"நான் கண்ட குருநாதர்" அனுபவ உரைகள்

R. முருகேசன் MA,B.Ed
முக்காணி

உலகில் உள்ள ஒவ்வொரு மனிதனுக்கும் வாழ்வில் ஒரு வழிகாட்டி அல்லது குரு நிச்சயம் இருந்திருப்பார். அது எந்தத் துறையாக இருந்தாலும் சரி, தொழிலாக இருந்தாலும் சரி அல்லது பயிலும் கல்வியாக இருந்தாலும் சரி. கற்றுக்கொள்வதற்கும், அதில் தமக்கு ஏற்படும் சிக்கல்களைக் களைந்து அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்வதற்கும் திறன்வாய்ந்த ஒருவர் அவசியம் தேவை என்பதை அனைவரும் அறிவர். அவரையே ஆசான் அல்லது குரு என்று வழங்குவர். இது உலகியல் தொடர்பான வழக்காகும். அதுபோல் அகம் சார்ந்த ஆன்மீகத்திற்கும், இறைவனை உணர்வதற்கும் ஒரு குருவானவர் அவசியம் தேவை என்பது பேரான்மப் பெருஞானிகளின் தீர்க்கமான முடிவுமட்டுமல்ல, ஆன்மீக சாதகர்களின் அனுபவமும் ஆகும். அத்தகைய ஆன்மீக அனுபவங்களை வழங்கும் இறையனுபூதி பெற்ற ஞானியை சற்குரு என்றும், ஞானாசான் என்றும், அருட்தந்தை என்றும், காரணகுரு என்றும், மெஞ்ஞான தேசிகன் என்றும் பலவாறு அழைப்பர் பெரியோர்.

அவ்வகையில் அடியேனை ஆட்கொண்ட குருநாதர் ஞானவள்ளல் மகாகனம் தங்கசுவாமிகள் ஆவார்கள். புளியநகரில் பிறந்த குவலயம் தொழும் குணக்குன்றாய் வளர்ந்து சீவனை சிவனாக்கி உலக அறிவார்ந்தோர் இயற்கை ஞானசபையினை உருவாக்கி, சாதி மொழி இன மத பேதமற்று மானுட வர்க்கத்திற்கு மகத்தான மெய்ஞானத்தினை வாரி வழங்கிக் கொண்டிருக்கும் கண்கண்ட புனிதராகிய எம் குருநாதருடனான அனுபவத்தைக் கூற விழைகிறேன்.
எனது 25வது வயது வரை பக்திமார்க்கத்தில் அதிக ஈடுபாடு கொண்டிருந்த நான் 2000வது ஆண்டில் நமது குருநாதரை சந்திக்கும் அரிய வாய்ப்பு எனது அண்ணன் மூலம் கிடைத்தது. முதல் சந்திப்பில் அவர்களின் எளிமையும், முதல் உரையாடலில் அவர்களின் தெளிந்த ஞானமும் அடியேனை வெகுவாக கவர்ந்தது. எவரது சந்திப்பு நமது தேடலைப் பூர்த்தி செய்கிறதோ அவரே சத்குருநாதராவார். எவனொருவனால் தன்னையிழந்து, வார்த்தைகளற்ற செய்தியை வாங்கிக் கொள்ள இயல்கிறதோ அவனே மெய்த்தொண்டனாவான் என்பது ஆன்றோர் வாக்கு. கடைநிலைத் தொண்டனாகிய அடியேன் கடந்த 20 ஆண்டுகளில் பெற்ற அனுபவங்களில் சிலவற்றை பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.
எமது குருநாதர் அவர்கள் காட்சிக்கு மட்டும் எளியவர் அல்ல அணுகுவதற்கும் அன்புகாட்டுவதிலும் மிகவும் எளியவர் ஆவார்கள்.

