வள்ளுவரின் ஆழ்ந்த அகன்ற உயர்ந்த உள்ளம்
நூல் விவரம்
நூல் பெயர்: வள்ளுவரின் ஆழ்ந்த அகன்ற உயர்ந்த உள்ளம்
ஆசிரியர்: ஞானவள்ளல் மகாகனம் தங்கசுவாமிகள்
பதிப்பு : முதல் பதிப்பு அய்யன் திருவள்ளுவர் 2036ம் ஆண்டு துலைத்திங்கள் (ஐப்பசி மாதம்) 20ம் நாள்
(06-01-2005)ஞாயிற்றுக்கிழமை சிவத்தையாபுரம் – 628 251
இரண்டாம் பதிப்பு அய்யன் திருவள்ளுவர் 2037ம் ஆண்டு மீனம் திங்கள் (பங்குனி மாதம்) 26ம் நாள் (09-04-2006)ஞாயிற்றுக்கிழமை
பக்கம்: 240
வெளியிடப்பட்ட இடம்: (சென்னை – மேடவாக்கத்தில்) ஞானசபை கிளையில் நடைபெற்ற ஞானவள்ளல் மகாகனம் தங்கசுவாமிகள் 67வது பிறந்தநாள் விழாவில் வெளியிடப்பட்டது.
வெளியீடு:
உலக அறிவார்ந்தோர் இயற்கை ஞானசபை அறக்கட்டளை
பதிவு எண் : 140/4/2000
ஞானசபை சாலை, சிவத்தையாபுரம்,
சாயர்புரம் அஞ்சல், தூத்துக்குடி – 628 251
+91 94420 56071
முகவுரை
திருவள்ளுவர் என்னும் எண்ணம் எழுகின்ற போதே உலகமும் உடன்
தோன்றிவிடுகிறது. இங்ஙனம் தோன்றுதற்கு காரணமென்ன? காரணத்தை அவர் அருளிய நூலே உணர்த்தும். அந்நூலே அய்யனின் அற்புதத்தை உணர்த்தும்
கருவியுமாகும்.
அய்யனின் தமிழ்மறையை ஆராய்ந்தால் அதன்கண் உலகமிருத்தல் நன்கு புலனாகும்.
அய்யன் உலகையே திருக்குறளாக எழுதினார். உலகின் மாபெரும் வாழ்க்கை இலக்கிய
நூல் என்று சொன்னால் அது மிகையாகாது.
அய்யன் திருவள்ளுவர் உலகம் உய்வடைய பயின்றார். உலகுக்கென்றே வாழ்ந்தார்.
அதனால் அவர்தம் உள்ளத்தில் உலகம் உருக் கொண்டது. “யாதும் ஊரே யாவரும்
கேளிர்” என்ற சீரிய கொள்கை பிறந்த தமிழ் நாட்டில் தோன்றியவர். அவர் உள்ளம்
சாதி, மதம், இனம், நிறம், மொழி, நாடு முதலிய சிறுமை புகுத்தும் கட்டுகளில் படிந்து
கிடக்கவில்லை.
அவர் உள்ளத்தில் இந்த பரந்த உலகே படிந்து கிடந்தது. அதுதான்
திருக்குறள் என்னும் உலகம் போற்றும் நூலாக உருக்கொண்டது. அவர் யாத்த
திருக்குறளுக்கு சங்ககாலப் புலவர் பெருமக்கள் அணிந்துரை எழுதி குறளுக்கு பெருமை சேர்த்தனர். ஆழ்ந்த புலமை பெற்ற அறிஞர் பெருமக்கள் பலர் உரைசெய்து பெருமை சேர்த்தனர். உரைசான்ற அந்நூலுக்கு உரையெழுதி உவகை கொள்ளும் பலர் இன்றும்
இருக்கின்றார்கள். ஏன் நாளையும் எழுதிக் கொண்டேயிருப்பர். அவரின் புகழ்சேர்க்க
“வள்ளுவர் கோட்டம்” அமைத்தும்.
