"அவ்வையார் அருளிய அகவலின் ஆழம்"

நூல் விவரம்

நூல் பெயர்: அவ்வையார் அருளிய அகவலின் ஆழம்
ஆசிரியர்: ஞானவள்ளல் மகாகனம் தங்கசுவாமிகள்
பதிப்பு : முதல் பதிப்பு அய்யன் திருவள்ளுவர் 2039ம் ஆண்டு துலைத்திங்கள் (ஐப்பசி மாதம்) 17ம் நாள்
(02-11-2008)ஞாயிற்றுக்கிழமை சிவத்தையாபுரம் – 628 251

இரண்டாம் பதிப்பு அய்யன் திருவள்ளுவர் 2048ம் ஆண்டு மீனம் திங்கள் (பங்குனி மாதம்) 24ம் நாள் (06-04-2017)ஞாயிற்றுக்கிழமை
பக்கம்: 192
வெளியிடப்பட்ட இடம்: திருவாரூர் ஞானசபை கிளையில் நடைபெற்ற ஞானவள்ளல் மகாகனம் தங்கசுவாமிகள் 70 வது பிறந்தநாள் விழாவில் வெளியிடப்பட்டது
வெளியீடு:
உலக அறிவார்ந்தோர் இயற்கை ஞானசபை அறக்கட்டளை

பதிவு எண் : 140/4/2000
ஞானசபை சாலை, சிவத்தையாபுரம்,
சாயர்புரம் அஞ்சல், தூத்துக்குடி – 628 251
+91 94420 56071

