உலகம் உய்வடைய அன்றும் இன்றும் என்றும் ஞானமே
இறைவன் ஒருவனே
ஆறுகள் யாவும் ஆழ்கடல் நோக்கிச் செல்கின்றன என்பது நம் நாட்டு பழமொழி. காவிரி, கோதாவரி, கிருஷ்ணா, கங்கை என்ற நதிகளும் இறுதியில் கடலிலேயே சங்கமமாகின்றன. பின் அதற்குப் பெயர் காவிரியோ, ‘ கங்கையோ அல்ல, கடல் என்பதேயாகும்.
பொங்குபல சமயமென்னும் நதிகள் எல்லாம்
புகுந்து கலந்திட நிறைவாய்ப் பொங்கி ஓங்கும்
கங்குகரைக் காணாத கடலே! எங்கும்
கண்ணாகக் காண்கின்ற கதியோ அன்பர்
தங்க நிழல் பரப்பி மயல் கோடை எல்லாம்
தணிக்கின்ற தருவே! பூந்தடமே ஞானச்
செங்குமுதம் மலரவரும் மதியே! எல்லாம்
செய்யவல்ல கடவுளே தேவ தேவே!
என்று திருவருட்பாவில் வள்ளலார் சுவாமிகள் கூறுவதும் நினைக்கற் பாலதே. இதே கருத்துடைய ஓர் ஆங்கிலப்பழமொழி நினைவுக்கு வருகிறது.
“எல்லா சாலைகளும் உரோமாபுரியை நோக்கிச் செல்லுகின்றன”.(All Roads Leads to Rome) இங்கு சாலைகளும், ஆறுகளும் உரோமாபுரியும் ஆழ்கடலும் குறியீடுகளாக (Symbols) நின்று ஒரு பேருண்மையை உணர்த்துகின்றன. சமயங்கள் யாவும் ஆண்டவனை அடைய வழிகாட்டுகின்றன என்பதுதான் அந்தப் பேருண்மை. நாம் இருப்பது அறிவியல் காலம், எல்லாவற்றையும் அறிவியல் நோக்கில் காண நம் மனம் விழைகின்றது. சில கருத்துக்களின் அடிப்படையில் அறிவியல் ஆன்மீகத்துக்கு வழியமைப்பதை எடுத்துக்காட்ட முயல்வோம்.
ஞாதுரு, ஞானம், ஞேயம் எனினும், காண்பான் காட்சி, காட்சிப்பொருள். எனினும் ஒன்றே இவற்றிற்குத் திரிபுடி என்று பெயர். ஆன்மாவே காண்பான். பிரம்மமே காட்சிப்பொருள் (நாம் பிரம்மமாயிருக்கிறோம் என்று) இவை இரண்டிற்குமுள்ள சம்பந்தமே காட்சி. இக்காட்சியையே மேல் ஞானம் என்று கூறுவர்.
அதாவது கண்ணாடியைப் பார்த்தால் நமது முகம்போல் அதற்குள் இன்னொரு முகம் தோன்றுகிறது. அதுபோல் புத்தி ரூபமான அந்தக்கரணத்தில் சத்ரூபனான கூடஸ்தனுடைய சாயை பிரதிபலிக்கும். இதற்கு ஆபாசன் என்று பெயர். உன் மனோவிருத்தி அந்தச்சாயையின் வழியாகச் சஞ்சரிக்கும். அதாவது விஷயங்களோடு சம்பந்திக்கும். இந்தச் சுத்தமான சத்துவ மனோவிருத்தியே ஞானம் என்று கூறப்படுவது. இது நுண்ணறிவால் ஊன்றி உணரத்தக்கது.
இந்த அற்புதமான கருத்தை கைவல்ய நவநீதத்தின் மூலமாகவே பார்ப்போம்.
உன்முகம் போல்கண் ணாடிக் குள்ளொரு முகங்கண்டாற்போற்
சின்மய வடியின் சயை சத்துப்போற் புத்தி தோன்றும்
நின்மல விருத்தியந்த நிழல்வழி யாயுலாவுத்
தன்மநன் மகனேயித்தைத் தானன்றோ ஞானமென்பார்.
