"நான் கண்ட குருநாதர்" அனுபவ உரைகள்
S. அன்னம்
முள்ளக்காடு
மேலும் தாத்தா (முத்துமாலை நாடார்) வாழைத்தார் வியாபாரி என்பதால் அப்பா கேரளா, கொச்சி, பாலக்காடு, எர்ணாகுளம், கொல்லம் என பல ஊர்களுக்கும் வாழைத்தார் (லோடு) கொண்டு செல்வார்கள். வரும் பொழுது குடை வைக்கிற பையில் பணத்தை இடுப்பில் கட்டிக் கொண்டு வருவதுண்டு. எல்லா பணத்தையும் தாத்தாவிடம் கொடுத்து விட்டு செலவுக்கு 20 ரூபாய் வேண்டும் என்று கேட்பார்கள். அந்த 20 ரூபாயை அப்பா ஒரு வாரம் வைத்து இருப்பார்கள். ஏன் என்றால் அந்த நேரம் வடை 10 பைசா டீ ஒரு ரூபாய் தான் இருக்கும். இப்படி பண ஆசையே இல்லாமல் சேமிப்பின் தன்மையை காட்டுவதில் வல்லவர்.
மேலும் ஒரு முறை பாட்டி ( அன்னக்கிளி அவர்கள் ) ஜோசியரிடம் அப்பா ஜாதகத்தை பார்த்து இருக்கிறார்கள். அந்த ஜோசியர் இந்த தங்கசாமி அவர்கள் வருங்காலத்தில் சாமியார் ஆகிவிடுவார் என்று சொல்லியிருக்கிறார்கள். அதனால் பாட்டி அடிக்கடி உங்கள் அப்பா சாமியார் ஆகி விடுவார்கள் என்ன செய்வது என்று புலம்புவார்கள். நானும் வயது ஆன பின் காடு மலை சென்று விடுவார்கள் போல் என்று நினைத்ததுண்டு. இதற்கான பதில் உண்மையான ஆன்மீகம் என்பது ஆன்மாவை அறிவது மட்டும்தான் என்று புரிய வைத்தார்கள் ஞானவள்ளல் மகாகனம் தங்க சுவாமிகள் அவர்கள். மேலும் அப்பாவின் குருநாதர் சிவகளை ஆதித்தன் பிள்ளை அவர்கள் வீட்டிற்கு வருவார்கள். அவர்கள் ஹோமியோபதி மருத்துவம் படித்து இருக்கிறார்கள். என் காதில் ஒரு புண் இருக்கும் அதை சுகம் ஆக்கியவர்கள் சிவகளை ஆதித்தன் பிள்ளை அவர்கள்.
அவர்கள் பயிற்சி செய்யும் காலத்தில் கூட உப்பு, புளி, காரம் இல்லாமல் இரண்டு வருடத்திற்கு மேலாக சாப்பிட்டு இருக்கிறார்கள்.
அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு.
என்று அய்யன் திருவள்ளுவர் சொல்லுக்கேற்ப தன்னுடைய தவத்தால் பெற்ற உடம்பை அன்பின் பால் பிறருக்கு வழங்கி அறிவு உடையவர்களாக வளர்க்கும் அருள் தந்தையை துதிக்கிறேன். எனக்கு அறிவை தந்த என் தந்தை நிகரற்ற புகழ் இவ்வையகம் அறியட்டும் என்னவன் அருளாலே என்னவனிடமே வேண்டுகிறேன்.