01
அவர்களால் எண்ணற்றோர் பலனடைந்து இருக்கிறார்கள். ஆனால் யாரிடமிருந்து அவர்கள் எவ்வித பலனும் எதிர்பார்ப்பதில்லை. தியானசபை வளர்ச்சியில் பங்காற்றிய தொண்டர்களுக்குக் கூட அதைப் பன்மடங்காகத் திருப்பி வழங்குவதே வழக்கமாகும். ஒவ்வொரு மாதமும் முழுநிலவுத் திருக்கூட்டத்திற்கு அழைப்பிதழைத் தனது கைப்பட எழுதி, யாரையும் எதிர்பார்க்காமல் பெரும்பாலும் தானே மிதிவண்டியில் சென்று தபால் நிலையத்தில் சேர்ப்பிக்கும் பணியையும் தமது 82வயதிலும் தொடர்ந்து செய்துகொண்டிருக்கிறார்கள். இந்த கணினி யுகத்தில் கடிதம் எழுதுவது முற்றிலும் ஒழிந்துவிட்டாலும், தமது மாணவர்களிடம் காட்டும் அன்பின் வெளிப்பாடாகவே இதைத் தொடர்ந்து செய்து வருகிறார்கள். முத்தியை நல்கும் இந்த குண்டலினிஞானப் பயிற்சியினைக் கற்றுக்கொள்வதற்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் இணைந்திருப்பினும் அவர்களில் பெரும்பாலோர் உடல் உபாதைகளைப் போக்கிக் கொள்வதற்காகவோ அல்லது குடும்பப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காகவோ குருநாதரை நாடியவர்கள் ஆவர். இருப்பினும் அவர்களின் அல்லலைக் களைந்து அருள்வழிகாட்டி ஆட்கொண்டுள்ளார்கள் என்பதே உண்மை. எனவே இந்த குருகுலத்தில், கல்வியிற்சிறந்து பல்வேறு துறைகளில் கோலோச்சும் அன்பர்கள் முதல் படிப்பறிவற்ற கூலித்தொழிலாளர்கள் வரை பலதரப்பட்ட மாணவர்களைக் காணலாம்.
02

அனைவரையும் சமமாகப் பார்ப்பதோடு அவரவர் உள்வாங்கும் திறனுக்கேற்றார்ப்போல இக்கல்வியினைப் போதிப்பது மிகவும் போற்றுதற்குரியதாகும். மாணவன் எத்தனை முறை தனது அறியாமையை வெளிப்படுத்தினாலும் அதைத் தாயுள்ளத்தோடு பொறுத்து நல்வழிகாட்டுவதைப் பலமுறை உணர்ந்து இருக்கிறேன். கல்வியிற் சிறந்தவர்களும் புரிந்து கொள்ள இயலாத அரிய வேதாந்தக் கருத்துகளையெல்லாம் படிப்பு வாசனையே இல்லாத சாதாரண, கூலிவேலை செய்து வாழ்க்கை நடத்தும் சீடர்கள் வெளிப்படுத்துவதைக் காணும் போது மெய்சிலிர்த்துப் போயிருக்கிறேன்.

03
நாள்தோறும் குருநாதரைத் தரிசிக்க குழந்தைகள் முதல் முதியவர் வரை பலதரப்பட்ட வயதினரும் பல்வேறு விண்ணப்பங்களோடு வருகிறார்கள். அவரவருக்குத் தேவையானவற்றை நேரடியாகவோ, மறைமுகமாகவோ, ஆசியாகவோ அருள்வது குருவின் வழக்கமாகும். ஒருமுறை எனது மகனின் எட்டாவது வயதில் அவனுக்கு ஆசிவழங்கும் போது, யாரிடம் பேசினாலும் அவரின் கண்களைப்பார்த்துப் பேசிப்பழக வேண்டும். அவ்வாறு செய்தால் அது உனது வாழ்வில் மிகுந்த நன்மைகளைத் தரும் என்று கூறினார்கள். அது அவனுக்கு மட்டுமல்ல எங்களுக்கும் பசுமரத்தாணி போல் மனதில் பதிந்தது. அவ்வாறே மேற்படிப்பு, மருத்துவம், தொழில், உளவியல், பொருளாதாரம் போன்ற எத்துறையில் வழிகாட்டுதல் வேண்டுபவர்களுக்கு வெற்றிக்கான சீரிய வழியினைக் காட்டுவதிலிருந்து சுவாமிகளின் பல்துறை ஞானத்தை அறியலாம்.
04

