இளமைக்காலம்

தமிழகத்தின் தென்கோடியில் அமைந்துள்ள தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திருவைகுண்டம் வட்டத்தில் உள்ள பேரூரான சாயர்புரத்திற்கு அருகில் உள்ள சிற்றூர் புளியங்காடு (தற்போது இவ்வூர் புளியநகர் என்று வழங்கப்படுகிறது). இவ்வூரில் வீ. முத்துமாலை – அன்னக்கிளி அம்மாள் தம்பதிக்கு 1939ம் ஆண்டு ஐப்பசி மாதம் 20-ம் நாள் பூரம் உடுக்களில் (நட்சத்திரம்) மூத்த மகவாக தங்கசுவாமி அவர்கள் பிறந்தார். பால்கனி, செந்தூர்பாப்பா என இரு சகோதரிகளும் ராஜபாண்டி என்ற சகோதரரும் உடன்பிறந்தவராவர். தங்கசுவாமி அவர்களின் தாத்தா வீரமணி நாடார் மர வியாபாரம் செய்து வந்தார்கள். சுவாமிகளின் தந்தையார் முத்துமாலை அவர்கள் வாழைத்தார் ஏற்றுமதி வியாபாரம் பெரிய அளவில் செய்து வந்தார்கள். தங்கசுவாமி அவர்கள் சாயர்புரம் போப் உயர்நிலைப் பள்ளியில் தன்னுடைய பள்ளிப் படிப்பை நிறைவு செய்து பின் கல்லூரி படிப்பை நாகர்கோவில் S.T. இந்து கல்லூரியில் நிறைவு செய்தார்கள். பின்பு திருச்செந்தூர் தொழிற்பயிற்சி கூடத்தில் தொழிற்கல்வியும் பயின்றார்கள்.

இல்லற வாழ்வு

ஆண்டுகள் சில உருண்டோடின. 1962ல் நெய்வேலி N.L.C.நிறுவனத்தில் பணியில் சேர்ந்தார்கள். 1964ல் தூத்துக்குடி மாவட்டம் ஏரலுக்கு அருகில் உள்ள மாவடிப்பண்ணை என்ற ஊரைச் சேர்ந்த பண்டாரம் – சிவகாமி அம்மாள் தம்பதியின் தவப்புதல்வி சண்முகக்கனி அம்மாளை திருமணம் செய்து இல்லறம் புகுந்து நல்லறம் மேற்கொண்டார்கள். சுவாமிக்கு மூன்று புதல்விகளும் ஒரு புதல்வனும் பிறந்தனர். 1968ம் ஆண்டு உடல்நலக் குறைவின் காரணமாக பணியிலிருந்து
விருப்ப ஓய்வு பெற்றுக் கொண்டு நெய்வேலியிலிருந்து சொந்த ஊரான புளியநகருக்கு வந்துவிட்டார்கள்.

