்தை உணர்ந்து பிரம்மமாகவே ஆக வேண்டும் என்பதே எமது குருநாதரின் சீரிய சிறந்த நோக்கம். தாய் காட்டாமல் தந்தை தெரியாது. குரு காட்டாமல் பிரம்மம் தெரியாது. குரு இல்லாமல் ஞானம் அடைய முடியாது. குரு இல்லாமல் ஆன்மீக வளர்ச்சி நிகழ்வதில்லை.
01
வெறும் பாதுகாப்பிற்கும், ஆறுதலுக்கும், தங்கள் ஆசைகள் நிறைவேற வேண்டும் என்பதற்காகத்தான் பலரும் கோவிலையும், குருவையும் நாடுகிறார்கள். படித்ததை சொல்பவன் பண்டிதன். அனுபவித்து சொல்பவர் ஞானி. உண்மையை உணர்ந்தவருக்கு மட்டுமே, உபதேசம் செய்யும் உரிமை உண்டு. கடைசிப் பிறவி எடுத்தவன் எப்படியாவது குருவை தரிசிப்பான். ஆற்றல் நிறைந்தவரால் மட்டுமே தீட்சை கொடுக்க முடியும். சக்தியுள்ள மனிதன் தன் ஆற்றலை, சக்தியை வெளியே அனுப்பி ஆசீர்வாதமும் செய்ய முடியும், சாபமும் கொடுக்க முடியும். தன்னையறிந்தவர் மட்டுமே முக்கால வினைகளை வேரறுக்க முடியும். பிரம்மத்தை அறிந்தவர் மட்டுமே குருவாக இருக்க முடியும்.
02
குருடன் குருடனுக்கு வழி காட்ட முடியாது. 10 வாட்ஸ் வெளிச்சம் தருகின்ற பல்பை போன்ற குருமார்கள் பின்னாலும் ஒரு கூட்டம் போகத்தான் செய்கிறது. ஒப்பில்லாத பகலவனின் வெளிச்சத்தைப் போன்ற அரிய குருமார்கள் பின்னாலும் சீடர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். எமது குருநாதர் ஞானாக்கினியின் திருவுருவம். கருணைக்கடல். ஞானவள்ளல். குரு எப்போது நமக்கு கிடைப்பார்? வயல் தயாரானதும் விதை வந்தே ஆக வேண்டும் என்பது விதி. ஆன்மீகத்தைத் தேடும் ஆன்மாவில், ஈர்ப்பு சக்தி முதிர்ந்து நிறைந்திருக்கும் போது அந்த ஈர்ப்பின் வசப்பட்டு அருள்புரியும் சக்தியாகிய குரு வந்தே ஆக வேண்டும். சிறிய பெரிய மரங்களின் வேர்கள் கூட தனக்கு வேண்டிய உயிர் சக்தியாகிய தண்ணீரை நோக்கித் தன் பயணத்தைத் தொடர்கிறது.
03
அது வேறு வழியில் போகாது. ஏனென்றால் அதற்கு தண்ணீரின் மீது ஒரு ஆழமான ஏக்கம் இருக்கிறது. உயிருக்குள் ஒரு தேடுதல் ஏற்பட்டு, அது ஒரு ஏக்கமாக மாறுமேயானால், அவர் கண்டிப்பாக தன்னுடைய உயிர் சக்தியான குருவை கண்டடைவார். முற்றும் உணர்ந்த குருவோடு ஒன்றாயிருப்பது உறவுகளிலேயே தலையாயது. நிரந்தரமானது. புனிதமானது. ஆண்தன்மையும், பெண்தன்மையும் மேலான நிலையில் இணைகிறபோது, அது ஆன்மீகமாகிறது பேரின்பமாகிறது சிவசக்தி ஒருமையாகிறது. ஆண்தன்மையும். பெண்தன்மையும் கீழான நிலையில் இணைகிறபோது, அது பாலியல் ஆகிறது. சிற்றின்ப நுகர்ச்சியால் கிடைக்கும் ஆனந்தம் உயிர் சக்தியைக் குறைக்கிறது.
04
குருவுக்கும் சீடனுக்கு உள்ள உறவு எப்படிப்பட்டது?