– கைவல்லிய நவநீதம் (சந்தேகம் தெளிதற்படலம்-11)
இதே செயலை சிவஞான சித்தியார் எவ்வாறு உள்ளதை உள்ளபடி உரைக்கிறது. என்று பார்ப்போமா?
அறியாமை யறிவகற்றி யறிவினுள்ளே
றியவுதனை யருளினா யறியாதே யறிந்து
குறியாதே குறித்தந்தக் கரணங்க ளோடும்
கூடாதே வாடாதே குழைந்திருப்பை யாகில்
பிறியாத சிவன்தானே பிறிந்து தோன்றி
பிரபஞ்ச பேதமெல்லாம் தானாத் தோன்றி
நெறியாலே யவையெல்லாம் மல்ல வாகி
நின்றென்றும் தோன்றிடுவன் நிராதார னாயே.
பாரிலுள்ள நூல்களெல்லாம் பார்த்தறிய சித்தியிலே ஓர் விருத்தப் பாதி போதும் என்று இந்தப் பாட்டை பாராட்டுவர் அதுவன்றோ
இந்தப்பாட்டு.
இதே கருத்தைதான் கடந்த நூற்றாண்டில் வாழ்ந்த முறுக்குமீசை
வைத்த முண்டாசுக் கவிஞர் பாரதியார் அவர்களும் கூறிச் சென்றுள்ளார். அவர் பாடிய பாட்டை பாடிப் பார்ப்போமா.
தேசிகன் கைகாட்டி எனக்கு உரைத்த செய்தி
செந்தமிழில் உலகத்தார்க்கு உணர்த்துகின்றேன்
வாசியை நீ கும்பகத்தால் வலியக் கட்டி
மண்போலே சுவர்போலே வாழ்தல்வேண்டும்
தேசுடைய பரிதி உருகிணற்றுக்குள்ளே
தெரிவதுபோல் உனக்குள்ளே சிவனைக் காண்பாய்
பேசுவதில் பயனில்லை அனுபவத்தால்
பேரின்பம் எய்துவதே ஞானம் என்றான்.
அற்புதமான கருத்தை இனிய எளிய நடையில் பாமரமக்களும்
உணரும் வண்ணம் எழுதி நம்மையெல்லாம் வியப்பில் ஆழ்த்தி விட்டாரே.
காமாதிகள் வந்தாலுங்
கணத்திற்போ மனத்திற் பற்றார்
தாமரை விலைத்தண் ணீர் போற்
சகத்தொடுங் கூடி வாழ்வர்
பாமரெனக் காண் பிப்பர்
பண்டிதத் திறமை காட்டா
ரூமறு மாவா ருள்ளத்
துவகையாஞ் சீவன் முத்தர்.
– கைவல்லிய நவநீதம் (தத்துவ விளக்கப்படலம்-89)
இல்லறத்திலிருந்து நல்லறம் நடத்தும் இல்லற ஞானிகளின் இயல்பினை யாவரும் வியப்புடன் நோக்குவர். காமக் குரோதாதிகள் யாதோர் எதுவினால் நேரிடினும் அக்கனமே யவற்றை அறிவாய்க் கரைத்தலின் எங்ஙன நிலையுறும். நிலை கொள்ளவில்லையெனில் கணத்தில் நசிக்குமன்றோ, நசித்தபின் எங்ஙனம் மனம் பற்றி விடம்பெறுவர்.
தாமரையிலை தண்ணீரிலிருந்து எங்ஙனம் பற்றற்று நிற்குமோ. அங்ஙனம் அவர்கள் சகத்தோடு கூடிநின்றும் பற்றின்றி வாழ்வர் அன்றோ. மூடரைப்போல் தம்மைக் காட்டிக்கொண்டு திரிவர். பண்டிதராயினும் அத்திறமை தம்மிடத்தி லில்லாததாகக் காட்டிக் கொண்டிருப்பர். ஊமைகள் போலவுமிருப்பர். உள்ளத்தின்கண் மாறாத களிப்புடைய சீவன் முத்தர்கள் இங்ஙனமிருப்பர்.
சிவநேசச் செல்வர் தாயுமான சுவாமிகளின் தலை மாணாக்கர் அருளையர் அருளிய அருள் வாக்கிய அகவலில் இல்லற ஞானிகள் பற்றி எவ்வாறு கூறுகிறார் எனப்பார்ப்போம்.
இல்லறத் திருந்தும் இதய மடக்கிய
வல்லவன் தானே மகாயோகி என்றோன்
துறவறத் திருந்துஞ் சூழ்மனக் குரங்கொன்
ற்றவகை யறியான் அஞ்ஞானி என்றோன்.
என்று நாகரீகமாகக் கூறுவாராயினர். அவன் அகப்பற்றை ஒழித்தவனாதலின் குடும்பத்தோடு கூடியிருப்பவன் போல் பிறர்க்குத் தோன்றினும் அவனை பொறுத்த வரையில் தாமரையிலையின் மேலுள்ள நீர்த்துளி போலும், ஓட்டிற்குள்ளிருந்தாலும் அந்த ஓட்டோடு பற்றுதலின்றி யுள்ள புளியம்பழம்போலும் உள்ளத்தில் பற்றின்றியிருப்பர். பேத கன்மத்தால் அவர்கள் உலகத்தில் தொழில்படுவர் என்பது பற்றி இனிவரும் பாட்டில் பார்ப்போமா.
பேத கன் மத்தால் வந்த
பிராரத்வ நாநா வாகு
மாதலால் விவகாரங்க
ளவரவர்க் கான வாகு
மாதவஞ் செய்யினுஞ் செய்வர்
வாணிபஞ் செய்யினுஞ் செய்வர்
பூதலம் புரப்ப ரையம்
புகுந்துண்பர் சீவன் முத்தர்.
– கைவல்லிய நவநீதம் (தத்துவ விளக்கப்படலம்-90)
பேதகன்மம் அபேதகன்மம் என கன்மம் இரண்டு வகையாகும் . அவற்றுள் பேதகன்மம் என்பது உலகம் வேறாகக் கண்டு புரியும் கன்மமாகும். அபேதகன்மம் தானாகக் கண்டு புரியுங்கன்மம்.
இங்ஙனமிருக்க பேத கன்மத்தால் வந்த ஊழ் நானாவிதமாகும். எங்ஙனமெனின் மகாதவத்தைச் செய்ய விருப்புற்றுச் செய்யினும் செய்வர். வியாபாரம் செய்ய விருப்புற்றுச் செய்யினுஞ் செய்வர். பூதலத்தை ஆளும். அரசர்களும் உண்டாம். யாசகம் எடுத்துண்ணும் பிச்சைக்காரரும் சீவன் முத்தரில் உண்டென்பர்.
இதிலிருந்து வாணிபம் செய்யும் வணிகர்கள் இல்லறத்திருந்து துறவறத்தை செவ்வனே செய்வர் என்பது புலப்படுகிறது. நாட்டை ஆளும் மாமன்னர்களும் சீவன் முத்தர்களா இருப்பர் என்பதால் அவர்களும் இல்லறத்தில் இருந்து தொழிற்படுவர் என்பது புலனாகிறது அன்றோ. இன்னும் அவர்கள் பெருமையை அடுத்த கவியில் காண்போம்.
சென்றது கருதர் நாளைச்
சேர்வது நினையார் கண்முன்
நின்றது புசிப்பர் வெய்யி
னிலவாய் விண் விழுது வீழ்ந்தும்
பொன்றின சவம் வாழ்ந்தாலும்
புதுமையா வொன்றும் பாரார்
நன்றுதீ தெண்ணார் சாட்சி
நடுவான சீவன் முத்தர்.
– கைவல்லிய நவநீதம் (தத்துவ விளக்கப்படலம்-9)
போனதைப் பற்றியோ கொஞ்சமும் நினையார் இனி வருவதைப் பற்றியும் நினையார். இப்போது பிராரப்த வினைப்படி யாது கிடைப்பதோ அதனை மாத்திரம் அனுபவிப்பர். ஆகாயத்தில் உள்ள கிரகங்கள் கோள்கள். விழுதுகள் போல் கீழே வீழ்ந்தாலும் வியப்புடன் நோக்கார். செத்த பிணம் மீண்டும் உயிரோடு கூடி வாழ்கிறது என்று கூறினாலும் ஒன்றையும் அதிசயமாகப் பாரார்கள். இது நன்று இது தீது என்றும் சொல்லார்கள் பிரம்மவித்தாகிய சீவன்முத்தர்கள்.
