"நான் கண்ட குருநாதர்" அனுபவ உரைகள்
Dr. A. மணிராம்குமார் ME,Ph.D
திருச்செந்தூர்
2002 ல் சங்கர சுவாமிகளின் குருபூஜை பத்திரிக்கையை என்னுடன் படிக்கும் மாணவரின் அறையில் கண்டு கனம் கார்த்தீசனிடம் விசாரித்து குருநாதரைக் கண்டடைந்தேன். குருநாதரிடம் பல கேள்விகள் கேட்டு விளக்கங்கள் பெற்று தீட்சை வாங்கினேன். குருநாதர் கற்று தரும் கல்வி புதுமைக்கு புதுமையாகவும், பழமைக்கு பழமையானதாகும். இல்லறத்தில் இருந்தே தவநிலைகளை ஆற்றக்கூடிய கலியுக குண்டலினி ஞானத்திருவடிப் பயிற்சிகள் ஆகும். நாம் இந்த லௌகீக உலகில் இருந்து கொண்டே சாகா வழிக்கு தவநிலைகளை மேற்கொள்ளும் பயிற்சிகளைக் கற்றுத்தருகிறார்கள். கோபத்தையும், காமத்தையும் வெல்லும் பயிற்சியளிக்கின்றார்கள். மூலக்கனல் ஏற்றி உயிர் வளர்த்து உடல், மனப்பக்குவம் கூட்டி தவநிலைகள் கூட்டுவித்து இறையுணர்வில் சேர்த்து பயிற்சி முறைகள் விஞ்ஞான தத்துவங்களோடு ஒத்து போக கூடிய அளவிலே மிகுந்த விளக்கங்களோடு பல்வேறு கருத்துக்களை திருமந்திரம், தேவாரம், திருவாசகம். திருக்குறள், பகவத்கீதை, ஒழிவிலொடுக்கம், ரிபூ கீதை, நிஷ்டானுபூதி சாரம், கைவல்லிய நவநீதம் மற்றும் விலிலியம், குரான் போன்ற பல ஞான நூல்களில் இருந்து மேற்கோள் காட்டி அதன் பரிபாஷைகளை விவரித்து கூறுவார்கள்.
குருபிரானின் வழிகாட்டலில் பஜனை இல்லை, ஆட்டமில்லை, எந்த ஆரவாரமும் இல்லை, சில சபைகளைப் போல் அகத்தாய்வு செய்யுங்கள் என்பது இல்லை. நீ யார் நீ யார் என்று வினா எழுப்பிக் கொண்டிரு என்பதில்லை, உன் கனவில் குரு வந்து வழிக்காட்டுவார், இதை தருவார் என்ற பொய்யுரையோ, புனைந்துரையோ இல்லை. நேரடியாக பயிற்சி அளித்து ஞானகனல் எழுப்பி தீட்சை அளித்து உணர்வு ஊட்டி, உணர்வை கவனித்து கொண்டிரு என்று கூறி, உயிரூட்டி, உயிர் வளர்த்து, பல பயிற்சிகள் மூலம் உயிரையும், உடலையும் காத்து எங்களுக்கு பரிபக்குவம் அளிப்பவரே என் குருநாதர்.
கடையேனையும், கடைத்தேற்ற வேண்டும் என ஓயாது உழைக்கும் என் குருதேவர், ஓர் அட்சய பாத்திரம் வேண்டுவோர் வேண்டுதலுக்கேற்ப அருள் தந்து, பொருள் தந்து, ஆற்றல் தந்து பாதுகாப்பு அருளி, வழியாகவும், விழியாகவும், ஒளியாகவும், பரிணமிக்கும் அள்ள அள்ள குறையாத வாழ்வளிக்கும் அமுத சுரபி ஆவார். அவர் தம் அருளாற்றலால் சீடர்களுக்கு செய்யும் அற்புதங்களை கூறிக் கொண்டே இருக்கலாம். என் குருநாதரை வணங்கி கேட்கும் எந்த ஒரு அறநெறிக்குட்பட்ட விஷயங்களையும், அற்புதங்களாக அள்ளி தருபவர் எத்தனையோ பேர்கள் வணங்கி வேண்டி குழந்தைச் செல்வம் பெற்றதை நான் பார்த்திருக்கிறேன். என்னுடைய உடன்பிறவா சகோதரி ஏழு வருடங்கள் குழந்தைக்காக பல்வேறு வைத்தியங்களை செய்து வந்தார்கள். குருதேவரிடம் முறையிடும் வேளையிலே அவரை திருக்கூட்டத்திற்கு அழைத்து வரக் கூறினார்கள்.
