"நான் கண்ட குருநாதர்" அனுபவ உரைகள்
ப . கருமலை B.E,MBA
திருவாரூர்
“ஐயனே! என்னுள்ளே நின்று அனந்த சன்மங்கள்
ஆண்ட மெய்யனே போற்றி போற்றி.”
குரு-சீடர் உறவு:-
மனிதராய்ப் பிறந்த ஒவ்வொருவருக்கும் “குரு” என்பவர் அவசியம் வேண்டும் என்று அறிந்து உணர்ந்து கொள்ளவே அடியேனுக்கு பல சன்மங்கள் தேவைப்பட்டிருக்கிறது. அதுவும் இந்த காலத்தில் நல்லவர் போலே நடமாடும் பல போலி குருமார்களுக்கு இடையே காரண குருவாகிய எமது குருநாதர் ஞானவள்ளல் மகாகனம் தங்கசுவாமிகள் அடியேனுக்கு குருவாக கிடைக்கப்பெற்றிருப்பது அந்த பரம்பொருளின் கருணையே அன்றி வேறில்லை.
முதன்முதலாய் குருவை சந்தித்த போது மிகவும் எளிமையாக இருந்தார். குருவுக்கான எந்த ஒரு தோற்றமும், பந்தாவும், அவர் புகழ்பாடும் கூட்டமும் அவருடன் இல்லை. அறிவு சிறிதும் இல்லாத காரணத்தால் அடியேனால் எம் குருவின் நிலையை அப்போது முழுமையாக உணரமுடியாமல், அவர் அருளிய ஞானப்பயிற்சிகளையும் தொடர்ச்சியாக செய்யவில்லை, அதோடு அவர் மீது முழுமையான நம்பிக்கையும் அப்போது இல்லை.
குரு என்பவர் உடல் அல்ல, எல்லாவற்றையும் கடந்து ஏகமாக இருக்கும் பரம்பொருள் என்றும், தீட்சை பெற்றது முதல் குரு என்பவர் முதலில் நம்முள் ஆத்மாவாக இருந்து மெய் உணர்வுகளை கொடுத்து, பல உன்னத அத்வைத நிலைகளை உணர்த்தி, ஆன்மபக்குவப்படுத்தி தானாகிய பரமாத்மாவுடன் இணைத்து, பிறவிப் பெருங்கடலில் இருந்து விடுவித்து முத்தியை அருளுகிறார் என்பதை உலக அறிவார்ந்தோர் இயற்கை ஞானசபையில் இணைந்து 8 ஆண்டுகள் கழித்துதான் குருவருளால் அடியேனால் உணர முடிந்தது.
“துவைதத்தில் ஆரம்பித்த குரு-சீடர் உறவு அத்வைதத்தில்தான் முடியும்.”
குருவின் சிறப்பு:-
குரு பிரம்மா குரு விஷ்ணு குரு தேவோ மகேஸ்வர
குரு சாக்ஷாத் பரப்பிரம்மா …
இந்த குரு மந்திர பாடலை பலமுறை தீட்சை பெறுவதற்கு முன்னர் பொருள் தெரியாமலே சொல்லி இருக்கிறேன். தீட்சை பெற்ற பிறகு குருதான் பரப்பிரம்மம் என்று உணர்த்திக் காட்டியவர் எம் குருநாதர் ஞானவள்ளல் மகாகனம் தங்கசுவாமிகள் அவர்கள்.
“மாதா பிதா குரு தெய்வம்” என்று சொல்வார்கள். ஒரு குழந்தைக்கு தாய் எப்படி தந்தையை சுட்டிக் காட்டுகிறாளோ, அது போல்தான் குருவானவர் பரப்பிரம்மம் என்ற தெய்வ இறைநிலையை தன்னுடைய சீடனுக்கு சுட்டிக்காட்டுகிறார். அந்த வகையில் எம்முடைய காரண குருநாதர் அவர்கள் சீடர்களுக்கு பரப்பிரம்மநிலையை உணர்த்தும் ஆற்றல் பெற்றவர் என்றால் அது மிகையாகாது.
ஒருவனுக்கு தாயும், தந்தையும் இரத்த சம்மந்தப்பட்ட உறவுகள். அவர்கள் இந்தப் பிறவியில் மட்டுமேஉடன் இருப்பார்கள். ஆனால் குரு சீடர் உறவு என்பது பல சன்மங்களாக தொடர்ந்து வந்து என்றும் நிலைத்து இருக்கக் கூடியது. இந்த பிறவியில் அடியேன் எம் குருவின் திருவடிகளை அடைந்திருப்பது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. எந்த தகுதியும் இல்லாத நமக்கு எப்படி குருநாதர் தீட்சை கொடுத்தார் என்று நான் பலமுறை நினைத்ததுண்டு. பின்னாளில் தான் தெரிந்தது, எம் குருவின் சிறப்பே தகுதி இல்லாதவனையும் தகுதி உடையவனாக்கி அவனை உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்வதுதான் என்று.