முகவுரை

“தமிழ்” உலகின் பெருமை வாய்ந்த செவ்வியல் மொழி என்பது இத்துறையில் ஞானம் உள்ளவர்கட்கு ஐயம் திரிபற்ற வெளிப்படை. சங்கத்தமிழ் பாடல்கள் தொகுப்பில் ஏறத்தாழ 457 புலவர்கள் பாடிய பாடல்கள் இடம் பெற்றிருக்கின்றன. சங்கத்தமிழ் பாடல்கள் கி.மு.இரண்டாவது நூற்றாண்டின் இறுதியில் இருந்து கி.பி.மூன்றாவது நூற்றாண்டின் நடுப்பகுதி வரை ஏறத்தாழ 400 ஆண்டுகளில் பாடப்பட்டிருக்கலாம் எனக் கணிக்கப்படுகிறது. சங்கத்தமிழ்பாடல்கள் தொகுப்பில் இடம் பெறத்தக்க தரமுடைய பாடல்களைப் படைக்கும் தகுதி வாய்ந்த கவிஞர்கள், புலவர்கள் சுமார் 500 பேர் ஒரு நானூறு ஆண்டு காலத்தில் வாழ்ந்தவர்கள் என்பதே வரலாற்றறிஞர்கள் மகிழ்வோடு கொள்ள வேண்டிய செய்தியாகும்.
சங்கத்தமிழ் பாடல்களைப் புனைந்த புலவர்களில் சமுதாயத்தில் எல்லாப் பிரிவினைச் சேர்ந்தவர்களும் இருக்கின்றனர். அரசர், அமைச்சர், அந்தணர் (அந்தணர் என்போர் அறவோர்)வணிகர், கணக்கர், வேடர்,கூல வாணிகர், குயவர் என எல்லா வகையான தொழில்துறைகளில் இருந்தும் புலவர்கள் பாடியிருக்கிறார்கள். உருவாகியிருக்கிறார்கள், சங்கப் புலவர்களில் 30க்கு மேலானவர்கள் பெண்கள். ஏறத்தாழ 7 சதவிகிதம் பெண் கவிஞர்கள். சங்க காலம், தாண்டிப் பல்லவர் காலம், பாண்டியர் காலம், சேரர் காலம், நாயக்கர் காலம், மேலை நாட்டவர் ஆட்சிக் காலம் மேலும், சென்ற நூற்றாண்டிலும் சேர்ந்து நாடறிந்த கவிஞர்களில் 10 சகவீதம் பெண்கள் கூட இல்லை. சங்கத்தமிழ் காலத்தில் பெண்பாற் புலவர்கள், பாரி, அதியமான் போன்ற அரசர்களுக்கு அரசவைத் தூதர்களாகவும், அறிவுரை கூறிடும் அறநெறிக் காவலர்களாகவும் இருந்துள்ளனர். இருபதாவது நூற்றாண்டின் ஆரம்பத்தில் தமிழ் நாட்டின் எழுத்தறிவு நிலை 10 சதவீதம் கூட இல்லை. இந்தப் பின்னணியில் சங்ககாலத் தமிழர்கள் பரந்த எழுத்தறிவு பெற்றிருந்தார்கள் என்பது ஒரு புரட்சிகரமான கண்டு பிடிப்பாகும்.
01
பெண்களுக்கான உயர்கல்வி இக்காலத்தில் ஒருசில இடங்களில் மறுக்கப்படுவது கூட கசப்பான உண்மையே. ஆனால் சுமார் ஆயிரம் ஆண்டுகட்கு முன்னரே அவ்வையார், காரைக்கால் அம்மையார் போன்ற பெண் ஞானிகள் தமிழ் நாட்டில் வாழ்ந்து எடுத்துக்காட்டாக இருந்துள்ளார்கள் என்பதை நினைக்கும் போது நம் நெஞ்சமெல்லாம் மகிழ்கின்றது. ஒரு காலத்தில் தமிழக ஆலயங்களில் தமிழ் தானே பிரவாகமாக ஓடியது. ஆரியர்களின் அபரீதமான நசுக்கல் தான் இந்த சமஸ்கிருதசங்கேதம். இந்த சமஸ்கிருத ஆதிக்கத்தால் நாம் நேரிடையாகக் கடவுளை அணுக முடியாதபடி ஒரு பொய்யான இடைவெளி, நம் மொழி பேசினால் இறைவன் புரிந்து கொள்ள மாட்டாரா என்ன? “தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி” என்ற சொல்லுக்கு பொருளில்லாது போய்விடுமா என்ன? “செந்தமிழால் வைதாரையும் வாழ வைப்பான் முருகன்” என்ற அருணகிரியார் கூற்று பொய்யாகுமோ?
02
அடுத்தவரின் உதவியோடு இறைவனைக் காண மனமில்லாததால்தானே, நமது உடம்பில் இறைவனைக் காண முற்பட்டனர். “உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்” என்று இறைவனை நம் உடம்புள்ளேயே தரிசனம் காண ஆரம்பித்தனர். இப்படி நாடிகளை வசப்படுத்தப் “பிராணயாமத்தை” (மூச்சுப் பயிற்சியை) ஒருமார்க்கமாகவும் அதேவிதமாய் “மந்திரயோகத்தை” மற்றொரு மார்க்கமாகவும் “மந்திரம்” என்ற சொல் மனதின் திறம் (திரம்) எனப்பொருள்படும். (திரம் -உறுதி) மனதை உறுதியாக்கிக் கொள்ளும் முறையே மந்திரமாகும். “நிறை மொழி மாந்தர் ஆணையிற் கிளந்த மறைமொழி தானே “மந்திரம்” என்ப” மந்திரம் என்பது பழமையான தமிழ்ச் சொல் என்று தொல்காப்பியத்திலிருந்து உணர முடிகிறது. தேவபாஷை என்று சொல்லப்படும் சமஸ்கிருதத்துக்கு மட்டுமே மந்திர வலிமை உண்டு என்று தருக்கிக் கூறுபவர் பலர் உண்டு.
