"நான் கண்ட குருநாதர்" அனுபவ உரைகள்
R. முருகேசன் MA,B.Ed
முக்காணி
அவ்வகையில் அடியேனை ஆட்கொண்ட குருநாதர் ஞானவள்ளல் மகாகனம் தங்கசுவாமிகள் ஆவார்கள். புளியநகரில் பிறந்த குவலயம் தொழும் குணக்குன்றாய் வளர்ந்து சீவனை சிவனாக்கி உலக அறிவார்ந்தோர் இயற்கை ஞானசபையினை உருவாக்கி, சாதி மொழி இன மத பேதமற்று மானுட வர்க்கத்திற்கு மகத்தான மெய்ஞானத்தினை வாரி வழங்கிக் கொண்டிருக்கும் கண்கண்ட புனிதராகிய எம் குருநாதருடனான அனுபவத்தைக் கூற விழைகிறேன்.
எனது 25வது வயது வரை பக்திமார்க்கத்தில் அதிக ஈடுபாடு கொண்டிருந்த நான் 2000வது ஆண்டில் நமது குருநாதரை சந்திக்கும் அரிய வாய்ப்பு எனது அண்ணன் மூலம் கிடைத்தது. முதல் சந்திப்பில் அவர்களின் எளிமையும், முதல் உரையாடலில் அவர்களின் தெளிந்த ஞானமும் அடியேனை வெகுவாக கவர்ந்தது. எவரது சந்திப்பு நமது தேடலைப் பூர்த்தி செய்கிறதோ அவரே சத்குருநாதராவார். எவனொருவனால் தன்னையிழந்து, வார்த்தைகளற்ற செய்தியை வாங்கிக் கொள்ள இயல்கிறதோ அவனே மெய்த்தொண்டனாவான் என்பது ஆன்றோர் வாக்கு. கடைநிலைத் தொண்டனாகிய அடியேன் கடந்த 20 ஆண்டுகளில் பெற்ற அனுபவங்களில் சிலவற்றை பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.
எமது குருநாதர் அவர்கள் காட்சிக்கு மட்டும் எளியவர் அல்ல அணுகுவதற்கும் அன்புகாட்டுவதிலும் மிகவும் எளியவர் ஆவார்கள்.
அனைவரையும் சமமாகப் பார்ப்பதோடு அவரவர் உள்வாங்கும் திறனுக்கேற்றார்ப்போல இக்கல்வியினைப் போதிப்பது மிகவும் போற்றுதற்குரியதாகும். மாணவன் எத்தனை முறை தனது அறியாமையை வெளிப்படுத்தினாலும் அதைத் தாயுள்ளத்தோடு பொறுத்து நல்வழிகாட்டுவதைப் பலமுறை உணர்ந்து இருக்கிறேன். கல்வியிற் சிறந்தவர்களும் புரிந்து கொள்ள இயலாத அரிய வேதாந்தக் கருத்துகளையெல்லாம் படிப்பு வாசனையே இல்லாத சாதாரண, கூலிவேலை செய்து வாழ்க்கை நடத்தும் சீடர்கள் வெளிப்படுத்துவதைக் காணும் போது மெய்சிலிர்த்துப் போயிருக்கிறேன்.
மதம் ஆன்மீகத்திற்கு வழிகாட்டலாம் ஆனால் மதமே ஆன்மீகம் அல்ல. ஆன்மீகத்துக்கும் சமயங்களுக்கும் உள்ள வேறுபாடுகளை அறிந்து கொண்டால் மதவெறியும் மதச்சண்டையும் உருவாகாது என்பது குருவிடம் அடியேன் அறிந்து கொண்டதாகும். சமய உணர்வுகளைத் தூண்டி மக்களிடையே பிளவினை ஏற்படுத்தும் உலகில், எல்லா சமயங்களும் இறைவனாகிய கடலைச் சென்றடையும் நதிகளாகும். என்று 18ம் நூற்றாண்டிலேயே வட பாரதத்திலிருந்து உலகுக்குப் பறைசாற்றியவர் சுவாமி விவேகானந்தரின் குருவாகிய ஸ்ரீ இராமகிருஷ்ண பரமஹம்சர். தென்னகத்தில் அவருடைய சமகால ஞானியாகிய அருட்பிரகாச வள்ளலாரும் தமது திருவருட்பாவில்
பொங்குபல சமயமெனும் நதிகளெல்லாம்
புகுந்து கலந்திட நிறைவாய்ப் பொங்கி ஓங்கும்
கங்குகரைக் காணாத கடலே எங்கும்
கண்ணாகக் காண்கின்ற கதியே…
என்று பாடியிருப்பதைக் காணலாம்.
காமம்ஆ திகள் வந்தாலும் கணத்தில்போம் மனத்தில் பற்றார்
தாமரை இலைத்தண் ணீர்போல் சகத்தொடும் கூடி வாழ்வார்
பாமரர் எனக்காண் பிப்பார் பண்டிதத் திறமை காட்டார்
ஊமரும் ஆவார் உள்ளத்து உவகையாம் சீவன் முத்தர்.