ஆன்மீகப் பயணம்

சுவாமிகளுக்கு சிறுவயது முதல் இருந்து வந்த பகுத்தறிவுச் சிந்தனையாலும் ஆய்வுத் திறனாலும் சிவத்தையாபுரத்தைச் சேர்ந்த ஆன்மீகப் பெரியார் என்றழைக்கப்படும் தாடிக்காரர் பெருமாள் நாடார் அவர்களின் தொடர்பு 1969ல் கிடைத்தது. சுவாமிகளின் தீவிரத் தேடலைப் புரிந்து கொண்ட ஆன்மீகப் பெரியார் சுவாமிகளை ஏரல் அருகில் உள்ள சிவகளை என்ற ஊருக்கு அழைத்து சென்று ஆதித்தன்பிள்ளை சுவாமிகளிடம் அறிமுகம் செய்து வைத்தார்கள். (ஆதித்தன்பிள்ளை சுவாமிகள் திருச்செந்தூரில் சமாதி ஆலயம் பெற்றுள்ள ராஜரிஷி அய்யன்பட்டி சங்கர சுவாமிகளின் தலைமாணாக்கர் ஆவார்). சுவாமிகள் தமது குருநாதராகிய ஆதித்தன்பிள்ளை சுவாமிகளிடம் தொடர்ந்து தொடர்பு கொண்டு ஞானக் கருத்துக்களையும் ஆன்மீக நூல்களையும் கசடறக் கற்றறிந்தார்கள். பின் 1972ம் ஆண்டு சிவராத்திரி நாளன்று முறைப்படி குண்டலினி ஞான திருவடி உபதேசம் (தீட்சை) பெற்றார்கள். பின் குருவின் வழிகாட்டுதலுடன் தீவிரபயிற்சியில் ஈடுபட்டார்கள். மெய்வருத்தம் பாரார் பசிநோக்கார் கண்துஞ்சார் எவ்வெவர் தீமையும் மேற்கொள்ளார் -செவ்வி அருமையும் பாரார் அவமதிப்பு கொள்ளார் கருமமே கண்ணாயி னார். என்ற நீதிநெறி விளக்கப் பாடலுக்கேற்ப தீவிர தவவாழ்க்கை மேற்கொண்டு, இறைநிலையை உணர்ந்து பரிபூரண நிலையாகிய சச்சிதானந்தப் பெருநிலையை அடைந்தார்கள்.

வாழ்வின் இலக்கு

மனிதன் வாழ்வு முழுமையடைய வேண்டுமெனில் அவன் உயிர் உடலோடு ஒடுங்கும் நிலையாகிய மரணமில்லாப் பெருநிலையைத் தரக்கூடிய குண்டலினி ஞானக்கல்வியை கற்று அறிந்து உணரவேண்டும் அப்படி உணர்ந்தால்தான் வாழ்வின் நிலைத்த சுகத்தைப் பெறமுடியும் அவ்வாறு இல்லையெனில் கல்வி, செல்வம், அதிகாரம், அந்தஸ்து என எவ்வளவு பெற்றிருந்தாலும் அவனுடைய வாழ்வானது குறையுடைய
ஒன்றாகத்தான் இருக்கும். சலிப்பு, வெறுப்பு, கோபம், காமம், பொறாமை போன்றவற்றில் சிக்கித் தவிப்பார்கள். உடலைச் சீராக்க மருத்துவர்கள் இருப்பதுபோல், மனதைச்சீராக்க மனவேதனையிலிருந்து விடுபட வேண்டுமென்றால். ஏற்கெனவே மனதை தன்வசப்படுத்திய ஞானாசான் மூலம்தான் சீராக்கமுடியும். குருவின் மூலமாகத் தெளிவு பெற்றால்தான் உயிர் உய்வடையும். வேறொன்றாலும் வாழ்வு பரிபூரணம் அடையாது என்று சித்தர்களும் ஞானிகளும் காட்டிய வழியை இக்காலத்திற்கு ஏற்றவாறு உருவாக்கி தன்னை நாடிவரும் அன்பர்களுக்கு உணர்த்தி வருகிறார்கள்.

உலக அறிவார்ந்தோர் இயற்கை ஞானசபை

தூத்துக்குடி மாவட்டம் திருவைகுண்டம் வட்டம் சாயர்புரம் அருகில் உள்ள சிவத்தையாபுரம் எனும் சிற்றூரில் உலக அறிவார்ந்தோர் இயற்கை ஞானசபையின் தலைமையகம் அமைந்துள்ளது. மேலும் சென்னை மாதனாங்குப்பம், மேடவாக்கம், மேல்மருவத்தூர்,  திருவாரூர், நெல்லை, மதுரை, தூத்துக்குடி, கூட்டாம்புளி, முக்காணி, திருச்செந்தூர். உமரிக்காடு, ஏரல், ஆகிய இடங்களில் கிளை ஞான சபைகள் ஏற்படுத்தப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது.