எது வேண்டும் - அத்துவைதமா ? அத்துவைதானந்தமா ?
வானுலவும் வான்மதிக்கு வளர்பிறை என்றும்
தேய்பிறை என்றும் அன்று முதல் இன்றுவரை
சக மக்கள் கூறிவருவதை கேட்கின்றோம்.
ஆனால் வான்மதிக்கோ வளர்பிறையும்
தேய்பிறையும் கிடையாதென்று ஆய்வு செய்தால்
புரிந்துவிடும். வானத்தில் மிதந்து செல்லும்
கோள்களின் சுழற்சியின் காரணமாகவன்றோ
இவ்வாறு காட்சி கிடைக்கின்றது.
பாரெங்கும் ஒளி உமிழும் பகலவனோ
கிழக்கே உதித்து மேற்கே அடைகிறது
என்று பாரில் உள்ள பலரும் கூறினாலும்
இருட்கதவை உடைத்தெறியும்
எழுஞாயிறு உதிப்பதும் இல்லை,
மேற்கே அடைவதும் இல்லை என்று
ஆய்வு செய்யும் ஆன்றோர்கள் உணர்ந்திடுவர்.
பூமி பந்தின் சுழற்சியின் காரணமாகத்தான்
கிழக்கே உதித்து மேற்கே அடைவது போல்
காட்சி கிடைக்கிறது. அவனோ
எப்போதும் ஒளியைக் கொடுப்பதினால்
பகலவன் என்று பாரிலுள்ளோர் புகழ்ந்திடுவர்.
வான வெளி தன்னில் அபூர்வமாக
காட்சி கொடுக்கும் வானவில்லுக்கோ
அரைவட்டம் என்பது எல்லோரும்
கூறிடும் கூற்றுத்தான். ஆனால்
வானவில் வானத்தில் தோன்றும்கால்
வானஊர்தியில் பயணம் செய்தால்
முழு வட்டமாகவல்லவோ தெரியும்.
இதையும் அறிந்தோர் உணர்ந்திடுவர்.
இப்படியே எழுதிக் கொண்டே போகலாம்.
இதனால் அன்றோ கண்ணால் கண்டதும் பொய்,
காதால் கேட்பதும் பொய், தீர
விசாரிப்பதே மெய் என்று முன்னோர்கள்
கூறினார்கள் போலும்.
புறவிழி நோக்காலும் விசய அறிவாலும்
நிகழ்ந்திடும் இந்த நிகழ்வுகளுக்கே
எவ்வளவு தடுமாற்றங்கள் ஏற்படுகிறது.
பின்னர் தெளிந்தோரிடம் தெரியக்
கேட்டு சிந்தித்த பின்தானே தெளிவான
நிலை கிடைக்கின்றது. இந்த புறவிழி
நோக்கால் மனிதன் படைத்த புதுமைகள்தான்
எத்தனை! எத்தனை! சிந்துபாடும் சிற்றாறுகள்
பேராறாய் மாறி கடலில் கலப்பதற்கு முன்னே
அணைகட்டி நீரைத் தேக்கி உலகையே
வளப்படுத்தினான். வானஊர்திகளில் பூமிப் பந்தையே
வலம் வந்தான். வானத்தில் மிதந்து வரும்
கோள்களிலும் கால்பதித்தான். இரவையே
பகலாக்கும் மின்விளக்குகளும், வெப்பமதைக்
குறைத்திட குளிர்சாதனப் பெட்டிகளும்,
அண்டத்தில் என்ன நடந்தாலும்
ஒரு நொடிப் பொழுதில் கண்டு உணர்ந்து
பதில் சொல்லும் மடிக்கணினிகளும், கையில்
வைத்தே அடுத்த கண்டத்தில் உள்ளோரிடம்
பேசி மகிழ்ந்திட கைத் தொலைபேசிகளும்,
கைபுனைந்து இயற்றாத கவின்பெறு வனப்புடைய
மலைகளையும், அருவிகளையும், வற்றாத ஜீவ
நதிகளையும் உண்டாக்க முடியா
விட்டாலும் வானுயர்ந்த கோபுரங்களையும்
பல உட்கட்டமைப்புகள் கொண்ட
ஒய்யார அரண்மனைகளையும் உண்டாக்கி
அகமகிழ்ந்தான். சாகா இலக்கியங்களையும்,
இலக்கணங்களையும் உரை சான்ற நூல்களையும்
ஆக்கி மகிழ்ந்தான். மனித ஆயுளை
தவணை முறையில் நீடிக்க மருத்துவத்தில்
மகத்தான முறைகளில் புதுமை கண்டான்.
மனித உடலில் உள்ளிருக்கும் நுண்ணிய
பாகங்களைக் கண்டறிந்து இயந்திரங்களில் பழுதான
பாகங்களை அகற்றி புதியவை பொருத்தி
மீண்டும் இயக்குவது போல் புதுமை பல
செய்துவிட்டான். ஆனால் உயிர்
எங்கே இருக்கிறது என்று இன்று வரை அவன்
காணவில்லை. மனம் இருப்பதால்தான்
அவனை மனிதன் என கூறுகிறோம்.
அந்த மனத்தையும் இன்று வரை
கண்டான் இல்லை. இதுபோல் அவன்
காணாததும், ஆய்வு செய்து அகப்படாததும்
இன்றும் இருக்கத்தான் செய்கிறது.
ஆனால் அன்றுள்ள பேரான்ம பெருஞ்சுகம்
கண்ட ஞானிகளும், ஆன்றவிந்தடங்கிய
கொள்கைச்சான்றோர்களும், உய்வடைய வந்த
இந்த உயிரையும் எப்போதும் சிந்துகின்ற
சிந்தையையும், சிந்தை பிறக்கும் இடத்தையும்
ஆய்வு செய்து நமது உயிர் உய்வடையும்
வழியினை நூல் வாயிலாகவும், அவர்களின்
நுட்பமான வழியினையும் பார்போற்ற பகர்ந்துள்ளார்கள்.
உடலிலா உயிரைக்காண ஒருவர்க்கும்
எட்டாதாலே உடலுலோன் அறிய
என்றால் உடலெடுத்து அறிந்தோன் வேண்டும்.
என மெய்யான மெய்ஞான வழியறிய
மெய்வழி ஆண்டவரும் கூறிச் சென்றார்.
உடலில்லா உயிரைக் காணத்தான் முடியுமோ?
அந்த உயிரை அறியவேண்டுமாயின்,
தெரியவேண்டுமாயின். உணரவேண்டுமாயின்
அந்த உயிரைப்பற்றி அறிந்த, தெரிந்த,
உணர்ந்தவரிடம்தானே சென்று அறிந்து
கொள்ளவேண்டும் என்று பாமரரும் புரியும்
வண்ணம் பகர்ந்துள்ளதைக் காணீரோ!.
தன்னுயிர் தானறப் பெற்றானை ஏனைய
மன்னுயிர் எல்லாந் தொழும்
என வள்ளுவப்பெருந்தகையும் கூறியிருப்பதை
ஆய்வு செய்திடுவோம். உடல்வேறு.
உயிர்வேறு என பிறியக்கூடிய இந்த உயிரை
உடலோடு ஐக்கியப்படுத்திக் கொண்டவர்களை,
உடலோடு இந்த உயிரை ஒடுக்கம்
செய்து கொண்டவர்களை அதாவது ஆதிக்கு
சமமாக ஜீவசமாதி பெற்றவர்களை மன்னுயிர்களான
இந்த நிலைபெற்ற உயிர்கள் அதாவது
சீவர்கள் எப்போதும் ஏத்தித் துதித்திடுவர்
என அவர் பாணியில் கூறியது காணீரோ!.
படைகொடு பவனி போதும்
பார்மன்னன் புகும் போதில்லிற்
கடைதொறும் விட்டு விட்டுக்
காவலு மிட்டுப்பின்னர்
அடைதருந் தனியே யந்தப்
புரந்தனினில் அதுபோல் ஆன்மா
உடலினில் ஐந்து அவத்தை
உறும் உயிர் காவலாக.
என அருணந்தி சிவாச்சாரியார்
அருளிய சிவஞான சித்தியார் சுபக்கத்தில்
நினைந்து நினைந்து, இன்புறும் உவமையோடு
கூறியுள்ளதைக் காணீரோ. அரண்மனையை
விட்டு நகர்வலம் புறப்பட்ட அரசரை
ரத, கஜ, துரக, பதாதிகளான நால்வகைப்
படையும் வலம் வந்து மீண்டும்
அரண்மனை ஏகியதும் நால்வகைப்படையினர்
அரசரைக் காத்துப் பராமரிப்பதுபோல் உடலில் உள்ள
உயிரை ஐந்து அவத்தையோடு காத்து உய்வடைய
வைக்கும் எனக் கூறியது காணீரோ.
இதையே மறைகளில் மொத்த சத்தான மறைமொழிகளால்
பிரக்ஞானப் பிரம்மம் அதாவது பிரக்ஞானம்
என்றாலே உணர்வது என்று துணிந்து கூறலாம்.
எதனால் கேட்கப்படுகிறதோ அதுவே பிரக்ஞான பிரம்மம்
எதனால் பரிசிக்கப்படுகிறதோ அதுவே பிரக்ஞான பிரம்மம்
எதனால் பார்க்கப்படுகிறதோ அதுவே பிரக்ஞானப் பிரம்மம்
எதனால் ருசிக்கப்படுகிறதோ அதுவே பிரக்ஞானப் பிரம்மம்
எதனால் நுகரப்படுகிறதோ அதுவே பிரக்ஞானப் பிரம்மம்”
என்று மறைகள் தெளிவாகக்கூறுகின்றன.
இதையே வள்ளுவப் பெருந்தகையும்
ஐயுணர்வு எய்தியக் கண்ணும் பயமின்றே
மெய்யுணர்வு இல்லா தவர்க்கு.
என இனிய எளிய நடையில் பாமர மக்களும்
உணரும் வண்ணம் கூறிச்சென்றார்.
உடல் வேறு உயிர்வேறு பிரிந்து விட்டால்
ஐம்புலன்களும் பிரக்ஞானமான உணர்வை
அறியுமோ அறியாதல்லவா.
இந்த பிரக்ஞானமான பிரம்மம்
ஓர் அறிவில் இருந்து ஆறறிவு பெற்ற
மனிதர் வரை ஆட்டுவிக்குதையா.
காரணக்குருவான ஞானசான் அருளினாலே
இன்னது தேகம் தேகி இவன் என
உணர்வன் யாவன் அன்னவன்
தன்னைத் தான் அறிந்தவன் என்ற
வேதாந்த இரகசியத்தை அறிந்தவுடன்
அகம் பிரம்மம் என்று மறைகளிலே
இரண்டாவதான யசூர் கூறுவதும்
இதுவன்றோ. பிரம்மத்தைத் தேடுகிறாயே
அது நானன்றோ! நான் அதுவன்றோ!
என தத்துவமசி வாக்கியமான
சாமமும் புகல்கின்றது. இறுதியில்
ஆத்மாவே பிரம்மம், பிரம்மமே நான் என்று
அயம் ஆத்மா பிரம்மம் என
அதர்வனமும் பார் அதிர பகர்கிறது.
இப்படி யெல்லாம் சொல்லக் கேட்டிருந்தும்
பலமுறை படித்துப்பார்த்தாலும் நம்பாமல்
நம்மைவிட்டு வெளியே தேடித்தேடி
இன்றுவரை, ஏன் நாளையும் அப்படித்தான்
இருக்கும் போல் தெரிகின்றது.
வேதாந்தத்தின் மொத்த சாரமே
இது என்பதால்தான் நாமும்
ஆய்வு செய்து தொகுத்து வழங்குகின்றோம்.
பிரபலமான சுருதிகளும் மறைகளும்
அறிவே கடவுள் என்று உறுதியாகக்
கூறி இதுவே சத்தியம் இதுவே நித்தியம்
இதுவே ஏகம் இதுவே பரப்பிரம்மம்
என பல வகையில் கூறி நம்மைப் பரவசப்படுத்துகிறது.
உலகமெல்லாம் நிறைந்து விளங்குவதும்
இந்த அறிவுதான் அன்றோ.
எல்லை உள்ளதும், எல்லை அற்றதும்.
நம் உள்ளிலும் வெளியிலும், நானும், நீயும்
எல்லாம் அறிவு சொரூபமேயாகும்
என்று உறுதிபடக் கூறியிருப்பதால்
பேரறிவான மெய்யறிவே கடவுள் என்பது ஆயிற்று.
பேரான்ம பெருஞ்சுகத்தில் திளைத்த.
சித்தமெலாம் அடங்கப் பெற்ற சிவவாக்கிய
சித்தரும் சித்தம் தெளிய இவ்வாறு கூறுவார்.
ஓடி ஓடி ஓடி ஓடி உட்கலந்த சோதியை
நாடி நாடி நாடி நாடி நாட்களும் கழிந்து போய்
வாடி வாடி வாடி வாடி மாண்டுபோன மாந்தர்கள்
கோடி கோடி கோடி கோடி எண்ணிறந்த கோடியே.
இப்படியே, வெளியே தேடித்தேடி அலைவோரை
இன்னும் அவர் பாணியில் உணர்வால்
உணர்ந்து அறியவேண்டும் என்பதையும்
அவர் வாயிலாகக் கேட்போம்.
என்னிலே இருந்த ஒன்றை யான் அறிந்தது இல்லையே
என்னிலே இருந்த ஒன்றை யான் அறிந்து கொண்டபின்
என்னிலே இருந்த ஒன்றை யாவர்காண வல்லரோ
என்னிலே இருந்திருந்து யான் உணர்ந்து கொண்டேனே.
ஒருவர் உணர்த்தினாலன்றோ அந்த அற்புதமான
தன்னை அறிந்து இன்புறும் உணர்வை
உணரமுடியும், இன்றேல் உணர முடியுமோ?
ஓர் ஞானதீபத்தில் இருந்துதானே
அடுத்த தீபத்தை ஏற்றமுடியும். இதை
சித்தர் உலகம் எவ்வாறு பெருமை பேசி
மகிழ்கின்றது எனக் காண்போம்.
கண மதனிற் பிறந்திரும் இக்காயத்தின்
வருபயனை உணர்வுடையார் பெறுவர்
உணர்வு ஒன்றுமிலார்க்கு ஒன்றுமில்லை.
என பரஞ்சோதி முனிவர் கூறுவதைக் காணீரோ!.
மேலுணர்வான் மிகு ஞாலம் படைத்தவன்
மேலுணர்வான் மிகுஞாலம் கடந்தவர்
மேலுணர்வான் மிகு ஞாலத் தமரர்கள்
மேலுணர்வான் சிவன் மெய்யடியார்களே.
என திருமூலரும் திருமந்திரம் படைத்து
மேலான நிலைக்கு மேலான மேலுணர்வே
முத்தி நிலைக்கு இழுத்துச் செல்லும் என்று கூறுவதைக் காணீரோ.
நுண்ணுணர்வின்மை வறுமை அஃதுடைமை
பண்ண பணைத்த செல்வம்.
என்றும்,
உணர உணர உணர்வுடையாரைப்
புணரிற் புணருமாம் இன்பம்.
என நானிலம் போற்ற நாலடியார் உரைப்பது காணீரோ.
உணர் வொன்றிலா மூடன் உண்மை ஓராதான்
கணுவின்றி வேதாகம நெறி காணான்.
என்று திருமந்திரம் புகலும் வார்த்தைகளின்
ஆழத்தை அறிந்து கொள்வீர்.
பாராதி பூதநீ யல்லை – உன்னிப்
பாரிந் திரியங் கரண நீ யல்லை
ஆராய் உணர்வு நீ என்றான் – ஐயன்
அன்பால் உரைத்த சொல் ஆனந்தம் தோழி.
என தாயுமான சுவாமிகளும் உணர்வின்றி
ஒன்றுமில்லை என்றார்.
