"நான் கண்ட குருநாதர்" அனுபவ உரைகள்

A. கீதா
விருதுநகர்

உலக அறிவார்ந்தோர் இயற்கை ஞானசபையின் தலைவருமான ஞானவள்ளல் மகாகனம் தங்கசுவாமி அவர்களை குருவாக ஏற்று அவர்கள் கொடுத்த ஞானம் புள்ளிக்கல்வியில் நான் கண்ட உணர்வுகளையும், நான் கண்ட குருநாதர் பற்றி சில வரிகள் எழுதுவதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.
நலமேதும் அறியாத என்னை சுத்த
நாதாந்த மோனமாம் நாட்டம் தந்தே
சஞ்சலம் ஏதும் இல்லாமல் எல்லாம் வல்லான்
தாளால் என் தலை மீது தாக்கினான் தோழி

என்ற தாயுமானவர் பாடல் வரிகளின்படி தியானம் என்றால் என்ன என்று தெரியாத எனக்கு ஒரு திருப்புமுனையாக மதுரை மகம் பூஜை அன்று 2015 ம் ஆண்டு சென்று இருந்த போது ஒரு நல்ல சந்தோசமான உணர்வு நிலை ஏற்பட்டது.

நம் உடலுக்குள் தான் கடவுள் இருக்கிறார் வேறு எங்கும் செல்லாமல் குருநாதரை கடவுளாக ஏற்று மானசீகமாக தியானம் செய்ய ஆரம்பித்தேன். குருநாதரைக் குருவாக ஏற்றுக் கொண்ட உடன் மற்ற புற விஷயங்கள் எதிலும் நாட்டம் ஏற்படவில்லை. தன்னை அறிய தனக்கு ஒரு கேடில்லை என்ற படி மெய்ப் பொருளை வெளியே தேடாமல் அகத்திலே கண்டடைய வேண்டும் என்றும், மனம் அலைபாயாமல் ஒரு நிலைப்பட அதிகாலை பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்து விளக்கு ஏற்றி சுமார் ஒரு கால் மணி நேரம் கண்களைத் திறந்து தியானம் பண்ணினால் மனது ஒருநிலைப்படும் என்றும் கூறினார்கள். அதன்படி தொடர்ந்து செய்தேன். நல்ல நிலையில் தியானம் செய்ய மனம் பக்குவப்பட்டது. இல்லறத்தில் இருப்பவர்கள் பெண்கள் அதிகாலை தியானம் செய்தால் நல்ல பலனைக் கொடுக்கும்.
01

“உன்னையறிந்தால் நீ உன்னையறிந்தால் உலகத்தில் போராடலாம்” கவிஞர் கண்ணதாசன் அன்றே கூறி சென்றது மிகவும் பொருந்தும். மனிதனாகப் பிறந்ததன் நோக்கம் மரணமில்லா பெருநிலையைத் தரக்கூடிய ஞானக்கல்வியை அனைவரும் கற்று அறிந்து உணரவேண்டும் என்று இலவசமாக அனைவருக்கும் மெய்க்கல்வியை கொடுத்து வருகிறார்கள் நம் குருநாதர் அவர்கள். மனதைச் சீராக்கி செம்மைப்படுத்தி பரிபூரணநிலையை அடைய தன்னை நாடிவரும் அன்பர்களுக்கு பல பயிற்சிகள் செய்ய சொல்லி அவர்களுக்கு சாயுச்சய  நிலை அடைய உயர்த்துகிறார்கள் தந்தை. என்ன புண்ணியம் செய்தேன் ஏது பாக்கியம் செய்தேன் என்றபடி ஞானத்தந்தையாக குருநாதர் அமைந்தது மிகவும் சந்தோசமான ஒரு நல்ல வாழ்க்கை நாம் வாழ்ந்ததின் நோக்கமாகும்.

02

சிறு வயதிலேயே அதிகாலையில் எழுந்து படிக்க வேண்டும் என்றும் கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்துப்படிக்க வைத்தார்கள். பின்பு யாம் தட்டச்சு, சுருக்கெழுத்து தொழிற்கல்வியை படிப்பதற்கும் மிகவும் உறுதுணையாக இருந்திருக்கிறார்கள். நல்ல ஒரு வாழ்க்கை துணைவரையும் தேர்ந்தெடுத்து கொடுத்து இல்லறவாழ்க்கையும் சிறப்பாக நடப்பதற்கு துணைபுரிந்துள்ளார்கள். இனிமேலும் தொடர்ந்து அவர்கள் அன்பும், ஆசியும் எப்போதும் கிடைத்திடவும், எமது தந்தையைக் குருநாதராகப் பெற்று இருப்பது நான் பெற்ற ஏதோ ஒரு தர்மம் என்றுதான் நினைக்கிறேன்.
கற்றீண்டு மெய்ப் பொருள் கண்டார்தலைப்படுவார்
மற்றீண்டு வாரா நெறி.

என்ற குறளின்படி மனிதப்பிறப்பை பெற்ற நாம் அனைவரும் குருவின் மூலம் மெய் அறிவைப் பெற்று மீண்டும் பிறவாப் பெருநிலையை அடைவோம்.

03
நன்றி!