"நான் கண்ட குருநாதர்" அனுபவ உரைகள்

Dr. A. மணிராம்குமார் ME,Ph.D
திருச்செந்தூர்

குரு சிஷ்ய உறவு இறுதி பரியந்தம் நம்மை அழைத்து செல்லக்கூடிய உறவு. அந்த உறவு உடலையும் மனதையும் தாண்டி எடுத்துச் செல்லக் கூடிய உறவு. நித்திய வாழ்வுக்கு நம்மை இட்டுச் செல்லக் கூடிய உறவு. நான் வாழ்வின் பெரும் பாக்கியமாக, பொக்கிஷமாய் கருதுவது இறைவனின் ஞானமாய் எனக்கு வழிகாட்ட வழித்துணையாய் ஆட்கொண்ட என் குருநாதரின் உறவே ஆகும். இது இறைவனின் மிகப்பெரிய பரிசாகும். மறை சொல்லும் பொருள் மனித வேடமாய் வந்தது. சிறு வயதில் சித்தர்கள் மேல் ஆவல் கொண்டு பல வேடதாரிகளையும், சித்து வேலை செய்யும் தந்திரவாதிகளையும் கண்டு மெய்யான ஞான குருவை வேண்டி அலைந்தேன். சீடர்களின் உயிர் வளர்த்து உய்விக்கும் மெய்யான ஞானாசிரியர் இறையின் ரூபமாக கிடைத்தார்.

2002 ல் சங்கர சுவாமிகளின் குருபூஜை பத்திரிக்கையை என்னுடன் படிக்கும் மாணவரின் அறையில் கண்டு கனம் கார்த்தீசனிடம் விசாரித்து குருநாதரைக் கண்டடைந்தேன். குருநாதரிடம் பல கேள்விகள் கேட்டு விளக்கங்கள் பெற்று தீட்சை வாங்கினேன். குருநாதர் கற்று தரும் கல்வி புதுமைக்கு புதுமையாகவும், பழமைக்கு பழமையானதாகும். இல்லறத்தில் இருந்தே தவநிலைகளை ஆற்றக்கூடிய கலியுக குண்டலினி ஞானத்திருவடிப் பயிற்சிகள் ஆகும். நாம் இந்த லௌகீக உலகில் இருந்து கொண்டே சாகா வழிக்கு தவநிலைகளை மேற்கொள்ளும் பயிற்சிகளைக் கற்றுத்தருகிறார்கள். கோபத்தையும், காமத்தையும் வெல்லும் பயிற்சியளிக்கின்றார்கள். மூலக்கனல் ஏற்றி உயிர் வளர்த்து உடல், மனப்பக்குவம் கூட்டி தவநிலைகள் கூட்டுவித்து இறையுணர்வில் சேர்த்து பயிற்சி முறைகள் விஞ்ஞான தத்துவங்களோடு ஒத்து போக கூடிய அளவிலே மிகுந்த விளக்கங்களோடு பல்வேறு கருத்துக்களை திருமந்திரம், தேவாரம், திருவாசகம். திருக்குறள், பகவத்கீதை, ஒழிவிலொடுக்கம், ரிபூ கீதை, நிஷ்டானுபூதி சாரம், கைவல்லிய நவநீதம் மற்றும் விலிலியம், குரான் போன்ற பல ஞான நூல்களில் இருந்து மேற்கோள் காட்டி அதன் பரிபாஷைகளை விவரித்து கூறுவார்கள்.

01
அவர்கள் தமிழ் இலக்கிய ஞான கருத்துக்களை இலக்கிய சுவையுடன் பகிர்ந்து கொள்ளும் போது மதுவுண்ட வண்டினை போல் சொக்கி அதனை இரசித்து மகிழ்வோம். சுமை எனச் சொன்னோன்” என்று அருளையர் தாயுமான சுவாமிகளை கூறுவார். அதுபோல் தன்னிடம் உள்ள ஞான கருத்துக்களை பகிர்ந்தளித்து மிகுந்த உற்சாகம் கொள்வார்கள். குருநாதரின் கருத்துக்கள் அனைத்தும் மதங்களின் ஞான ரகசியங்களை தொகுத்து அதன் சாரங்களை கொண்டதாக இருக்கும். பிரம்ம நிலை விளக்கங்கள் சமாதியில் மனதின் நிலை, முதிர்வடைந்த வழிகாட்டியின் செயல்பாடு, பக்தியிலே ஞானத்திலே ஆன்மாவின் நிலை, பிரபஞ்ச ஆற்றல், ஜீவ ஆற்றல் அவற்றின் இணைப்பு நிலையில் அனுபூதி தன்மைகள் என பல ஆன்மீக இரகசியங்களை எளிமையாக பாமரருக்கும் புரியும்வண்ணம் அவர் எடுத்தாண்டு பல பாடல்களை மேற்கோள் காட்டி பேசுவது நம் அனைவரையும் கட்டிப் போடும். மணவாட்டி கூட்டத்தில் மனமானது மனவாளரின் பார்வைக்கும் ஈர்ப்புக்கும் அலைந்து நிற்பது போல் குருநாதரின் பால் அவரது அன்பிற்கு ஏக்கம் கொண்டிருக்கும்.