ஞானியும் பிராரப்தத்தை அனுபவிக்கிறான் எனின், சாதாரணமாக அஞ்ஞானிகள் அனுபவிப்பதுபோல இதுநான் பூர்வம் செய்தவினை யாதலின் என் கன்மத்தை நான் அனுபவிக்கிறேன் என்ற உணர்ச்சியோடு அனுபவிப்பதில்லை.உண்மையில் ஞானியின் நிலையில் தான் என்பதும் ஒன்றை அனுபவிக்கிறோம் என்பதும் ஆகிய இத்தகைய உணர்ச்சிகளே இல்லை. ஆகையால் அனுபவத்தில் நமக்கும் பிராரப்தமுளது, அதை அனுபவிக்கிறோம் என்ற உணர்ச்சி சீவன் முத்தனுக்கு இல்லை. உண்டேல் அவன் நிலை சரியான சாக்ஷி மாத்திர நிலையாகாது.
எப்போது தன்னையறிந்து சாக்ஷி மாத்திரமாய் நிற்கிறானோ அப்போதே ஆகாமியம் ஒழியும். பிறகு எப்போது தற்பத தரிசனம் உண்டோ அதாவது அருள் நாட்டமுற்று சிவோகம் (அகம் பிரம்மாஸ்மி) பாவனையில் பிரம்மமதையன்றி நாம் வேறில்லை. அதுவே நாமென்ற நிலையில் நின்று அகண்டாகார விருத்தியில் தன்னை இலயப்படுத்தத் தொடங்குகிறானோ அப்போதே ஞானாக்கினியால் சஞ்சிதம் எரிக்கப்பட்டுப்போம். பிறகு அசிபத தரிசன முண்டாயின் அதாவது முடிவாக அகண்டாகார விருத்தியில் தன்னை அடியோடிழந்து தானற்றுச் சகச சமாதி நிலையடைகிறானோ. அப்போதே பிராரப்தமும் ஒழிகிறது.
பிராரப்தத்தை ஞானியும் அனுபவித்தே தீரவேண்டும் என்று கூறியது ஏதெனில்,
வினைப்போகமே யொரு தேகங்கண்டாய்
வினைதானொழிந்தால் தினைப்போ தளவு
நில்லாது கண்டாய்.
என்றார் போல, பிராரப்தம் தேகத்தைப் பொருந்தியது. அஞ்ஞான தசையில் சீவ பாவத்தால் தேகத்தின் செயல்களையெல்லாம் தன் செயல்களாக மயங்கிக் கருதியவன், ஞான நிலையில் தேகத்திற்கும் தனக்கும் சம்மந்தமில்லையென விட்டு விட்டால், சீவன் முத்தனது ஆன்மானுவத்தில் அப்பிராந்தியில்லை. ஆகாரம் புசிக்க வில்லையோ வெனில் அவனுடைய நினைவில் தான் புசிப்பதாகிய பிராந்தியில்லை. நித்திரையிலிருந்து எழுப்பி அன்ன மூட்டின் உண்டு, காலையிலெழுந்து எனக்கு அன்னமளிக்கவேயில்லை யென்று கூறும் குழந்தை எந் நிலையிலிருந்து அவ்வன்னத்தை உண்டதோ அவ்வாறு (ஆனால் அஞ்ஞானம் நீங்கிய) நிலையினின்று பிராரப்தத்தைக் கழிக்கும் சீவன் முத்தனுக்கு பிராரப்த்தை அனுபவிக்கிறோம் என்ற உணர்ச்சியேயில்லை. இதுவரை கூறியவற்றால் பிராரப்தம் தேகத்தோடு சம்பந்தப்பட்டது என்றும்