குருநாதர் அருளிய பயிற்சி முறைகளை சரியாக செய்து வந்தாலே சீடர்களுக்கு தங்கள் வாழ்வில் கொள்ள வேண்டியது எது? தள்ள வேண்டியது எது? என்பதை நம்முள் அருவமாக இருந்து வெளிச்சம் போட்டு காட்டுவதில் வல்லவர் எம் குருநாதர். உலகியல் வாழ்க்கையில் குழப்பமான சூழ்நிலையில் இருக்கும்போது, நல்ல வழிகாட்டியாக இருந்து சீடர்களை நல்வழிப்படுத்துவார்கள். உடல்நிலை சரியில்லாதபோது சில மருத்துவ குறிப்புகளை கூறி சரி செய்யும் ஆற்றல் கொண்டவர் எம் குருநாதர். திருவாரூரில் திருக்குறள் செம்பொருள் ஆய்வு மன்றம் அமைத்து எமக்கு திருக்குறளின் மீதும், மற்ற தமிழ் நூல்களை ஆய்வு செய்யும் ஆர்வத்தை தூண்டியவர் என்றால் மிகையாகாது.
எம்மைப் போன்ற பல சீடர்களுக்கு குருநாதர் அவர்கள் அருளிய நூல்கள் மோட்சத்தை அடைய கலங்கரை விளக்கு போல் வழிகாட்டியாக விளங்கும் என்பது சத்தியம். மேலும் குருநாதரை மானசீகமாக மதித்து ஆர்வத்தோடு அந்த பிரம்மஇரகசியம் அடங்கி உள்ள நூல்களை படித்தாலே, குருவானவர் அருகிலே அமர்ந்து பாடம் எடுப்பது போல்தான் இருக்கும். அந்த சூழ்நிலைகள். அப்படி படிக்கும்போது பல கேள்விகளையும் எழுப்பி அதற்கான விடைகளையும் அற்புதமாக உணர்த்திக் காட்டுவார்கள். இதை உணர்ந்தோர் அறிவர்.
துரிய, துரியாதீத நிலைகளை உணரக்கூடிய பேராற்றலை பயிற்சிகளை முறையாக செய்தால் பெறலாம். காமத்தையும், கோபத்தையும் தன் கட்டுப்பாட்டுக்குள் வைக்கக்கூடிய நிலையை குருநாதர் அருளும் பயிற்சியின் மூலம் பெறலாம். குருநாதர் அருளும் பயிற்சியானது உடலை சுத்தப்படுத்துவதோடு மட்டுமில்லாமல், மனதையும் சுத்தப்படுத்தும் தன்மைகொண்டது. சிற்றறிவை பேரறிவாக்கி, மெய்யறிவாக்கி, மெய்ஞான அறிவாக்கி, அருளறிவாக்கும் தன்மைகுரு அருளும் பயிற்சிகளுக்கு உண்டு. குருநாதர் அருளும் பயிற்சிகளை முறையாக செய்து வந்தால் ஆன்மாவை அறிந்து அதையே பூஜித்து பரமாத்மாவை அடையலாம் என்பதில் எள்ளளவோ, எள் நுனியளவோ சந்தேகமில்லை.
இல்லறத்தில் இருந்து கொண்டே நாம் வீடுபேறு அடைய முடியும் என்பதை இந்த உலகிற்கு எடுத்துக் காட்டக்கூடிய உத்தமமான சபை இது.
அறம் என்றாலே தவம் என்று உரக்கச் சொல்லும் சபை இது. குருவழிப்பரம்பரையாக தரமான ஞானப்பயிற்சிகளை கற்றுக் கொடுக்கும் சபை இது.
இலவசமாக பெற்றீர்கள். இலவசமாக கொடுங்கள் என்பதை திண்ணமாக கொண்டு அன்றும், இன்றும், என்றும் இலவசமாக இந்த புள்ளிக்கல்வியை அருளும் சபை இது.
தமிழகத்தின் பல்வேறு இடங்களில் தியான மண்டபங்களை நிறுவி சீடர்களுக்கு உறுதுணையாக இருக்கும் சபை இது. இங்கு வீண் நம்பிக்கைகளை விதைத்து யாரையும் ஏமாற்றுவது இல்லை. அதேபோல் மாய மந்திர, தந்திர, எந்திர வித்தைகளுக்கும், பஜனைகளுக்கும் இங்கு வேலையில்லை.
- மன அமைதி கிடைக்கும். இதனால் ஆனந்தமாக வாழலாம்.
- உடல் ஆரோக்கியத்தோடும், மன ஆரோக்கியத்தோடும் மகிழ்ச்சியாக வாழலாம்.
- நல்லதே-நினைப்போம், சொல்வோம், செய்வோம். இதனால்
- நம் வாழ்வில் நல்லதே நடக்கும் என்பதை உணரலாம். நம்வாழ்வில் ஏற்படும் இன்ப துன்பங்களை சமமாக எடுத்துக் கொள்ள முடியும்.
- நான் யார் என்ற கேள்விக்கான பதில் கிடைக்கும்.
- பிரபஞ்சத்தோற்றமும், இந்த பிறவியின் நோக்கத்தையும் புரிந்து கொள்ள முடியும்.
- மோட்சத்தை அடையும் வழி தெளிவாக தெரிந்து பிறவாப் பெருநிலை அடையலாம்.
- நம் வாழ்வில் சுயநலம் போக்கி, பொது நலத்தோடு வாழலாம். இன்னும் விரிக்கிற் பெருகும். விரிவஞ்சி இத்துடன் நிறுத்துவோம்.