02
சாதி, மத, இன வேறுபாடு பேதங்களை கடுமையாக சாடுவார்கள். விஞ்ஞானத்திற்கு மறுப்புடைய, பகுத்தறிவிற்கு ஒத்துவராத விஷயங்களை அவர்கள் மறுத்துவிடுவார்கள். இந்த வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டே மாணவர்களை தேர்ந்தெடுத்து பயிற்சி அளித்து நாளைய ஆசிரியன் என ஆசிரியராக்கி அழகு பார்த்து மகிழ்ந்து வருகின்றார்கள். குருநாதரின் பயிற்சிகள், தத்துவங்கள், காந்த ஆற்றல் தத்துவத்தை மையபடுத்தி இறவாநிலைக்கு இட்டுச் செல்லும் வழியாகும். பகுத்தறிவு என்பது பக்திக்கு விரோதமல்ல, மனசாட்சிக்கு நாம் விரோதமில்லாமல் வாழும் பாங்கே ஒழுக்க நெறி எனக்கூறுவார். பகுத்தறிவின் மூலம் நம் அறிவின் துணை கொண்டு (ஏன், எதற்கு, எப்படி என) கேள்வி கேட்டு நாம் வளர வேண்டும் என்பார்கள். பக்தியிலே தன்னை இழந்த ஆன்மா, ஞானத்தின் உயர்வில் பக்தியின் முழுமையான இறையனுபவத்தை பகுத்தறிவின் முதிர்வில் பெறுகிறது எனக் குருநாதர் கூறுவார்கள். அவர்களின் பயிற்சிகள் ஒவ்வொருவருக்கும் முழுமையாக அறிந்து உணரக்கூடிய அளவிலே வடிவமைத்திருக்கிறார்கள்.
03
Kundalini Gnanam is a path of objective reasoning approach, ie., a method of perceiving the unknown, untouched ever pervading truth (God) with a sense of scientific reality. Our Gurudev teaches these practices with the aim to facilitate fellow human to perceive the objective real self & absolute truth by a super sensory perceptive approach without any blind belief or superstitious notion. My Gurudev is taking this knowledge amongst the masses irrespective of caste, creed, colour, religion and social status.
குருபிரானின் வழிகாட்டலில் பஜனை இல்லை, ஆட்டமில்லை, எந்த ஆரவாரமும் இல்லை, சில சபைகளைப் போல் அகத்தாய்வு செய்யுங்கள் என்பது இல்லை. நீ யார் நீ யார் என்று வினா எழுப்பிக் கொண்டிரு என்பதில்லை, உன் கனவில் குரு வந்து வழிக்காட்டுவார், இதை தருவார் என்ற பொய்யுரையோ, புனைந்துரையோ இல்லை. நேரடியாக பயிற்சி அளித்து ஞானகனல் எழுப்பி தீட்சை அளித்து உணர்வு ஊட்டி, உணர்வை கவனித்து கொண்டிரு என்று கூறி, உயிரூட்டி, உயிர் வளர்த்து, பல பயிற்சிகள் மூலம் உயிரையும், உடலையும் காத்து எங்களுக்கு பரிபக்குவம் அளிப்பவரே என் குருநாதர்.
04
வானில் பறவைகளின் காலடி தடத்தை அறிய முடியாது அதுபோல் ஞானிகளின் அறிவுநிலை உயர்வை கணிக்க இயலாது.