இத்தேகத்தில் கட்டுப்பட்டிருப்பதே பிராரப்தம் என்று தெரியவருகிறது. பிராரப்தம் அவ்வளவுமின்றி ஒழிந்தால் இத்தேகம் ஒரு கணமேனும் தரியாது. ஞானம் வந்தபின் ஜீவன் முத்தருடைய ஆன்மாவின்கண் தேக சம்பந்த உணர்ச்சியில்லை யாதலின் பிராரப்த அனுபவ உணர்ச்சியும் இல்லை. சீவன் முத்தர்களில் மேற்கண்ட நால்வகையாகிய பேதமிருப் பதற்கும் பிராரப்பதத்தின் அளவே காரணம். இப் பிராரப்தம் ஞானம் கிட்டாத வண்ணம் தடுக்கவும் வல்லமையுடையது அதுதான் எப்படியெனில்,
ஒருவன் ஒரு ஜன்மத்தில் செய்த கன்மம் நான்கு பிறவிகளுக்கு வித்தாகிவிடுகிறது. அதாவது ஒருவன் செய்யும் ஒரு பெரிய பாவகன்மத்திற்கு அவன் நான்கு ஜன்மமெடுத்து அதை அனுபவிக்க வேண்டும் என்று தண்டனை ஏற்படுகிறது. அப்படியிருக்க, அடுத்த ஜன்மத்தில் அவனுக்கு ஞானமுண்டானால், உடனே பிறவி ஒழிய வேண்டும். அப்படியின்றி ஞானம் வந்த பின்பும் முன் பிராப்த வினையை யனுபவிக்க அவன் ஜெனிக்கறானெனின் ஞானிக்கும் பிறவியுண் டென்றாகிறது. இது சுருதிக்கு விரோதமல்லவா மற்றென்னெனின், எப்போது நான்கு ஜனனத்திலே தான் ஞானம் உண்டாகி நிற்கும். நான்கு ஜன்மங்களுக்கு காரணமான அப்பிராப்தமே முதல் மூன்று ஜன்மங்களில் ஞானம் உதியா வண்ணம் தடை செய்யும்.
இனிப் பிறவா முடிவான ஜன்மத்தில்
மெய்ஞ்ஞானம் எளிதி லுண்டாம்.
-ஞான வாசிட்டம்
இதையே வாசிட்டத்தில் தெளிவாக கூறுவதை அறிய முடிகிறது. இந்நெறிச் செல்லார் குதர்க்கிகள் ஆவர். அவர்கள் குதர்க்கம் பேசித்திரிவர்.
இனி ஞானிகள் பொறுமையாக அதாவது முன்னும், பின்னும் யோசித்து நடக்கையில் இன்பமும், துன்பமும் மாறத்தகையாதலின் செல்வம்
வந்தும் களிப்பதும் இல்லை, வறுமைவந்தும் துக்கிப்பது மில்லை. ஆதலின் அவர்களது பிராரப்த வினைகள் எவ்வாறு கழிந்து விலகுகிறது என்பதை நுட்பமாக நோக்கிடுவோம். வருங்கவியில் அந்த நுட்பத்தைப் பார்ப்போமா.
பொறுமையாற் பிராரத் துவத்தைப்
புசிக்கு நாட் செய்த கன்ம
மறுமையிற் றொடர்ந்தி டாமல்
மாண்டுபோம் வழியே தென்னிற்
சிறியவ ரிகழ்ந்து ஞானி
செய்தபா வத்தைக் கொள்வர்
அறிபவ ரறிந்து பூசித்
தறமெல்லாம் பறித்துண் பாரே.