குருவுக்கும், சீடனுக்கும் உள்ள உறவுதான் பல பிறவிகளுக்கும் தொடர்கிறது. மற்ற உறவுகள் எல்லாம் உடல் சார்ந்த, மனம் சார்ந்த, உணர்வுகள் சார்ந்த, பொருளாதாரம் சார்ந்த, சமூகம் சார்ந்த, உளவியல் சார்ந்த, தேவைகளுக்காகவும், இன்னும் பல வசதிகளுக்காகவும் மட்டும் என்று பலவிதமான உறவுகளை நாம் உருவாக்கியுள்ளோம். உடலை உதறுகிற நேரத்தில் அனைத்து உறவுகளும் முடிந்து போகிறது. குருவுடன் கொண்டுள்ள உறவு மனரீதியானதோ, உணர்வு ரீதியானதோ அல்ல; அது சக்தி நிலையில் உள்ளது. சக்தி ரீதியான பிணைப்பு. குருவுக்கும் சீடனுக்கும் உள்ள உறவின் அடிப்படை சக்தி நிலையில் இருப்பதால் சக்தி நிலைக்கு மறுபிறவி கிடையாது. சக்தி நிலை சார்ந்த உறவாக இருப்பதால் மீண்டும் பிறவா நிலையை தரும். ஒரு சீடன் தன் குருவை தேர்ந்தெடுக்கும் முன் குரு அவருடைய சீடனை தேர்ந்தெடுக்கிறார். குருநாதர் பல ஞானநூல்களை இயற்றியுள்ளார்கள். பகவானின் புத்தகங்கள் வெறும் தகவல்களைத் தருபவை அல்ல. உயிரோட்டமுள்ள ஞானத்தைத் தருபவை.
05
எமது குருநாதருக்கு மிகவும் பிடித்தமான சீடர்கள் யார் தெரியுமா? தனிமையிலும், மௌனத்திலும் விறுவிறுப்பான செயல்களைக் காணும் சீடனையும், விறுவிறுப்பான செயல்களின் நடுவில் தனிமையையும் மௌனத்தையும் உணரும் சீடனையும் எம் குருவிற்கு மிகவும் பிடிக்கும். யார் இந்த உலகத்தைத் தாக்குவதில்லையோ, யார் இந்த உலகத்தால் தாக்கப்படுவதில்லையோ அந்த சீடனை மிகவும் விரும்புவார்கள். சத்துவகுணம் நிறைந்தவன். ஒழுக்கத்தில் மேன்மையானவன். எதிரிகள் அற்றவன், நட்பும் தயையும் வாய்ந்தவன், நான், எனது என்றும் ஆணவ எண்ணங்களை அடியோடு அழித்து ஒழித்தவன், சகத்தோடு கூடி வாழ்ந்தாலும் தாமரை இலை தண்ணீர்போல் வாழ்பவன் அத்தகைய சீடனை எமது குருவுக்கு மிகவும் பிடிக்கும்.
06
லாபம் – நஷ்டம் வெற்றி – தோல்வி, சுகம் – துக்கம், மானம் – அவமானம், வாழ்வு- மரணம், இவைகளைச் சமமாகக் கருதி பலனை எதிர்பார்க்காமல் கடமையைச் செய்யும் சீடனை குருவுக்குப் பிடிக்கும். தவம் மட்டுமே தனது கர்மம் என நினைத்து அதில் நிலைக்கும் சீடனை மிகவும் பிடிக்கும்.
குரு சீடனிடமிருந்து குருதட்சனையாக என்ன எதிர்பார்க்கிறார்?
மகனே. மகளே உன் உள்ளத்தை தா. இறைவன் உன் உடைமைகளை நோக்கமாட்டான், உள்ளத்தையே நோக்குவான். உன் சிந்தையை எனக்குக் கொடுத்துவிடு. என்னைத் தவிர வேறு எதையுைம் எண்ணாமல், எண்ணிலே உறைந்து. என்னையே சார்ந்து வாழ்கின்றவனுக்குத் தேவைப்படுகின்ற அனைத்தையும் கொடுத்து விடுகிறேன் என்பார் பகவான். உங்கள் இதயத்தைத் தாருங்கள். இதயத்தில் சுத்தமுள்ளவர்கள் இறைவனை தரிசிப்பார்கள். உங்கள் பொக்கிஷம் எங்கேயிருக்கிறதோ அங்கே உங்கள் இதயமும் இருக்கும்.
குரு சீடனிடமிருந்து குருதட்சனையாக என்ன எதிர்பார்க்கிறார்?
மகனே. மகளே உன் உள்ளத்தை தா. இறைவன் உன் உடைமைகளை நோக்கமாட்டான், உள்ளத்தையே நோக்குவான். உன் சிந்தையை எனக்குக் கொடுத்துவிடு. என்னைத் தவிர வேறு எதையுைம் எண்ணாமல், எண்ணிலே உறைந்து. என்னையே சார்ந்து வாழ்கின்றவனுக்குத் தேவைப்படுகின்ற அனைத்தையும் கொடுத்து விடுகிறேன் என்பார் பகவான். உங்கள் இதயத்தைத் தாருங்கள். இதயத்தில் சுத்தமுள்ளவர்கள் இறைவனை தரிசிப்பார்கள். உங்கள் பொக்கிஷம் எங்கேயிருக்கிறதோ அங்கே உங்கள் இதயமும் இருக்கும்.