வான்புகழ் வள்ளுவ பெருந்தகைக்கு வானுயர்ந்த சிலையமைத்தும் பெருமை செய்த
மூதறிஞர் மேலும் பல மேன்மையான செயல் புரியட்டும். அறிஞர் பெருமக்கள் யாவரும்
அவர் பெருமை பேசினர். எழுதினர். “பொன்னை வைக்கும் இடத்தில் ஒரு பூவையாவது
வைக்க வேண்டும்” என்ற முன்னோர்களின் முதுமொழிக்கிணங்க எம்மால் முடிந்த
“வள்ளுவரின் ஆழ்ந்த அகன்ற உயர்ந்த உள்ளம்” என்ற நூலை சொல்மாலையாகத் தொடுத்து அவரின் பொற்பாதங்களில் வைத்து வணங்குகின்றேன்.
01
இல்லறத்தை விரும்புவோர்க்கு இது ஒரு இல்லற நூலாகும். துறவறத்தை
விரும்புவோர்க்கு இது ஒரு துறவற நூலாகும். பொருளை விரும்பிச் சேர்ப்போர்க்கு இது
ஒரு பொருளாதார நூலாகும். அரசியலை விரும்புவோர்க்கு இது ஒரு அரசியல்
நூலாகும். இப்படித்தான் வாழவேண்டும் என்று விரும்பும் சான்றோர்க்கு வாழ்க்கை
இலக்கிய நூலாகும். இன்பத்தை விரும்பும் இல்லறவாசிகளுக்கு இது ஒரு இன்ப நூலாகும்.
அத்தனையும் தனித்தனியே சொல்லவேண்டாம் திருக்குறள் என்று ஒரு மொழியால்
அழைத்தாலே போதுமென்று அய்யனும் பெயர் சூட்டினார் போலும். அவர் புகழை
கூறுதற்கு அவர் தந்த குறளெடுத்து புகழ் சேர்ப்போம். “சிந்தனை சந்தேகத்தை வளர்க்கிறது. சந்தேகம் ஆராய்ச்சியை வளர்க்கிறது. ஆராய்ச்சி
உண்மையை வளர்க்கிறது. உண்மையானது குருட்டு நம்பிக்கைகளை குழிதோண்டிப் புதைக்கின்றது” என்ற எழிலார்ந்த கருத்துக்களை ஏதென்ஸ் நகர இளைஞர்
கூட்டத்திற்கு சாக்கிரட்டீஸ் என்ற பேரறிஞர் சொல்லிச் சென்றார்.
02
“கண்மூடி வழக்கமெலாம் மண்மூடிப் போகவேண்டும்” என்று
ஞானிகளுக்கெல்லாம் ஞானி வள்ளலார் சுவாமிகள் சொல்லிச் சென்றார்.
“எப்பொரு ளெத்தன்மைத் தாயினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு” – திருக்குறள் 355
என்றும்.
“எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு” – திருக்குறள் 423.
எந்தவொரு பொருள் பற்றி யார் எதைச் சொன்னாலும் அதை அப்படியே ஏற்று
கொள்ளாது உண்மை எது என்பதை ஆராய்ந்து தெரிந்து தெளிந்து கொள்வதுதான்
அறிவுடைமையாகும். இப்படி எதையுமே அறுதியிட்டு கூறுவதுதான் வள்ளுவரின்
சிறப்பியல்பு: “ஞானம்” என்றாலே அஞ்ஞானம் அகன்ற இடமே ஞானமென்பார்கள்.
அதனாற்றான் அய்யனும். உறுதிபடக் கூறினார் போலும். திருவள்ளுவர் கூறும் “அறம்”
என்ற வார்த்தைக்கு யாம் “தவம்” என்றே பொருள் தருகின்றோம்.