– கைவல்லிய நவநீதம் (தத்துவ விளக்கப்படலம் 97)
ஞானிக்கு ஞானமுதயமானது முதல் ஆகாமிய கர்மம் சேர்வதில்லை யென்று பார்த்தோம். பிராரப்த கர்மமோ மேற்கூறியவாறு (சுகதுக்கங்களின் சமபுத்தியோடு கனவைப்போல்) அனுபவித்து தீர்க்கப்படுகிறது.அச்சன்மத்தில் ஞானம் வருமட்டும் செய்திருக்கும் சஞ்சித கர்மங்கள் எவ்வாறு தொடராமல் மாண்டுபோம் என்னில் அறிவுடையோர் பிரம்மவித்து பூரணஞானியே என்றுணர்ந்து பக்தி செய்து அவன் புண்ணிய கன்ம பலன்களை ஏற்றுக்கொள்வார்கள். அறிவில்லாத மூடர்கள் ஓ மகா ஞானியோ இவர். அவன் சாப்பிட வில்லையோ, வரவில்லையோ என்று அவனை இகழ்ந்து கூறி அவன் செய்துள்ள பாவகன்மப் பலன்களையெல்லாம் ஏற்றுக் கொள்வார்கள். ஆதலால் ஞானியைப் பூசிப்பவனுக்குப் புண்ணிய பலனும், இகழ்பனுக்குப் பாப பலனும் பிராரப்தமாகும் என்று தெரியவருகிறது. இதுபற்றி விவரிக்க பெருகும் ஆதலின் நிறுத்துவோம்.
ஒருவனுக்கு ஞானம் உதயமானபோது. அவனிடமுள்ள அளித்தையாகிய காரண சரீரம் ஞானாக்கினியால் ததிக்கப் படுகிறது. பிராரப்தம் ஒழிந்த அக்கணமே தூலதேகம் சவமாய்விடும். அப்போது சூக்கும தேகமானது கொல்லன் உலையிலுள்ள இரும்புண்ட நீர்போல் துரியமாகவும் விபுவாகவும் உள்ள சொரூபத்தில் நாசமாகும்.
“காரணசரீரம் நசிப்பே சூக்கும சரீர நாசம். சூக்கும சரீர நசிப்பே தூல சரீர நாசமாம்”.
மூவித கன்மங்கள் : புண்ணிய கன்மம், பாப கன்மம் இவை இரண்டும் கலந்த மிசிர கன்மம் ஆகிய மூன்றாம்.
துரியம்: சாக்கிரம், சொப்பனம், சுழுத்தியாம் எதிலும் தாக்கற்ற நான்காவது பொருளாதலால் அது துரியம் எனப்பட்டது.
விபு: தேச காலவஸ்து சேதமற்று வியாபகமாக பொருளாதலின் அத்துரிய பரம்பொருள் விபு என்று ஆயிற்று
யாதொன்று அனுபவத்தில் நினைப்பு மறைப்பு சலனங்களை உண்டாக்குவதற்கு காரணமாய் இருக்கிறதோ அதுவே காரண சரீரமென்றும் அவித்தை அல்லது அஞ்ஞானமென்றும் ஆவரணமென்றும் கூறப்படும். மனதை ஒடுக்கி மேலுள்ள அந்தகாரமான பாழைக் கடந்து தன்னை யறிந்த ஞானி ஆவரணம் அதாவது அஞ்ஞான மறைப்பு என்னும் திரையை அறுத்தெறிந்தவனாகிறான். அவனுடைய அவித்தை அதாவது அஞ்ஞானம் மறைப்பு என்னும் உறை என்ற காரணசரீரம் ஞானாக்கினியால் தகிக்கப்படுகிறது. தகிக்கப்பட்டு அழிகிறது. இங்கு ஞானாக்கினி என்பது, தான் தேகமல்ல அதற்கு அன்னியமாகிய அழியாத ஆன்ம சொரூபமே என்று அனுபவமாக அறிந்து அந்த நிலையில் நிலைத் திருக்கும் தன்மையேயாகும்.
காரண சரீரம் அழிந்து போனதால் தூலதேகம் சவமான பின் சூக்கும தேகத்திற்குப் பற்ற இடமில்லை. ஆதலின் எல்லாக் காரியங்களும் தத்தம் காரணங்களில் ஒடுங்கு முறைபோல் சூக்கும தேக தத்துவங்களும், சத்துவ இரஜோ குண தன்மாத்திரை பூதங்களாக மாறி. உதித்த இடத்தில் ஒடுங்கி இருத்தல் அது கன்மம். என்று மகான் ரமணரிஷி கூறியதற்கிணங்க உதித்த முறையே ஒன்றிலொன்றொடுங்கி ஆகாய மாத்திரமாகி அதுவும் விஷேப சத்தியிலொடுங்கி. விஷேபம் மூலப் பிரகிருதிலொடுங்கி, மூலப் பிரகிருதியும் முடிவில் தன் காரணமான பிரம்ம சொரூபத்தில் இலயமாய் விடுகிறது.