கர்த்தர் பெரிய காரியங்களை உங்களுக்காக செய்வார் : விவிலியம்
ஆம் எங்கள் கர்த்தர் எங்களுக்காக பெரிய காரியங்களை மிக முனைப்போடு செயல்படுத்தி இருக்கிறார்கள். முன்பெல்லாம் ஞாயிற்றுக்கிழமைகளில் சமாராதனை முடிந்து குருநாதருடன் அவர்தம் இல்லம் சென்று அங்கு சிறிது நேரம் பேசிக் கொண்டு வருவது வழக்கம் சுமார் 2006 அல்லது 2007 ல் சிவத்தையாபுரம் சபையில் குருநாதருடன் பகல் பொழுதில் அருட்பசியில் செவிக்கு விருந்து அருந்தி கொண்டிருந்த வேளையில் அதே நேரம் குருநாதர் அவர்கள் இல்லத்தில் தன் மைத்துனரை (Evangelist போதகர் Paulathi) சந்தித்து அவரை வழியனுப்பி வைத்துள்ளார்கள். நான் குருநாதருடன் இருக்கும் வேளையில் மற்றொரு இடத்தில் தோன்றி செயலாற்றியது சங்கர சுவாமிகளின் அற்புதத்தை நேரில் பார்த்தது போல் வியப்பாகவும், ஆச்சரியமாகவும் இருந்தது.
குருநாதரின் வழிகாட்டல்களில் முக்கியமாக அவர்களின் வார்த்தைகளை கூறலாம். முக்காலம் உணர்ந்த மாமுனியின் தன்மையில் பிரதிபலிக்கும் முக்காலத்திற்கும் தேவையான ஆலோசனையாக வழிகாட்டும். “அறிவுடையார் ஆவது அறிவார்” என்ற வள்ளுவரின் வாக்கிற்கிணங்க அவர் தம் வாக்கினால் வாழ்வில் வீழ்ந்து விடாமல் தற்காத்து வெற்றி பெற்றோர் பலர் உண்டு. நானும் அதில் ஒருவன். காலனை வென்றோருக்கு காலம் ஓர் பொருட்டல்ல என்பதற்கு அவர் ஓர் சான்று. காலஅதீதன் அவர். காலத்தை கடந்து காலத்தால் கட்டுறாது ஆனாதி மூல காலத்தில் வரலாற்றுக்கு முந்தைய காலத்தில் வாழ்கின்றவர் அவர். நான் M.E., படித்து விட்டு வேலை தேடிக் கொண்டிருந்த போது அறிவுசார் வாழ்க்கை நெறிகளுடன் வேலை வேண்டி அவரை பிராத்தித்தேன். L&T (ECC) யில் தொழிற்சாலை பாதுகாப்பு பிரிவில் பொறியாளராக வடகிழக்கு இந்தியாவில் பணி கிடைத்தது. அதே நேரம் திருநெல்வேலி Einstein பொறியியல் கல்லூரியிலும் விரிவுரையாளராக வேலை கிடைத்தது. நான் தேர்ந்தெடுக்க திணறிய வேளையில் எனது வேண்டுதல் படியே என்னை வழிநடத்தியது எனது குருநாதரின் வழிகாட்டல் ஆம் நான் ஆசிரிய பணியில் சேர்ந்தேன். எனது வீட்டில் எதிர்ப்பு தெரிவித்த வேளையில் முனைவர் படிப்பிற்காக நான் ஆசிரியர் வேலையில் சேர்வதாக கூறி சமாதானம் கூறினார்கள்.
ஆம் குருதேவரின் பதிலின் படியே என் வாழ்க்கை நகர்ந்தது. PhD., (முனைவர் பட்டப்படிப்பு) சேர வழிகாட்ட நான் தாமதித்த வேளையில் பலமுறை வலியுறுத்த ஒரு வழியாக முனைவர் பட்டபடிப்பிற்கு ஆய்வுகள் செய்து கட்டுரைகள் சமர்பித்து பட்டம் பெற்றேன். வடகிழக்கு மலைகளில் தொலைந்திருக்க வேண்டிய நான் அவர்களின் வாக்கின் நிமித்தம் இன்று திருச்செந்தூர் டாக்டர். சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரியில் இயந்திரவியல் துறையின் தலைவராக பணிபுரிகிறேன். இன்றும், என்றும் அவர் தம் ஆற்றலாலும், அருளினாலும், வாழ்க்கை மேடு பள்ளங்களில் எளிதாக பிரயாணிக்கின்றேன். சில நேரங்களில் சில மாணவர்கள் வாழ்வியல் நிமித்தம் சில பணிகளில் ஈடுபடும் போது குருநாதர் வருத்தப்பட்டு பேசுவார்கள். நமக்கு எதற்காக வருத்தப்படுகிறார்கள் எனப் புரியாது. ஓரிரு ஆண்டுகள் கழித்து பார்த்தால் அந்த சீடர் அவர் மேற்கொண்ட பணிகள் நிமித்தம் குருநாதரை விட்டு அகன்று, கருத்துக்களுக்கு அப்பாற்பட்டு மாறுபட்டு சென்ற அவலநிலை காட்சிகளை காணலாம். குருதேவரின் வார்த்தைகள் புரிவதற்கு சில காலங்கள் ஏன் ஆண்டுகள் கூட உண்டாயிருக்கிறது. காலத்தை வென்றவர் வார்த்தைகளை கைக் கொண்டு காலத்தை வெல்வோம்.