நோக்கு அறிய நோக்கே
நுணுக்கு அரிய நுண்ணுணர்வே….
என்று திருவாசகமும் முத்திரை பதிக்கும்.
நின்றாலும் இருந்தாலும் கிடந்தாலும் நடந்தாலும்
மென்றாலும் துயின்றாலும் விழித்தாலும் இமைத்தாலும்
மன்றாடு மலர்ப்பாதம் ஒருக்காலும் மறவாமை
குன்றாத உணர்வுடையார், தொண்டராம் குணமிக்கார்.
என்று பெரியபுராணமும் நம்மை வியப்பில் ஆழ்த்தும்.
விறகினில் தீயினன் பாலில் படுநெய்போல்
மறைய நின்றுளன் மாமணிச் சோதியன்
உறவு கோல் நட்டு உணர்வுக் கயிற்றால்
முறுக வாங்கி கடையமுன் நிற்குமே.
என அப்பரடிகளும் பேருணர்வு
பெற்றார்க்கன்றி பேரின்பப் பெருவழி
கிடையாதென்று அறைந்திடுவார்.
நினைந்து நினைந்து உணர்ந்து
உணர்ந்து நெகிழ்ந்து நெகிழ்ந்து அன்பே
நிறைந்து நிறைந்து ஊற்றெழுங்
கண்ணீர் அதனால் உடம்பு
நனைந்து நனைந்து அருளமுதே
நன்னிதீயே ஞான
நடத்தரசே என்னுரிமை
நாயகனே என்று
வனைந்து வனைந்து ஏத்துதும் நாம்
வம்மின் உலகியலீர்
மரணமிலாப் பெருவாழ்வில்
வாழ்ந்திடலாம் கண்டீர்
புனைந்துரையேன் பொய்புகலேன்
சத்தியஞ் சொல்கின்றேன்
பொற்சபையில் சிற்சபையில்
புகுந்தருணம் இதுவே.
என வள்ளலார் சுவாமிகளும் நினைந்து
நினைந்து உணர்ந்து உணர்ந்து உருகுவது
காணீரோ! இப்படியே எல்லா பேரான்ம
ஞானிகள் யாவரும் உணர்வே பேருணர்வாகி
பேருணர்வே பேரின்ப வாழ்வினை நல்கிடும்
என்பதையும் காணமுடிகிறது. தாயுமான
சுவாமிகளும் பேரின்ப நிலைதானே நின்ற நிலையில்
சேர்த்து நிர்விகற்பசமாதி வரை கொடுத்து,
என்றும் அழியாத இன்ப வெள்ளத்தில்
மிதக்க வைக்கும் என்பதையும் காண்போமா.!
நின்ற நிலையே நிலையா வைத்தான் அந்த
நிலை தானே நிருவிகற்ப சமாதி யுமாகி
என்று மழியாதே இன்ப வெள்ளம் தேக்கி
தொடர்ந்து தொடர்ந்து இழுக்குமந்தோ.
என்று பேரின்ப நிலைகளையும் அதன் பயனான
நிர்விகற்பசமாதி கிடைப்பதும் புரிகிறதன்றோ.
மேலும் இந்த வேதாந்த நிலைபற்றி பேசிப்
பேசியே காலத்தையும் நேரத்தையும்
கழித்திடுவோர் பற்றியும் அவர் வாயிலாகக் கேட்போம்.
கற்றதும் கேட்டதும் தானே எதற்காக கடபடவென்று
உருட்டுதற்கோ கல்லால் எம்மான்
குற்றமற கைகாட்டும் கருத்தைக் கண்டு
குணம் குறியற்ற இன்பநிட்டை கூடவன்றோ.
எனக் கூறியதையும் கேட்டால் அன்றும், இன்றும், என்றும்
வாய்ஞானம் பேசிடுவோர் உண்டு போலும்
வேதாந்த இரகசியங்களை வெளிச்சம் போட்டுக்
காட்டி ஆன்ம தரிசனம் பெறவாருங்கள் வாருங்கள்
என நமையெல்லாம் அழைக்கும் கைவல்லிய
நவநீதமும் பரந்த நூல் பார்த்தறியா
மாணவர்களையும் சீடனாக்கி உணர்வை
உணர்த்திக்காட்டி உச்சம் பார்க்க வைக்கும்.