கடையேனையும், கடைத்தேற்ற வேண்டும் என ஓயாது உழைக்கும் என் குருதேவர், ஓர் அட்சய பாத்திரம் வேண்டுவோர் வேண்டுதலுக்கேற்ப அருள் தந்து, பொருள் தந்து, ஆற்றல் தந்து பாதுகாப்பு அருளி, வழியாகவும், விழியாகவும், ஒளியாகவும், பரிணமிக்கும் அள்ள அள்ள குறையாத வாழ்வளிக்கும் அமுத சுரபி ஆவார். அவர் தம் அருளாற்றலால் சீடர்களுக்கு செய்யும் அற்புதங்களை கூறிக் கொண்டே இருக்கலாம். என் குருநாதரை வணங்கி கேட்கும் எந்த ஒரு அறநெறிக்குட்பட்ட விஷயங்களையும், அற்புதங்களாக அள்ளி தருபவர் எத்தனையோ பேர்கள் வணங்கி வேண்டி குழந்தைச் செல்வம் பெற்றதை நான் பார்த்திருக்கிறேன். என்னுடைய உடன்பிறவா சகோதரி ஏழு வருடங்கள் குழந்தைக்காக பல்வேறு வைத்தியங்களை செய்து வந்தார்கள். குருதேவரிடம் முறையிடும் வேளையிலே அவரை திருக்கூட்டத்திற்கு அழைத்து வரக் கூறினார்கள்.
05
ஆனால் சூழ்நிலைகள் காரணமாக என்னால் அவர்களை கூட்டிக் கொண்டு செல்ல முடியவில்லை. அப்போது ஒரு நாள் மதியம் தூத்துக்குடி பேருந்து நிலையத்திலிருந்து பஸ் இல்லை என்று போன் செய்தார்கள் நான் அங்கு சென்றேன். இல்லத்திற்கு வருமாறு அழைத்தேன். அவர்களின் விழைவும் அதுவாகவே இருந்தது. வீட்டிற்கு சென்றோம் அப்போது எனது சகோதரி, பெரியம்மா, அத்தை ஆகியோர் தற்செயலாக வீட்டிற்கு வந்தனர். எனக்கோ இன்ப அதிர்ச்சியாக இருந்தது. என் வீட்டில் வைத்தே சகோதரியை ஆசீர்வதித்து ஒரு டானிக் எழுதி கொடுத்து அருந்தி வரச் சொன்னார்கள். ஆண்டொன்றில் அழகிய ஆண் குழந்தை பெற்றார்கள். வேணுசந்திரன் என்ற பெயரில் எங்களது குடும்பத்தில் வளர்ந்து வருகிறான் சீடனின் உள்ளார்ந்த அழுகுரலுக்கு செவிசாய்த்து தானே தேடி வந்து அதற்குரிய சூழ்நிலைகளை அமைத்து பரிபாலிக்கும் கடவுள் என் குருநாதர்.
06
மேலும் என் தங்கையின் முதல் பிரசவத்தின் போது குழந்தை தலை மாறி இருந்திருக்கிறது. அரை மணி நேரத்தில் சிசேரியன் அறுவை சிகிச்சை செய்து குழந்தையை வெளியே எடுத்து விடுவோம் என்று மருத்துவர்கள் கூற நான் அவசரமாக இரவு 11.00 மணிக்கு குருநாதரிடம் தகவல் கூறினேன். அப்போது அவர் மருத்துவர் ஜெயலெட்சுமி அம்மா மிகவும் திறமையானவர்கள் அவர் எளிதாக சரி செய்து விடுவார் எனக் கூறினார்கள். ஆச்சரியம் அரை மணி நேரத்தில் சிசேரியன் ஏற்பாடுகள் நடக்க உள்ளே சென்ற மருத்துவர் அம்மா சுக பிரசவத்தில் அழகிய பெண் குழந்தையை கொண்டு வந்தார். தன் மகிமையை மறைத்து பிறரின் பெருமையை உயர்த்தி காத்துஇரட்சிப்பவர் என் குருநாதர். என் தந்தையின் இருதய சிகிச்சையின் போதும், தாயாரின் அறுவை சிகிச்சையின் போதும் குருநாதரின் அருள் நோக்கால் இயல்பு நிலை அடைந்து அரும்பெரும் காரியங்கள் செய்ய அருளினார்கள்.
07
2017ம் ஆண்டு ஆவணி மாதம் மகம் நட்சத்திரம் அன்னதான விழாவின் போது உடல் நலமும், அருள் துணையும் வேண்டி இரு குழந்தைகளையும் அய்யன்பட்டி ராஜரிஷி பரமஞான குருபிரான் சங்கர சுவாமிகள் ஜீவ சமாதி கோவிலில் ஏலம் விட்டு எடுத்தோம். ஒரு வாரத்தில் சொந்த ஊரான ஆலங்குளத்திற்கு என் துணைவியாரும், இரு குழந்தைகளும் பேருந்தில் செல்ல நேர்ந்தது. திருநெல்வேலியில் கிளம்பிய பேருந்து சற்று தூரத்தில் பிரேக் கட் ஆகி ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சென்றது. பேருந்தில் இருந்த அனைவரும் அலறினார்கள். எனது குடும்பத்தினர் இடதுபுற முன் இருக்கையில் இருந்து பதறினர். பேருந்து சாலையின் ஓரத்தில் மெதுவாக கவிழ சென்றது. ஆனால் முன்பக்க சக்கரம் சிறிது சாய்ந்தவாறு திடீரென பேருந்து நின்றது.