காற்றாலே புவியாலே ககனமதினாலே
கனலாலே புனலாலே கதிராதியாலே
கூற்றாலே, பிணியாலே என வள்ளலார் பாடிய பாட்டை பாடி காட்டி, ஞானாசான் அரிய பெரிய பாதுகாப்புக்களை சீடர்களுக்கு அளித்து தான் பரிபக்குவம் செய்கின்றார் என்றார்கள். இதே போல் பல பேர்களுடைய இன்னல்கள், உடற்பிணிகள் ஈர்த்து அனுபவித்து கழிக்கிறார்கள். சமீபத்தில் கொரோனா நோய் சம்பந்தப்பட்ட பலரின் சுமைகளை சுமந்து சிறிது ஓய்வெடுத்த சூழல்களையும் கண்டு மனம் வெந்தது, பல்லோரின் பாவக்கணக்கை அனுபவித்து, கழித்தாலும் ஒரு முறை கூட அவர்கள் சலிப்பு கொண்டு பார்த்ததில்லை.
அவர்கள் அருளாற்றல் மூலம் குணமாகியிருப்போம் இருப்பினும் அவர்கள் அந்த பெருமையை மருந்திடம் சேர்த்து விடுவார்கள். சில நேரங்களில் சமாராதனை மூலம் சரியாக்கி சீடர்களுக்கு அருள் புரியும் விதங்களையும் காண்பிப்பார்கள். அவைகளை சுகமான சுமைகளாக சுமந்து கழிக்க வேண்டும் என்பார்கள். குருநாதரின் இறைப்பணியை ஏறக்குறைய ஐம்பது ஆண்டுகள் உடனிருந்து நிறைவேற்றும் குருநாதரின் முதல் சீடர், சபையின் பொருளாளர் கனம் பொருந்திய K.பாண்டியன் அண்ணாச்சியைப் பற்றிக் கூற வேண்டும். குருநாதரின் முதல் சீடராக, சங்கர சுவாமிகள் தந்த பிள்ளையாக, குருநாதரின் அருட்செல்வங்களில் முதன்மையானவராக அவர்களின் சீரிய முயற்சியே உலக அறிவார்ந்தோர் இயற்கை ஞான சபையாக பரிணமித்திருக்கிறது. சீடர்களை வளர்ப்பதற்கு பல முயற்சிகள் எடுத்து களப்பணியாற்றி, 24 மணி நேரமும் சபை மற்றும் குருநாதர் சிந்தனையிலே இருக்கும் மாமனிதர் ஆவார். தேவைக்கு மட்டுமே அவர்கள் சம்பாதிக்க கண்டுள்ளேன்.
எதிர்ப்பவர்களின் காரணம் ஆராய்ந்தால் அது பொறாமையினால் தானே தவிர வேறொன்றுமில்லை எதிர்ப்பவர்களும் குறை கூற வழியில்லா எதிர்ப்பவர்க்கும் கெடுதல் நினைக்காது அறநெறி வாழ்க்கை வாழ்பவர் எங்கள் அண்ணல். குருதேவரின் அறநெறி வழி வாழ்க்கையின் சுமைகளை இலகுவாக மாற்றி செல்ல வழி வகுக்கிறது. சுமையனைத்தும் குறைந்திடும் வழி இவ்வழி செல்வோர். தம் குடி முழுதும் பிழைக்கும் வழி இந்த வழி செல்லும் போது இறையாற்றலின் வசப்பட்டு இறையறிவினால் சீடர் ஒழுக்கமானவராக அறநெறிகுட்பட்ட மனிதனாக தனக்கும் தன்னை சார்ந்த சுற்றத்தோருக்கும் ஒரு பெரிய நீதியாக மாறி விடுகிறான்.
The path connects to the heavenly knowledge or eternal knowledge.
வாழி என் ஆண்டவன்
வாழி என் கோன்னருள்
எம்மான் புகழ் வாழி.
குருவே நாம் வணங்கும் தெய்வம்
குருவே நம்மை காக்கும் தெய்வம்
குருவே நம்மை வழிநடத்தும் தெய்வம்
குருவே நாம் செல்லும் வழிகாட்டும் தெய்வம்
குருதேவர் தம் அருள்நெறி வழி நடந்து
புவியில் அவர்தம் ஞான போதனைகளை முழங்கி
குருவின் புகழ் பரப்பி தொண்டாற்றி
அவர்தம் இதயத் தாமரையில் இடம் பெறுவோம்.