அந்தமும் நடுவும் இன்றி ஆதியும் இன்றி வான்போல்
சந்ததம் ஒளிரும் ஞான சற்குரு பாதம் போற்றி
பந்தமும் வீடும் காட்ட பரந்தநூல் பார்க்கமாட்டா
மைந்தரும் உணருமாறு வஸ்து தத்துவம் சொல்வேனே.
அந்த பிரம்மநிலை புகலவந்த அந்த நூலே
எந்தவித ரூபமாவது, நாமமாவது இல்லாமல்
எங்கும் சமமாய் இரண்டின்றி ஏகமாய்
ஞான சொரூபமாய் பூரணமாய் நிறைந்து
நிற்கும் நிலையினை உணர்வால் அன்றோ
உணரமுடியும் என்பதையும், அந்தப் பிரம்மம்
இந்த நாமரூபமயக்கத்தில் விசய சுகத்தில்
கிடக்கும் மக்களும் என்னிடத்தே
சனித்து என்னிடத்தே சங்கமமாகட்டும் என
எண்ணியதாம். அதுவும் இன்றளவும்
தொய்வின்றி தொடர்கின்றதே.
இப்படிப் போன்றே நாமரூபங்கள் இரண்டும் இன்றி
ஒப்பமாய் இரண்டற்றொன்றாய் உணர்வெளி நிறைவாய் நிற்கும்
அப்பிரம்மத்தில் தோன்றும் ஐம்பூத விவகாரம் எல்லாம்
செப்புகற்பனையாலே செனித்த வென்றறிந்து கொள்ளே.
இப்படி உண்மை இவ்வாறு இருக்க
அத்துவைத நிலை அருமையானது என்பதால்,
மாற்றவோ மறைக்கவோ முடியாததென்பதால்
அத்வைதக் கருதுக்களையே காலம் முழுதும்
பேசிப் பேசியே வருகின்றனர்.
அத்துவைதானந்தம் என்பதுதானே
நம்மை தொடர்பவம் கெட சொரூபஞானத்தில்
மகிழவைக்கும் அதுதானே
பிறப்பிறப்பற்ற பெருவாழ்வை நல்கும்.
வெறும் அத்துவைதம் பேசினால் பாராட்டு மழையில்
நனையலாம். அதுமட்டும் போதுமென்போர்
அதையே செய்து கொண்டுவரத்தான் செய்வர்.
பார் அதிர முழக்கமிட்ட பாரதியோ
சில கருத்துக்களைக் கூறிச்சென்றார் அதுவும் காண்போம்.
பூமியில் எவர்க்கும் இனி அடிமை செய்யோம்
பரிபூரணனுக்கே அடிமை செய்து வாழ்வோம்.
என பூரணம் பெற்றோரின் பெருமை கூறி
தேசிகன் கைகாட்டி எனக்கு உரைத்த செய்தி
செந்தமிழில் உலகத்தார்க்கு உணர்த்து கின்றேன்
வாசியை நீ கும்பகத்தால் வலியக் கட்டி
மண்போலே சுவர்போலே வாழ்தல் வேண்டும்
தேசுடைய பரிதிஉரு கிணற்றின் உள்ளே
தெரிவதுபோல் உனக்குள்ளே சிவனைக் காண்பாய்
பேசுவதில் பயன் இல்லை அனுபவத்தால்
பேரின்பம் எய்துவதே ஞானம் என்றான்.
அனுபவ ஞானமே சச்சிதானந்த பேரின்ப நிலையை
அடையச்செய்யும் என அன்றே சொல்லிச் சென்றார்.