08
அனைவரும் இறங்கி தூரம் சென்றனர். அப்போது பின் இருக்கையில் இருந்த அம்மையார் என் மனைவியிடம் உன் இரு பிள்ளைகளுக்காக இறைவன் இந்த பேருந்தை நிறுத்தி எல்லோரையும் காப்பாற்றினார் என்று கூறி மகிழ்ந்து சென்றுள்ளார். திருக்கூட்டத்தில் கலந்து கொண்டு குருநாதரிடமும், சங்கர சுவாமிகளிடமும் வேண்டுவது நமது கற்பனைக்கு மீறிய அரும்பெரும் பலன்கள் அடையக் கண்டோம்.
கர்த்தர் பெரிய காரியங்களை உங்களுக்காக செய்வார் : விவிலியம்
ஆம் எங்கள் கர்த்தர் எங்களுக்காக பெரிய காரியங்களை மிக முனைப்போடு செயல்படுத்தி இருக்கிறார்கள். முன்பெல்லாம் ஞாயிற்றுக்கிழமைகளில் சமாராதனை முடிந்து குருநாதருடன் அவர்தம் இல்லம் சென்று அங்கு சிறிது நேரம் பேசிக் கொண்டு வருவது வழக்கம் சுமார் 2006 அல்லது 2007 ல் சிவத்தையாபுரம் சபையில் குருநாதருடன் பகல் பொழுதில் அருட்பசியில் செவிக்கு விருந்து அருந்தி கொண்டிருந்த வேளையில் அதே நேரம் குருநாதர் அவர்கள் இல்லத்தில் தன் மைத்துனரை (Evangelist போதகர் Paulathi) சந்தித்து அவரை வழியனுப்பி வைத்துள்ளார்கள். நான் குருநாதருடன் இருக்கும் வேளையில் மற்றொரு இடத்தில் தோன்றி செயலாற்றியது சங்கர சுவாமிகளின் அற்புதத்தை நேரில் பார்த்தது போல் வியப்பாகவும், ஆச்சரியமாகவும் இருந்தது.
09
சபையில் தீட்சை எடுத்த புதிதில் (மே 2002) நெல்லையிலிருந்து காரில் வரும் வேளையில் மதிய நேரம், கண் இமைப்பில் வாகனம் என் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் இருந்து வலது புறம் கீழே இறங்கி விபத்துக்குள்ளானது. அப்போது ஒரு கீறல் கூட விழாமல் மீண்டேன். அது என் குருநாதரின் கிருபையினால் அவர் தம் அன்பினால் குருநாதர் அவர்கள் பல்வேறு சித்திகள் கொண்டிருந்தார்கள். அவைகள் அனைத்தும் தன் சீடர்களை கண்ணின் இமை போல் காப்பாற்றவே அருட்கொடையாற்றினார்கள். மற்றபடி சமுதாயத்தில் ஒரு சாமானியனாகவே இன்ப துன்பங்களுக்கு ஆட்பட்ட சாமானிய நபராக இயல்பான வாழ்க்கையின் மேடுபள்ளங்களை சந்திக்கும் நபராகவே காட்சியளிப்பார்கள். ஞான சபையில் சீடர்களுக்கு அவர்தம் நம்பிக்கைக்கு ஏற்ப நடராஜராக, இறைவனாக, நண்பனாக, ஆசானாக, தோள் கொடுக்கும் தோழனாக பல்வேறு பரிணாமங்களை அகத்தே கொண்டவராக வழி நடத்தி வருகிறார்கள். நமது சபை பொருளாளர் கனம்பொருந்திய பாண்டியன் அண்ணா “புதரில் இருக்கும் பனம்பழம் மணக்கும் ஆனால் மறைந்திருக்கும்” என்று கூறுவதை போல் சமுதாயத்தில் மறைந்தே வாழ்கின்றார்கள்.