07
ஞானத்தை அடையும் லட்சியத்தைக் கொண்ட சீடன் முயற்சியில் வெற்றி அடைய எமது குருநாதர் அற்புதமும் அதிசயமும் நிகழ்த்துவார். பாதையில் உள்ள தடைகளை அகற்றுவார்கள். சீடனை கண்ணும் கருத்துமாக காத்தருள்வார்கள். இலட்சியத்தில் வெற்றியடைய நன்னெறி மந்திரக் கவிதை ஒன்றைப் படிப்பார்கள். இலக்கை நோக்கிப் பயணிப்பவனே லட்சியவாதியாம் எனத் தொடங்கி இலக்கினை அடையும் வரை பக்கத்தில் பழமிருந்தாலும், பாலோடு தேனிருந்தாலும் உண்ணாது நோற்றலிலே தலைப்பட்டு வெற்றிக் கனி பறித்திடுவான். இதில் கூறப்பட்டுள்ள எட்டு மந்திரங்களின்படி வாழ்ந்தாலே, வாழ்வில் வெற்றி மேல் வெற்றிதான். தாமரைத் தண்டிற்கு கீழே இருக்கின்ற தவளைக்கு தேனை சுவைக்க வேண்டும் என்ற இலட்சியம் இல்லை சுவைப்பதும் இல்லை. ஆனால் தேனை சுவைக்க வேண்டும் என்ற இலட்சியத்தோடு, எங்கிருந்தோ வருகின்ற மலைவண்டுகள் தாமரை மலரில் உள்ள தேனை சுவைத்துச் செல்கின்றன.
08
எனவே பயிற்சிகளை முயற்சியோடு செய்து ஆன்மாவை அறிந்து, உணர்ந்து, அதையே பூஜித்து மேலான நிலையை அடையுங்கள் என்று எமது குருநாதர் உபதேசிப்பார்கள். நம்புவதற்கும், அறிவதற்கும், உணர்வதற்கும் வித்தியாசம் உண்டு. நமக்கு கைகள் கால்களை இருப்பதை அறிகிறோம். உணர்கிறோம். ஆனால் ஆன்மாவைப் பற்றியும். கடவுளைப் பற்றியும் உங்களுக்கு வெறும் நம்பிக்கை தான் இருக்கிறதேயொழிய உங்கள் அனுபவத்தில் கடவுள் இல்லை. உள்விழிப் பார்வையின் மூலம் தியானம், தவம் செய்வது மட்டுமே ஆன்மாவையும், கடவுளையும் அறியவும் உணரவும் முடியும் என்று குருநாதர் விளக்குவார்கள். ஞானிகளின் அனுபவங்கள் நமக்கு ஏற்பட வேண்டும். அவர்களின் அனுபவங்களை நாம் நம்பக் கூடாது என்றும் கூறுவார்கள்.
09
ஞான சபைக்கு வருவதால் எனக்கு என்ன கிடைக்கும்?
சூரிய கலைப் பயிற்சியை செய்து கொண்டே, சாட்சி ஆன்மாவாக பின்னால் விலகி நின்று, பேரானந்த நிலையில், தெளிந்த ஞானத்தோடும், உறுதியான உடலோடும், உள்ளத்தோடும், உணர்ச்சிகளோடும் பலம் வாய்ந்த பிராண சக்திகளோடும், யாரையும், எதனையும் என்ன காரணத்திற்காகவும், எந்த சூழ்நிலையிலும், ஒரு அடிமையைப் போல எதிர்பார்த்து சார்ந்து வாழ்ந்திராமல், தன்னிறைவு பெற்றவனாக, சுய கட்டுப்பாட்டுடன் கூடிய சுதந்திர மனிதனாக, ஒவ்வொரு கடமையையும் புனிதமாக எண்ணி, பக்தி சிரத்தையுடன், பலனை எதிர்பார்க்காமல், வேகமாகவும், விவேகமாகவும், முழுமையாகவும், திறமையாகவும், திருப்பதியாகவும் செய்து முடிக்கும் பேராற்றலையும் தருகின்றார்கள்.