03
அய்யனின் உள்ளக்
கிடக்கையும் அதுவாகத்தான் இருக்க முடியும் என்பதையும் தெளிவாகக்
கூறுகின்றோம். உதாரணத்திற்கு,
“அறத்தான் வருவதே இன்பம் மற்றெல்லாம்
புறத்த புகழும் இல”
– திருக்குறள் 30
தவநிலை ஆற்றிவரும் அறச்செயலே ஒருவனுக்கு உண்மையான பேரின்ப நிலையைக் கொடுத்து ஆனந்தமடைய வைத்து நிலமிசை நீடுவாழும் பெருவாழ்வை நல்கும். மற்ற
எல்லா செயல்களும் துன்பத்திலே முடியும். புகழும் இல்லை என்பதே ஆன்றோர் முடிவு
என்பதை தெளிவாகக் குறிப்பிட்டுள்ளோம்.
“அறவாழி அந்தணன் தாள் சேர்ந்தார்க் கல்லால்
பிறவாழி நீந்தல் அரிது” – திருக்குறள் 8
தவக் கடலானவர்கள்தான் பிறவிக் கடலைக் கடக்கும் தெப்பத்தை நமக்குத் தருவர்
என்பதையும் முதலதிகாரமான கடவுள் வாழ்த்திலே தெளிவாகக் கூறிவிட்டார் அய்யன்.
எம்மை ஆன்மீகப் பாதைக்கு திருப்பிய பெருமை தூத்துக்குடி மாவட்டம்.
04
“சிவத்தையாபுரம்” என்ற சீர்மிகு ஊரில் வாழ்ந்த ஆன்மீகப் பெரியார் என்று யாவரும்
அழைத்த “தாடிக்காரர் பெருமாள் நாடார்” அவர்களையே சாரும். இல்லறத்தில் இருந்து
கொண்டு தவநிலைகளை மேற்கொள்ள முடியுமா என்ற கேள்விக்கு விடையளித்தார்.
பின்னர் இல்லற ஞானியான எமது அன்பு குருபிரான் சிவகளை ஆதித்தன்பிள்ளை
அவர்களிடம் எம்மை சேர்த்து விட்டார்கள். சங்கரசுவாமிகளின் தலைமை மாணவரும். தலைமை
ஞானியுமான சிவகளை ஆதித்தன்பிள்ளை அவர்கள்தான் எமக்கு குண்டலினி ஞான
திருவடி தீட்சை அருளினார்கள். அதனால் சங்கரசுவாமிகளின் குருபரம்பரை என
அழைப்பதை பெருமையாக ஏற்றுக் கொள்கிறோம். அதுபோல் எமது மாண்புடைய
மாணவர்களையும் சங்கர சுவாமிகளின் குருபரம்பரை என்று கூறுவதையும்
பெருமையாக ஏற்றுக்கொள்கிறோம்.
05
“பேதக ன்மத்தால் வந்த பிராரத்த நாநா வாகும்.
ஆதலால் விவகா ராங்க ளவரவர்க் கானவாகும்.
மாதவஞ் செயினுஞ் செய்வார் வாணிபஞ் செயினுஞ் செய்வார்
பூதலம் புரப்பா ரையம் புகுந்துண்பர் சீவன்முத்தர்”
கைவல்லிய நவநீதம் தத்துவ விளக்கப்படலம் – 90
சீவன் முத்தரில் மாதவம் செய்யும் ஞானிகள் உண்டு. வாணிபம் செய்யும் வணிகர்களும் ஞானிகளாய் இருப்பர், பூதலம் ஆளும் அரசர்களும் ஞானிகளாய் இருப்பர், யாசகம்
ஏந்தும் சன்னியாசிகளும் ஞானிகளாய் இருப்பர் என்றுதானே வேதாந்த நூல்கள்
கூறுகின்றன.
வாணிபம் செய்யும் தொழிலதிபர்களும், பூதலம் ஆளும்
அரசர்களும் இல்லறம் ஏற்றுத்தானே தவநிலை செய்திருப்பர். இப்படி பல்வேறு
ஐயப்பாடுகளை நீக்கிய பின்னரே யாமும் தொடர்ந்து சாதனைகள் புரிந்தோம்.