03
கடவுள் எங்கும் உளராய் எல்லார்க்கும் அருள்தருபவனாயிருத்தல் உணராது தமது சிற்றறிவையே பேரறிவாகத்திரிபுறக் கொண்டு செருக்கி மயங்கும் புல்லறிவினர் சிலர் “வடசொல்” முதலான ஒரேவொரு மொழியில் மட்டுமே மந்திரங்கள் உள்ளதென்றும் தம்மை பயிலும் ஒரு பகுதியார் மட்டுமே வீடு பேறெய்துவரெனவும் தருக்கி மொழிவர். மந்திரங்கள் சொற்களேயாயினும் சங்கேத குறிகொண்டு அது குறிக்கும் இடத்தை அறிந்தாலொழிய வெறும் உச்சரிப்பு மட்டும் பயன் தராது என்று அவ்வையார் குறிப்பிடுகின்றார்.
“மந்திரங்க ளெல்லா மயங்காம லுண்ணினைந்து
முந்தரனை யர்ச்சிக்கு மாறு”
எந்த மந்திரங்களிலும் மனது மயங்காமல் சரீரத்தினுள்ளே உள்ள சர்வேஸ்வரனை மனத்தால் அர்ச்சிக்க வேண்டும் என்று வலியுறுத்துகின்றார்.
04
இதன் நோக்கம் என்னவென்றால் உடம்பும் உள்ளமும் இணைந்த முறையிலே வழிபாடு இயங்கும் போது இறை ஆற்றல்கள் நமக்கு வசமாகின்றன என்பதே. “மறை சொலும் பொருள் மனித வேடமாய் வந்தது” அதாவது வேதங்கள் சிறப்பித்துப் பாடுகின்ற இறைவனே குருவின் வடிவாய் வந்து தோன்றிருக்கிறான் என்பார்கள். குருவை இறைவனாகப் பார்க்க வேண்டும். இறைவன் நம்மோடு பேசாத கடவுள். குரு நம்மோடு பேசுவதுடன் நமக்குப் புரியாத நுட்பங்களை எல்லாம் நமக்குப் புரிகின்ற மொழிகளிலே எடுத்து விளக்குகின்ற பரம்பொருளாகும். “குருப் பிரம்மா குரு விஷ்ணு குருதேவோ மகேச்சுவர குரு சாட்சாத்பரம்பிரம்மா” என்பது பெரியோர் வாக்கு. கப்பலின் துணையின்றி கைகளால் நீந்திக் கடலைக் கடக்க முடியாததைப் போல பிறவிக் கடலை குருவின் துணையின்றிக் கடக்க முடியாது.
கரவிலாத பேரன்பினுக்கு எளிவருங் கருணைக் குரவனார் அருளன்றியிக் கொடிய வெம்பாசம் புரையில் கேள்வியாற் கடப்பது புணையினாலன்றி உரவு நீர்க் கடல் கொடு நீந்துவ தொக்கும் – வாதவூரடிகளுக்கு உபதேசித்தது – திருவிளையாடற் புராணம்
உலகில் தோன்றி பிரகாசித்த மகான்கள் எல்லாம் குருபிரான்களின் அருளால்த்தான் உயர்ந்த இடத்தை எட்டிப் பிடித்தார்கள். இது தான் வரலாறு “இயேசு பிரானுக்கு” ஒரு “யோவான் ஸ்னானகன்” என்ற மாமேதை. “ரமணமகரிஷி” அவர்கட்கு ஒரு “சேட்சாத்திரி” என்ற மாமேதை “விவேகானந்த சுவாமிகட்கு” ஒரு இராமகிருஷ்ணர் என்ற மாமேதை. “வேதாத்திரி மகரிஷி” அவர்கட்கு ஒரு ‘பரஞ்சோதி மகான்” என்ற மாமேதை இப்படி எழுதிக்கொண்டே போகலாம்.
05
உலகம் போற்றும் இந்த உத்தம மகான்கள் எல்லாம் குருபிரான்களுக்கு உள்ளத்தையே ஒப்படைத்து உயர்ந்தவர்கள். உடைமைகளைக் கொடுத்து யாரும் உயர வில்லை.
”மகனே மகளே உனது உள்ளத்தைத் தா”
என்று தான் இயேசு பிரான் கூறினார். “நம்மைக் காக்கும் இறைவன் உடலை நோக்க மாட்டான் உள்ளத்தையே நோக்குவான்” என்று திருக்குரான் யாத்த அண்ணல் நபிகள் நாயகம் கூறினார். “சிந்தையை அவனுக்குக் கொடுத்துவிடு அதுதான் வழி” என்று கீதையில் பரந்தாமனும் கூறினார். இப்படி எல்லாச் சமயங்களும் உள்ளத்தின் உள்ளேதான் தேடுங்கள், நாடுங்கள். ஓடுங்கள் என்று உள்ளதை உள்ளபடியே கூறி வருகின்றன. இதையே அவ்வைப் பாட்டியின் பாட்டும் நமக்கு நன்கு உணர்த்துகின்றது. தத்துவமனைத்தும் ஞானஉலகில் எப்படிப் பேசப்படுகிறது? எந்தப் பொருளை மையப்படுத்தி பரிபாஷைகளில் எழுதப்பட்டுள்ளன? என்று கேள்வி எழுந்தால் அதற்கு ஒரே பதில் தான் வருகிறது. உலகில் தோன்றிய அத்தனை மறைகளும் விந்துவை மையப்படுத்தியே எழுதப்பட்டுள்ளன. விந்து நிலை தனையறிந்து விந்தைக் கண்டால் விதமான நாதமது குருவாய்ப் போகும் அந்தமுள்ள நாதமது குருவாய்ப் போனால் ஆதி அந்தமான குரு நீயே யாவாய சந்தேமில்லை யடா சகலகலை ஞானங் களும் இதற் கொள்வாது – அகத்தியர்
06