10

குருநாதரின் வழிகாட்டல்களில் முக்கியமாக அவர்களின் வார்த்தைகளை கூறலாம். முக்காலம் உணர்ந்த மாமுனியின் தன்மையில் பிரதிபலிக்கும் முக்காலத்திற்கும் தேவையான ஆலோசனையாக வழிகாட்டும். “அறிவுடையார் ஆவது அறிவார்” என்ற வள்ளுவரின் வாக்கிற்கிணங்க அவர் தம் வாக்கினால் வாழ்வில் வீழ்ந்து விடாமல் தற்காத்து வெற்றி பெற்றோர் பலர் உண்டு. நானும் அதில் ஒருவன். காலனை வென்றோருக்கு காலம் ஓர் பொருட்டல்ல என்பதற்கு அவர் ஓர் சான்று. காலஅதீதன் அவர். காலத்தை கடந்து காலத்தால் கட்டுறாது ஆனாதி மூல காலத்தில் வரலாற்றுக்கு முந்தைய காலத்தில் வாழ்கின்றவர் அவர். நான் M.E., படித்து விட்டு வேலை தேடிக் கொண்டிருந்த போது அறிவுசார் வாழ்க்கை நெறிகளுடன் வேலை வேண்டி அவரை பிராத்தித்தேன். L&T (ECC) யில் தொழிற்சாலை பாதுகாப்பு பிரிவில் பொறியாளராக வடகிழக்கு இந்தியாவில் பணி கிடைத்தது. அதே நேரம் திருநெல்வேலி Einstein பொறியியல் கல்லூரியிலும் விரிவுரையாளராக வேலை கிடைத்தது. நான் தேர்ந்தெடுக்க திணறிய வேளையில் எனது வேண்டுதல் படியே என்னை வழிநடத்தியது எனது குருநாதரின் வழிகாட்டல் ஆம் நான் ஆசிரிய பணியில் சேர்ந்தேன். எனது வீட்டில் எதிர்ப்பு தெரிவித்த வேளையில் முனைவர் படிப்பிற்காக நான் ஆசிரியர் வேலையில் சேர்வதாக கூறி சமாதானம் கூறினார்கள்.

11

ஆம் குருதேவரின் பதிலின் படியே என் வாழ்க்கை நகர்ந்தது. PhD., (முனைவர் பட்டப்படிப்பு) சேர வழிகாட்ட நான் தாமதித்த வேளையில் பலமுறை வலியுறுத்த ஒரு வழியாக முனைவர் பட்டபடிப்பிற்கு ஆய்வுகள் செய்து கட்டுரைகள் சமர்பித்து பட்டம் பெற்றேன். வடகிழக்கு மலைகளில் தொலைந்திருக்க வேண்டிய நான் அவர்களின் வாக்கின் நிமித்தம் இன்று திருச்செந்தூர் டாக்டர். சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரியில் இயந்திரவியல் துறையின் தலைவராக பணிபுரிகிறேன். இன்றும், என்றும் அவர் தம் ஆற்றலாலும், அருளினாலும், வாழ்க்கை மேடு பள்ளங்களில் எளிதாக பிரயாணிக்கின்றேன். சில நேரங்களில் சில மாணவர்கள் வாழ்வியல் நிமித்தம் சில பணிகளில் ஈடுபடும் போது குருநாதர் வருத்தப்பட்டு பேசுவார்கள். நமக்கு எதற்காக வருத்தப்படுகிறார்கள் எனப் புரியாது. ஓரிரு ஆண்டுகள் கழித்து பார்த்தால் அந்த சீடர் அவர் மேற்கொண்ட பணிகள் நிமித்தம் குருநாதரை விட்டு அகன்று, கருத்துக்களுக்கு அப்பாற்பட்டு மாறுபட்டு சென்ற அவலநிலை காட்சிகளை காணலாம். குருதேவரின் வார்த்தைகள் புரிவதற்கு சில காலங்கள் ஏன் ஆண்டுகள் கூட உண்டாயிருக்கிறது. காலத்தை வென்றவர் வார்த்தைகளை கைக் கொண்டு காலத்தை வெல்வோம். 

