"நான் கண்ட குருநாதர்" அனுபவ உரைகள்

S.சரவணன்
மேல்மருவத்தூர்

அஞ்ஞானம் என்ற அகவிருள் சூழ்ந்த சீவனாகிய எம்மை ஞான ஒளி தந்து காத்தருளும் எங்கும் நிறைந்த எல்லாம் வல்ல குருவே துணை. கர்மங்கள் தீரும் என்று கங்கையில் மூழ்கினேன். இறைவனின் காட்சி கிட்டுமென்று காடு,மலை, கடல் எங்கும் தேடினேன். விரதம், மவுனம், மந்திரம், ஆசனம் என பல முறைகளை கடைபிடித்தேன். பலமுறை தனித்திருந்தேன். பல்வேறு புத்தகங்களை ஆராய்ந்து பார்த்தேன். நல்லவர், வல்லவர் நீதிமான்களிடம் கலந்துரையாடி ஐயப்பாடுகளை கேட்டறிந்தேன். எனினும் இறைவனை உணரக்கூடிய சரியான வழிமுறைகள் கிடைக்காமல் பல ஆண்டுகள் கழிந்தன.

எந்த உலகியல் சுகத்திலும் எனக்கு விருப்பம் இல்லை. எந்த பிரபஞ்ச மயக்கத்திலும் இன்பம் இல்லை. இறைவனை உணர்வது மட்டுமே எனது நோக்கம் என்ற உறுதியுடன் பல ஆண்டுகளாய் எனது தேடல் தொடர்ந்த சமயத்தில் இறைவன் என்ற ஒரு சக்தி இருந்தால் எனது தேடுதலுக்கு ஒரு வழி பிறக்கும் என்று தீர்க்கமுடன் இருந்த சமயத்தில் எனது குருநாதரை நான் கண்டு கொள்வதற்கான வாய்ப்பு அமைந்தது.
குண்டலினி ஞானப் பயிற்சிகளை எனது பக்குவ நிலைக்கு ஏற்றவாறு தந்தருளி எனக்குள் விழிப்புணர்வை உண்டாக்கியவர் எனது குருநாதர் ஆவார். எமது குருநாதரின் சொல், செயல், எண்ணம், கருத்துக்கள், அணுகுமுறை அனைத்துமே ஒரு ஜீவன் முக்தர் நிலையிலிருந்து சற்றும் குறையாமல் பரிபூரண ஜீவன் முக்தர் செயல்பாடாகவே இருக்கும். ஆரம்ப காலங்களில் எனது குருநாதரின் புறத்தோற்றம் மட்டுமே மெய் என நம்பியதால் எனக்கு பெரிய ஈடுபாடு உண்டாகவில்லை…. என்றாலும் இவரிடம் ஏதோ ஒரு சக்தி உள்ளது பொறுமையைக் கடைபிடித்தால் மட்டுமே அதை நாம் பெற்றுக் கொள்ள முடியும் என்று எனக்குள்ளே உணரப் பெற்றேன்.

01
தன்னை உணர்ந்த ஞானியாக மட்டுமல்லாமல் ஒரு ஞானியாக வாழ்ந்து காட்டி இன்னும் பல ஞானிகளை உருவாக்க வேண்டும் என்ற உறுதிப்பாட்டுடன் தனது பணிகளை அவர் மேற்கொள்வது எனக்கு மிகவும் வியப்பாக இருக்கும். தன்னை உணர்ந்து தனக்குள் இருக்கும் தேகியை கண்டு கொள்ளும் ஆர்வமுள்ள மாணவர்களை எந்த பேதமும், பாரபட்சமும் பார்க்காமல் மாணவர்களை வழிநடத்தி லட்சியத்தை நோக்கி பயணிக்க உறுதுணையாக இருக்கிறார். குருநாதரிடம் உணர்வு ரீதியாக அதாவது ஞான பயிற்சியை தொடர்ந்து பழகுவதன் பயனாக மனசாட்சி என்கிற இறைசக்தி என்னுள் இருந்து மனம், மொழி, மெய்யால் தூய்மையாக இருக்க உதவுகிறது. விருப்பு வெறுப்பற்ற தன்மை, சத்துவகுணம் மேலோங்குதல், எந்த நாமரூபங்களிலும் பற்றின்மை போன்றவை குருநாதர் தந்தருளும் பயிற்சியின் பலனாக ஏற்படுகின்றன. எம்மிடம் பழகும் எமக்கு தெரிந்த மற்றும் தெரியாத நபர்கள் கூட மிகவும் அன்போடும் மதிப்போடும் நடந்து கொள்வதற்கு குருநாதர் தந்த உணர்வே காரணம் என்று உறுதியாக நம்புகிறேன்.
02

