மகாகவி பாரதியாரின் நூற்றாண்டு நினைவு விழா
அய்யன் திருவள்ளுவர் ஆண்டு 2053-ம் மடங்கல் திங்கள் (ஆவணி மாதம்) 19-ம் நாள் (04.09.2022) ஞாயிறு அன்று ஞானசபை கிளை திருவாரூர் தியான அரங்கத்தில் மகாகவி பாரதியாரின் நூற்றாண்டு நினைவு விழாநடந்தது.
விழாவின் நோக்கம்: மகாகவி பாரதியாரை எல்லோரும் முண்டாசுக்கவிஞன் என்றும், எழுச்சி மிகு உணர்ச்சிகளை தூண்டக்கூடிய கவிதைகளை எழுதும் ஒரு கவிஞன் என்றும் உணரப்பட்டுள்ள நிலையில், பாரதி ஒரு ஞானி என்பதை அனைவரும் உணர்ந்திட வேண்டும். மனிதன் தன்னிடம் உள்ள அறியாமையைப் போக்கிடவும், மனிதப்பிறவியின் பெருமையினை உணர்ந்து தன்னுடைய ஆற்றலைப் பெருக்கிடவும், மனதினைப் பக்குவப்படுத்திடவும் அரிய பல விசயங்களைப் பாடல்கள் மூலமாகவும் கவிதைகளாகவும் பாரதியார் கூறியுள்ளார். இது போன்ற நல்ல விசயங்களை உணர்ந்திடவும், வாழ்வினை செம்மைப்படுத்தவும் மாணவமணிகள் நல்ல பல நற்பண்புகளை வளர்த்திடவும் இவ்விழா பயனுள்ளதாக அமையும் என்ற நோக்கத்தில் விழா நடத்தப்பட்டது.
இந்த நிகழ்வானது காலை 9.30 மணி முதல் மதியம் 1.30 மணி வரை நடைபெற்றது. இவ்விழாவினை ஞானசபை உணர்வாளர் ஆசிரியர் கனம் பொருந்திய இரா.முருகேசன் தொகுத்து வழங்கினார்கள்.
முதல் நிகழ்வு தமிழ்த்தாய் வாழ்த்து. அடுத்ததாக பாரதியாரின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்து வரவேற்புரை நிகழ்த்தப்பட்டு பரத நாட்டியம் நடந்தேறியது.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக திருவாரூரில் அமைந்துள்ள தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழக உதவிப் பேராசிரியர்கள், தமிழ்த்துறையைச் சேர்ந்த முனைவர்கள் க.ஜவஹர் மற்றும் ப.குமார் ஆகியோர் கலந்து கொண்டு தமிழின் பெருமைகள், பாரதியார் கூறிச் சென்றுள்ள அரிய பல கருத்துக்கள் குறித்து சிறப்பாக உரையாற்றினார்கள்.
மேலும் இந்நிகழ்வில் இலக்கிய வளர்ச்சிக் கழகத்தின் துணைத்தலைவர் சா.அறிவழகன், சமுதாய நல்லிணக்க பேரவை மாநில அமைப்பாளர் இராஜ.முருகானந்தம், திருவாரூர் பட்டிமன்ற பேச்சாளர் புலவர் விவேகானந்தன், அரியலூர் ஆதித்திய பிர்லா பொதுப்பள்ளி ஆசிரியர் முனைவர் த.பிரகாஷ் ஆகியோரும் கலந்து கொண்டு பாரதியாரின் உயர்ந்த கருத்துக்களை அனைவருக்கும் பயன்படும் விதத்தில் சிறப்பாக உரையாற்றினார்கள்.
நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பித்த விருந்தினர்களுக்கு நினைவுப்பரிசும், மரியாதையும் WINGS அமைப்பின் மூலம் செய்யப்பட்டது.