ஜீவன் முத்தர் தேகம் நீங்கிய பின் அவர்களின் விதேக முத்தியடையும் நிலை கண்டோம், இனி அவர்களின் பெருமை பற்றியும் அவர்களின் ஒடுக்கத்தின் பின் நாம் அவர்களுக்குச் செய்ய வேண்டிய கடமைபற்றியும் சிறிது விளக்குவோம். ஞானியின் தேகத்தைக் குகை செய்து
பூசிக்கவேண்டும் என்பதே ஆன்றவிந்தடங்கிய கொள்கைச் சான்றோர் கருத்தாகும். அதை தீயிட்டெரித்தால் ஈசுவரனது கோயிலை எரித்ததுபோல் ஆகுமென்றும், அதனால் நாடெல்லாம் தீமண்டிஅழியுமென்றும்
கூறிச்சென்றனர். இதுபற்றியே
அந்தமின் ஞானிதன் னாகத் தீயினில்
வெந்திடி னாடெல்லாம் வெப்புத் தீயினி
னொந்தது நாய்நரிநுகரினுன் செரு
வந்து நாய் நரிக்குண வாகும்வை யகமே.
– திருமந்திரம்
எண்ணிலா ஞானியுடலெரி தாவிடி
லண்ணறங் கோயிலை லிட்ட தாங்கொக்கும்
மண்ணின் மழைவிழா வையகம் பஞ்சமா
மெண்ணரு மன்ன ரிழப்பா ரரசே.
– திருமந்திரம்
என்று திருமூலர் திருமந்திரத்தில் கூறப்பட்டிருப்பதை மனதில் கொண்டு செயல்பட வேண்டும்.
மேலும் திருவருட்பா என்னும் அருட்பாவில் வள்ளலார் சுவாமிகள் கூறுவதையும் சிந்திப்போம்.
பிறந்தவரை நீராட்டிப் பெருகவளர்
திடுகின்றீர் பேயரே நீர்
இறந்தவரைச் சுடுகின்றீர் எவ்வணஞ்சம்
மதித்தீரோ இரவிற் றூங்கி மறந்தவரைத் தீமூட்ட வல்லிரா
னும்மனத்தை வயிர மான சிறந்தவரை யெனப்புகழச்செய்து
கொண்டீர் ஏன் பிறந்துதிரி கின்றீரே.
– திருவருட்பா
பரனளிக்குந் தேகமிது சுடுவதப
ராதமெனப் பகர்கின் றேனீர்
சிரநெளிக்கச் சுடுகின்றீர்
செத்தவர்கள் பற்பலருஞ் சித்த சுவாமி
உரவளிக்க வெழுகின்ற திருநாள்வந்
தடுத்தனவி துணர்ந்து நல்லோர்
வரனளிக்கப் புதைத்தநிலை காணீரோ
கண்கெட்ட மாட்டி னீரே.
– திருவருட்பா
என்ற ஆன்றோர்களின் அருட்பாடல்களை நோக்கினால் புரிந்துவிடும். ஆனால் நம் முன்னோர் வடவர்கள் செய்யும் எரியூட்டும் முறையை பின்பற்றி வருவது ஏன் என்று புரியவில்லை.
தமிழக கிராமங்களில் இன்றும் மக்கள் இறந்தபின் அடக்கம் நடந்ததா அடக்கம் எப்போது என்று பேசுவது இன்னும் வழக்கில் உள்ளது. அடக்கம் என்றால் உயிர் இந்த உடலோடு ஐக்கிய மாவதையே அடக்கம் என்றனர் ஆன்றோர். அதாவது இந்த உயிர் உட்லோடு ஒடுங்கி இருத்தலையே முன்னோர்கள் ஒடுக்கம் என்றனர். ஜீவன் முத்தர்களின் ஜீவ சமாதியை ஒடுக்கம் என்று அழைப்பது இன்றும் வழக்கத்தில் உள்ளதை யாவரும் அறிவர் இது கருதியன்றோ அய்யன் திருவள்ளுவரும்
அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை
ஆரிருள் உய்த்து விடும்.