மதம் ஆன்மீகத்திற்கு வழிகாட்டலாம் ஆனால் மதமே ஆன்மீகம் அல்ல. ஆன்மீகத்துக்கும் சமயங்களுக்கும் உள்ள வேறுபாடுகளை அறிந்து கொண்டால் மதவெறியும் மதச்சண்டையும் உருவாகாது என்பது குருவிடம் அடியேன் அறிந்து கொண்டதாகும். சமய உணர்வுகளைத் தூண்டி மக்களிடையே பிளவினை ஏற்படுத்தும் உலகில், எல்லா சமயங்களும் இறைவனாகிய கடலைச் சென்றடையும் நதிகளாகும். என்று 18ம் நூற்றாண்டிலேயே வட பாரதத்திலிருந்து உலகுக்குப் பறைசாற்றியவர் சுவாமி விவேகானந்தரின் குருவாகிய ஸ்ரீ இராமகிருஷ்ண பரமஹம்சர். தென்னகத்தில் அவருடைய சமகால ஞானியாகிய அருட்பிரகாச வள்ளலாரும் தமது திருவருட்பாவில்
பொங்குபல சமயமெனும் நதிகளெல்லாம்
புகுந்து கலந்திட நிறைவாய்ப் பொங்கி ஓங்கும்
கங்குகரைக் காணாத கடலே எங்கும்
கண்ணாகக் காண்கின்ற கதியே…

என்று பாடியிருப்பதைக் காணலாம்.

05
அவ்வழியில் நமது குருநாதரும் தமது சொற்பொழிவுகளிலும், நூல்களிலும், பிறசமய நூல்களிலிருந்து ஞானக்கருத்துக்களைச் சுட்டிக்காட்டி அவை அத்வைத கருத்துக்களோடும், சித்தர் நெறிக் கொள்கைகளோடும் உடன் படுவதை விளக்கி உலகஞானிகளின் கருத்துகள் யாவையும் இறைநிலை என்ற ஒற்றைப் புள்ளியில் சந்திக்கின்றன, எனவே சாதி, சமய, இன, வர்க்க, பாகுபாடுகளைக் கடந்து அகத்தேடலில் தொடர்ந்து ஈடுபட்டு தவவாழ்வு வாழ்ந்துவந்தால் பிறப்பிறப்பற்ற பேரானந்தப் பெருநிலையை அடையலாம் என்பதைத் தெளிவுபடுத்தி அதற்கான பயிற்சி முறைகளையும் வழங்கி வருகிறார்கள். அதற்காக உலக அறிவார்ந்தோர் இயற்கை ஞான சபையின், தியான அரங்குகளையும் அதன்மூலம் ஆயிரக்கணக்கான சாதகர்களையும் உருவாக்கி வருகிறார்கள்.
06

காமம்ஆ திகள் வந்தாலும் கணத்தில்போம் மனத்தில் பற்றார்
தாமரை இலைத்தண் ணீர்போல் சகத்தொடும் கூடி வாழ்வார்
பாமரர் எனக்காண் பிப்பார் பண்டிதத் திறமை காட்டார்
ஊமரும் ஆவார் உள்ளத்து உவகையாம் சீவன் முத்தர்.

என்று கைவல்லியநவநீதம் ஞானிகளின் இலக்கணம் பற்றிக் கூறுகிறது. இவ்விலக்கணத்தின் இலக்கியமாக நம் குருநாதரின் வாழ்வும் உள்ளது. உலகோர் அறிதற்கரிய நிலையில் வாழ்ந்து வந்தாலும் சீவன் முத்தர்களின் உள்ளத்தில் உலக இச்சையானது ஒரு கணமேனும் நிற்பதில்லை. எவரிடத்திலும் தனது அறிவையும், ஆற்றலையும் வெளிக்காட்டாது தன்னை ஒரு பாமரனாகவே காட்டிக்கொள்கிறார்கள். தாமரையிலைத் தண்ணீர் போல அணுகாது அகலாது மாணவர்களுக்கு வழிகாட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