மேலும் திருவாரூர் மாவட்டத்தின் பல பள்ளிகளில் இருந்து ஆசிரியர்களும் கலந்து கொண்டனர். பள்ளிக்குழந்தைகளும் பாரதியாரின் வரலாறு மற்றும் தமிழ் மொழியின் சிறப்புக்களை பாரதியின் கவிதைகள் மூலம் பேசி WINGS அமைப்பின் சான்றிதழ்களையும், நினைவுப்பரிசாக புத்தகங்களையும் பெற்று மகிழ்ந்தனர்.
இந்த விழாவானது உலக அறிவார்ந்தோர் இயற்கை ஞானசபையின் திருவாரூர் கிளை 21ஆம் ஆண்டு துவக்க விழாவோடு சேர்த்து கொண்டாடப்பட்டது.
இவ்விழாவில் தலைமையகத்தில் பொறுப்பாளர்களும், தலைமைப் பொருளாளர் பாண்டியன் அண்ணாச்சி மற்றும் சென்னை, மேல்மருவத்தூர், மதுரை, தூத்துக்குடி, உமரிக்காடு, நெல்லை, கூட்டாம்புளி, ஏரல், சிவத்தையாபுரம் மற்றும் பல பகுதிகளில் இருந்து கிளை தலைவர்களும், உணர்வாளர்களும் கலந்து கொண்டு உரை நிகழ்த்தினார்கள்.
குறிப்பாக ஞானசபை கூட்டாம்புளி கிளைத்தலைவர் சக்திவேல் அவர்கள் பாரதியின் கருத்துக்களை குருநாதர் அவர்களோடு இணைத்து நிகழ்காலத்தில் ஒவ்வொரு மனிதனும் அறிவு தெளிவு பெற வேண்டும் என்பதை வலியுறுத்திப் பேசியது அனைவரையும் மெய்சிலிர்க்கச் செய்தது.
திருவாரூர் அன்பர்கள் மற்றும் பெண் உணர்வாளர்கள், குழந்தைச் செல்வங்கள் அனைவரும் பாரதியாரின் எழுச்சிமிகு கருத்துக்களையும், குருநாதரின் ஞானக்கருத்துக்களையும் பேசி விழாவினை சிறப்புறச் செய்தார்கள். விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் மதியம் அறுசுவை உணவு வழங்கப்பட்டது.
விழாவில் கலந்து கொண்ட அறிஞர் பெருமக்களும், தமிழ்ச்சான்றோர்களும் உலக அறிவார்ந்தோர் இயற்கை ஞானசபையின் செயல்பாடுகளைப் பார்த்துப் பாராட்டி மகிழ்ந்து குருநாதரின் முற்போக்குச் சிந்தனைகளைக் கண்டு மகிழ்ச்சி அடைந்தனர் என்பது பெருமைக்கு உரிய செய்தியாகும்.
விழாவில் கலந்து கொண்ட அனைவரும் அய்யன்பட்டி இராஜரி´ சங்கர சுவாமிகளின் பேரருளையும், குருநாதரின் அருட்பேராற்றலையும் பெற்றுச் சென்றனர்.
தேசிகன் கைகாட்டி எனக்கு உரைத்த செய்தி
செந்தமிழில் உலகத்தார்க்கு உணர்த்து கின்றேன்
வாசியை நீ கும்பகத்தால் வலியக் கட்டி
மண் போலே சுவர் போலே வாழ்தல் வேண்டும்
தேசுடைய பரிதி உரு கிணற்றின் உள்ளே
தெரிவது போல உனக்குள்ளே சிவனைக் காண்பாய்
பேசுவதில் பயன் இல்லை அனுபவத்தால்
பேரின்பம் எய்துவதே ஞானம் என்றான்.
என்ற பாடலுக்கு ஏற்ப பேரின்பம் என்பது அனுபவத்தால் மட்டுமே பெற முடியும் என்று ஆணித்தரமாக கூறியுள்ளார்.