12
குருநாதர் சீடர்களை ஆமை, மீன், பறவை போல் தொடுதலின் மூலம், பார்வை மற்றும் சிந்தனை மூலம் பாதுகாத்து வருகிறார் என்பதற்கு என் வாழ்வில் நடந்த ஒரு நிகழ்ச்சி. திருச்செந்தூரில் ஒரு யோக பயிற்சியாளரை சந்தித்து உரையாடிக் கொண்டிருக்கும் போது அவர் பல்வேறு பயிற்சிகளை குறித்து விளக்கங்கள், செயல்முறைகள் குறித்து பேசிக் கொண்டே வந்தார். திடீரென்று சித்துக்கள் மற்றும் அதன் செயல்முறைகள் பற்றிக் கூறிக்கொண்டே வந்தவர், மிஸ்டிக் ஹாண்டு என்ற தாக்குதல் முறையில் என் இருதயத்தை சிறிது அழுத்தி விட்டார் என்னால் அதை உணர முடிந்தாலும் அதை பொருட்படுத்தவில்லை. அன்று இரவு என் கனவில் குருநாதர் என் முதுகை, இருதயத்தின் பக்கம் தடவி விட்டு தன் இருதயத்தைப் பிடித்துக் கொண்டு உட்கார்ந்த காட்சியைக் கண்டேன். காலை எழுந்ததும் கண்ட கனவின் காரணம் என்னவென்றே எனக்கு அறிய முடியவில்லை. ஏனெனில் கடந்த நாள் சம்பவத்தை சிறிதும் நான் பொருட்படுத்தவில்லை. கண்கள் கேட்காமலே இமைகள் கண்களைக் காப்பது போல் குருநாதர் என்னை இரட்சித்தார்.
13
இரண்டு நாள் கழித்து அந்த யோக பயிற்சியாளர் என்னைத் தொடர்பு கொண்டு, நான் தவறுதலாக ஆளைக் கொல்லும் வித்தையை உங்களிடம் பிரயோகித்து விட்டதாகவும், அதற்கு மாற்ற முறையைச் செய்து சரி செய்ய முயல்வதாகவும் கூறினார். அப்போது தான் அன்று இரவில் என் குருநாதர் செய்த மகிமையை புரிந்து கொள்ள முடிந்தது. குருநாதரை நேரில் சந்தித்து நன்றி தெரிவிக்கும் போது,
காற்றாலே புவியாலே ககனமதினாலே
கனலாலே புனலாலே கதிராதியாலே
கூற்றாலே, பிணியாலே என வள்ளலார் பாடிய பாட்டை பாடி காட்டி, ஞானாசான் அரிய பெரிய பாதுகாப்புக்களை சீடர்களுக்கு அளித்து தான் பரிபக்குவம் செய்கின்றார் என்றார்கள். இதே போல் பல பேர்களுடைய இன்னல்கள், உடற்பிணிகள் ஈர்த்து அனுபவித்து கழிக்கிறார்கள். சமீபத்தில் கொரோனா நோய் சம்பந்தப்பட்ட பலரின் சுமைகளை சுமந்து சிறிது ஓய்வெடுத்த சூழல்களையும் கண்டு மனம் வெந்தது, பல்லோரின் பாவக்கணக்கை அனுபவித்து, கழித்தாலும் ஒரு முறை கூட அவர்கள் சலிப்பு கொண்டு பார்த்ததில்லை.
14
சங்கரருக்கு பணி செய்கிறேன் அவர் பிள்ளைகளுக்கு துணை செய்கிறேன் என்பார்கள். உனக்காக எனைத்துறப்பேன் என சங்கர சுவாமிகளுக்காக என்றும் களைப்பறியாமல் ஓய்வெடுக்காமலும் ஞானசபை, சபை அருட்செல்வங்கள் என இரவும், பகலும் பாராது அருட்பணியாற்றுவார்கள். உடல் துன்பம் மிகுந்த வேளையிலும் இறைபணி ஆற்ற தவறியதில்லை. குருநாதரது கைத்தொலைப்பேசி ஒருநாளும் அணைத்தோ, Silent Mode வைத்தோ பார்த்ததில்லை. இரவு, பகல் எல்லா நேரங்களிலும் இன்னும் முதுமையின் தன்மையிலும் பிள்ளைக்கு உருகும் தாயைப் போல் சீடர்களுக்கு ஓர் துன்பம் எனில் அவர்தம் அழைப்புக்கு வாலிப வேகத்தோடு ஆறுதல் கூறி தேற்றி அல்லல் அகற்றும் ஞான சூரியன் என் குருநாதர். சீடர்களின் உடல்நலத்தை பராமரிக்க நோய்களில் இருந்து மீண்டு வர கூறும் வைத்தியங்கள் மிக எளிமையான முறையில் இருக்கும். பல நேரங்களில் அந்த மருந்துகளை நாம் வாங்கியிருப்போம், நோய் தன்னாலே காணாமல் போயிருக்கும்.