என்று கைவல்லியநவநீதம் ஞானிகளின் இலக்கணம் பற்றிக் கூறுகிறது. இவ்விலக்கணத்தின் இலக்கியமாக நம் குருநாதரின் வாழ்வும் உள்ளது. உலகோர் அறிதற்கரிய நிலையில் வாழ்ந்து வந்தாலும் சீவன் முத்தர்களின் உள்ளத்தில் உலக இச்சையானது ஒரு கணமேனும் நிற்பதில்லை. எவரிடத்திலும் தனது அறிவையும், ஆற்றலையும் வெளிக்காட்டாது தன்னை ஒரு பாமரனாகவே காட்டிக்கொள்கிறார்கள். தாமரையிலைத் தண்ணீர் போல அணுகாது அகலாது மாணவர்களுக்கு வழிகாட்டிக் கொண்டிருக்கிறார்கள்.
அவர்களும் அப்படியா! விண்ணப்பிக்க முடியவில்லையோ! சரி தொடர்ந்து முயற்ச்சி செய்யுங்கள் நல்லதே நடக்கும் என்று கூறினார்கள். நானும் அரியலூரில் வசித்து வந்ததால் நெல்லையில் இருந்து அரியலூருக்கு மனவருத்தத்துடன் கிளம்பினேன், மீண்டும் ஓராண்டு காத்திருக்க வேண்டுமே மூன்றாண்டுகளாகச் செய்து வந்த முயற்சிகள் அனைத்தும் வீணானது கண்டு மனம் மிகுந்த ஏமாற்றத்தில் இருந்தது. மேலும் ஓர் ஆண்டு காத்திருக்கவும் வேண்டும் என்ற நிலையில் “முடிந்தவரை செய்வதல்ல முயற்சி அந்த செயல் முடியும் வரை செய்வதுதான் முயற்சி” என்ற குருநாதரின் வாக்கு மனத்தளர்ச்சிக்கு மருந்தாக அமைந்தது. மறுநாள் அரியலூரில் அரசுக்கலைக் கல்லூரியில் விரிவுரையாளராக பணிபுரியும் நண்பர் ஒருவரிடம் இதுதொடர்பாக பேசிக் கொண்டிருந்தேன் அப்போது நெல்லை ம. சு. பல்கலைகழகத்தில் இருந்து அங்கு பணிபுரியும் நண்பர் ஒருவர் கைபேசியில் தொடர்பு கொண்டு நீங்கள் உடனடியாக வந்து விண்ணப்பம் செய்யுங்கள் உங்களுக்கான பிரச்சனை தீர்ந்து விட்டது என்றார்.
நானோ விண்ணப்பிப்பதற்கான இறுதிநாள் முடிந்து விட்டதே என்றேன். இல்லை மேலும் நான்கு நாட்கள் நீட்டித்திருக்கிறார்கள் என்றார். என்னால் நம்பவே முடியவில்லை. நான் என் வாழ்வில் அதிகபட்ச ஆச்சரியம் அடைந்தது அன்று தான். உடனே அதை உறுதி செய்வதற்காக நெறியாளரைத் தொடர்பு கொண்டு பேசினேன். அவரும் ஆம் உண்மைதான் எனக்கும் என்ன நடந்தது என்று தெரியவில்லை… ஒரு பல்கலைகழகத்தில் இப்படி ஓர் அதிசயம் நடந்து நானும் பார்த்ததில்லை என்று மிகவும் ஆச்சரியப்பட்டார். குருவின் பெருமையை அப்போதுதான் நான் பரிபூரணமாக உள்வாங்கினேன்.
2003-ம் ஆண்டு இறுதியில் அடியேன் திருவாரூரில் ஆசிரியப்பணி செய்து கொண்டிருந்த நேரம் சொந்த வேலையாக முக்காணி வந்திருந்தேன். எப்போது ஊருக்கு வந்தாலும் குருநாதரிடம் ஆசி வாங்கிச் செல்வது வழக்கம். அவ்வாறே அன்று குருநாதரை தரிசித்து உரையாடிக் கொண்டிருந்தோம்.
நான் இருந்த மனநிலையில் குருநாதரின் அந்த அறிவுரையினால் பிரச்சனை முற்றிலும் தீர்ந்து விடும் என்று முழுமையாக நம்பமுடியாவிட்டாலும் மரியாதை நிமித்தமாக அவ்வாறே கடைபிடித்தேன் அதன் விளைவு அவரால் அதன் பிறகு எந்த பிரச்சினையும் வரவில்லை. மேலும் வீட்டை விட்டு காலி செய்து சற்று தொலைவில் சென்றுவிட்டார் எனது அமைதி திரும்பியது. அதன்பிறகு அவருடைய நடவடிக்கையில் நல்ல மாற்றங்களைக் காண முடிந்தது. வாழ்வில் கொண்டுள்ள நேர்மறையான எண்ணங்களினால் எடுத்த காரியத்தில் நிச்சயம் வெற்றி பெறலாம்
நல்லதே நினைப்போம்,
நல்லதே சொல்வோம்,
நல்லதே செய்வோம்,
நல்லதே நடக்கும்.
என்ற குருநாதரின் அருள்வாக்கு அனைவர் வாழ்விலும் நன்மையைத் தரட்டும்.