07
ஆசிரியர் ஆக வேண்டும் என்ற எனது சிறுவயது ஆசையானது குருநாதரைத் தரிசிக்கும் காலம் வரை கற்பனைக்கும் எட்டாததாகவே இருந்தது. அடியேன் குருவடியை சரண் புகுந்த காலத்தில் எனது கல்வி நிலையானது பள்ளிப்படிப்போடு முடிந்திருந்தது. குருநாதர் அவர்கள் ஓவிய ஆசிரியருக்கான படிப்பினை நிறைவு செய்து வைத்துக் கொள்ளுங்கள் பிற்காலங்களில் பயன்படும் என்று அறிவுறுத்தினார்கள். அக்காலங்களில் சுமார் பத்தாண்டுகளாக கலை ஆசிரியர் பயிற்சி என்பது நடைபெற்றிருக்கவில்லை. யாருக்கும் அது நடைபெறும் என்ற நம்பிக்கையும் இல்லை. சுவாமிகள் கூறிய அடுத்த ஆண்டே மீண்டும் கலையாசிரியர் பயிற்சி தொடங்கப்பட்டது. அதுவும் இரண்டு ஆண்டுகள் மட்டுமே நடந்தது. இன்று அடியேன் அரசுப்பள்ளியில் ஆசிரியராக இருப்பது ஞானிகளின் வாக்கு ஒரு போதும் பொய்க்காது அது அவர்களின் நாவில் இருந்து வெளிப்படும் சாதாரண சொல் அல்ல அது ஆன்மாவில் இருந்து வெளிப்படுவதாகும் என்பதற்கு மிகச்சிறந்த உதாரணம் ஆகும்.
08
அவ்வாறே தொடர்ந்து குருநாதரின் அறிவுறுத்தலுக்கேற்ப தமிழிலும், இளங்கலை, முதுகலை பட்டபடிப்புக்களை நிறைவு செய்த போது தமிழில் உள்ள ஞான நூல்களை ஆய்வு செய்து முனைவர் பட்டத்துக்கான முயற்சிகளை மேற்கொள்ளுங்கள். அதன் மூலம் தமிழர்களின் ஆன்மீக மரபு அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லப்படும் என்று வழிகாட்டினார்கள். அது என் வாழ்வில் கற்பனை செய்யாத ஒன்றாகும். அதைச் செய்தால் அடியேனது ஆன்மீகப் பயணத்திற்கு மேலும் வலு சேர்க்கும் என்ற நோக்கில் அதற்கான முயற்சிகளை மூன்றாண்டுகளாக தொடர்ந்து மேற்கொண்டேன் இருப்பினும் சரியான நெறியாளர் அமையாததால் வெற்றி அடையவில்லை.
09
இறுதியாக ஒரு நெறியாளர் அமைந்து திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் விண்ணப்பிப்பதற்காகச் சென்றோம் அன்று விண்ணப்பிப்பதற்கான இறுதி நாள் ஆகும். வேறு ஒரு காரணத்தைக் காட்டி எனது விண்ணப்பம் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. அந்த நிகழ்வு எனக்கு மிகுந்த வேதனையைத் தந்தது. குருநாதரிடம் தெரியப்படுத்தினேன்.
10

அவர்களும் அப்படியா! விண்ணப்பிக்க முடியவில்லையோ! சரி தொடர்ந்து முயற்ச்சி செய்யுங்கள் நல்லதே நடக்கும் என்று கூறினார்கள். நானும் அரியலூரில் வசித்து வந்ததால் நெல்லையில் இருந்து அரியலூருக்கு மனவருத்தத்துடன் கிளம்பினேன், மீண்டும் ஓராண்டு காத்திருக்க வேண்டுமே மூன்றாண்டுகளாகச் செய்து வந்த முயற்சிகள் அனைத்தும் வீணானது கண்டு மனம் மிகுந்த ஏமாற்றத்தில் இருந்தது. மேலும் ஓர் ஆண்டு காத்திருக்கவும் வேண்டும் என்ற நிலையில் “முடிந்தவரை செய்வதல்ல முயற்சி அந்த செயல் முடியும் வரை செய்வதுதான் முயற்சி” என்ற குருநாதரின் வாக்கு மனத்தளர்ச்சிக்கு மருந்தாக அமைந்தது. மறுநாள் அரியலூரில் அரசுக்கலைக் கல்லூரியில் விரிவுரையாளராக பணிபுரியும் நண்பர் ஒருவரிடம் இதுதொடர்பாக பேசிக் கொண்டிருந்தேன் அப்போது நெல்லை ம. சு. பல்கலைகழகத்தில் இருந்து அங்கு பணிபுரியும் நண்பர் ஒருவர் கைபேசியில் தொடர்பு கொண்டு நீங்கள் உடனடியாக வந்து விண்ணப்பம் செய்யுங்கள் உங்களுக்கான பிரச்சனை தீர்ந்து விட்டது என்றார்.