“மனுஷன் உலகம் முழுவதையும் ஆதாயப்
படுத்திக் கொண்டாலும் தன் ஜீவனை நஷ்டப்
படுத்தினால் அவனுக்கு லாபம் என்ன? மனுஷன் தன்
ஜீவனுக்கு ஈடாக என்னத்தைக் கொடுப்பான்’
                          – கிறித்துவ வேதாகமம் : மத்தேயு 16:26
“உன் வாலிபப் பிராயத் திலே உன் சிருஷ்டிகரை நினை”
                         – (விவிலியம்) கிறித்தவ வேதாகமம்

“இந்திரியங்களை வீண்விரயம் பண்ணுகிறவன்
நஷ்டவாளிகளில் ஒருவன் ஆவான்”
                                        – திருக்குரான்

07
இப்படி எல்லாச் சமயமும் ஒரே இடத்தையே பேசிவருகிறது. அவ்வைப் பாட்டியின் அகவலும் இதையே வலியுறுத்தி நம்மை வியக்க வைக்கிறது. வேதாந்த வித்தகர்களின் மேலான கருத்துக்கள் என்ன என்பதையும் சற்று நோக்குவோம். எல்லாச் சீவன்களும் தன் உடலோடு தான் வாழ்கின்றன. உடலோ பஞ்ச பூதங்களின் சேர்க்கையாகும். பஞ்ச பூதங்களில் சத்துவம், ரசசு, தமசு, என மூன்று குணங்கள் கலந்துள்ளன. ஆதலால் உடலும் இம்மூன்று குணங்களையும் உடையதாகிறது. இதில் தசை, நரம்பு, எலும்பு, முதலியன “தமசு” என்றும் இரத்தம் “ரசசு” என்றும் விந்து” சத்துவம் என்றும் ஒருவாறகப் பகுத்துணரலாம்.
08
சீவன் உடலிலுள்ள தசை, நரம்பு, எலும்பு இவற்றில் பொருந்துமானால் அது சோம்பல், மூடம், கோபம் உண்டாகும். அதனால் அது தாமத குணத்தில் வாழ்கின்றதாகும். இரத்தத்தில் பொருந்துமானால் அது சுறுசுறுப்பு, ஆசை,கருமம் ஆரவாரம் உண்டாகும். அதனால் அது ரசோ குணத்தில் வாழ்கின்றதாகும். விந்துவில் பொருந்துமானால் வைராக்கியம், நிதானம், அன்பு, பொறுமை, விவேகம், நேர்மை, சத்தியம், ஒழுக்கம் உண்டாகும். அதனால் அது ‘சத்துவ’ குணத்தில் வாழ்கின்றதாகும். சீவன் விந்துவில் வாழ்வதே பிரம்மச்சரியம். இதனால் சீவன் பலமுடையவன் ஆகின்றான். “விந்து விட்டான் நொந்து கெட்டான்” என்பதே ஆன்றோர் முதுமொழி. விந்துவைக் காப்பதற்கு நல்லோர்- இணக்கம், நூலறிவு. அகவாராய்ச்சித்திறன், முதலாயின வேண்டும். விந்துவைச் சேமிக்கின் அது உடலெங்கும் பரவி பளபள வென்று உள்ளிலும் வெளியிலும் தேசசுடையதாக விளங்கும். இதைப் பெறுவதற்கு புலனடக்கம், மனவடக்கம், விவேகம், நூலுணர்ந்தசான்றோர் இணக்கம், நூலாராய்ச்சி, பொறுமை முதலிய சாதனங்கள் இன்றியமையாது வேண்டற் படுபவைகள்.
09
இவைகளைக் கொண்டு சீவன் விந்துவில் வாழ்வதால் அம்மனிதன் மாமேதையாகவும், துறவியாகவும், விளங்குவான். இவனே தியாகி, ஞானி, ஜீவன் முத்தன் என்றும் மாபெரும் சிறப்பை அடைகிறான். இவ்வனைத்துச் சிறப்புகளும் பிரம்மச்சரிய விரதத்தால் கிடைக்கும் வரப்பிரசாதங்கள் ஆகும். வினாயகரின் தோற்றத்திற்கும் உருவத்திற்கும் மட்டுமே பல்வேறு விளக்கங்கள் கிடைத்த நமக்கு வினாயகருக்கு புதிய விளக்கம் கொடுத்துள்ளோம். பிள்ளையாருக்கு எல்லோரும் ஒத்துக்கொள்ளும் விளக்கம் கொடுத்துள்ளோம். கணபதிக்கு கண் படைத்தோர் யாவரும் ஒத்துக்கொள்ளக்கூடிய விளக்கம் அளித்துள்ளோம். இதுவரை அவ்வையார் அருளிய “வினாயகர்அகவலுக்கு ” சிவயோகி மா.