ஆன்மீகப் பயிற்சிகளில் ஈடுபடுபவர்கள் பொதுவாக யாரும் இல்லாத அமைதியான சூழ்நிலையை நாடி தவ சாதனை மேற்கொள்வார்கள். ஆனால் பெரு நகரங்களில் போக்குவரத்து நெரிசலில் பயணிக்கும் போது கூட எனக்கு குருநாதரின் அருளால் பயிற்சிகள் கை கூடுவது மிகவும் வியப்பளிக்கும்.
பல ஜென்மத்து அசுப வாசனைகள் என்னையே அறியாமல் தாக்கும் நேரத்தில் சட்டென்று ஒரு விழிப்புணர்வை உண்டாக்கி அந்த வாசனைகள் ஏன் உண்டாகிறது என்று சிந்திக்க வைத்து… குருநாதரின் நூல்கள் மூலமாகவும், பயிற்சிகள் மூலமாகவும் அதில் இருந்து காத்துக் கொள்ள வழி முறைகள் கூறி வழி நடத்துகின்றார்.
தடுமாறுவது இயல்பு ஆனால் தடம் மாறக்கூடாது என்பதில் கவனமாக இருத்தல் வேண்டும் என்று அறிவுரை வழங்குவது ஆன்மீகப் பாதையில் வெற்றியடைய உதவியாக இருக்கிறது.
மூலாதாரத்திலிருந்து மூலக்கனல் ஆன குண்டலினி சக்தி மூளையின் மையப்பகுதியை நோக்கி சென்று அடையும் தருணத்தில் …ஒரு கன்று தன் தாய் பசுவிடம் எப்படி பாலை துள்ளித்துள்ளி சுவைத்து குடிக்குமோ அந்த அளவிற்கு மையப்பகுதியை உணர்வால் தீண்டும் பொழுது இப்படிபட்ட பேரானந்தம் நமது அகத்தில் இருக்கின்றதே என்று எண்ணி மகிழ்ச்சி அடைவதும் உண்டு.

03

எனக்குள் உணர்வாக கலந்த என்னை வழிநடத்தி சிந்தனையை தூண்டி மேலான நிலைக்கு உயர்த்திய பெருமை எனது குருநாதரை மட்டுமே சேரும். ஒவ்வொரு மாணவனுக்கும் உள்ள தனித்தன்மை என்ன என்பதை உணர்ந்து அவர்களுக்கு மிகவும் நுட்பமான முறையில் அதை உணர்த்தி அந்த திறமையை வளர்த்துக் கொள்ள அவர்கள் கூறும் அறிவுரைகள் தனிச் சிறப்பு வாய்ந்தன.
அஞ்ஞானத்தை அகற்றி நாம ரூபமற்ற இறைவனை இந்த மானிடப் பிறப்பெடுத்து உள்ளவர்கள் அனைவரும் உணர்ந்து அதையே பூஜிக்க வேண்டும் என்ற தனது உன்னதமான கொள்கையில் இருந்து சிறிதளவும் மாறாமல் உறுதி மனப்பான்மையுடன் இந்தக் கல்வியை கற்றுத் தருவது மட்டுமல்லாமல் தேவையான சந்தர்ப்ப சூழ்நிலைகளில் மாணவர்களுக்கு ஆன்மீகத்தில் சில அரிய நிலைகளையும் உணர்த்தி காட்டுவது அவரது தனிச்சிறப்பு.
குருநாதரிடம் திருவடி தீட்சை பெற்ற பிறகு ஞான பயிற்சிகளை செய்வதன் பலனாக எனக்கு உடல் மற்றும் மன ரீதியாக ஏற்பட்ட அனுபவங்களை குருநாதரிடம் தெரிவிக்கும் போது நீங்கள் பயிற்சியை சரியான முறையில் தான் செய்து வருகிறீர்கள் என்று அவர்கள் எம்மிடம் கூறியது எனக்கு மிக்க மகிழ்ச்சியை ஏற்படுத்தியது மட்டுமல்லாமல் அவர்கள் அப்படி கூறியதை என் வாழ்வில் மிகப்பெரிய செல்வமாக கருதுகிறேன்.

04

கடந்த நான்கு வருடங்களாக தன்முனைப்புடன் பயிற்சிகளை மேற்கொள்ளும் போது பருவுடல் மற்றும் மனம் ஆகியவற்றை கடந்து ஒரு அகண்ட பரந்த வெட்ட வெளியான இருளில் சாட்சி மாத்திரமாக சில நிமிடங்கள் இருப்பதை உணர்ந்து.. அந்த நிலைகள் குருநாதர் கூறியபடி மறைகளில் உள்ளபடி அனுபவங்களாக சற்றும் மாறாமல் உண்டாகிறது என்பதை நினைக்கும் போது எப்படிப்பட்ட ஆற்றல் மிக்க ஒரு குருநாதரை நாம் அண்டி இருக்கிறோம் என்று உள்ளமெல்லாம் மகிழ்கிறது.
சில வருடங்களுக்கு முன்பாக பணிபுரியும் நேரங்களில் உணவு இடைவேளையின் போது கிடைக்கும் அந்த குறுகிய நேரத்தில் தனித்திருந்து குருநாதர் தந்த ஒவ்வொரு பயிற்சிகளையும் செய்து முடித்த பிறகு ஒரு உன்னதமான மனநிலை எற்படும் அதாவது அங்கு என்னை சுற்றியுள்ள அனைத்துப் பொருட்களிலும் என்னுள் இருக்கும் அதே உணர்வு நிறைந்திருப்பது போலவும், எனக்கும் அங்கு என்னை சூழ்ந்திருக்கும் அனைத்து பொருட்களுக்கும் ஏதோ ஒரு தொடர்பு உள்ளது போல் அனுபவம் ஏற்படும்…