11

நானோ விண்ணப்பிப்பதற்கான இறுதிநாள் முடிந்து விட்டதே என்றேன். இல்லை மேலும் நான்கு நாட்கள் நீட்டித்திருக்கிறார்கள் என்றார். என்னால் நம்பவே முடியவில்லை. நான் என் வாழ்வில் அதிகபட்ச ஆச்சரியம் அடைந்தது அன்று தான். உடனே அதை உறுதி செய்வதற்காக நெறியாளரைத் தொடர்பு கொண்டு பேசினேன். அவரும் ஆம் உண்மைதான் எனக்கும் என்ன நடந்தது என்று தெரியவில்லை… ஒரு பல்கலைகழகத்தில் இப்படி ஓர் அதிசயம் நடந்து நானும் பார்த்ததில்லை என்று மிகவும் ஆச்சரியப்பட்டார். குருவின் பெருமையை அப்போதுதான் நான் பரிபூரணமாக உள்வாங்கினேன்.
2003-ம் ஆண்டு இறுதியில் அடியேன் திருவாரூரில் ஆசிரியப்பணி செய்து கொண்டிருந்த நேரம் சொந்த வேலையாக முக்காணி வந்திருந்தேன். எப்போது ஊருக்கு வந்தாலும் குருநாதரிடம் ஆசி வாங்கிச் செல்வது வழக்கம். அவ்வாறே அன்று குருநாதரை தரிசித்து உரையாடிக் கொண்டிருந்தோம்.

12
அப்போது சுவாமிகள் சில பயிற்சி முறைகளை பற்றி விளக்கி விட்டு அமுததாரணைப் பற்றிக்கூறினார்கள். அந்த நிலையை அடைந்தவர்கள் முத்திப்பேறு பெற்று விட்டதாகச் சில காரியக் குருமார்கள் தவறாக வழிகாட்டி விடுகிறார்கள். ஆனால் அந்நிலையில் ஒன்றும் பெருமைப் படுவதற்கோ அல்லது வருந்துவதற்கோ உரியது அல்ல. பயிற்சிகளை முயற்சியாக செய்து அதைக் கடந்து செல்ல வேண்டும் என்று கூறினார்கள். அன்றிரவே கிளம்பி திருவாரூருக்குச் சென்றுவிட்டேன். இருநாட்கள் கழித்து முழுநிலவுக்கு இரண்டு நாட்கள் முன்பாக மாலை ஆறு மணியளவில் வீட்டின் மேல் தளத்தில் அமர்ந்து தியானம் பழகும் போது தொண்டைப் பகுதியில் இருந்து உடல் முழுவதும் தித்திக்கும் நிலையினை உணர்ந்தேன். மிகவும் புதிய அந்த அனுபவம் ஆனந்தத்தை தந்தாலும் சற்று நேரத்தில் இரண்டு நாட்கள் முன்பு குருநாதரின் அறிவுரை என்னை எச்சரிக்கைச் செய்தது. அவர்கள் அன்று என்னிடம் அந்த அறிவுரையினை வழங்கியதற்கு காரணமும் புரிந்தது. இந்த அளவு சீடனை உட்கடந்து அவனை வழி நடத்துவது அவர்களின் தனிச்சிறப்பாகும்.
13
குருவின் பெருமையினைக் கூறவேண்டுமானால் இந்த வானம் முழுவதும் காகிதமாகவும், மரங்களை எழுதுகோலாகவும் கடல்நீரையெல்லாம் மையாகவும் கொண்டு எழுதினாலும் முழுமையாக எழுதிவிட முடியாது என்று கபீர்தாசர் கூறுவார் அது முற்றிலும் உண்மை. எனவே குருநாதரின் சிறப்பினை எனக்கு எடுத்துக்காட்டிய மற்றொரு நிகழ்வோடு நிறைவு செய்கிறேன். அரியலூரில் அடியேன் பணிபுரிந்த பள்ளியில் ஒரு நண்பர் இருந்தார் அவருக்கு நண்பர்கள் மிகவும் குறைவு. இல்லை என்றே சொல்லலாம். நான் புதிதாக பணியேற்ற பொழுது என்னுடன் மிகவும் உதவிகரமாகவும், நட்புடனும் பழகினார். நான் தங்கியிருந்த வீட்டின் மாடிப்பகுதியில் அவரும் வசிக்க ஏற்பாடு செய்தேன். எல்லாம் நன்றாகத்தான் போய்க் கொண்டிருந்தது. சில மாதங்கள் கழித்து அதிகாலை 5 மணிக்கெல்லாம் அந்த நண்பர் யாரையோ திட்டிக்கொண்டு இருப்பதை கேட்டேன். அவருடைய நடவடிக்கையில் சில மாற்றங்கள் தெரிந்ததால் நான் அதைக் கண்டு கொள்ளவில்லை.
14