06
இரவும், பகலும் கலந்திருப்பது போல், நல்லவர்களும், நல்லவர்
அல்லாதவர்களும் கலந்திருப்பது போல், காரணக்குருக்களும்,
காரியக்குருக்களும், கலந்தே இருந்திடுவர், இவ்வுலகில், உண்மையான துறவிகளும்
போலித்துறவிகளும் கலந்தே இருப்பர். திருவள்ளுவர் காலத்திலும் போலித்துறவிகள்
தோன்றி பல அல்லாத காரியங்களைச் செய்துள்ளதால் “கூடா ஒழுக்கம்” என்ற
அதிகாரம் எழுதி மக்களை விழிப்படைய வைத்துள்ளார். இக்காலத்திலும்
அப்படிப்பட்ட போலியான கபடவேடதாரிகளின் செயல்களை காணமுடிகிறது.
மனிதகுலம் தள்ள வேண்டியவை யாவை கொள்ள வேண்டியவை யாவை என வகுத்தும், தொகுத்தும் பகுத்தும் கூறியுள்ள கருத்துக்கள் எக்காலத்துக்கும்
ஏற்புடையதாகும். அதனால்தான் அவரின் ஆழ்ந்த புலமையும், அகன்ற அறிவும்,
உயர்ந்த உள்ளமும் எம்மை வெகுவாக கவர்ந்தது. அதனால்தான் இந்த நூல் எழுதும்
ஆர்வம் எமக்கு ஏற்பட்டது.
07
ஒரு ஆன்மாவிடமிருந்துதான் மற்றொரு ஆன்மா தூண்டுதலைப் பெறமுடியுமே தவிர
வேறு எதனிடமிருந்தும் பெறமுடியாது. யாருடைய ஆன்மாவிலிருந்து இத்தகைய
தூண்டுதல் வருகிறதோ அவர்தான் குரு. ஆசிரியர். யாருடைய ஆன்மா இந்தத்
தூண்டுதலை ஏற்கிறதோ அவன் சீடன். மாணவன்.” -விவேகானந்தர்
சுவாமி விவேகானந்தர் கூறியது போல் எம்மிடம் பிரம்மஞான வித்தை கிடைக்கப்
பெற்ற பல அருளாளர்கள் உலகெங்கும் இருக்கின்றார்கள். பல பட்டங்கள் பெற்ற
மாணவர்கள் இணையதளத்தை இயக்கி பிரம்மஞான கொள்கைகளை பரப்பி வருகிறார்கள். உலகெங்கும் இந்த அற்புதமான பிரம்ம ஞான வித்தை பரவவேண்டும்
என்று தான் உலக அறிவார்ந்தோர் இயற்கை ஞானசபை (WINGS – WORLD
INTELLIGENCE NATURE GNANAM SOCIETY) சீர்மிகு சிவத்தையாபுரம் என்னும்
நல்லூரில் ஆரம்பித்தோம். அதுவும் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக
வளர்ந்து வருகிறது.
08
எமது அருட்தொண்டர்களின் ஆர்வத்தினால்தான் இந்த நூல் எழுதப்பட்டது.
அதனால்தான் எமது அருளாளர்கள் பலர் அணிந்துரை எழுதி இந்நூலை அலங்கரித்து
வருகிறார்கள்.
“மண்ணில் மறைந்திருக்கும் மரத்தின் வேரைப் போல
பாலில் மறைந்திருக்கும் நெய்யைப் போல
பூவில் மறைந்திருக்கும் தேனைப் போல
ஆழியில் மறைந்திருக்கும் முத்துக்களைப் போல
மண்ணில் மறைந்திருக்கும் தங்கச் சுரங்கத்தைப் போல
மேகத்தில் மறைந்திருக்கும் மழை நீரைப் போல
ஒவ்வொரு மனிதரிடமும் மறைந்திருக்கிறது திறமை திறமையை வெளிப்படுத்த முயற்சி
செய்”
என்று எல்லா அறிஞர் பெருமக்களும் கூறிச் சென்றுள்ளார்கள். திறமைகளை வெளிப்படுத்த திருக்குறள் என்ற ஞானதீபம் கலங்கரை விளக்காய் வழிகாட்டும் என்று
சொன்னால் அது மிகையாகாது.
09