05

அந்த நேரங்களில் வாய்விட்டு சொல்ல இயலாத அந்த அனுபவத்தை சாட்சி மாத்திரமாக இருந்து அனுபவிப்பேன் அச்சமயம் மனம் செயலற்று இருக்கும். உடல் அசைவு மிகவும் சத்துவ நிலையில் இருக்கும். சில நிமிடங்கள் அந்த நிலையில் எங்கும் நிறைந்து இருப்பதை உணர்ந்த பின் மீண்டும் பணிக்கு செல்ல வேண்டுமென்பதால் அந்த நிலையிலிருந்து சகஜ நிலைக்கு திரும்ப வேண்டியதாயிருக்கும்.
இப்படிபட்ட உன்னதமான நிலைகளை பயிற்சியின் மூலமாக தந்தருளுபவர் குருநாதரே ஆவார்.
இன்றைய மாணவர் நாளைய ஆசிரியர் என்ற பரந்த நோக்கம் கொண்ட எனது குருநாதரின் சிந்தனைகள், செயல்கள், கொள்கை போன்றவை என்னை வெகுவாக கவர்ந்தது.
குருநாதர் ஆய்ந்து அருளிய புத்தகங்களில் இரண்டு வெவ்வேறு கருத்துக்கள் எனது சிறிய மற்றும் வாலிப வயதில் ஆன்மீக தேடலின் போது ஏற்பட்ட எனது சொந்த அனுபவம் மற்றும் ஆராய்ச்சி அப்படியே குருநாதரின் புத்தகங்களில் கருத்துக்களாக பிரதிபலித்துள்ளதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி.

06

அந்த கருத்துக்களை இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.
1.ஒளவையார் அருளிய அகவலின் ஆழம் பக்கம் 262 (உருவ வழிபாட்டில் பிரியம் கொண்டு அதை செய்பவனும் கூட தனது வழிபாட்டு சடங்கின் உச்சகட்டத்தில் கண் இமைகளை மூடி விடுகிறான் அல்லவா? இதுவும் ஒரு சிறிய ஒடுக்கம் எனலாம் அல்லவா?
இந்த கருத்து நான் சிறுவயதில் கோவில்களுக்கு சென்று வணங்கும் பொழுது தன்னையறியாமல் கண்களை மூடிக் கொள்கிறோம் என்ற கேள்வி எனக்குள் எழுந்ததுதான் ஆன்மீகத் தேடலின் முதற்படி.
2. உள்ளத்தை அள்ளும் ஆனந்தக்களிப்பு பக்கம்-86
1.சாட்சி மாத்திரமாக என்பது மனது சற்றும் எதிலும் பற்றுதலாவது சலித்தலாவது இன்றி கண்ணால் கண்டமட்டோடிருத்தல்
இந்த நிலையில் இருப்போர்க்கு வினை ஏறுவதில்லை என்பர். இவர் தம் மனதில் எந்த விசயமும் பற்றாது.

07

இந்தக் கருத்தானது எனது வாலிப வயதில் ஆன்மீகத் தேடலின் போது அவ்வப்போது என்னை தனிமைப்படுத்திக் கொண்டு எண்ணங்கள் அற்ற நிலையில் எப்படி இருப்பது மனதின் இரண்டு தொழில்களான நினைப்பு மற்றும் மறப்பு ஆகியவற்றை கடந்து செல்வது எப்படி என்று சிந்தித்து பல அரிய நூல்களின் கருத்துக்களையும் ஒப்பிட்டு பார்த்து எனக்கு கிடைக்கப் பெற்ற அனுபவம் தான் இந்த கருத்து
ஒரு கை மாறும் எதிர்பார்க்காமல் உலக சீவர்களின் அஞ்ஞானத்தை அகற்றி இந்த மெய்ஞான கல்வியை போதிக்கும் எமது குருநாதரின் சீரிய கொள்கை வெற்றி அடைய வேண்டும் என்ற எண்ணம் ஒவ்வொரு நாளும் எம்முள் வளர்ந்து கொண்டே இருக்கின்றது.

08
நன்றி !