15

அவர்கள் அருளாற்றல் மூலம் குணமாகியிருப்போம் இருப்பினும் அவர்கள் அந்த பெருமையை மருந்திடம் சேர்த்து விடுவார்கள். சில நேரங்களில் சமாராதனை மூலம் சரியாக்கி சீடர்களுக்கு அருள் புரியும் விதங்களையும் காண்பிப்பார்கள். அவைகளை சுகமான சுமைகளாக சுமந்து கழிக்க வேண்டும் என்பார்கள். குருநாதரின் இறைப்பணியை ஏறக்குறைய ஐம்பது ஆண்டுகள் உடனிருந்து நிறைவேற்றும் குருநாதரின் முதல் சீடர், சபையின் பொருளாளர் கனம் பொருந்திய K.பாண்டியன் அண்ணாச்சியைப் பற்றிக் கூற வேண்டும். குருநாதரின் முதல் சீடராக, சங்கர சுவாமிகள் தந்த பிள்ளையாக, குருநாதரின் அருட்செல்வங்களில் முதன்மையானவராக அவர்களின் சீரிய முயற்சியே உலக அறிவார்ந்தோர் இயற்கை ஞான சபையாக பரிணமித்திருக்கிறது. சீடர்களை வளர்ப்பதற்கு பல முயற்சிகள் எடுத்து களப்பணியாற்றி, 24 மணி நேரமும் சபை மற்றும் குருநாதர் சிந்தனையிலே இருக்கும் மாமனிதர் ஆவார். தேவைக்கு மட்டுமே அவர்கள் சம்பாதிக்க கண்டுள்ளேன்.

16
செல்வம் திரட்டுவதிலோ, பொருள் பற்றிய தேடுதலிலோ இறங்கியதை நான் கண்டதே இல்லை. அரை நூற்றாண்டுக்கு மேலாக அருள்வழி அதுவும் தங்க சுவாமிகளின் வழி என்றும் குருநாதரின் சீடராக, நண்பராக, ஏன் சில நேரம் அவரிடத்தில் இருந்து தன்னைத் துறந்து அருட்பணியாற்றி சபையை போற்றி பாதுகாத்து எங்களைப் போன்ற சீடர்களை ஆதரித்து அரவணைத்து, பாதுகாத்து வரும் மகான் ஆவார். அவர்களுடன் ஒன்றிணைந்து திருக்கோவில் புதுப்பித்து கட்டும் போது பணி புரிய கிடைத்த வாய்ப்பு என்றும் என் வாழ்வில் ஒரு மைல் கல். இரு மகான்களின் சிந்தனைகளை உள்வாங்கி களப்பணியாற்றி, அவர்களின் வாக்கில், சிந்தனையில் வெளிப்படும் ஆற்றல்களிடையே சங்கர சுவாமிகளுக்கு தொண்டூழியம் புரிவது எப்போதும் புதியதொரு அனுபவமாக இருக்கும். சரணாகதி தன்மையில் நாம் இயங்கினால் மட்டுமேதான் தன்மை சிறிது புலப்படும். வாழ்வியல் நிகழ்வுகள் அவர்களின் திட்டாந்தமாக விளைவது கண்டு வியந்து மகிழ்ந்தற்கரிய பெரு வாய்ப்பு அது.
17
எடுத்த காரியம்யாவிலும் வெற்றி என்பதற்கு ஏற்ப அவர்கள் இருவரும் இணைந்து ஆற்றிய காரியங்கள் யாவும் வெற்றியே அடைய கண்டிருக்கிறேன். குருநாதரின் உடனிருக்கையில் நடமாடும் இறைவனுடன் இருப்பது போல் இருக்கும். குருநாதர் அருகில் சென்றால் ஒரு விதமான காந்த பேராற்றலை உணரலாம். நமது காந்த களத்தில் குருதேவரது காந்த களம் (Spiritual Magnetism) ஊடுருவி நாம் ஒரு ஆன்மீக பரவச உணர்விற்கு ஆட்படுவதை உணரலாம். அவர்களிடம் ஆசிகள் பெறும் போது அருகினில் செல்லும் போது, காணும் போது, நினைக்கும் போது அவர்தம் நினைப்பே குருவின் ஆன்மீக அருளாற்றல் நம்மை பரவசப்படுத்துவதை எண்ணி வியந்து மகிழ்ச்சி கொண்டிருக்கிறேன். The Present of his thought, word and deed will magnetize us with spiritual magnetism ‘வருத்தப்பட்டு பாரம் சுமப்பவர்களே என் அருகில் வாருங்கள் நான் இளைப்பாறுதல் தருகிறேன். என் நாமத்தின் நிமித்தம் இரண்டோ அதற்கு மேற்பட்டவரோ கூடினால் அவர்கள் நடுவே நானிருப்பேன்” – விவிலியம்.