சூரிய கலைப் பயிற்சியை செய்து கொண்டே, சாட்சி ஆன்மாவாக பின்னால் விலகி நின்று, பேரானந்த நிலையில், தெளிந்த ஞானத்தோடும், உறுதியான உடலோடும், உள்ளத்தோடும், உணர்ச்சிகளோடும் பலம் வாய்ந்த பிராண சக்திகளோடும், யாரையும், எதனையும் என்ன காரணத்திற்காகவும், எந்த சூழ்நிலையிலும், ஒரு அடிமையைப் போல எதிர்பார்த்து சார்ந்து வாழ்ந்திராமல், தன்னிறைவு பெற்றவனாக, சுய கட்டுப்பாட்டுடன் கூடிய சுதந்திர மனிதனாக, ஒவ்வொரு கடமையையும் புனிதமாக எண்ணி, பக்தி சிரத்தையுடன், பலனை எதிர்பார்க்காமல், வேகமாகவும், விவேகமாகவும், முழுமையாகவும், திறமையாகவும், திருப்பதியாகவும் செய்து முடிக்கும் பேராற்றலையும் தருகின்றார்கள்.
10
சிந்திக்கின்ற ஒவ்வொரு எண்ணத்திலும், பேசுகின்ற ஒவ்வொரு வார்த்தையிலும், செய்கின்ற ஒவ்வொரு செயலிலும் முழுமை இருக்க வேண்டும். மகா சக்தி வெளிப்பட வேண்டும். ஜீவனைக் காண வேண்டும். உயிரோட்டத்தை உணர வேண்டும். “உதித்த இடத்தில் ஒடுங்கி இருத்தல் அது கன்மம்” உதித்த இடம் எது? ஒடுங்கும் இடம் எது? மனம் உதித்த இடம் எது ? மனம் ஒடுங்கும் இடம் எது? உயிர் உதித்த இடம் எது ? உயிர் ஒடுங்கும் இடம் எது? பிரபஞ்ச இரகசியங்கள் அனைத்திற்கும் ஞானசபைக்கு வருவதால் விடை கிடைக்கும். எமது குருநாதர் தமக்கு வேண்டியவர்கள், வேண்டாதவர்கள் என்று பாகுபாடு பார்ப்பதில்லை. இந்து, முஸ்லீம், கிறிஸ்தவர் என்று பிரித்துப் பார்ப்பதில்லை. வெவ்வேறு நாட்டைச் சேர்ந்தவர்கள் என்ற பேதம் காட்டுவதில்லை. குடிப்பிறப்பில் மேலோன், கீழோன் என்று வேறுபடுத்திப் பார்ப்பதில்லை. ஏழை, பணக்காரன் என்ற ஏற்ற, தாழ்வு பார்ப்பதில்லை. அனைவரும் இறை அம்சம் என்ற கருணைப் பார்வை மட்டுமே எம் குருநாதரிடம் உண்டு.
11
மனித பிறவிக்குத்தான் முதுகெலும்பு வானத்தை நோக்கி செங்குத்தாக (Vertical) உள்ளது. மற்ற விலங்குகளுக்கெல்லாம் முதுகெலும்பு பூமிக்கு இணையாக உள்ளது. மனிதப்பிறவி மூலமாகத்தான் பிறவிப் பெருங்கடலை கடக்க இயலும். உன் வாலிபப் பிராயத்தில் உன் சிருஷ்டிகரை நினை” என்றார் இயேசுபிரான். ஒரு ஆரோக்கியமான வாலிபனின் ஜீவதிரவத்தில் பல கோடிக்கணக்கான உயிர் அணுக்கள் உள்ளன. ஜீவ திரவம் கீழ்நோக்கிச் சென்றால் அது சிற்றின்பம். தன்மைக் கொன்று அனுபவிப்பது. ஒரு உயிரையே சிருஷ்டிக்கக் கூடிய ஜீவ திரவத்தை மேல் நோக்கி செலுத்தினால் அது பேரின்பம் தன்னை வென்று அனுபவிப்பது, சக்தியின் தன்மை மாற்றம் பற்றி குருநாதர் விளக்குவார்கள். சக்தியை ஆக்கவோ, அழிக்கவோ முடியாது. ஒரு வகையான சக்தியை இன்னொரு வகையான சக்தியாக மாற்ற மட்டுமே இயலும், என்ற இயற்பியல் விஞ்ஞான கருத்தை மெய்ஞானக் கருத்தோடு இணைத்து விளக்குவார்கள்.