இருப்பினும் தினசரி இப்படி அதிகாலையிலேயே ஒருவர் திட்டிக் கொண்டிருப்பது தொந்தரவாகவும் அமைதியற்ற சூழலைத் தருவதாகவும் இருந்தது. எனவே அவர் யாரைத்திட்டுகிறார் என்பதை கவனிக்கத் தொடங்கினேன். பிறகுதான் அவர் திட்டியதெல்லாம் என்னைத்தான் என்று புரிந்தது. என் பெயரை மட்டும் குறிப்பிடாமல் எனது தொழில், நண்பர்கள், மற்றும் நமது குருநாதர் என அனைவரையும் திட்டினார். அப்போது எனது அமைதி முழுவதுமாகக் கெட்டது. எனது மனைவிக்கும் இது மிகவும் அதிர்ச்சியாகவும், வேதனையாகவும் இருந்தது.
15
காலப்போக்கில் இந்த சூழல் பள்ளியிலும் உருவானது. அது மேலும் முற்றியது ஒருநாள் பள்ளி முதல்வரிடம் நான் அவரைப் பற்றி எல்லோரிடமும் தவறாகக் கூறுவதாகவும் அதனால் பள்ளி நிர்வாகத்திடம் புகார் அளிக்கப் போவதாகவும் மிரட்டியிருக்கிறார். பள்ளி முதல்வரும் அவர் முன்னிலையில் என்னிடம் விசாரித்தார். நானோ நான் இவரைப் பற்றி யாரிடமும் எதுவும் கூறியதில்லை. அவர் எங்கு வேண்டுமானலும் புகார் அளிக்கலாம். நீங்களும் யாரை வேண்டுமானாலும் விசாரித்து அறிந்து கொள்ளலாம் என்று உறுதியாகக் கூறிவிட்டேன்.
16
அதுதான் உண்மையும் கூட அப்படியானால் நான் நிர்வாகத்திடம் புகார் அளிக்கப்போகிறேன் உன்னைச் சும்மா விடமாட்டேன் என்று கூறி நேரமும் வாங்கி விட்டார். என்னைப் போலவே பள்ளியில் பல ஆசிரியர்கள் அவரால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்று பின்னர்தான் எனக்குத் தெரியவந்தது. பள்ளிமுதல்வர் உட்பட அனைவருமே எனக்கு ஆதரவாக இருப்பினும் என்மனம் ஏனோ அமைதி கொள்ளவில்லை. அது 10 ஆண்டுகளாக நான் பெற்றுவந்த நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்துவதாக அமையும் என்பதுதான் அதற்குக் காரணம் கூடாநட்பு கேடாய் முடியும் என்பதை அன்றுதான் முதன் முதலாக உணர்ந்தேன்.
17
பல மாதங்கள் நிகழ்ந்த இந்த போராட்டத்தினால் மிகவும் சோர்வுற்று செய்வதறியாது குழம்பியிருந்தேன். பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு வேறு வழியின்றி குருநாதரிடம் கூறினேன். பொறுமையாக அனைத்தையும் கேட்ட குருநாதர் அவர்கள், அதற்கு தீர்வாக கூறியது இப்படித்தான்…. நீங்கள் தினசரி தியானம் செய்யும் நேரமெல்லாம் அவரின் மனம் அமைதி பெறட்டும் அவர் வாழ்வில் மகிழ்ச்சி பெருகட்டும் என்று நினைத்துக் கொள்ளுங்கள் எல்லாம் நல்லபடியாக நடக்கும்.
18

நான் இருந்த மனநிலையில் குருநாதரின் அந்த அறிவுரையினால் பிரச்சனை முற்றிலும் தீர்ந்து விடும் என்று முழுமையாக நம்பமுடியாவிட்டாலும் மரியாதை நிமித்தமாக அவ்வாறே கடைபிடித்தேன் அதன் விளைவு அவரால் அதன் பிறகு எந்த பிரச்சினையும் வரவில்லை. மேலும் வீட்டை விட்டு காலி செய்து சற்று தொலைவில் சென்றுவிட்டார் எனது அமைதி திரும்பியது. அதன்பிறகு அவருடைய நடவடிக்கையில் நல்ல மாற்றங்களைக் காண முடிந்தது. வாழ்வில் கொண்டுள்ள நேர்மறையான எண்ணங்களினால் எடுத்த காரியத்தில் நிச்சயம் வெற்றி பெறலாம்
நல்லதே நினைப்போம்,
நல்லதே சொல்வோம்,
நல்லதே செய்வோம்,
நல்லதே நடக்கும்.

என்ற குருநாதரின் அருள்வாக்கு அனைவர் வாழ்விலும் நன்மையைத் தரட்டும்.

19
நன்றி !