மீண்டும் பிறவாமை வேண்டும் வேண்டும்

எல்லா தொழிலுக்கும் சில தகுதிகள் திறமைகள் உள்ளது போல்
ஞானவழி ஏகிடும் திருக்கூட்டத்தினர்க்கும் சில தகுதிகள்
உண்டென்று ஆன்றோர்கள் அன்றே கூறிச் சென்றார்கள்.
தவமும் தவமுடையார்க் காகும் அவமதனை
அஃதிலார் மேற்கொள் வது.
என அய்யனும் அன்றே கூறிச் சென்றார் உறுதிப்பாடும்
மன அடக்கமும் ஒழுக்கமும் இல்லா உத்தமர் போல் நடிக்கும்
உன்மத்தர்களின் மறுபக்கத்தை சின்னத்
திரையின் ஒரு பக்கமே காட்டி வருகிறது
தெய்வ சம்பத்தான அவையாதென சற்று ஆய்ந்திடுவோம்
நித்தியம் எது அநித்தியம் எது என்று விசாரம் (10)

செய்யும் விவேகம் வேண்டும்
மனம் போன போக்கில் போக விடாத திடமான மனம் வேண்டும்
ஞானேந்திரிய கர்மேந்திரியங்களை பாதகமான
செயல் செய்யாது அடல் வேண்டும்
மண் பெண் பொன் சாதி அபிமான முதலிய
சாதனங்களை பற்றாது விலக வேண்டும்
வருகிற சுக துக்கத்தை யாம் செய்த பிரார்த்த கர்மத்தால்
வந்தது என பொறுத்துக் கொள்ளல் வேண்டும்
ஞானாசான் மீதும் அவர் கூறும் ஞானநூல்கள்
மீதும் திடமான விசுவாசம் வேண்டும் (20)

நாமரூபமற்ற சுத்த நிர்குணப் பொருளை தியானித்து
சித்தம் ஒரு முகப்பட வேண்டும்
சாது சங்கப் பழக்கமான திருக்கூட்டமே முத்திக்கு
வழி வகுக்கும் என எண்ண வேண்டும்
தவம் மட்டுமே தனது கருமம் என நினைத்து அதில் நிலைக்க வேண்டும்

01

மிகு காலம் மூன்றும் கெடாதிருப்பதற்கான சத்தான
சத்தியத்தில் நிலைக்க வேண்டும்
தம்மால் முடிந்தவரை கடையனையும் கடைத்தேற்றும் தயை வேண்டும்
ஒத்தது அறியும் உயர்வான விசாரம் எப்போதும் வேண்டும்
கண் முன் நின்றது புசிக்கும் பக்குவம் பலகாலம் பழகுவதால் வர வேண்டும் (30)

ஒரு தீபத்தில் இருந்தே இன்னொரு தீபம் ஏற்றுதல் போல் பிரம்ம
ஞானத்தால் பிரம்மத்தை உணர்த்த வேண்டும்
ஆன்மாவே நித்தியம், சத்தியம், ஏகம் அதுவே சச்சிதானந்த
நிஜ சொரூபமாதலால் அதில் பிரியம் வேண்டும்
மான அவமானத்தை நன்று தீதை இன்ப துன்பத்தை
சமமாக கருதி வாழும் வகை வேண்டும்
தனதான்ம பலத்தின் சக்தியை விளம்பாமை என்றும் வேண்டும்
பலருக்கு நிழலைக் கொடுக்கும் மரம் வெயிலில் காய்தல் போல்
அகிம்சையோடு இருத்தல் வேண்டும்
தான் உண்ட நீரை தலையில் தரும் காலம் வரை (40)

காத்திருப்பது போல் பொறுமை வேண்டும்
நல்லதை நினைத்து நல்லதை சொல்லி நல்லதே செய்தால்
நல்லதே நடக்கும் என்ற நேர்மை வேண்டும்
காமநிக்ரகம் கோபநிக்ரகம் செய்து அகநெருப்பை அணைக்கும்
பயிற்சிகளை பயின்று வர வேண்டும்
உருத்தரிக்கும் நாடிதனை உருப்படியாக அறிந்து உயர்வான
மேல் நிலைக்கு செலுத்த பழகி வர வேண்டும்
அனுபூதி வாழ்வினை எய்திட அனுதினமும்
அனுட்டானங்களை செய்து வர வேண்டும்
வேண்டுங்கால் என்றும் வேண்டும் மீண்டும்
பிறவாமை வேண்டும் வேண்டும். (51)

02