12
விந்து சக்தியை எப்படி உயிர் சக்தியாக மாற்றுவது? உயிர் சக்தியை ஜீவ சக்தியாக எப்படி மாற்றுவது? ஜீவ காந்த சக்தியை ஓஜஸ் சக்தியாகவும், தேஜஸ் சக்தியாகவும் எப்படி மாற்றுவது? ஜீவ காந்த சக்தியை ஞானக் கனலாக எப்படி மாற்றுவது? ஞானாக்கனியைத் கொண்டு சஞ்சித கர்மத்தை எப்படி எரிப்பது? அரிய மெய்ஞானத் தீயால் காரண சரீரத்தை எப்படி அழிப்பது? போன்ற பிரம்ம இரகசியங்கள் அனைத்தையும் கற்றுத் தருவார்கள். தியானத்தின் போது மனமற்ற நிலையில், ஆன்மா விழிப்பு நிலையில் பிரகாசிக்கும் உலகில் வாழ்க்கைக்குத் தேவையானவற்றை ஆன்மா பரமாத்மாவிடம் கேட்டுப் பெறுகிறது. ஆன்மா கேட்டால் பரமாத்மா கண்டிப்பாகக் கொடுப்பார் (Fraction demonds totality Supplies) ஜீவ காந்த சக்தி பிரபஞ்ச சக்தியினுடைய அலை நீளம் (Wave Length) அலைவரிசை (Frequency) அதிர்வு (Vibration) இவைகளோடு ஒத்திசைந்து, ஒன்றாவதால் கேட்பவை அனைத்தும் கிடைக்கும். தட்டுங்கள் திறக்கப்படும் கேளுங்கள் கொடுக்கப்படும் தேடுங்கள் கண்டடைவீர்கள்.
13
“நீயோ உன் அறை வீட்டிற்குள் பிரவேசித்து, உன் கதவைப் பூட்டி, அந்தரங்கத்தில் இருக்கிற உன் பிதாவை நோக்கி ஜெபம் பண்ணு. அப்போது அந்தரங்கத்தில் பார்க்கிற உன் பிதா தாமே வெளியரங்கமாய் உனக்கு பலனளிப்பார்”. எமது குருநாதர் சந்தேகத்திற்கு இடமில்லாமல் வாழ்வில் பொருளாட்சியும், அருளாட்சியும் தந்து மகிழ்கிறார்கள். தனது ஆன்மபலத்தின் சக்தியை விளம்புதல் கூடாது என்ற அய்யனின் கட்டளைக்கு இணங்க. ஞானமடைந்தபின்பும் தன்னையே மறைத்துக் கொண்டு சாதாரண மனிதனைப் போல பகவானின் சீடர்கள் வாழ்ந்து வருகின்றார்கள். காடுகளிலும், மலைகளிலும், குகைகளிலும் மேல்தட்டு மக்களுக்கு மட்டுமே என மறைத்து வைக்கப்பட்டிருந்த வேதாந்த இரகசியங்கள். அத்வைதக் கருத்துக்கள் சாமானிய மக்களுக்கும் கிடைக்க வேண்டும். அத்வைத ஆனந்தத்தை ஒவ்வொரு உயிரும் சுவைக்க வேண்டும் என்பதற்காக, அரிய, எளிய, இனிய, தேனினும் மேலான செந்தமிழில் சாமான்ய மொழியில் எமது குருநாதர் அருளமுதம் வழங்கி வருகின்றார்கள்.
14
அனைவரும் ஞான அமுதத்தை அருந்தி பேரானந்த பிறவாப் பெருநிலையை அடைவதாக.
எனது இரண்டு செவிகளிலும் ஒரு பாடலின் வரிகள் தேனாக ஒலிக்கிறது. மகனே நான் உனக்கு கற்றுத் தந்த பாடமெல்லாம் பிறருக்குக் கொடுத்த பின்பே முக்தி ஆகனும் நீ.
“மறை சொல்லும் பொருள் மனித வேடமாய் வந்து, குண்டலினி ஞான திருவடி தீட்சை தந்தருளும், ஞானவள்ளல் மகாகனம் அருள்மிகு சற்குருநாதர் பகவான் ஸ்ரீ தங்கசுவாமிகள் திருவடி சரணம், சரணம்.
எனது இரண்டு செவிகளிலும் ஒரு பாடலின் வரிகள் தேனாக ஒலிக்கிறது. மகனே நான் உனக்கு கற்றுத் தந்த பாடமெல்லாம் பிறருக்குக் கொடுத்த பின்பே முக்தி ஆகனும் நீ.
“மறை சொல்லும் பொருள் மனித வேடமாய் வந்து, குண்டலினி ஞான திருவடி தீட்சை தந்தருளும், ஞானவள்ளல் மகாகனம் அருள்மிகு சற்குருநாதர் பகவான் ஸ்ரீ தங்கசுவாமிகள் திருவடி சரணம், சரணம்.
15
நன்றி!