கைவல்லிய நவநீதமும் ஞானபூமிகளில்
ஏழில் முதற்பூமியான சுபேச்சையிலும்,
இரண்டாம் பூமியான விசாரணையிலும், மூன்றாம்
பூமியான தனுமாநசியிலும் ஏறியோர்
அப்பியாசிகள் மட்டுமே அதாவது
அவர்கள் முத்தர் அல்லர். நாலாம் பூமியான
சத்துவாபத்தி அடைந்தோரே சத்ரூபப்
பிரம்மமே தான் என அறிந்து பிரம்ம
நிலையை அடைய தொடர்ந்து தொடர்ந்து
நின்ற நிலையான பேரின்ப நிலையை அடைந்து
அதில் திளைத்திடுவோர். இல்லற ஞானியென
புகழப்படும் பிரம்ம வித்துவே ஞானி என்று துணிந்து
கூறலாம் என்பதையும் அறுதியிட்டுக்கூறும்.
வரியானும் வரனும் வரிட்டனும், கானவர்
வலையிற்பட்டு கைதப்பி ஓடும் மான்
போல் இல்லம் விட்டு ஏகிடுவர்
இல்லறத்தில் இருந்து செயல்படும் பிரம்மவித்தோ
பெரிதான திட்டதுக்கம் பிரம்மவித்து
அனுபவிப்பான் என்பதுபோல் பந்தத்தில்
இருந்தே எந்த நிலை வந்தாலும் இயல்பு
நிலை மாறாத நின்ற நிலையில் இருந்து
இறுதி வரை எல்லா பணிகளையும் செவ்வனே
செய்து செம்பொருள் கண்டு கார் உள்ளளவும்
இப்பார் உள்ளளவும் தனது அருட்கதிர் வீச்சால்
அருள்பாலிப்பர் என்று துணிந்து கூறலாம் அன்றோ.
இல்லறஞானிகளான பிரம்ம வித்துக்களும்,
துறவறஞானிகளுக்கு பிரம்ம வரியான்,
பிரம்ம வரன், பிரம்ம வரிட்டன் எனும்
பெயர் இருந்தாலும், மெய்ஞ்ஞானத்தை அடைந்திட
அவரவர் மெய் வருந்தப் பாடுபட்டதற்கு
பலன் யாவும் ஒன்றுதான் எனதுணிந்து கூறலாம்.
நெற்றிக் கண்ணை திறந்தவர் மட்டுமே காமனை
நிக்ரகம் செய்யமுடியும் என்பதற்கு
பலராலும் பேசப்படும் புராணக்கதையே சான்று.
ஏனெனில் காமனென்பவன் உலகெங்கும் காமன் தானே
அவனை வெல்வதற்கு வழிபல எத்தனை இருந்தாலும்
இரு கண்புருவப் பூட்டை ஆசான் அருளால் திறந்து
தன்னை வென்று அனுபவிப்பதே பேரின்பம் என
ஆன்றோர்கள் அன்றே சொல்லி வைத்தார்கள்.
காமனை வெல்ல இல்லறத்தை விட்டு ஓடி விட்டால் முடியுமோ
காமத் தீ எங்கிருப்பினும் சுடும்தானே!.
இல்லற ஞானியான பிரம்மவித்தோ தன்னை வெல்லும்
முறைதனை முறையாக செய்து, எண்ணத்தால்
தன்னையும் வென்று தரணியையும் வெல்வான்
என்று துணிந்து கூறலாம் அல்லவா!
எந்த நேரத்திலும் சச்சிதானந்த நிலைதனை
அருளானந்த நிலையான அத்துவைதானந்தத்தினை அடைந்து
சதானந்தத்தில் சகத்திலுள்ளோர்க்கு அருட்கதிர்
வீசும் அவர்கள் புகழ்பாடுவோம், அவர்கள்
பெருமை பேசுவோம், அவர்கட்கே பணிபல செய்திடுவோம்.
அத்துவைத கருத்துக்களை பேசுவதில் பயன் ஏது?
அத்துவைதானந்த சுகத்தில் இருந்தாலன்றோ
அதற்கு பலன் பல உண்டு ஒரு குடிமுழுதும்
காக்கும் அத்துவைதானந்த சுகத்தை
அடைந்திடுவோம் அகிலம் போற்ற வாழ்ந்திடுவோம்.