– குறள் : 121
என்று கூறிச்சென்றார். உயிர் இந்த உடலோடு அடங்கி ஒடுங்கி இருத்தலே தேவர்களோடு அதாவது தெய்வத் தன்மை கூடிய தெய்வநிலைக்கு கொண்டு சேர்க்கும். அடங்காமை அதாவது உயிர் வேறு உடல் வேறு பிரிந்த நிலையானது பிறவி என்ற இருளில் தள்ளிவிடும் என்பதையே எளிய நடையில் யாவர்க்கும் உணர்த்துவராயினர். இது கருதியன்றோ கைவல்லிய நவநீதம்
போன்ற வேதாந்த நூல்களும்
சச்சிதானந்த சொரூபியாய் யாவர்க்கும் அருள்பாலிக்கும் ஜீவன் முத்தர்களையே வணங்கி பலனைப் புசிக்க
வேண்டுமென்று கூறும்.
பொன்னில மாத ராசை
பொருந்தினர் பொருந்தாருள்ளம்
தன்னிலந் தரத்திற் சீவ
சாட்சி மாத்திரமாய் நிற்கும்
எந்நிலங் களினுமிக்க
வெழுநில மவற்றின் மேலாம்
நன்னில மருவு மேக
நாயகன் பதங்கள் போற்றி.
– கைவல்லிய நவநீதம் (பாயிரம் – 1 )
பொன்னாசை. மண்ணாசை, பெண்ணாசை இவற்றின் மேல் ஆசையுடையோர். அதாவது அஞ்ஞானிகள் உள்ளத்திலும், இவற்றின் மேல் பற்றில்லார் அதாவது ஞானிகள் உள்ளத்திலும் எதிலும் பேதமின்றி ஆகாயத்தைப்போல எதிலும் தாக்கற்று சீவசாட்சி மாத்திரமாய் விளங்கி நின்ற எல்லாப் பூமிகளுக்கும் மேலான ஏழு ஞான பூமிகளிற் சிறந்த துரிய பூமியிற் பொருந்தி யொளிரும் சச்சிதானந்த சொரூபியாகிய பரம் பொருளின் தோற்றமாம் ஜீவன் முத்தர்களின் பாதம் பணிந்து வணங்குவோம் என்று கூறியதை இங்கு சிந்திப்போம்.
முற்றும் துறந்த முனிவர்களது அதாவது ஜீவன் முத்தர்களது பெருமையை பேசப்பேச வாய்மணக்கும் எண்ண எண்ண எண்ணமாளாது என்று அய்யன் திருவள்ளுவர் கூறுவதையும் பார்ப்போம்.
துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்து
இறந்தாரை எண்ணிக் கொண்டற்று.
– குறன் : 22
ஆம் உலகில் இறந்தவர்களின் எண்ணிக்கை எவ்வளவு என்று கூறமுடியுமா? முடியாதல்லவா அது போலத்தான் உண்மையாகவே பற்றுகளைத் துறந்த உத்தமர்களின் பெருமையையும் அளவிடவே முடியாது. ஆதலின் பவப்பிணி போக்கும் ஞானிகளைப் போற்றி வணங்குவோம் வாழ்த்துவோம். ஒருமையுடன் நினது திருமலரடி நினைக்கின்ற உத்தமர்தம் உறவு வேண்டும் என்ற வள்ளலார் எண்ணப்படி அவர்களது உறவு என்றும் வேண்டும் என்போம்.
தம்மை மறந்து அருளமுதம் உண்டு
தேக்கும் தகையுடையார்
திருக்கூட்டம் சார்ந்திடுவோம்
பிறப்பறுக்கும் பெருநெறியை பயின்றிடுவோம்.
காலம் உள்ளளவும் இந்த ஞாலம் உள்ளளவும் நிலமிசை நீடுவாழும் நிலையை அறிந்து உணர்ந்து வாழ்வோம்.