18
ஆம்! அவர்கள் அருகில் சென்றால் ஞானகதிர் வீச்சை உணரலாம். அவர்களின் நினைப்பே காந்த பெருங்களத்தில் நம்மை இணைக்கும். குருநாதர் ஆமை, மீன், பறவை போல் சீடர்களை அருளாற்றலால் வழிநடத்துவதை போல் ஒவ்வொரு சீடர்களும் குருதேவரை நோக்கி சென்று, கண்டு வழிபட்டு, அவரை மனதில் நினைத்து நினைத்து மகிழ்ந்து மகிழ்ந்து மேலான பிரம்மஞான நிலைகளை அடைய வேண்டும். குருநாதர் அவர்கள் மிகவும் எதிர்பார்ப்பது சீடர்கள் நிஷ்டாபரன், சதாநிஷ்டன், சகஜ நிஷ்டன், என்ற பெயர் வாங்க வேண்டும் என்பதே. நாட்டிற்கு உழைக்கும் நல்லோரெனினும், சொந்த ஊரிலும் சில மட்டி கூட்டங்கள் முட்டிப்பார்க்கும் என்பதற்கு ஏற்ப குருநாதரிடம் சிலர் மோதுவதுண்டு. அவர்களையும் மாற்று கருத்துடையோர் என மிகத் தன்மையாகவே கூறுவார்கள்.
19

எதிர்ப்பவர்களின் காரணம் ஆராய்ந்தால் அது பொறாமையினால் தானே தவிர வேறொன்றுமில்லை எதிர்ப்பவர்களும் குறை கூற வழியில்லா எதிர்ப்பவர்க்கும் கெடுதல் நினைக்காது அறநெறி வாழ்க்கை வாழ்பவர் எங்கள் அண்ணல். குருதேவரின் அறநெறி வழி வாழ்க்கையின் சுமைகளை இலகுவாக மாற்றி செல்ல வழி வகுக்கிறது. சுமையனைத்தும் குறைந்திடும் வழி இவ்வழி செல்வோர். தம் குடி முழுதும் பிழைக்கும் வழி இந்த வழி செல்லும் போது இறையாற்றலின் வசப்பட்டு இறையறிவினால் சீடர் ஒழுக்கமானவராக அறநெறிகுட்பட்ட மனிதனாக தனக்கும் தன்னை சார்ந்த சுற்றத்தோருக்கும் ஒரு பெரிய நீதியாக மாறி விடுகிறான்.
The path connects to the heavenly knowledge or eternal knowledge.

20
அறிவார்ந்த பெருமகனாக உலகில் இயற்கையோடு ஒன்றி ஒன்றி இறுதியில் பிரம்ம நிலை பெற்று நிலை பெற்ற மண்ணுயிராகி ஒளிர்கிறான். அந்தகன் என்ன, கூற்றுவன் என்ன, நாள் என்ன, கோள் என்ன, அனைத்தும் அவர் முன் காணாமல் போனதை கண்டுள்ளேன். குருநாதர் அவர்கள் (வாழ்க்கையை, அனுபவங்களை) சீடரின் பக்குவ நிலை அடைவதற்காக மாற்றக்கூடிய வல்லமை உடையவர். அவர் பாதம் பட்ட இடம் துலங்கும், நிழல் பட்ட இடம் ஒளிரும். தகுதியில்லா பாத்திரமான எனக்கும் பிச்சையிட்டு உருவாக்கி கொண்டிருக்கிறார். இறைவனை உருவமாக பார்க்க, உடனிருக்க, உரையாட, கொடுத்து, கொடுத்து சிவந்த கரங்களை காண, அருள் கொடுத்து கொடுத்து சிவந்த கரங்களை காண சிவத்தையாபுரம் செல்லும் வாய்ப்பினை எதிர்நோக்கி ஏங்கி கொண்டிருக்கும் எங்கள் உள்ளம் எல்லாம்.
21

வாழி என் ஆண்டவன்
வாழி என் கோன்னருள்
எம்மான் புகழ் வாழி.
குருவே நாம் வணங்கும் தெய்வம்
குருவே நம்மை காக்கும் தெய்வம்
குருவே நம்மை வழிநடத்தும் தெய்வம்
குருவே நாம் செல்லும் வழிகாட்டும் தெய்வம்
குருதேவர் தம் அருள்நெறி வழி நடந்து
புவியில் அவர்தம் ஞான போதனைகளை முழங்கி
குருவின் புகழ் பரப்பி தொண்டாற்றி
அவர்தம் இதயத் தாமரையில் இடம் பெறுவோம்.

22
நன்றி !