இரத்தினசபாபதி பிள்ளை” அவர்கள் விரிவான விளக்கம் எழுதியுள்ளார்கள். சித்தர் இலக்கியங்கள் கண்ட மீ.பா.சோமசுந்தரம் அவர்கள் அற்புதமான உரை கண்டுள்ளார்கள். நாகர்கோயில் நடராஜபிள்ளை அவர்கள் நல்லுரை எழுதியுள்ளார்கள்.
10
இப்படி மேலானவர்கள் எழுதிய உரையை யாமும் படித்த பின்னர் தான் “அவ்வையார் அருளிய அகவலின் ஆழம்” என்று நூல் எழுதத் தூண்டியது. அறிவியல் மூலமாகவும் சற்று ஆய்வு செய்துள்ளோம். எதையும் அறிவியல் மூலமாக ஆய்வு செய்தால் பல ஆழமான கருத்துக்கள் நிச்சயம் கிடைக்கும். “அறிபடு பொருள் போலானதும், அறிவு போலானதும் அறிவேயாகும். அறிவை யன்றி அறிபடுபொருள் ஒரு போதும் இல்லை. இம்மயக்கம் அகன்றால் அதுவே அறிவாகும். ஆகவே உண்மைப் பொருள் அறிவையன்றி வேறு நிரூபிக்க எவற்றாலும் முடியாது”. சிவநேசச்செல்வாரன தாயுமான சுவாமிகளும் “தேடரிய சத்தாகியென் சித்தமிசை குடிகொண்ட அறிவான தெய்வமே” என்றார் போலும். முறுக்கு மீசை முண்டாசுக் கவிஞரான பாரதியார் கூட “பல்லாயிரம் வேதங்கள் அறிவொன்றே தெய்வம் என்று ஆமெனல் கேளீரோ” என்று கூறினார். அறியாமையை அகற்றும் அறிவினைத் தேடுங்கள், ஓடுங்கள், நாடுங்கள் என்று நல்லோர்கள் நம்மை அழைக்கின்றார்கள்.
11
வெள்ளத்தால் அழியாது வெந்தழலால் வேகாது வேந்தராலும் கொள்ளத்தான் முடியாது கொடுத்தாலும் நிறைவதன்றிக் குறைவுறாது கள்ளர்க்கோ பயமில்லை காவலுக்கோ மிக எளிது கல்வி யென்றும் உள்ளத்தே பொருளிருக்கப் புறம்பாகப் பொருள் தேடி யுழல்கின்றீரே’ – அவ்வையார் இம்மக்கட்பிறப்பின் கண்ணே உபதேச மொழிகளை அனுபவமுடைய ஆசான்பாற் கேட்டு அதனால் மெய்ப்பொருளை உணர்ந்தவர் தான் மீண்டும் இப்பிறப்பின் கண் வாராதநெறியையெய்துவர் இதைத்தான் அய்யன் திருவள்ளுவர் இப்படிக் கூறுவாராயினர். “கற்றீண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவர் மற்றீண்டு வாரா நெறி’ – திருக்குறள் – 356 அவ்வையார் அருளிய அகவலின் ஆழமான கருத்தே “பிறப்பென்னும் பேதைமை நீங்கச் ‘சிறப்பென்னும் செம்பொருள் காண்ப தறிவு” – திருக்குறள் 358 பிறப்பிற்குச் காரணமான அஞ்ஞானம் அகன்றிடின் மீண்டும் பிறவாமையாகிய செவ்விய நிலை காண்பதே மெய்ஞ்ஞான அறிவாம். இக்கருத்துக்களையே ‘வினாயகர் அகவலும்” வலியுறுத்தும்.
12
‘மிகு காலம் மூன்றும் கெடாதிருப்பது சத்து” என்ற கைவல்லிய நவநீதத்தின் கருத்துக்கு வலிவும் பொலிவும் சேர்ந்திட அருப்புக்கோட்டை வேதாந்த வித்தகர் கனம் பொருந்திய கைவல்லியம் கந்தசுவாமி அவர்களின் “பிரம்மம் சத்தியம் சகத்து மித்தை” என்ற கட்டுரையிலிருந்து எடுத்தாண்டோம்.
13