மனம் என்னும் மாயை

மனம் என்று ஒன்று இருக்கிற வரை உலகம் இருக்கும் என்பதை அருளறிவால் ஆய்ந்துணர வேண்டும். இறுதியில் கற்பூரதீபம் போல் ஒளிப்பதல்லால் வேறென்ன தோன்றும். ஆத்ம தரிசனம் ஒளிரும். அதுவும் இரவு பகலற்ற நிலைபோல முடிவான விடயத்தை அழுத்தமாக அருளாசான் சொல்லாமல் சொல்லி உணர்த்துவார். நான் என்ற எண்ணத்தைக் கொண்டுதான் உயிர் வாழ்கிறது. ஓர் உடலைப் பற்றிக் கொண்டு இந்த உடல்தான் நான் என்ற மயக்கம் கொள்கிறது. உடலால் வரும் உணர்வுகளை சேர்த்து வைத்துக் கொண்டு இதைத் தவிர வேறு சுகங்கள் இல்லை. இந்த சுகங்களை அனுபவிப்பதற்குதான் வாழ்க்கை. வேறு உணர்ச்சிகளை மீண்டும் மீண்டும் அனுபவிக்கத் துடிக்கிறது. முயற்சியில் தோல்வியுறும் போது தத்தளித்துப் போய் துக்கத்தை அனுபவிக்கிறேனே என்று புலம்புகிறது. மேலே சொன்ன விடயங்களை திடச் சித்தமாக புரிந்து கொள்ள வைராக்கியம் சத்சங்கப் பழக்கம் வேண்டும். குருவின் கிருபை அருள் வேண்டும். மனம் விடயங்களை அனுபவிக்கும் போதே இன்பம் துன்பம் என்று மாறி மாறி எடை போட்டபடி இருக்கும். அந்த இயந்திரத்தனமான விடயத்தை நிறுத்த வேண்டும்.

விட்டில் பூச்சியானது விளக்கின் ஒளியைப் பார்த்து, மயங்காது இந்த ஒளியிலிருந்து வரும் சுகம் நிலையானதல்ல. என்னைச் சிக்க வைக்கும் தந்திரம் என்று பாதை மாறி பறக்க வேண்டும். எனக்குள்ளேயே பெரிய ஞானநிதியை பேரானந்தமான ஆத்மானந்தத்தை வைத்துக் கொண்டு, இப்படி சிறுசிறு ஆசைகளுக்கெல்லாம் என் மனம் அலைகிறதே என்று தீர்க்கமாக புரிந்து கொள்ள வேண்டும். உலகம் என்கிற மாயையை வேறு எவரும் உருவாக்கவில்லை என் மனம் தான் உருவாக்குகிறது. இந்த உலகை வெல்வதை விட, என்மனம் எப்படி உருவாகிறது, மனம் வளர எது எது காரணமாக அமைகிறது என்று தான் தேடலை துவக்க வேண்டும். அப்படி ஆழமாக நகரும் போது புலன்களினால் ஏற்படும் நுகர்ச்சியே மனத்திற்கு உயிர் கொடுக்கிறது என்பது புரியவரும். மனமோ ஆத்மா எங்கேயோ தொலைதூரத்தில் மறைவாக உள்ள கருவூலம் என்று நினைத்துக் கொள்கிறது. ஆனால் மனதின் பீடமே ஆத்மாதான் என்பதை குரு உணர்த்தும்போது ஆன்மீக சாதகன் ஆனந்த அதிர்ச்சியடைகிறான். எல்லா மறைகளும் இதைத்தான் திரும்பத் திரும்ப உரக்கச் சொல்லிக் கொண்டிருக்கின்றன. தொடர்ந்து தொடர்ந்து உணரும் போது மனம் தன் மூலத்தை நோக்கித் திரும்பும் அதிசயம் நிகழ்கிறது.